கொரோனா வைரஸ் தடுப்பூசி: கோவிட்-19 தடுப்பு மருந்துகளைப் பணக்கார நாடுகள் பதுக்குவதாக புகார்

Vaccination programme in Banda Aceh

பட மூலாதாரம், EPA

உலகில் இருக்கும் பணக்கார நாடுகள், கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பு மருந்துகளை வாங்கிக் குவிப்பதாகவும், இதனால் ஏழை நாடுகளில் வாழும் மக்களுக்கு கொரோனா தடுப்பு மருந்து கிடைக்காமல் போகலாம் எனவும் 'பீப்பிள்'ஸ் வேக்சின் அலையன்ஸ்' எனும் பிரசார அமைப்புகளின் கூட்டமைப்பு எச்சரித்து இருக்கிறது.

கிட்டத்தட்ட 70 ஏழை நாடுகள், தங்கள் நாட்டில் இருக்கும் 10 பேரில் ஒருவருக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி வழங்கக் கூடும் என்கிறது மக்களுக்கான தடுப்பு மருந்துக் கூட்டணி. (பீப்பிள்'ஸ் வேக்சின் அலையன்ஸ்)

ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்ட்ராசெனீகா நிறுவனம், தங்களின் 64 சதவீத மருந்துகளை வளரும் நாடுகளுக்கு தருவதாகக் கூறிய பிறகும், இதுதான் ஏழை நாடுகளின் நிலை.

உலகம் முழுக்க, எல்லோருக்கும் நியாயமான முறையில் கொரோனா தடுப்பூசி கிடைக்க வேண்டும் என்கிற நோக்கில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி கிடைக்க உருவாக்கப்பட்ட கோவேக்ஸ் திட்டம், 700 மில்லியன் (70 கோடி) டோஸ் கொரோனா தடுப்பு மருந்துகளைப் பெற்று இருக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் கையெழுத்திட்டு இருக்கும் 92 ஏழை நாடுகளுக்கு, இந்த 700 மில்லியன் டோஸ் மருந்துகள் விநியோகிக்கப்படவுள்ளது.

கோவேக்ஸ் திட்டம் செயல்பட்டுக் கொண்டிருக்கும் போதும், ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல், ஆக்ஸ்ஃபேம், குளோபல் ஜஸ்டிஸ் போன்ற அமைப்புகள், இந்த ஏற்பாடுள் போதாது எனக் கூறுகின்றன. மேலும், தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க, மருந்து நிறுவனங்கள், தங்களின் தொழில்நுட்பத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்கிறார்கள்.

எல்லா தடுப்பு மருந்துகளுக்கும் அனுமதி வழங்கப்படுகிறது என்றால், பணக்கார நாடுகள், தங்களின் ஒட்டுமொத்த மக்களுக்கு வழங்கத் தேவையான தடுப்பு மருந்தைவிட, மூன்று மடங்கு அதிக தடுப்பு மருந்தை வாங்கிக் குவித்திருப்பதாக, இந்த அமைப்புகளின் பகுப்பாய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உதாரணத்துக்கு கனடா நாட்டை எடுத்துக் கொள்வோம். கனடிய மக்களுக்குத் தேவையான கொரோனா தடுப்பு மருந்தைவிட ஐந்து மடங்கு கூடுதலாக தடுப்பு மருந்துகளுக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது என்கிறது இந்தக் கூட்டமைப்பு.

கொரோனா வைரஸ் தடுப்பூசி

உலக மக்கள் தொகையில், பணக்கார நாடுகளைச் சேர்ந்த மக்கள் தொகை எண்ணிக்கை வெறும் 14 சதவீதம்தான். ஆனால் பணக்கார நாடுகள்தான், நம்பிக்கை அளிக்கும் விதத்தில் இருக்கும் கொரோனா தடுப்பு மருந்துகளில், 53 சதவீதத்தை வாங்கியுள்ளன.

ஒருவர் எந்த நாட்டில் வாழ்கிறார் என்பதோ, அவரிடம் எவ்வளவு பணம் இருக்கிறது என்பதோ, அவருக்கு கொரோனா மருந்து கிடைப்பதற்கு தடையாக இருக்கக் கூடாது. ஏதாவது தலைகீழ் மாற்றம் வராத வரை, உலகில் வாழும் பில்லியன் கணக்கிலான மக்களுக்கு, அடுத்த சில ஆண்டுகளுக்கு, பாதுகாப்பான மற்றும் செயல்திறன் மிக்க கொரோன தடுப்பு மருந்து கிடைக்காமல் போகலாம் என்கிறார் ஆக்ஸ்ஃபேம் அமைப்பின் சுகாதார கொள்கை மேலாளர் அன்னா மரியட்.

மருந்து நிறுவனங்கள் தங்களின் தொழில்நுட்பத்தையும், அறிவுசார் சொத்துகளையும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்து இருக்கிறது இந்த கூட்டமைப்பு. இதனால் பில்லியன் டோஸ் மருந்துகள் உற்பத்தி செய்யப்படும், கொரோன தடுப்பு மருந்து தேவையானவர்கள் அனைவருக்கும் மருந்து கிடைக்கும் என்கிறது மக்களுக்கான தடுப்பு மருந்து கூட்டணி.

இதை உலக சுகாதார அமைப்பின் கோவிட்-19 தொழில்நுட்ப அணுகல் திட்டம் (Covid-19 Technology access pool) வழியாகச் செய்யலாம் என்கிறது மக்களுக்கான தடுப்புமருந்துக் கூட்டணி.

ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் உருவாக்கிய கொரோனா தடுப்பு மருந்தை உற்பத்தி செய்யும் ஆஸ்ட்ராசெனீகா நிறுவனம், கொரோனா தடுப்பு மருந்துகளை லாபம் இல்லாமல், வளரும் நாடுகளுக்கு கிடைக்கச் செய்வதாகக் உறுதியளித்திருக்கிறது.

Banner image reading 'more about coronavirus'
Banner

இந்த தடுப்பு மருந்து மற்ற தடுப்பு மருந்துகளைவிட விலை மலிவானது. ஆக்ஸ்ஃபோர்டு மருந்தை சாதாரண குளிர்சாதனப் பெட்டிகளிலேயே சேமித்து வைக்கலாம். எனவே உலகம் முழுக்க இந்த தடுப்பு மருந்தை விநியோகிப்பது எளிதானதாக இருக்கும்.

ஒரே ஒரு நிறுவனம் மட்டும், உலகத்துக்கும் தேவையான மொத்த தடுப்பு மருந்தையும் விநியோகிக்க முடியாது என்கிறார்கள் பிரசாரகர்கள்.

ஃபைசர் & பயோஎன்டெக் நிறுவனம் உருவாகியுள்ள மருந்து, ஏற்கனவே பிரிட்டனால் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்பட்டு இருக்கிறது. இந்த வாரத்துக்குள், கொரோனாவினால் அதிகம் பாதிப்புக்கு உள்ளாக வாய்ப்பு இருக்கக்கூடியவர்களுக்கு தடுப்பு மருந்து கொடுக்கும் பணி தொடங்கிவிடும்.

ஃபைசரின் இந்த தடுப்பு மருந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் பயன்பாட்டுக்கு விரைவில் அனுமதி வழங்கப்படலாம்.

மாடர்னா, ஆக்ஸ்ஃபோர்டு மற்றும் அஸ்ட்ராசெனிகா ஆகிய இரண்டு தடுப்பு மருந்துகள், பல்வேறு நாடுகளில் பயன்பாட்டுக்கு அனுமதி பெற காத்திருக்கின்றன.

ரஷ்யாவின் ஸ்புட்நிக் - 5 கொரோனா தடுப்பு மருந்தும் சிறப்பாகச் செயல்படுவதாக அறிவித்திருக்கிறார்கள். இன்னும் நான்கு தடுப்பு மருந்துகள் கடைசி கட்ட பரிசோதனைகளில் இருக்கின்றன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: