இரானில் ஒரு அவல நிலை: 'வருமானம் ஈட்ட வழியில்லை' - வாழ்வதற்காக பாலியல் தொழிலில் ஈடுபடும் துயரம்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், அமிர் நடேகா
- பதவி, பிபிசி நியூஸ்
"நான் இதை செய்வது குறித்து வெட்கப்படுகிறேன். ஆனால், எனக்கு வேறு வழி என்ன இருக்கிறது?", என்று கேட்கிறார் இரான் தலைநகர் டெஹ்ரானை சேர்ந்த நீடா. நீடா விவாகரத்தானவர் .
பகலில் சிகை அலங்காரம் பணி செய்யும் இவர், இரவில் மற்றொரு பணியாக பாலியல் தொழிலாளியாக பணியாற்றுகிறார். தனது பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இந்த தொழிலில் ஈடுபடும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்.
"பெண்கள் பெரிதும் மதிக்கப்படாத ஒரு நாட்டில் நான் வாழ்கிறேன். பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் பொருட்களின் விலை அதிகரித்துக்கொண்டே வருகிறது. நான் தனியாக என் மகனை வளர்கிறேன். பாலியல் தொழிலில் நல்ல பணம் கிடைக்கிறது. இப்போது நகரத்தில் ஒரு சிறிய வீட்டை வாங்க திட்டமிட்டு உள்ளேன். என் வாழ்வின் கசப்பான உண்மை இது. வெளிப்படையாக நான் என் ஆன்மாவை விற்கிறேன்" என்று அவர் கூறுகிறார்.
கடந்த 2012 ஆம் ஆண்டு, பாலியல் தொழிலை கட்டுப்படுத்த தேசிய திட்டத்தை இரான் அறிவித்தது. ஆனால், ஆராய்ச்சியாளர்களும் தன்னார்வல குழுக்களும் அளித்த அதிகாரப்பூர்வமற்ற தகவலின்படி, பாலியல்தொழிலில் பணியாற்றுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இரானின் பழமைவாத மத அமைப்பால், பாலியல் தொழிலாளிகளின் இருப்பு நீண்ட காலமாக அதிகாரப்பூர்வமாக மறுக்கப்பட்டு வந்தது. இளைஞர்களை கெடுக்க மேற்கத்திய நாடுகளால் தீட்டப்பட்ட சதியே பாலியல் தொழில் என அதிகாரிகள் குற்றம்சாட்டினர்.
அதிகாரப்பூர்வமற்ற தகவலின்படி, இரானில் குறைந்த வயதினரும் பாலியல் தொழிலில் ஈடுபடுகின்றனர். 2016ஆண்டு எடுக்கப்பட்ட பல்வேறு தன்னார்வல குழுக்களின் கணக்கிடுப்பின்படி, 12 வயதுடைய சிறுமிகளும் பாலியல் தொழிலில் ஈடுபட்டனர்.
இரானில் போதை பழக்கத்துக்கு அடிமையான பெண்களுக்கு சிகிச்சையளிக்கும் தன்னார்வலக் குழுவான அஃப்தாப் சோசைட்டி, அந்நாட்டு தலைநகரில் ஏறக்குறைய 10 ஆயிரம் பெண் பாலியல் தொழிலாளிகள் வரை இருக்கலாம் என்று கூறுகிறது. இதில், கிட்டதட்ட 35% பெண்கள் திருமணமானவர்கள்.
டெஹரானில் பெண் பாலியல் தொழிலாளிகளின் எண்ணிக்கை கிட்டதட்ட இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது என்று டெஹரான் பல்கலைகழகத்தின் சமூக நல்வாழ்வு பேராசிரியர் அமீர் முகமது ஹர்ரிச்சி கூறுகிறார்.
இரானில் ஒப்பிட்டளவில், பெண்களுக்கான வேலைவாய்ப்பு மிகவும் குறைவு. பாலின சமத்துவம் அங்கு இல்லை. இதனால், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பல பெண்கள் பணம் ஈட்டுவதற்காக பாலியல் தொழிலில் ஈடுபடுக்கின்றனர். ஆனால், அவர்களின் பணி பெரும் அபாயங்களுக்கிடையே நடைபெறுகின்றது.
"இரானில் பாலியல் தொழில் சட்டப்பூர்வமற்றது என்று ஆண்களுக்கு தெரியும். பெண்களுக்கு கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும். எனவே இதை அவர்களின் ஆதாயத்திற்காக பயன்படுத்தி கொள்கின்றனர்," என்று டெஹ்ரான் பல்கலைகழகத்தின் மாணவியான மஹ்னாஸ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கூறுகிறார்.
இவர் பகுதி நேரமாக பாலியல் தொழில் செய்து வருகிறார்.
"பல்வேறு தருணங்களில் அப்படி எனக்கு நடந்துள்ளது. சிலர் என்னுடன் பாலியல் உறவு வைத்துக்கொண்டு, பணம் கொடுக்க மாட்டார்கள். என்னால் அதிகாரிகளிடம் இதுகுறித்து புகார் அளிக்கவும் முடியாது," என்றார் மஹ்னாஸ்.
டெஹ்ரானில் வாழ்க்கை நடத்துவதற்கு அதிகம் பணம் தேவை. மற்ற வேலைகள் செய்து, இந்த செலவுகளை தன்னால் சமாளிக்க முடியாது என்கிறார் மஹனாஸ்.
பாலியல் உறவுக்காக செய்யப்படும் தற்காலிக திருமணங்கள்
கடந்த 1979 ஆம் ஆண்டு இரானில் இஸ்லாமிய புரட்சி நடந்ததை தொடர்ந்து, புதிய அரசால் பல பாலியல் தொழிலாளர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. பாலியல் தொழில் நடக்கும் இடங்களும் மூடப்பட்டன. பெண்களை பாலியல் உறவுக்காக பயன்படுத்துவதை சட்டப்பூர்வமாக்க, 'ஸாவாஜ் அல்-மூட்டா' அல்லது 'இன்ப திருமணம்' என்பதை வழக்கமாக கொண்டனர். அதாவது, ஒருவருக்கு தற்காலிக மனைவியாக இருப்பதற்கான கால அளவையும், அதற்கான கட்டனத்தையும் குறிப்பிட்டு செய்யப்படும் ஒப்பந்தம். இது மிகவும் பரவலாகி வருகிறது.
இரான் நாட்டின் ஷியா இஸ்லாம் நடைமுறையின் கீழ், இதுபோன்ற திருமணங்கள் அனுமதிக்கப்படுகின்றன. இது பாலியல் தொழில் சட்டத்தின் கீழ் வராது. இத்தகைய வழக்கம் மஸ்சாத், கும் போன்ற புனிதமான நகரங்களில் பரவலாக காணப்படுகிறது. இந்த நகரங்களுக்கு உலகம் முழுவதில் இருந்தும் ஷியா யாத்திரிகர்கள் வருகின்றனர். சமூக ஊடகங்களில் உள்ள வீடியோக்களில், மஸ்சாத்தில் ஆண்கள் பாலியல் உறவை எதிர்பார்த்து இருப்பது போல் இருந்தனர். ஆனால், அவர்கள் தற்காலிக திருமணங்களில் ஈடுபடுவதாக அதிகாரிகள் விவாதிக்கின்றனர்.

பட மூலாதாரம், Getty Images
தற்போது டெலிகிராம் மற்றும் வாட்சப் உட்பட பல தளங்களில் முட்டா திருமணத்திற்கான சேவைகள் குறித்த தகவல்கள் காணப்படுகின்றன. அவர்கள் இதற்கு அரசு அனுமதி இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.
இரானின் அணுத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்கா பொருளாதார தடைகள் விதித்தது, அந்நாட்டில் வாழ்வாதார செலவுகள் அதிகரித்ததற்கான ஒரு முக்கிய காரணம். இதனால், பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. கடந்த ஆண்டு, இரானின் பணவீக்கம் 48.6% ஆக அதிகரித்துள்ளது. வேலைவாய்ப்பின்மையும் அதிகரித்துள்ளது. வேலை இருப்பவர்களுக்கும், சரியாக ஊதியம் அளிக்கவில்லை.
இத்தகைய சூழ்நிலையில், பாலியல் தொழிலில் ஈடுபடும் ஆண்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இவர்கள் 20 முதல் 35 வயது வரை உள்ளவர்கள். இரானில் உள்ள பெரு நகரங்களில் ஆண் பாலியல் தொழிலாளர்களும் அதிகமாகி வருகின்றனர்.
அப்படி ஒருவர்தான் 28 வயதான கம்யர் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் ஒரு சூப்பர்மார்க்கெட்டில் கேஷியராக பணி செய்து வருகிறார். கடந்த ஆண்டு வரை பெற்றோருடன் வசித்த இவரால், தனது தந்தையின் உதவி இல்லாமல் செலவுகளை சமாளிக்க முடியாது. "தற்போது மத்திய டெஹரானில் என்னால் ஒரு குடியிருப்பில் வாடகைக்கு இருக்க முடிகிறது." என்கிறார்.
அவர் வெளிநாட்டிற்கு போகும் எண்ணத்திலும் இருக்கிறார்.
"நான் என் வாடிக்கையாளர்களை சமூக ஊடகங்களில் உள்ள கணக்குகளில் கண்டுப்பிடிப்பேன். இப்பெண்கள் பொதுவாக 30, 40 வயதில் இருப்பார்கள். ஒருமுறை, 54 வயதான ஒரு வாடிக்கையாளர் வந்தார். அவர்கள் என்னை சரியாக நடத்துகிறார்கள். நல்ல பணம் அளிக்கிறார்கள். எப்போதும் அவர்களின் இடத்தில்தான் நான் இரவில் உறங்குவேன். என்னிடம் வருபவர்கள் மூலம்தான் எனக்கு மேலும் வாடிக்கையாளர்கள் வந்தனர்.", என்று கூறுகிறார்.
கம்யர் ஒரு தேர்ந்த பொறியாளர். ஆனால், அவர் விரும்பும் அத்துறையில் அவருக்கு எந்த எதிர்காலமும் இல்லை.
"நான் எப்போதும் பொறியாளராக வேண்டும் என்று விரும்பினேன். ஆனால், அங்கு எனக்கு வேலை கிடைக்கவே இல்லை", என்கிறார்.
"நான் ஒரு பெண்ணை விரும்பினேன். எனக்கு வேலை இல்லாத காரணத்தால், எங்களால் திருமணம் செய்துக்கொள்ள முடியவில்லை. நான் செய்வது குறித்து பெருமையடையவில்லை. நான் வளரும்போது, அந்நியர்களுடன் பணத்திற்காக உறங்குவேன் என்று நான் கனவிலும்கூட நினைத்ததில்லை. நிச்சயமாக, நான் வெட்கப்படுகிறேன். ஆனால், என் செலவுகளை சமாளிக்க முடிகிறது. என் எதிர்காலமாக நான் துயரத்தை மட்டுமே கற்பனை செய்யக்கூடிய நாட்டில் இருக்கிறேன்", என்கிறார்.
பிற செய்திகள்:
- அரிசி 200, வெங்காயம் 250, முட்டை 35 ரூபாய் - இலங்கையில் உச்சத்துக்கு சென்ற பொருட்களின் விலை
- "புதின் ஒரு போர்க் குற்றவாளி" என்று முதல் முறையாக கூறிய பைடன் - சீறிய ரஷ்யா - நடந்தது என்ன?
- ஹிஜாப் அணிந்ததால் ரயிலில் அனுமதி மறுப்பா? - ட்விட்டரில் குவிந்த கண்டனம்
- எங்கள் வானத்தை காப்பாற்றுங்கள் - அமெரிக்க நாடாளுமன்றத்தில் யுக்ரேன் அதிபர் உருக்கம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












