கொரொனா வைரஸ் தடுப்பூசி: இந்திய மக்கள் அனைவருக்கும் போடவேண்டியது அவசியமா? இல்லையா?

கொரொனா

பட மூலாதாரம், Getty images

    • எழுதியவர், கமலேஷ்
    • பதவி, பிபிசி நிருபர்

கொரொனா நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக ஆக, தடுப்பு மருந்து குறித்த விவாதமும் அதிகம் எழுந்து வருகிறது.

நூறு கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நாட்டில் அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்குமா? இந்தக் கேள்வியும் தடுப்பூசி உருவாக்கத்தில் ஏற்பட்டு வரும் சவால்கள் குறித்த கவலையும் இப்போது எழுந்துள்ளன. இருப்பினும், தற்போது அரசாங்கம் அளித்த தகவல்கள் புதிய விவாதத்திற்கு வித்திட்டுள்ளன.

செவ்வாயன்று, சுகாதார அமைச்சகத்தின் செயலாளர் ராஜேஷ் பூஷண் ஒரு செய்தியாளர் கூட்டத்தில், நாட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடுவது குறித்து அரசாங்கம் ஒருபோதும் பேசவில்லை என்று கூறினார். ஒரு குறிப்பிட்ட தரப்பு மக்களுக்கு மட்டும் தடுப்பூசி வழங்கப்படும் என்கிறார் இவர்.

ராஜேஷ் பூஷனின் அறிக்கையை மேலும் தெளிவுபடுத்திய இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐ.சி.எம்.ஆர்) இயக்குநர் ஜெனரல் டாக்டர் பால்ராம் பார்கவா, வைரஸின் பரவல் சங்கிலியை உடைப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என்று கூறினார்.

கொரொனா தடுப்பு மருந்து

டாக்டர் பலராம் பார்கவா கூறுகையில், " மொத்த மக்கள் தொகையில், கொரோனா நோயால் பாதிக்கப்படக்கூடிய ஒரு பகுதியினருக்குத் தடுப்பூசி வழங்குவதன் மூலம் கொரோனா தொற்றுநோயைத் தடுக்க முடிந்தால், ஒட்டுமொத்த மக்களும் தடுப்பூசியைப் பயன்படுத்த வேண்டியதில்லை," என்று கூறுகிறார்.

முன்னதாக ஒட்டுமொத்த மக்களும் அரசாங்கத்தின் தடுப்பூசியைப் பெறுவார்கள் என்றுதான் நம்பப்பட்டது. ஆனால் இப்போது அரசாங்கம் மொத்த மக்கள் தொகைக்கும் தடுப்பூசிக்கான ஏற்பாடுகளைச் செய்யப்போவதில்லை என்பது தெளிவாகிறது.

ஆனால் இன்னும் பல கேள்விகள் உள்ளன. மக்கள்தொகையில் ஒரு குறிப்பிட்ட குழுவிற்கு மட்டும் தடுப்பூசி வழங்குவதன் மூலம் தொற்றுநோயை எவ்வாறு தடுக்க முடியும், இந்த முறை எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும், அதற்கு என்ன அவசியம் ஏற்பட்டது? என்ற கேள்விகள் எழுகின்றன.

தடுப்பு மருந்துக்கான உத்தி

இது குறித்து சமூகக் கொள்கை மற்றும் சுகாதார அமைப்பு நிபுணர் டாக்டர் சந்திரகாந்த் லஹாரியா கூறுகையில், தடுப்பூசியை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்த முடிவு இரண்டு அடிப்படையில் எடுக்கப்படுகிறது. முதலாவது தடுப்பூசி கிடைப்பது, இரண்டாவது அதன் நோக்கம் என்று விவரிக்கிறார்.

டாக்டர் லஹாரியா 'நாம் வெல்லும் வரை: கோவிட் -19 தொற்றுநோய்க்கு எதிரான இந்தியாவின் போராட்டம்'( Till we win: India’s fight against COVID 19 pandemic) என்ற நூலை எழுதியவர்களில் ஒருவர். அவர் விளக்குகிறார், "தடுப்பூசியின் நோக்கம் என்ன என்பதை நாம் முதலில் பார்க்க வேண்டும். ஒரு நாட்டில் ஒரு குறிப்பிட்ட அளவு தடுப்பூசி மட்டுமே இருக்கும் நிலையில், இறப்பு விகிதத்தைக் குறைப்பதே அதன் நோக்கம் என்றால், அதிக இறப்புகள் ஏற்படும் வாய்ப்புள்ள மக்கள் திரளை அது தேர்வு செய்ய வேண்டும், அதாவது, முதியவர்கள், ஏற்கனவே ஏதோ ஒரு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள். "

"ஆனால், தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு இல்லை, இறப்பு விகிதமும் மிகக் குறைவு, ஆனால் தொற்று மிக வேகமாக பரவுகிறது என்ற சூழ்நிலையில், இறப்பு விகிதம் குறைவாக இருப்பதால் தொற்றுப்பரவலை முதலில் கட்டுப்படுத்த வேண்டும் என்று அரசாங்கமும் தீர்மானிக்கலாம். இந்த உத்தி கையாளப்பட்டால், நோய்த்தொற்று பாதிக்கக்கூடிய மற்றும் பரப்பக்கூடிய அபாயத்தில் உள்ளவர்களுக்கு முதலில் தடுப்பூசி வழங்கப்படும். "

அரசாங்கம் , அதிக ஆபத்தில் உள்ளவர்களுக்கு முதலில் தடுப்பூசி கொடுப்பது குறித்தே பேசியது. இதில், சுகாதார ஊழியர்கள் மற்றும் காவல் துறையினர் சேர்க்கப்படலாம். சுகாதார ஊழியர்களில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மட்டுமல்லாமல் வார்டு உதவியாளர்கள், தோட்டக்காரர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் போன்றவர்களும் இருக்கலாம்.

corona test

பட மூலாதாரம், Getty images

நேரமும் வளங்களும் அதிகம் இல்லை

அதே நேரத்தில், அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி கிடைக்கச் செய்வதும் ஒரு பெரிய சவாலாகும். இதற்கு சேமிப்பிலிருந்து விநியோகம் வரை பெரிய அளவிலான வளங்கள் தேவைப்படும்.

தடுப்பூசி விநியோகத்தில் இந்தியாவுக்கு மிகச் சிறந்த அனுபவம் உள்ளது என்பது உண்மைதான். உலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தியாளர்களில் இந்தியாவும் ஒன்று.

போலியோ, பெரியம்மை மற்றும் பிற நோய்களுக்கான தடுப்பூசி வழங்கலின் வெற்றி காரணமாக, இந்தியாவில் ஏற்கனவே ஒரு முறையான கட்டமைப்பு உள்ளது.

எனினும், தடுப்பூசி சோதனை தற்போது முடிவடையவில்லை, மேலும் நோய்த்தொற்றின் அளவைக் கருத்தில் கொண்டு பார்த்தால் அரசிடம் அதிக நேரமும் இல்லை. அதேசமயம் முந்தைய தடுப்பூசி வழங்கல்கள் பல ஆண்டுகளாக நடத்தப்பட்டுள்ளன. இப்போது அது சாத்தியமில்லை.

ஐந்துவிதமான தடுப்பூசிகள் தற்போது இந்தியாவில் பரிசோதனை செய்யப்பட்டுவருகின்றன. அவற்றில் இரண்டு இந்தியாவிலேயே உருவாக்கப்பட்டவை மற்ற மூன்றும் வெளிநாடுகளில் உருவாக்கப்பட்டவை.

corona

பட மூலாதாரம், Getty images

இங்கிலாந்து-சுவீடன் மருந்து நிறுவனமான அஸ்ட்ராஜெனீகா மற்றும் மாடெர்னா ஆகிய நிறுவனங்கள், தமது தடுப்பூசிப் பரிசோதனையின் முடிவுகள் சிறப்பாக உள்ளதாகக் கூறியுள்ளன. அமெரிக்க நிறுவனமான ஃபைசரின் தடுப்பூசிக்கு பிரிட்டன் ஒப்புதல் அளித்துள்ளது.

தொற்றுப் பரவலின் தொடர்ச்சி எப்படி முறியடிக்கப்படும்

ஆனால், தொற்று ஏற்படுவதற்கான அதிக இடர்பாடு உள்ளவர்களுக்கு மட்டும் தடுப்பூசி வழங்குவதன் பின்னணியில் உள்ள நோக்கம் தொற்றுநோயைக் குறைப்பதாகும்.

இது எப்படி சாத்தியம்? இந்திரபிரஸ்தா அப்பல்லோ மருத்துவமனையின் மூத்த ஆலோசகர் மருத்துவர் சுரஞ்சித் சாட்டர்ஜி கூறுகையில், இது மந்தை நோய் எதிர்ப்பு சக்தியைப் போலவே செயல்படுகிறது என்கிறார்.

அதாவது, “குறிப்பிட்ட சதவிகித மக்களுக்கு எதிர்ப்பாற்றல் வந்துவிட்டால் பரவல் குறைந்து விடும். ஒரு சிலருக்கு ஏற்கெனவே தொற்று தாக்கி, குணமானதால் எதிர்ப்பாற்றல் வளர்ந்திருந்தால், அவருக்கு மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டால், அந்த வைரஸ் அந்த நபரின் உடலில் இருந்து இன்னொருவருக்குப் பரவாது.” என்று அவர் விளக்குகிறார்.

"இதே தான் தடுப்பூசிக்கும். நோய்த்தொற்று ஏற்படுவதற்கும் நோய்த்தொற்று பரப்புவதற்கும் அதிக வாய்ப்புள்ளவர்களுக்குத் தடுப்பூசி வழங்கப்பட்டால், கொரோனா வைரஸுக்கான நோய் எதிர்ப்பாற்றல் உருவாகும். அவர்கள் மேலும் வைரஸ் பரப்புவோராக மாற மாட்டார்கள். சங்கிலி உடைந்துவிடுவதால், அது மிகக் குறைவான மக்களையே பாதிக்கும்" என்கிறார்.

இந்தியாவில் இதற்கு முன்னர் முன்னெடுக்கப்பட்ட தடுப்பூசிகளில் இந்த முறை பின்பற்றபப்டவில்லை.

வெவ்வேறு சூழல்கள்

இப்போதுள்ள சூழ்நிலைகள் முந்திய நிலைமைகளில் இருந்து வேறுபட்டவை என்று மருத்துவர்கள் விவரிக்கிறார்கள். கோவிட் -19 தொற்றுநோய் முந்தைய தொற்றுநோய்களிலிருந்து வேறுபட்டது. இந்த வைரஸ் மிக விரைவாகப் பரவுகிறது. இது சில மாதங்களில் உலகம் முழுவதும் பரவியது. கடுமையாகத் தாக்கும்போது ஏற்படும்போது, இது உயிர்கொல்லியாகவும் உள்ளது.

மேலும் இப்போது உலகம் முன்பை விட அதிகமாக இணைக்கப்பட்டுள்ளது. மக்கள் ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு அதிகம் சென்று வருகிறார்கள். இதனால், தொற்று விரைவாகப் பரவுகிறது.

நோயின் விரைவான தொற்று, வீழ்ச்சியடைந்த பொருளாதாரம், தேங்கி நிற்கும் செயல்பாடு மற்றும் அரசியல் அழுத்தம் ஆகிய காரணங்களால் நோயை விரைவில் கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது.

வல்லுநர்களின் கூற்றுப்படி, இந்தச் சூழ்நிலைகளில், நோயை விரைவில் கட்டுப்படுத்த முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி வழங்கப்படும். இந்த அணுகுமுறை உலகம் முழுவதிலும் ஏற்கப்படுகிறது.

இருப்பினும், ஒவ்வொரு நாடும் தடுப்பூசியின் விளைவுகள் மற்றும் தேவைகளுக்கு ஏற்ப தீர்மானிக்கின்றன.

தொற்றின் தாக்கம் குறையும்

இந்த முறையால் வைரஸ் முற்றிலுமாக ஒழிக்கப்படாது, ஆனால் தொற்றுப் பரவல் குறைக்கப்படும். இது சுகாதாரக் கட்டமைப்பு மீதான சுமையைக் குறைக்கும் என்று டாக்டர் சுரன்ஜித் சாட்டர்ஜி கூறுகிறார். மேலும், பாதிக்கப்படுபவர்களில் வைரஸின் வீரியம் குறைந்து, அது ஏற்படுத்தக் கூடிய தாக்கமும் குறைக்கப்படலாம், அவர்கள் சிறந்த சிகிச்சையைப் பெற முடியும், மேலும் மக்களுக்கும் அதைப் பற்றிய பயமும் குறையும்.

இந்தியாவின் மக்கள்தொகையைப் பொறுத்தவரை, ஒவ்வொரு நபருக்கும் தடுப்பூசி கொடுப்பது மிகவும் கடினம் என்று அவர் கூறுகிறார். எனவே, இருக்கும் வளங்களைக் கொண்டு உடனடி தீர்வுகளைக் காண வேண்டிய அவசியம் உள்ளது. இதன் விளைவுகள் என்ன என்பதைப் பார்த்து, அதன் பிறகு அடுத்த கட்ட திட்டம் தீட்டப்படும்.

டாக்டர் சந்திரகாந்த் லஹாரியா, தொற்று நோய்களின் காலம் மற்றும் அதற்குப் பின்னான தடுப்பூசி உத்தி இரண்டும் வேறுபட்டவை என்று கூறுகிறார். இந்த தொற்றுநோய் 2021 ஆம் ஆண்டின் இறுதிக்குள் முடிவடையும் என்று நம்பப்படுகிறது, ஆனால் அதன் பிறகும், சில பகுதிகளில் கொரோனா வைரஸ் தொடர்ந்து இருக்கும். அதற்குப் பிறகு, அரசாங்கம் எந்த முறையைப் பின்பற்றுகிறது என்பதைப் பார்க்க வேண்டும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: