இரண்டாம் உலகப் போர் பாலியல் அடிமைகள் குறித்த ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது

தென் கொரியாவின் 'சுகம் தரும் பெண்டிர்' சிலை

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு, இரண்டாம் உலகப் போரின்போது ஜப்பானால் 'சுகம் தரும் பெண்டிர்' என்ற பெயரால் தென்கொரியப் பெண்கள் பாலியல் அடிமைகளாக பயன்படுத்தப்பட்டதை குறிக்கும் அமைதி நினைவுச்சின்னம்.

இரண்டாம் உலகப் போரின்போது ஜப்பான் இராணுவம் பாலியல் அடிமைகளாக பயன்படுத்திய கொரிய பெண்களுக்கு இழப்பீடு அளிப்பது தொடர்பில் ஜப்பானுக்கும் தென் கொரியாவுக்கும் இடையில் பல தசாப்தங்களாக நிலவி வந்த கருத்து வேறுபாடுகளை முடிவுக்குக் கொண்டுவரும் ஒப்பந்தம் ஒன்றை இருநாடுகளும் எட்டியுள்ளன.

சியோலில் நடைபெற்ற ஒரு சந்திப்பில் பேசிய ஜப்பானிய வெளியுறவு அமைச்சர் ஃபுமியோ கிஷீடா, ஜப்பானிய இராணுவத்தின் பாலியல் விடுதிகளில் வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்ட பெண்கள் அனுபவித்த அளவிடமுடியாத வலிக்காக தான் மன்னிப்புக் கோருவதாக கூறினார்.

கிட்டத்தட்ட ஒன்பது மில்லியன் டாலர்கள் மதிப்பிலான இழப்பீட்டு நிதியை அமைக்க டோக்கியோ ஒப்புக்கொண்டுள்ளது.

தற்போது எட்டப்பட்டுள்ள உடன்படிக்கை இறுதியானது என்றும், மாற்றியமைக்க முடியாதது என்றும், தென் கொரிய வெளியுறவு அமைச்சர் யன் பியாங் சே தெரிவித்துள்ளார்.

ஆனால் இதனால் பாதிக்கப்பட்டவர்களில் தற்போது எஞ்சியிருப்பவர்களை இது திருப்தியடையச்செய்யுமா என்பது தெளிவில்லாமல் இருப்பதாக பிபிசி செய்தியாளர் தெரிவித்துள்ளார்.