You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழ்த் திரையுலகத்தில் இந்த வாரம்…
அஜித்தின் 'விவேகம்' பட முதல் பார்வை வெளியீடு, மணிரத்னம் - ஏ.ஆர்.ரகுமான் கூட்டணியின் 'காற்று வெளியிடை' படத்தின் 'அழகியே…' பாடல் வெளியீடு, ஜெயம் ரவி, அரவிந்த்சாமி நடிப்பில் 'போகன்' படத்தின் வெளியீடு, சந்தானம் நடித்துள்ள 'சர்வர் சுந்தரம்' படத்தின் டிரைலர் வெளியீடு என இந்த வாரத்தில் தமிழ்த் திரையுலகத்தில் சில முக்கிய நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன.
காற்று வெளியிடை - அழகியே…பாடல் வெளியீடு
இயக்குனர் மணிரத்னம் - இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இருவரது கூட்டணியில் உருவாகியுள்ள 'காற்று வெளியிடை' படத்தின் 'அழகியே…' என்ற பாடல் சில தினங்களுக்கு முன் வெளியிடப்பட்டது. வைரமுத்து, மதன் கார்க்கி எழுதியுள்ள இந்தப் பாடலை அர்ஜுன் சாண்டி, ஹரிச்சரன், ஜோனிதா காந்தி ஆகியோர் பாடியிருக்கிறார்கள். கார்த்தி, அதிதி ராவ் ஹைதரி இந்தப் படத்தில் நாயகன் நாயகியாக நடித்துள்ளார்கள்.
பிப்ரவரி 1ம் தேதி 'அழகியே…' பாடலின் ஒரு நிமிட வீடியோ ஒன்றை வெளியிட்டார்கள். பாடல் வெளியான 24 மணி நேரத்திற்குள்ளாக யு டியூப்பில் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்ற இந்த வீடியோ 3 நாட்களில் 30 லட்சம் பார்வைகளைக் கடந்துள்ளது.
'ரோஜா' படத்திலிருந்து இணைந்து பணியாற்றி வரும் மணிரத்னம் - ஏ.ஆர்.ரகுமான் கூட்டணி 25 வருடங்களைத் தாண்டியும், இன்றைய இளைஞர்களுக்கும் ஏற்றபடியான பாடலைக் கொடுத்து வருவதை திரையுலகத்தினரே ஆச்சரியத்துடன் பார்க்கிறார்கள்.
காதலியை 'அழகியே…' என்று வர்ணித்துப் பாடும் எத்தனையோ பாடல்களைப் பார்த்திருந்தாலும் இந்த அழகி ரவிவர்மன் ஒளிப்பதிவிலும், வைரமுத்து, கார்க்கி வரிகளில் இன்னும் அழகாகவே தெரிகிறார்கள்.
நடிகர் சூர்யா 'அழகியே' பாடல் பற்றி ஒற்றை வார்த்தையில் 'வாவ்…..' என வியந்துள்ளார்.
'காற்று வெளியிடை' படத்தின் மற்ற பாடல்கள் விரைவில் வெளியாக உள்ளன.
அஜித் நடிக்கும் 'விவேகம்' முதல் பார்வை வெளியீடு
'வீரம், வேதாளம்' படங்களுக்குப் பிறகு இயக்குனர் சிவா - அஜித் மீண்டும் இணைந்துள்ள படத்திற்குப் பெயர் வைக்காமலேயே கடந்த சில மாதங்களாக படப்பிடிப்பை நடத்தி வருகிறார்கள். பிப்ரவரி 2ம் தேதி நள்ளிரவில் படத்தின் முதல் பார்வையுடன் 'விவேகம்' என்ற தலைப்பையும் அறிவித்தார்கள்.
சட்டை அணியாமல் 'சிக்ஸ்-பேக்' தோற்றத்துடன் அஜித் இருப்பது திரையுலகத்தினரிடையேயும், ரசிகர்களிடையேயும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது. சமூக வலைத்தளங்களில் அது அஜித்தின் நிஜமான தோற்றம் அல்ல 'ஃபோட்டோஷாப்' செய்த ஒன்று என சிலர் கருத்துக்களைப் பதிவிட்டனர். ஆனால், அந்த தோற்றத்திற்காக பல வாரங்கள் கடும் உடற்பயிற்சி செய்து தன்னுடைய உடலமைப்பை அஜித் மாற்றினார் என படக்குழுவினர் தெரிவித்தார்கள். திரையுலகத்தைச் சேர்ந்த நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என பலரும் 'விவேகம்' படத்தின் முதல் பார்வையைப் பாராட்டி வருகிறார்கள்.
நடிகை குஷ்பு, "என்னுடைய ஜார்ஜ் குளூனி இப்போது ஹக் ஜாக்மேன். எப்படி மாறியிருக்கிறார்," என அஜித்தின் தோற்றத்தைப் பற்றிக் கூறியிருக்கிறார்.
ஜெயம் ரவி, அரவிந்த்சாமி நடித்து வெளியாகியுள்ள 'போகன்'
'தனி ஒருவன்' படத்தில் நடித்த ஜெயம் ரவி, அரவிந்த்சாமி மீண்டும் இணைந்து நடித்துள்ள 'போகன்' திரைப்படம் பிப்ரவரி 2ம் தேதி வெளியாகியுள்ளது. 2015ம் ஆண்டில் வெளிவந்த 'தனி ஒருவன்' படம் வழக்கமான வியாபார சினிமாவாக இல்லாமல், சமூக அக்கறையுள்ள ஒரு காவல் துறை அதிகாரியின் திறமையை வெளிப்படுத்தும் படமாக இருந்து ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது.
'போகன்' திரைப்படத்திலும் ஜெயம் ரவி காவல் துறை அதிகாரியாகவே நடித்துள்ளார். அரவிந்த்சாமி வில்லனாக நடித்துள்ளார். 'போகர்' என்னும் சித்தர் எழுதி வைத்த அரிய சக்திகள் கொண்ட ஓலைச் சுவடி அரவிந்த்சாமியிடம் கிடைக்கிறது. அதை வைத்து மற்றவர்கள் உடம்பில் 'கூடு விட்டு கூடு பாயும் சக்தி' மூலம் கொள்ளையடிக்கும் வேலைகளைச் செய்யும் அரவிந்த்சாமியை ஜெயம் ரவி எப்படி பிடிக்கிறார் என்பதுதான் படத்தின் கதை.
'தனி ஒருவன்' படம் ஹாலிவுட் படங்களுக்கு இணையான கதை, திரைக்கதையுடன் இருந்தது. 'போகன்' படம் ஹாலிவுட் படங்களிலிருந்து தழுவப்பட்ட கதைதான் என்று இயக்குனர் முன்னரே தெரிவித்துவிட்டார். ஹாலிவுட் படங்களின் தழுவல்தான் கதை என்று சொல்வதை விட பல தமிழ்ப் படங்களிலில் ஏற்கெனவே பார்த்த காட்சிகள்தான் இந்தப் படத்திலும் இருக்கின்றன என சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன. 'ஏழாம் அறிவு' படத்தில் இடம் பெற்ற 'நோக்கு வர்மம்' தான் இந்தப் படத்திலும் முக்கிய அம்சமாக இடம் பெற்றுள்ளது.
'போகன்' படத்தின் வியாபார ரீதியான வசூல் எப்படியிருக்கும் என்பது அடுத்த சில நாட்களில் தெரிய வரும்.
சந்தானம் நடித்துள்ள 'சர்வர் சுந்தரம்' டீசர் வெளியீடு
ஆனந்த் பால்கி இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் சந்தானம், வைபவி, பிஜேஷ் நாகேஷ் நடித்துள்ள 'சர்வர் சுந்தரம்' படத்தின் டீசர் நேற்று வெளியானது. நகைச்சுவை நடிகராக இருந்து நாயகனாக உயர்ந்த சந்தானம் நடிப்பில் எப்போதோ ஆரம்பமான படம். சந்தானம் நடித்த 'தில்லுக்கு துட்டு' படம் வெற்றி பெற்ற பிறகுதான் சந்தானம் நாயகனாக நடிக்கும் படங்கள் மீது ரசிகர்களுக்கு கொஞ்சம் நம்பிக்கை வந்தது. இந்த 'சர்வர் சுந்தரம்' படத்திலும் தன் ஒரு வரி நகைச்சுவை வசனங்கள் மூலமாகவே ரசிகர்களை சிரிக்க வைக்க முயற்சிப்பார் எனத் தெரிகிறது.
இப்படத்தின் டீசரை நடிகர் சிம்பு நேற்று வெளியிட்டார். "எனது பிறந்த நாளில் எனக்கு நெருக்கமான சந்தானத்தின் 'சர்வர் சுந்தரம்' பட டீசரை வெளியிடுவதில் மகிழ்ச்சி," என சிம்பு தெரிவித்துள்ளார். மற்ற முன்னணி நடிகர்களின் படம் போல சந்தானம் நடித்துள்ள இந்த படமும் யு டியுப் டிரென்டிங்கில் இடம் பெற்றுள்ளது. யு டியூப் டிரென்டிங்கில் இந்தப் படத்தின் டீசர் 2வது இடத்தில் உள்ளது.
தமிழ்த் திரையுலகில் நகைச்சுவை நடிப்பில் தனி இடத்தைப் பிடித்த நாகேஷ் கதாநாயகனாக நடித்து வெளிவந்து வெற்றி பெற்ற 'சர்வர் சுந்தரம்' படத்தின் பெயரை சந்தானம் நடிக்கும் படத்திற்கு வைத்தது பற்றியும் ஆரம்பம் முதலே சில சர்ச்சை இருந்து வந்தது. ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ள பழைய படங்களின் பெயர்களை புதிய படங்களுக்கு வைக்கக் கூடாது என தீவிர சினிமா ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து கருத்துக்களைப் பகிர்ந்து வருகிறார்கள்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
பேஸ்புக்கில் கருத்து தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்