பாரிஸ் சூப்பர் மார்க்கெட் தாக்குதல்: பலரைக் காப்பாற்றிய இளைஞர்
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நேற்று வெள்ளிக்கிழமை சூப்பர் மார்க்கெட் ஒன்றினுள் ஆயுததாரி நுழைந்து ஆட்களை பணயம் வைத்திருந்தபோது, பலரைக் காப்பாற்றிய கடையின் பணியாளர் ஒருவர் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

பட மூலாதாரம், Reuters
11 மாதக் குழந்தை ஒன்று அடங்கலாக 15 வாடிக்கையாளர்களை கடையின் குளிர் களஞ்சிய அறையில் இவர் மறைத்து வைத்திருந்துள்ளார்.
மாலி நாட்டு வம்சாவளியான லஸ்ஸன பாதிலி என்ற இந்த இளைஞர், கடையின் அடித்தள அறைக்கு வாடிக்கையாளர்களை அழைத்துச் சென்றதாக பிரான்ஸ் தொலைக்காட்சி ஒன்றுக்கு கூறியுள்ளார்.
அந்த அறையின் குளிரூட்டல் கருவியை நிறுத்திவிட்டு, அனைவரையும் அமைதியாக இருக்கும்படி கூறிவிட்டு, மீண்டும் கடைக்கு அவர் சென்றுள்ளார்.
பின்னர், தங்களின் உயிரைக் காப்பாற்றியதற்காக வாடிக்கையாளர்கள் தனக்கு நன்றிகூறிச் சென்றதாகவும் அந்த இளைஞர் கூறியுள்ளார்.
இந்தக் கடைக்குள் படையினர் அதிரடியாக நுழைந்து, ஆயுததாரிகள் மீது தாக்குதல் நடத்தி பணயக் கைதிகளை நேற்றிரவு காப்பாற்றியிருந்தனர்.
இந்த சம்பவத்தில் ஆயுததாரியும் 4 பணயக் கைதிகளும் பலியானமை குறிப்பிடத்தக்கது.








