காணாமல்போன விமானம்: என்ன செய்துகொண்டிருந்தது மலேசிய இராணுவம்?

காணாமல்போன விமானம் இராணுவ ராடாரில் தெரிந்திருந்தது

பட மூலாதாரம், AP

படக்குறிப்பு, காணாமல்போன விமானம் இராணுவ ராடாரில் தெரிந்திருந்தது

காணாமல்போன மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் MH370 சம்பந்தமாக தற்போது கிடைக்கப்பெற்றுள்ள தரவுகள், தேடுதலிலும் விசாரணைகளிலும் பெருமளவிலான மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது.

அதேநேரம் மலேசிய விமானப்படையின் செயல்திறன் பற்றிய கேள்விகளையும் இது எழுப்பியுள்ளது.

மலேசியாவின் ராணுவ ராடாரில் அடையாளம் காணப்படாத விமானம் ஒன்று மலேசிய வான்பரப்பினை கடந்து செல்வது தெரிந்திருந்தது என்று தற்போது கிடைக்கப்பெறுகின்ற தகவல்கள் கூறுகின்றன.

அந்த அடையாளம் தெரியாத விமானம் MH370தான் என்று இப்போது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அப்படியானால், அடையாளம் காணப்படாத ஒரு விமானம் நாட்டின் வான்பரப்பில் பறந்து செல்வது ராடாரில் தெரிந்திருந்தும் மலேசிய இராணுவத்தினர் எவ்வித நடவடிக்கையும் எடுத்திருக்கவில்லை என்று தெரியவருகிறது.

மலேசிய இராணுவம் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

2001ஆம் ஆண்டு அமெரிக்காவில் செப்டம்பர் 11 தாக்குதல் நடந்ததன் பின்னர் உலக நாடுகள் பலவற்றிலும் வான்பரப்பை கண்காணிக்கும் வேலைக்கு அதிக முக்கியத்துவஃம் கொடுக்கப்பட்டு வருகிறது.

அதுவும் பெட்ரோனாஸ் கோபுரங்கள் போன்ற மதிப்புமிக்க இலக்குகளைக் கொண்டுள்ள மலேசியா போன்ற ஒரு நாட்டில் இந்தக் கண்காணிப்பு சிறப்பாக இருந்திருக்க வேண்டும்.

ஆனால் இந்த விமானம் மலேசியாவை குறுக்காக கடந்து சென்றும் மலேசிய இராணுவம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தது பெரும் வியப்பாகவும் அதிர்ச்சியாகவும் உள்ளது என பிரிட்டிஷ் விமானப்படையின் முன்னாள் விமானியும் ஆய்வாளருமான அண்ட்ரூ புரூக்ஸ் தெரிவித்துள்ளார்.