காணாமல் போன விமானத்தை சீனா தனது நிலப்பரப்பில் தேடுகிறது

பட மூலாதாரம், Reuters
காணாமல் போன மலேசிய விமானத்தை, சீனா, தனது நிலப்பரப்புக்குள் தேடும் முயற்சியைத் தொடங்கியிருக்கிறது.
<link type="page"><caption> விமானத்துடன் ராடார் தொடர்பு அறுந்த இடத்தையும், அது சென்றிருக்கக்கூடிய பாதையையும் காட்டும் வரைபடங்கள்</caption><url href="#1" platform="highweb"/></link>
மலேசியாவில் இருந்து இந்த விமானம் வடமேற்காக சென்றிருந்தால், சீன நிலப்பரப்பின் மேலே மூவாயிரம் கிலோமீட்டர் தூரம் அளவுக்கு அந்த விமானம் பறந்திருக்க வாய்ப்புள்ளது என மலேசியர்கள் நம்புகின்றனர்.
எனவே மலேசியா கேட்டுக்கொண்டதற்கு இணங்க, அதிக நோக்குத் திறன் கொண்ட தனது செயற்கைக்கோள்களையும், ராடார்களையும் பயன்படுத்தி சீனா தனது நிலப்பரப்பை தேடுகிறது.
திபெத்திய பீட பூமியின் குறுக்காக இமாலய மலைத்தொடரை நோக்கி இந்த விமானம் சென்றிருக்கக்கூடிய அந்தப் பாதையிலுள்ள இடங்களில் சீனா தற்போதுதேட ஆரம்பித்துள்ளது.
சீனாவின் அதிநவீன செயற்கைக்கோள்களும் ராடார் கருவிகளும் ஏற்கனவே சேகரித்திருந்த தரவுகளையும் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் மீளாய்வு செய்யவிருக்கிறார்கள் என சீன வெளியுறவுத்துறை சார்பாகப் பேசவல்ல அதிகாரியான ஹொங் லெய் கூறினார்.
அதே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அந்த போயிங் 777 விமானத்தின் அறிகுறி ஏதும் சீன நிலப்பரப்பில் தென்படுகிறதா என்றும் அவர்கள் தேடவுள்ளனர்.
சீன அதிகாரிகள் தேடக்கூடிய நிலப்பரப்பின் எல்லைகள் குறித்து கூடுதல் விவரங்களை வழங்க ஹொங் மறுத்துள்ளார்.
இதனிடையே பெய்ஜிங்கில், இந்த விமானத்தில் பயணித்திருந்தவர்களுடைய உறவினர்கள் முன்னேற்றம் ஏதும் ஏற்படாதா என்று ஏங்கி பொறுமையிழந்தும் அவநம்பிக்கையில் மூழ்கியும் உள்ளனர்.
பெய்ஜிங்கில் மலேசியன் ஏர்லைன்ஸ் அதிகாரி ஒருவர் தகவல் வழங்கிய நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்த பயணி குடும்பத்தவர் ஒருவர், தேடுதல் முயற்சிகள் குறித்து மேலும் துல்லியமான விவரங்களை மலேசியா வழங்கத் தவறுமானால், உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கப்போவதாக எச்சரித்திருந்தார்.
இதனிடையே ,பத்து நாட்களுக்கும் முன்னர் காணாமல் போன இந்த விமானத்தில் பயணம் செய்த சீனப் பயணிகளின் பின்னணி குறித்து தீர ஆராயப்பட்டதாகவும், அவர்களில் யாருக்கும் விமானக் கடத்தலிலோ அல்லது பயங்கரவாதத் தாக்குதலிலோ தொடர்பு இருக்கும் என்று நம்புவதற்கான ஆதாரம் இல்லை என்றும், மலேசியாவுக்கான சீனத் தூதர் ஹுவாங் ஹுய்க்காங் தெரிவித்தார்.
இந்த விமானம் கோலாலம்பூரிலிருந்து பீஜிங் சென்று கொண்டிருந்தபோது, புறப்பட்ட சுமார் 45 நிமிடங்களுக்கெல்லாம் ராடார் தொடர்பை இழந்தது.
அதைத் தேடும் பணியில் இப்போது 26 நாடுகள் ஈடுபட்டிருக்கின்றன.
மலேசியாவுக்கு வடக்கே ஆசியாவின் சில பகுதிகளிலும், தெற்கே இந்தியப் பெருங்கடல் பகுதியிலும் இதைத் தேடும் வேலைகள் நடந்து வருகின்றன.
பல நாடுகள் , இந்த விமானம் தங்கள் வான்பாதைக்குள் வந்திருக்கும் என்பதை நிராகரித்திருகின்றன.

பட மூலாதாரம், BBC World Service

பட மூலாதாரம், BBC World Service












