ரஷ்ய படையெடுப்பு: யுக்ரேனில் அமெரிக்க பத்திரிகையாளர் உயிரிழப்பு

பட மூலாதாரம், Getty Images
அமெரிக்காவை சேர்ந்த பத்திரிகையாளர் ப்ரென்ட் ரெனாட், யுக்ரேன் தலைநகர் கீயவுக்கு வெளியே இர்பின் என்ற நகரில் சுட்டுக் கொல்லப்பட்டார் என்று காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
அவர் ரஷ்ய படையினரால் தாக்கு வைக்கப்பட்டார் என்று கீயவின் தலைமை காவல்துறை அதிகாரி ஆண்ட்ரிவ் நெபிடோவ் தெரிவித்துள்ளார். மேலும் இரு பத்திரிகையாளர்கள் காயமடைந்துள்ளனர்; அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

பட மூலாதாரம், Getty Images
இதன்மூலம் யுக்ரேனில் செய்தி சேகரிக்கும் முதல் வெளிநாட்டு பத்திரிகையாளர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
ப்ரென்ட் ரெனாட்டிற்கு நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையால் வழங்கப்பட்ட அடையாள அட்டையின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
ஆனால் கடந்த 2015ஆம் ஆண்டுதான் ப்ரென்ட் ரெனாட் தங்களுக்காக கடைசியாக பணிபுரிந்தார் என்றும், யுக்ரேனில் தங்களுக்காக அவர் பணிபுரியவில்லை என்றும் நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
மேலும் அவர் பணி செய்து வந்த காலத்தில் அந்த அடையாள அட்டை வழங்கியதாகவும் நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
எனவே யுக்ரேனில் ப்ரென்ட் எந்த பத்திரிகைக்கு பணி செய்து வந்தார் என்பது இதுவரை தெரியவில்லை.

'வானம் சிவப்பாக மாறியது'
போலாந்து எல்லைக்கு அருகில், யுக்ரேன் ராணுவ தளத்தில் நடைபெற்ற ஏவுகணை தாக்குதலை நேரில் பார்த்தவர், தாக்குதலின்போது வானம் எப்படி சிவப்பாக மாறியது என்று விவரித்துள்ளார்.

பட மூலாதாரம், UNKNOWN
யுக்ரேனிலிருந்து போலாந்துக்கு தப்பிச் செல்ல மக்களால் பயன்படுத்தப்படும் பகுதியில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது. இதில் இதுவரை 35 பேர் உயிரிழந்துள்ளனர்.
லீவிவ் நகருக்கு வெளியில் உள்ள ராணுவ தளத்தில் ரஷ்யா தாக்குதல்களை நடத்தியுள்ளதாக உள்ளூர் ஆளுநர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
தாக்குதல் நடந்து பல மணி நேரங்களுக்கு பிறகும் அவசர ஊர்திகள் சம்பவ இடத்திற்கு தொடர்ந்து செல்கிறது. அதிகாரிகள் அங்கே விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சமூக வலைத்தளத்தில் காணப்பட்ட, தாக்குதல் நடந்த பிறகு எடுக்கப்பட்ட வீடியோவில் பெரிய பள்ளம் ஒன்று ஏற்பட்டுள்ளதும், அருகாமை கட்டடத்தில் தீப்பற்றி எறிவதும் தெரிகிறது.
சம்பவ இடத்திற்கு அருகாமையில் உள்ள குடியிருப்பு பகுதியில் வசிக்கும் 19 வயது மாணவர் டக்னிச் விடாலி, ஏவுகணை தாக்கியதும் வானம் சிவப்பாக மாறியதாக தெரிவிக்கிறார்.
"வெடிப்பு சத்தத்தை கேட்டு நாங்கள் தூக்கத்திலிருந்து எழுந்தோம். அது மிகவும் அச்சமாக இருந்தது" என்கிறார் விடாலி.
அதுமட்டுமல்லாமல் தனது 25 வயது உறவினர் அந்த ராணுவ தளத்தில் பயிற்சியில் இருப்பதாகவும், தற்போதுவரை தனது குடும்பத்தால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

'இரண்டாவது முறையாக மேயர் கடத்தல்'

பட மூலாதாரம், DMYTRO KULEBA
யுக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பு 18ஆவது நாளாக தொடர்ந்து வரும் சூழலில், யுக்ரேனின் டினிப்ரோருட்னே நகரின் மேயர் கடத்தப்பட்டுள்ளதாக யுக்ரேனிய வெளியுறவுத்துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபா தெரிவித்துள்ளார்.
நேற்று மெலிடோபோல் என்ற நகரின் மேயர் கடத்தப்பட்டார் என்று தெரிவித்திருந்த நிலையில் இன்று மற்றொரு நகர மேயர் கடத்தப்பட்டுள்ளார் என யுக்ரேனின் வெளியுறவுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
வெள்ளிக்கிழமையன்று யுக்ரேனின் தென்கிழக்கு பகுதியில் உள்ள ஒரு சிறிய நகராமான மெலிடோபோல் நகரின் மேயர் ஃபெடோரோவை ரஷ்யப் படையினர் கடத்தி உள்ளதாக யுக்ரேனிய அதிகாரிகள் காணொளி வெளியிட்டிருந்தனர்.
கடத்தப்பட்ட மேயரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று யுக்ரேனின் அதிபர் வோலோடிமிர் செலன்ஸ்கி வலியுறுத்தியிருந்த நிலையில் தற்போது மீண்டும் நகர மேயர் ஒருவர் கடத்தப்பட்டுள்ளார் என்று யுக்ரேன் தெரிவிக்கிறது.
இது தொடர்பாக யுக்ரேனின் வெளியுறவுத்துறை அமைச்சர் டிமிட்ரி குலேபா கூறுகையில் "ரஷ்ய போர் குற்றவாளிகள் யேஹென் மட்வேயேய் கடத்திச் சென்றனர். உள்ளூர் மக்களின் ஆதரவை பெற முடியாததால், ரஷ்ய படையினர் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுகிறார்கள். யுக்ரேன் மற்றும் ஜனநாயகத்திற்கு எதிரான ரஷ்ய பயங்கரவாதத்தை நிறுத்த அனைத்து நாடுகளையும் சர்வதேச அமைப்புகளையும் நான் அழைக்கிறேன்," என்றும் அவர் கூறியுள்ளார்.
18 ஆவது நாளாக நடக்கக்கூடிய யுக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பில், இதுவரை சுமார் 3,687 யுக்ரேன் ராணுவத்திற்கு தொடர்பான இடங்கள், 99 விமானங்கள், 1,194 டாங்கிகள் மற்றும் கவச போர் வாகனங்கள் மற்றும் 443 பீரங்கித் துப்பாக்கிகளை அழித்துள்ளதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்ததாக ரஷ்ய செய்தி நிறுவனமான இன்டர்ஃபாக்ஸ் (Interfax) தெரிவித்துள்ளது.
இதேபோல் சுமார் 12,000 க்கும் மேற்பட்ட ரஷ்ய படைவீரர்கள் மற்றும் ரஷ்யாவின் 374 டாங்கிகள், 1,226 கவச போர் இயந்திரங்கள் மற்றும் 140 பீரங்கி அமைப்புகளை அழித்ததாக யுக்ரேனிய ராணுவம் தெரிவித்து வருகிறது.
ஆனால் இந்த இருதரப்பு தகவல்களையும் பிபிசியால் சுயாதீனமாக உறுதி செய்ய முடியவில்லை.
பிற செய்திகள்:
- ரஷ்ய படையெடுப்பு: தீவிரமடையும் தாக்குதல், சீர்குலைந்த நகரங்கள்; வீதிகளில் சமையல் - புகைப்படத் தொகுப்பு
- ஓ.பி.எஸ், இ.பி.எஸ்ஸுக்கு எதிராக தனி அணி ஏன்?
- யுக்ரேன்: ரசாயன ஆயுதங்கள் என்றால் என்ன? ரஷ்யாவால் அதை பயன்படுத்த முடியுமா?
- ஒரே நாளில் 81 பேருக்கு மரண தண்டனை விதித்த செளதி அரேபியா – காரணம் என்ன?
- ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்: திமுக - காங்கிரஸ் கூட்டணி நிலைப்பாட்டில் மாற்றம் வருமா?
- கொத்தமல்லி காதல்: இந்திய கலைஞரின் முயற்சிக்கு பெருகும் நெட்டிசன்களின் ஆதரவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












