சீனாவின் தியானென்மென் சதுக்கப் படுகொலை அருங்காட்சியகத்தை மூடிய ஹாங்காங் போலீசார் : 4 பேர் கைது

ஹாங்காங்கின் தியானென்மென் அருங்காட்சியகத்தில் இருந்து அதிகாரிகள் வெளியே கொண்டு செல்லும் ஜனநாயக தேவி காகித மாதிரி.

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, ஹாங்காங்கின் தியானென்மென் அருங்காட்சியகத்தில் இருந்து அதிகாரிகள் வெளியே கொண்டு செல்லும் ஜனநாயக தேவி காகித மாதிரி.

ஹாங்காங்கில் உள்ள தியானென்மென் சதுக்கப் படுகொலை தொடர்பான அருங்காட்சியகத்தில் ரெய்டு நடத்திய ஹாங்காங் போலீசார் அந்த அருங்காட்சியகத்தை நடத்திய குழுவைச் சேர்ந்த 4 பேரை கைது செய்தனர்.

1989ம் ஆண்டு சீனாவில் தியானென்மென் சதுக்கத்தில் ஜனநாயக உரிமைகள் கோரி நடத்தப்பட்ட மாணவர் போராட்டம் மோசமாக நசுக்கப்பட்டது. பல்லாயிரம் பேர் கொல்லப்பட்டதாக புகார் எழுந்தது. உலகை உலுக்கிய இந்த சம்பவத்தை நினைவுகூரும் விதமாக இந்த அருங்காட்சியகம் நடத்தப்பட்டது.

ஹாங் காங் போலீசார் இந்த அருங்காட்சியகத்தில் ரெய்டு நடத்தி அதை மூடிய பிறகு, அங்கிருந்த காட்சிப் பொருள்களை அதிகாரிகள் எடுத்துச் சென்றதைப் பார்க்க முடிந்தது.

ஹாங் காங் அலையன்ஸ் என்ற ஜனநாயக ஆதரவுக் குழு இந்த அருங்காட்சியகத்தை நடத்திவந்தது. அந்தக் குழுவைச் சேர்ந்த 4 பேர் புதன்கிழமை கைது செய்யப்பட்டனர்.

முக்கியமான ஜனநாயக ஆதரவு செயற்பாட்டாளரும், பெண் வழக்குரைஞருமான சௌ ஹாங் துங் கைது செய்யப்பட்ட நால்வரில் ஒருவர்.

தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இந்த கைதுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த சட்டத்தின் கீழ் அதிகபட்சமாக ஆயுள் தண்டனை விதிக்க முடியும்.

நாசவேலையை தூண்டியதாக சௌ மீது குற்றம்சாட்டுகிறது போலீஸ் என்று அவரது வழக்குரைஞர்கள் கூறுகின்றனர்.

ஆண்டுதோறும் தியானென்மென் சதுக்க சம்பவத்தில் கொல்லப்பட்டவர்கள் நினைவாக நிகழ்வுகளை நடத்தும் இந்த அமைப்பு தாங்கள் வெளிநாட்டு கையாட்களாக செயல்படுவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டை மறுக்கிறது.

ஹாங்காங் தியானென்மென் அருங்காட்சியகத்தில் இருந்து காட்சிப் பொருள்களை அகற்றும் அதிகாரிகள்.

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு, ஹாங்காங் தியானென்மென் அருங்காட்சியகத்தில் இருந்து காட்சிப் பொருள்களை அகற்றும் அதிகாரிகள்.

இந்த அருங்காட்சியகம் ஜூன் மாதமே மூடப்பட்டுவிட்டது. வியாழக்கிழமை நடத்தப்பட்ட ரெய்டு, புதிதாக உருவாக்கப்பட்ட தேசியப் பாதுகாப்பு அலகால் மேற்கொள்ளப்பட்டது.

ஜனநாயக தேவி உருவம்

அருங்காட்சியகத்தில் இருந்து அதிகாரிகள் எடுத்துச் சென்ற காட்சிப் பொருள்களில் முக்கியமானது, ஜனநாயக தேவி (Goddess of Democracy) காகித மாதிரி. 1989ம் ஆண்டு பெய்ஜிங் நகரின் தியானென்மென் சதுக்கத்தில் ஜனநாயக உரிமைகள் கேட்டு மாணவர்கள் நடத்திய போராட்டத்தின் அடையாளச் சின்னமாக இந்த ஜனநாயக தேவி உருவமே இருந்தது.

தியானென்மென் சதுக்க சம்பவத்தில் இறந்தவர்கள் நினைவாக நடத்தப்பட்ட மெழுகுவர்த்தி ஏந்திய நினைவேந்தல் நிகழ்வுகளைக் காட்டும் பெரிய புகைப்படங்களையும் அதிகாரிகள் எடுத்துச் சென்றனர்.

அமைப்பு உருவாக்கப்பட்டதில் இருந்து அனைத்து உறுப்பினர்களின் தனிப்பட்ட விவரங்கள், நிதி சார்ந்த பதிவேடுகள் உள்ளிட்ட தகவல்களை அளிக்கும்படி ஹாங்காங் அலையன்ஸ் அமைப்பை தேசியப் பாதுகாப்பு அலகு முன்னதாக கேட்டுக்கொண்டது.

இந்த விவரங்களை அளிப்பதற்கான காலக்கெடுவான கடந்த செவ்வாய்க்கிழமை, தாங்கள் ஒத்துழைக்க மறுப்பதை விளக்கி ஹாங்காங் அலையன்ஸ் ஒரு கடிதத்தை அளித்தது. அடுத்த நாள் காலை, இந்த அமைப்பின் நிலைக்குழு உறுப்பினர்களை அவரவர் வீடு, அலுவலகங்களில் வைத்து போலீசார் கைது செய்தனர்.

இவர்களில் மனித உரிமை வழக்குரைஞர் சௌ, அதிகாரபூர்வமற்ற முறையில் கூட்டம் கூட்டியதாக குற்றம்சாட்டப்பட்டு இந்த ஆண்டு தொடக்கத்தில் ஒருமுறை கைது செய்யப்பட்டார். பிறகு அவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.

ஹாங்காங் தியானென்மென் அருங்காட்சியகத்தில் இருந்து காட்சிப் பொருள்களை அகற்றும் அதிகாரிகள்.

பட மூலாதாரம், Reuters

தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட எதிர்க்கட்சி அரசியல்வாதி ஒருவருக்கு பிணை வழங்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது அவர் புதன்கிழமை நீதிமன்றத்தில் ஆஜராகி வாதிட்டிருக்கவேண்டும். ஆனால், கைது செய்யப்பட்டதால் அவரால் நீதிமன்றத்தில் ஆஜராகமுடியவில்லை.

விரிவாக வரையறை செய்யப்பட்ட தேசிய பாதுகாப்பு சட்டத்தை சமீபத்தில் ஹாங்காங்கில் அமல்படுத்தியது சீனா. இந்த சட்டத்தின்கீழ் பிரிவினை, நாசவேலை, பயங்கரவாதம், வெளிநாட்டு சக்திகளோடு கூட்டு சேர்வது ஆகியவை குற்றங்களாக அறிவிக்கப்பட்டன.

கருத்து மாறுபாடுகளை நசுக்குவதற்காகவே இந்த சட்டம் கொண்டுவரப்பட்டதாக விமர்சகர்கள் கூறுகிறார்கள். ஸ்திரத்தன்மையை பேணுவதற்காக இந்த சட்டம் அவசியம் என்கிறது சீனா.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :