காபூலில் வெளியூர் மக்கள் எதிர்கொள்ளும் இன்னல்கள் - கள நிலவரம்

- எழுதியவர், நிக்கோலா கரீம், அஷிதா நாகேஷ்
- பதவி, பிபிசி செய்திகள், காபூல் மற்றும் லண்டன்
ஆஃப்கானிஸ்தானில் அதிகரித்து வரும் வன்முறை, தாலிபான்களின் ஆக்கிரமிப்பு ஆகியவற்றால் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி காபூல் நகரில் அடைக்கலம் புகுந்தவண்ணம் இருக்கிறார்கள்.
அங்கு வந்தபின்பு, பழைய கட்டிடங்களிலும் தெருக்களிலும்கூட அவர்கள் தங்கும் நிலை ஏற்படுகிறது. உணவு, இடம், மருந்து போன்ற சுகாதாரப் பொருட்கள், அத்தியாவசியத் தேவைகள் ஆகியவற்றுக்கே அவர்கள் திண்டாடுகிறார்கள்.
ஆனால் அதைத் தவிர வேறு வழியில்லை என்று இந்த மக்கள் நினைக்கிறார்கள். காபூலில் கஷ்டப்படுவது, சொந்த ஊரில் வசித்தால் இறந்துவிடுவது ஆகிய இரண்டு வழிகள் மட்டுமே இருக்கின்றன என்கிறார்கள். காபூலின் புறநகர்ப் பகுதிகளில் உள்ள புதர்க்காடுகளில் அமைக்கப்பட்ட தற்காலிகமான கூடாரங்களில் ஆயிரக்கணக்கானோர் தங்கியிருக்கிறார்கள்.
குந்தூஸ் மாகாணத்தைச் சேர்ந்த 35 வயதான வியாபாரி அஸதுல்லா தன் மனைவி மற்றும் இரு இளம் மகள்களுடன் இந்த வாரத்தின் தொடக்கத்தில் காபூலுக்குப் பயணித்திருக்கிறார். தாலிபான்கள் தன் வீட்டைத் தீக்கிரையாக்கிவிட்டதால் இந்த முடிவை எடுத்ததாகக் கூறுகிறார்.
"நான் ஒரு நடைபாதி வியாபாரி, உணவும் வாசனைப் பொருட்களும் விற்பேன், தாலிபான் தாக்குதலின்போது நாங்கள் காபூலுக்கு வந்தோம். இங்கே ரொட்டி வாங்கவோ குழந்தைக்கு மருந்து வாங்கவோ காசு இல்லாமல் கஷ்டப்படுகிறோம்" என்று பிபிசியிடம் தெரிவித்தார்.
இரவு நேரங்களை அஸதுல்லாவின் குடும்பம் தெருவில் கழித்திருக்கிறது.

"எங்கள் வீட்டிலிருந்த எல்லா பொருட்களும் எரிந்துவிட்டன. உதவி கிடைக்கக் கடவுளை வேண்டிக்கொண்டு காபூல் வந்து சேர்ந்தோம். எங்கள் வீட்டை ஏவுகணைகள் தாக்கின, கடந்த ஏழு நாட்களாகக் கடும் மோதல்கள் ஏற்பட்டன. ரொட்டி கிடைக்கவில்லை, கடைகளும் பேக்கரிகளும் பூட்டப்பட்டுவிட்டன" என்கிறார்.
பெயர் வெளியிட விரும்பாத ஒரு பெண்மணி ஃபுல் - இ - கும்ரி என்ற வடக்கு மாகாண நகரத்திலிருந்து தன் கணவர் மற்றும் குழந்தைகளுடன் வந்திருப்பதாகக் கூறுகிறார். போரில் தன் கணவருக்குக் காயம் பட்டிருப்பதாகவும் தெரிவிக்கிறார்.

"நல்ல ஒரு வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருந்தோம். குண்டு வெடிப்புகளால் வீடு பறிபோனது. இங்கு வந்து சேர்ந்திருக்கிறோம். கையில் ஒரு பைசா இல்லாமல் கட்டிய ஆடையுடன் வீட்டை விட்டு வெளியேறினோம்" என்கிறார்.
இருபது வருட ராணுவ செயல்பாடுகளுக்குப் பிறகு இந்த ஆண்டின் தொடக்கத்தில் அமெரிக்கப் படைகள் ஆஃப்கானிஸ்தானிலிருந்து வெளியேறத் தொடங்கியிருக்கின்றன. அப்போதிலிருந்து உள்நாட்டுக்குள்ளேயே புலம்பெயர்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகியிருக்கிறது என்று சர்வதேச மனிதநேய அமைப்புகள் எச்சரித்தபடி இருக்கின்றன. 9/11 அமெரிக்கத் தாக்குதல்களுக்குப் பிறகு போர் தொடங்கியது. இப்போது பெரும்பாலான படைகள் வெளியேறிவிட்டன.

வெளியேற்றம் தொடங்கியபிறகு தாலிபான்களுக்கும் அரசுப்படைகளுக்கும் இடையே மோதல்கள் அதிகரித்திருக்கின்றன. ஆஃப்கானிஸ்தானைச் சேர்ந்த 34 மாகாணத் தலைநகரங்களில், 8 தலைநகரங்கள் தாலிபான்களால் கைப்பற்றப்பட்டிருக்கின்றன. இது தொடரும் என்றும் தாலிபான்கள் அச்சுறுத்துகின்றனர்.
அடுத்த 90 நாட்களுக்குள் தாலிபான் வீழும் என அமெரிக்க ராணுவ ஆராய்ச்சிகள் தெரிவிப்பதாக பெயர் வெளியிட விரும்பாத அமெரிக்க அதிகாரிகள் வாஷிடங்க்டன் போஸ்ட் பத்திரிக்கையாளர்களிடம் கூறியிருக்கிறார்கள்.
பிரச்னை காரணமாக தங்கள் வீடுகளை விட்டு தலைநகரை நோக்கி மக்கள் நகர்ந்துவருகிறார்கள். ஜூலை மாதத்தில் படைகள் வெளியேறத் தொடங்கிய பின்னர் 2,70,000 மக்கள் உள்நாட்டில் புலம்பெயர்ந்திருக்கிறார்கள் என்கிறது ஐ.நா. இது அடுத்த சில நாட்களில் அதிகரிக்கும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.
இதற்கு நடுவே 1000 பொதுமக்களுக்கு மேல் கொல்லப்பட்டிருப்பதாகவும் ஐ.நா தெரிவிக்கிறது.
இதுபோன்ற இடப்பெயர்வுகள் பெண்களையும் குழந்தைகளையுமே அதிக அளவில் பாதிக்கும் என்று தொண்டு நிறுவனங்கள் கூறுகின்றன. "மருத்துவம் சார்ந்த பாதுகாப்பின் தேவை, பாலினம் தொடர்பான வன்முறை, பாலியல் சுரண்டல், தாக்குதல், கடத்தல் போன்ற பல நிகழ்வுகள் அதிகரித்திருப்பதைப் பார்க்கிறோம். வீட்டுக்குப் பணம் தேவை என்பதற்காகப் பெண்கள் விற்கப்படுவதால் குழந்தைத் திருமணங்கள் அதிகரிக்கலாம். இவை ஏற்கனவே பிரச்சனையாக இருந்தன, அது இன்னும் தீவிரமாகும்" என்கிறார் ஆஃப்கானிஸ்தானில் உள்ள டேனிஷ் அகதிகள் கவுன்சிலின் இயக்குநர் ஜேரட் ரோவெல்.

உணவு, இருப்பிடம், மருத்துவ வசதி, சுகாதாரப் பொருட்கள் தவிர, காபூலுக்குப் புலம்பெயர்ந்த குடும்பங்களுக்குப் பணம் ஒரு முக்கியத் தேவை என்கிறார் இவர்.
"பணம் ஒரு முக்கியமான தேவை. டி.ஆர்.சியைப் போன்ற ஒரு நிறுவனத்தை அவர்கள் அணுகும்போது அவர்கள் கையில் பணம் வரும், அந்தப் பணத்தை அவர்கள் தங்கள் அடிப்படைத் தேவைகளுக்காகப் பயன்படுத்திக்கொள்ளலாம். காபூல் மாதிரியான பெரிய நகரத்தில் எல்லாவற்றுக்குமே விலை அதிகம். இப்போது உள்ள நிலையற்ற தன்மையால் பொருட்களின் விலையும் மாறிக்கொண்டே வருகிறது. ஆகவே அதற்குப் பணம் தேவை" என்கிறார் ரோவெல்.
குண்டூஸில் இயல்பு வாழ்க்கைக்கு ஒருநாள் திரும்பிவிடுவோம் என்பதே தன் நம்பிக்கை என்கிறார் அஸதுல்லா.
"அங்கு போய் வாழவேண்டும் என்று விரும்புகிறோம். ஆஃப்கானிஸ்தானுக்கு ஒரு நாள் அமைதி கிடைக்கும், எங்கள் நாடு சுதந்திரமாக இருக்கும் என்று நம்புகிறோம்" என்கிறார்.
பிற செய்திகள்:
- பல சாதிகளை சேர்ந்தவர்கள் அர்ச்சகராக நியமனம்: இதற்கு தமிழ்நாடு எதிர்கொண்ட சவால்கள் என்ன?
- பாஜகவுக்கு 2,500 கோடி ரூபாய் நன்கொடை - இது வெளிப்படைத் தன்மையா?
- 142 ஆண்டுகளில் உச்சகட்ட வெப்பம் ஜூலை மாதத்தில்தான்!
- 70 ஆயிரம் கி.மீ நடந்த பனி யானைகளின் ராட்சத தந்தங்களின் ஆச்சர்ய வரலாறு
- உலகத்தால் கைவிடப்படும் ஆப்கானிஸ்தான் - போர்க்களத்தில் இருந்து ஒரு இந்திய பெண் செய்தியாளரின் பார்வை
- நயன்தாராவின் நெற்றிக்கண் படம் எப்படி இருக்கிறது? - விமர்சனம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












