கிறித்தவ மடாலயம் இஸ்லாமிய அரசு தீவிரவாதிகளால் தகர்ப்பு

இஸ்லாமிய அரசு குழுவைச் சேர்ந்த தீவிரவாதிகள் இராக்கில் மிகப் பழமையான கிறித்தவ மடாலயம் என்று கருதப்படும் ஒரு கட்டிடத்தை அழித்துவிட்டார்கள் என்று செய்கோள் படங்கள் உறுதிப்படுத்துகின்றன.

பட மூலாதாரம், Reuters

இராக்கின் வடபகுதி நகரான மொசுலுக்கு அருகே உள்ள 1,400 ஆண்டுகள் பழமை வாய்ந்த செயிண்ட் எலிஜா மடாலயம் தரைமட்டமாகிவிட்டது என்று அந்தப் படங்கள் காட்டுகின்றன.

இது 2014ல் இடிக்கப்பட்டிருக்கலாம் அல்லது வெடிவைத்துத் தகர்க்கப்பட்டிருக்கலாம் என்று வல்லுநர்கள் நம்புகிறார்கள்.

ஆனால் அந்த சமயத்தில் இது நடந்தது பரவலாக அறியப்படவில்லை.

ஐ.எஸ் அமைப்புக்கு விசுவாசமாக இருக்கும் இஸ்லாமியத் தீவிரவாதிகள் அவர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் பிரதேசத்தில் கிறித்தவ மதத்துடன் தொடர்புள்ள பல கட்டிடங்களை அழித்து விட்டனர்.