ஒலிம்பிக் முடிந்து 2 நாள்கள் கழித்து போட்டியை ஒளிபரப்பும் வட கொரிய அரசு தொலைக்காட்சி

ஒலிம்பிக் போட்டி முடிந்து 2 நாள் கழித்து போட்டி ஒன்றை முதல் முறையாக ஒளிபரப்பிய வடகொரிய அரசுத் தொலைக்காட்சி.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வடகொரியா ஒலிம்பிக்கில் பங்கேற்காததால், தென்கொரியாவின் ராஜீய உறவுக்கான நம்பிக்கை பொய்த்தது.

டோக்யோ ஒலிம்பிக் நிறைவடைந்து இரண்டு நாள்கள் கழித்து ஒலிம்பிக் தொடர்பான முதல் நிகழ்ச்சியை ஒளிபரப்பியது வட கொரிய அரசுத் தொலைக்காட்சி.

பிரிட்டனுக்கும் - சிலிக்கும் இடையே நடந்த பெண்கள் கால்பந்து போட்டியை கொரியன் சென்ட்ரல் டெலிவிஷன் இந்த வாரம் 70 நிமிடங்களுக்கு ஒளிபரப்பியது என்கின்றன உள்ளூர் செய்திகள்.

இந்தப் போட்டி ஜூலை 21ம் தேதி நடந்தது.

ஆனால், ஒலிம்பிக் தொடக்கவிழா நடந்த சில நாள்களில் ஒலிம்பிக் பற்றிய செய்தியை ஒளிபரப்பியதாக யோன்ஹேப் செய்தி முகமை தெரிவிக்கிறது.

கடந்த ஆண்டுகளில், ஆசியா - பசிபிக் பிராட்காஸ்டிக் யூனியன் போட்டி காணொளிகளை வடகொரியாவுக்கு வழங்கியது. தென்கொரிய ஒளிபரப்பாளர் எஸ்.பி.எஸ்.சுடன் செய்துகொண்ட ஒரு கூட்டாளி ஒப்பந்தத்தின் மூலம் இந்தக் காணொளிகள் பகிர்ந்துகொள்ளப்பட்டன.

இப்போது காணொளிகளை வடகொரியா எங்கிருந்து பெற்றது என்று தெளிவாகத் தெரியவில்லை.

டோக்யோ ஒலிம்பிக் போட்டிக்கு விளையாட்டு வீரர்கள் குழு எதையும் வட கொரியா அனுப்பவில்லை. தங்கள் வீரர்களை கோவிட் 19 தாக்குதலில் இருந்து பாதுகாப்பதற்காகவே இப்படி முடிவு செய்ததாக கூறுகிறது வடகொரியா.

தங்கள் நாட்டில் கொரோனா வைரசே இல்லை என்கிறது வடகொரியா. அப்படி இல்லாமல் இருக்க சாத்தியமே இல்லை என்கிறார்கள் வல்லுநர்கள்.

ஒலிம்பிக் போட்டியைப் பயன்படுத்திக்கொண்டு வடகொரியாவுடன் உறவாடலாம் என்ற தென்கொரியாவின் நம்பிக்கை வடகொரியாவின் முடிவால் பொய்த்துப் போனது.

2018 குளிர்கால ஒலிம்பிக்கில் தென்கொரியா- வடகொரியா கூட்டாக அணியை இறக்கின. இதையடுத்து இரு நாடுகளுக்கும் இடையில் பல உச்சி மாநாடுகள் நடந்தன.

தென்கொரியாவில் நடந்த இந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கு வடகொரியா 22 தடகள வீரர்களை அனுப்பியது. வடகொரியத் தலைவர் கிம் ஜாங் உன்-னின் சகோரி கிம் யோ ஜாங் இந்தக் குழுவுடன் சென்றார். இதன் மூலம் தென் கொரியா மற்றும் அமெரிக்காவுடன் தீவிர ராஜீய பேச்சுவார்த்தைக்கு இது உதவியது.

பனிப்போர்க் காலத்தில் தென்கொரியாவின் சோல் நகரில் நடந்த 1988 கோடைகால ஒலிம்பிக்கை வடகொரியா புறக்கணித்தது. அதன் பிறகு முதல் முறையாக ஒரு ஒலிம்பிக் போட்டியை வட கொரியா தவறவிட்டது இந்தமுறைதான்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :