ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்: பக்திகா மாகாணத்தில் குறைந்தது 1000 பேர் பலி, 1500 பேர் காயம்

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட ஒரு வீடு.

பட மூலாதாரம், @ALHAM24992157

படக்குறிப்பு, ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட ஒரு வீடு.

ஆப்கானிஸ்தான் பக்திகா மாகாணத்தில் நிகழ்ந்த வலுவான நிலநடுக்கத்தில் கொல்லப்பட்டோர் எண்ணிக்கை 1000ஆக உயர்ந்துள்ளது.

பக்திகா மாகாணத்தில் வீடுகள் இடிந்துகிடப்பதையும், காயமடைந்தவர்கள் ஸ்ட்ரெச்சரில் தூக்கிச் செல்லப்படுவதையும் காட்டும் படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன.

பக்திகா மாகாணத்தின் அரசு செய்தித் தொடர்பாளர் பிபிசியிடம் பேசும்போது, 1000 பேர் இறந்ததாகவும், 1500 பேர் காயமடைந்ததாகவும், மேலும் இந்த எண்ணிக்கை உயரும் என்றும் கூறினார்.

தென்கிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள கோஸ்ட் நகரில் இருந்து 44 கி.மீ. தூரத்தில் உள்ளூர் நேரப்படி அதிகாலை 1:30 மணிக்கு இந்த நிலநடுக்கம் நடந்துள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் 7,000 பேருக்கும் மேலானவர்கள் அங்கு நிலநடுக்கம் காரணமாக இறந்துள்ளனர் என்று ஐநாவின் மனிதாபிமான விவகாரங்கள் ஒருங்கிணைப்பு அலுவலத்தின் தரவுகள் கூறுகின்றனர். ஆண்டுக்கு சராசரியாக 560 பேர் நிலநடுக்கத்தால் இறந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்

பட மூலாதாரம், AFGHAN GOVERNMENT NEWS AGENCY

இந்தியா, பாகிஸ்தானிலும் உணரப்பட்ட அதிர்வு

இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் எல்லைகளுக்குள் சுமார் 500 தூரத்துக்கு இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது என ஐரோப்பிய மத்தியத்தரைக்கடல் நிலநடுக்கவியல் மையம் கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவிக்கிறது.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலும், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாக அதை நேரில் உணர்ந்தவர்களை மேற்கோள் காட்டி அந்த மையம் கூறியுள்ளது.

"துரதிஷ்டவசமாக கடந்த இரவு பக்திகா மாகாணத்தின் நான்கு மாவட்டங்களில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் நூற்றுக்கணக்கான ஆப்கன் மக்கள் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கம் பல வீடுகளையும் அழித்துள்ளது." என அரசு செய்தி தொடர்பாளர் பிலால் கரிமி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தான்

பட மூலாதாரம், AFGHAN GOVERNMENT NEWS AGENCY

"மேலும் பேரழிவு ஏற்படாமல் தடுப்பதற்கு, உதவி முகமைகள் தங்களின் குழுக்களை அனுப்ப வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்" என்றும் அவர் தெரிவித்தார்.

நிலநடுக்கத்தின் தீவிரம் என்ன?

காபூலில் இருந்து 182 கி.மீ. தொலைவிலும், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இருந்து 334 கி.மீ. தொலைவிலும், இந்திய நிர்வாகத்தில் உள்ள ஜம்மு காஷ்மீரின் ரஜௌரியில் இருந்து 445 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் 6.1 அளவில் பதிவானதாக இந்தியாவின் தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. அத்துடன் இந்திய நேரப்படி ஜுன் 22-ம் தேதி அதிகாலை 2.24 மணிக்குப் பதிவான இந்த நிலநடுக்கத்தின் மையம் பாகிஸ்தானில் இடம் பெற்றதாகவும் குறிப்பிடுகிறது அந்த நிலநடுக்கவியல் மையம்.

Destroyed buildings

பட மூலாதாரம், Afghanistan Information Service

ஆனால், பாகிஸ்தானில் சேதம் ஏதும் இருந்ததாக உடனடியாக செய்தி இல்லை என்கிறது பிபிசி உருது.

"நானும், குழந்தைகளும் அலறினோம்"

நள்ளிரவு தாண்டி நடந்த நிலநடுக்கம் ஏற்படுத்திய அழிவு குறித்து, உள்ளூர் மக்கள் ராய்டர்ஸ் செய்தி முகமையிடம் பகிர்ந்துகொண்டனர்.

"எங்கள் வீட்டின் அறை ஒன்று இடிந்து விழுந்தது. நானும் குழந்தைகளும் அலறினோம்," என்று பாத்திமா என்பவர் கூறினார்.

ஆப்கானிஸ்தான் நிலநடுக்க வரைபடம்.

"எங்கள் பக்கத்து வீடுகள் தரைமட்டமாகின. அந்த வீடுகளில் இருந்தோர் அலறினர். அவர்கள் அறைகள் எல்லாம் வெளியே தெரிந்தன" என்கிறார் ஃபைசல். "நாங்கள் சென்று பார்த்தபோது பலர் இறந்திருந்தனர். பலர் காயமடைந்திருந்தனர். நானே பல சடலங்களைப் பார்த்தேன்" என்கிறார் அவர்.

பக்திகா மாகாணத்தின் கயான், பர்மல் மாவட்டங்களில்தான் பெரும்பாலான இழப்புகள் ஏற்பட்டுள்ளன என உள்ளூர் மருத்துவர் ஒருவர் பிபிசியிடம் கூறினார்.

கயான் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம் ஒன்று முழுதாக அழிந்துவிட்டதாக உள்ளூர் செய்தித்தளமான எடிலாட்- இ- ரோஜ் (Etilaat-e Roz) தெரிவிக்கிறது.

51 கி.மீ. ஆழத்தில் 6.1 என்ற அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக நிலநடுக்கவியலாளர்கள் கூறுகின்றனர்.

காணொளிக் குறிப்பு, பன்னாட்டு நிறுவனத்தில் பணியாற்றும் முதல் காணி பழங்குடி இளைஞர்கள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: