அமெரிக்கா: இரத்த தானம் செய்ய ஒருபாலுறவு ஆண்களுக்கு அனுமதி

அமெரிக்காவில் ஒரு பாலுறவு ஆண்கள் இரத்த தானம் செய்வதற்கு முற்றிலுமாக விதிக்கப்பட்டிருந்த தடையை அந்நாட்டு அரசாங்கம் அகற்றியுள்ளது. 1983ஆம் ஆண்டில் எய்ட்ஸ் நோய் பரவ தொடங்கிய சமயத்தில் இந்த தடை விதிக்கப்பட்டது.

 இரத்த தானம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஒரு பாலுறவு ஆண்கள், இரத்த தானம் செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை அமெரிக்க அரசாங்கம் அகற்றியுள்ளது.

ஒரு ஆண்டு காலம் எந்த ஆணுடனும் பாலுறவு வைத்துக்கொள்ளாத ஆண்கள் இரத்த தானம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் தெரிவித்துள்ளது.

முற்றிலுமான தடை நீக்கப்பட்டாலும் இந்த புதிய விதிகள் ஒரு பாலுறவு ஆண்களுக்கு எதிராக இன்னமும் பாரபட்சம் காட்டும் விதமாகவே அமைந்துள்ளதாக ஒருபாலுறவு ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் நோயை பரிசோதிக்கும் நவீன முறைகளில் உடனடியாக முடிவு தெரிந்துவிடுதால், அவற்றால் இரத்த தானம் பெரிதாக தாமதமாகாது என்று அவர்கள் கூறுகின்றனர்.

இரத்த தானம் செய்வதற்கு போதை மருந்தை உட்செலுத்திக்கொள்பவர்களுக்கும், பாலியல் தொழிலாளர்களுக்கும் விதிக்கப்பட்டிருக்கும் தடை நீடிக்கும் என்றும் எஃப் டி ஏ தெரிவித்துள்ளது.