ஹிட்லர் வரைந்த ஓவியங்கள் 4 லட்சம் யூரோக்களுக்கு விற்பனை
அடால்ஃப் ஹிட்லர் வரைந்த வாட்டர் கலர் ஓவியங்கள் ஜெர்மனியில் நடைபெற்ற ஏலத்தில் நான்கு லட்சம் யூரோக்களுக்கு விற்கப்பட்டுள்ளன.

பட மூலாதாரம், AFP
பவேரியாவிலுள்ள ந்யூஷ்வான்ஸ்டைன் மாளிகை ஓவியமே மிக அதிகமாக ஒரு லட்சம் யூரோக்களுக்கு விற்பனையாகியுள்ளது.
அதை சீனாவிலுள்ள ஒருவர் வாங்கியுள்ளார். இந்த விற்பனை கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.
இது தவிர நியூரம்பெர்கில் நடைபெற்ற மற்றொரு நிகழ்வில், ஹிட்லர் மலர்க்கொத்து ஒன்றை வரைந்து அதில் கையெழித்திட்டிருந்த ஓவியம் 72,000 யூரோக்களுக்கு விற்பனையானது.
கடந்த ஆண்டும் ஹிட்லர் 1914 ஆம் ஆண்டு வரைந்த வாட்டர் கலர் ஓவியங்கள் 129,000 யூரோக்களுக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டன.
ஓவிய உலகில் ஹிட்லர் சுமாரான ஓவியராகவே பார்க்கப்பட்டாலும், அவர் வரைந்த ஓவியங்கள் ஏலத்துக்கு வரும்போது அவை பெரிய தொகைகளுக்கு வாங்கப்படுகின்றன.
போலி ஓவியங்கள் குறித்தும் எச்சரிக்கை
ஜெர்மன் சட்டப்படி ஹிட்லரின் ஓவியங்களில், நாஜிக்களின் சின்னம் பொறிக்கப்படாதவரை அதை விற்க முடியும்.

பட மூலாதாரம், AFP
தற்போது ஏலத்தில் விற்பனையாகியுள்ள ஓவியங்களில் ‘ஏ ஹிட்லர்’ எனும் கையெழுத்து காணப்பட்டாலும், அவரால் வரையப்பட்டன என்று கூறப்படும் பல போலி ஓவியங்களும் சந்தையில் விற்பனைக்கு அவ்வப்போது வந்துள்ளன என்று எச்சரிக்கைகளும் வெளியாகியுள்ளன.
ஹிட்லருக்கு ஓவியம் வரையும் திறமை இருந்தாலும் 1900ஆம் ஆண்டுகளில் வியன்னா நுண்கலைக் கல்லூரியில் அவர் சேர முயன்றபோது இருமுறை அவரது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.
பின்னர் அவர் ஜெர்மனியில் இராணுவ மற்றும் அரசியல் தலைவராக உருவெடுத்து 1933 முதல் 1945 வரை ஆளுமை செலுத்தி வந்தார்.
அந்தக் காலகட்டத்தில் இரண்டாம் உலகப் போர் தொடங்குவதற்கு ஒரு காரணமாகவும் விளங்கிய அவர், இருபது லட்சம் மக்களின் மரணத்துக்கு காரணமாகவும் இருந்தார் என்று அறியப்படுகிறார்.












