கொரோனா வைரஸ்: இந்தியாவில் பரிசோதனைகள், பரவல் கண்டறியும் திட்டம் வேலை செய்கிறதா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஸ்ருதி மேனன்
- பதவி, பிபிசி ரியாலிட்டி செக்
கொரோனா வைரஸை எதிர்த்துப் போராட, கொரோனா பரிசோதனை மற்றும் கான்டாக்ட் டிரேசிங் போன்றவைகளுக்கு முன்னுரிமை அளிக்குமாறு, பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவில் கொரோனாவால் மோசமான பாதிப்புக்குள்ளாகி இருக்கும் மாநிலங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
கடந்த செப்டம்பர் மத்தியில் இருந்து, இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்து வருகின்றன, ஆனால் பல்வேறு சோதனை உத்திகள் கொரோனாவுக்கு எதிரான போரில் ஒரு தடையாக இருக்கலாம் என்ற கவலை உள்ளது.
இந்தியா என்ன வகையான சோதனையைச் செய்கிறது?
இந்தியா பி.சி.ஆர் சோதனை முறையைத் தான் பயன்படுத்துகிறது. இந்த பரிசோதனை முறையைத் தான் பரவலாக பல நாடுகளும் பயன்படுத்துகின்றன. இந்த பரிசோதனை முறையைத் தான் சரியான சோதனை முறை என்கிறார்கள்.
இந்தியாவில் 60% சோதனைகள் மட்டுமே இந்த பி.சி.ஆர் முறையைப் பயன்படுத்துகின்றன - தங்களுக்கென தனி சுகாதார கொள்கைகளை வைத்திருக்கும் பல இந்திய மாநிலங்கள், ரேபிட் ஆன்டிஜென் சோதனைக்கு (RAT) மாறிவிட்டன. இது விரைவான ஆனால் குறைந்த அளவு நம்பகத்தன்மை கொண்ட முறையாகும்.

பட மூலாதாரம், Getty Images
இந்த ரேபிட் ஆன்டிஜென் சோதனைகள், 50 சதவிகிதம் வரை தவறான முடிவுகளைக் காட்டும். அதாவது கொரோனாவால் உண்மையில் பாதிக்கப்பட்டு இருப்பவர்களுக்கு, இந்த ஆர்.ஏ.டி சோதனையைச் செய்யும் போது நெகட்டிவ் எனக் காட்டும்.
இருப்பினும் இந்த ஆர்.ஏ.டி சோதனை முறை, கொரோனா வைரஸ் அதிகம் பரவி இருக்கும் இடங்களில் பயன்படுவதாக நிபுணர்கள் கூறுகிறார்கள்.
ஆர்.ஏ.டி மற்றும் பி.சி.ஆர் சோதனை முறைகளை சரியான அளவில் கலந்து பயன்படுத்துவதைச் பொருத்து தான், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டுபிடிக்கும் திறன் இருக்கிறது என்கிறார் ஹரியானாவில் இருக்கும் அசோகா பல்கலைக்கழகத்தின் தொற்று நோய் நிபுணர் கெளதம் மேனன்.
இப்படிப்பட்ட சோதனைகளை இந்தியா மட்டும் தனியாகப் பயன்படுத்தவில்லை, தற்போது அடுத்தடுத்த அலைகளால், கொரோனா நோயாளிகள் அதிகரித்து வரும் சில ஐரோப்பிய நாடுகளும் இந்த அதிவிரைவுச் சோதனைகளைச் செய்தன.
இந்தியா முழுக்க கொரோனா பரிசோதனை சீராக இருக்கிறதா?
இல்லை. மகாராஷ்டிரா தான் மிக மோசமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கிறது. ஒட்டுமொத்த இந்தியாவில் இருக்கும் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையில் 17% நோயாளிகள் மகாராஷ்டிராவில் இருக்கின்றனர்.

அதனைத் தொடர்ந்து குறைந்து மக்கள் தொகையைக் கொண்ட கர்நாடகா, ஆந்திரா, தமிழகம் மற்றும் கேரளா போன்ற மாநிலங்கள் இருக்கின்றன.
உத்திரப் பிரதேசம் மற்றும் பிகார் போன்ற அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்களில் குறைவாகவே கொரோனா வைரஸ் நோயாளிகள் இருப்பதாகத் தெரிகிறது. இந்த மாநிலங்களில், கொரோனா உறுதிபடுத்தப்பட்டவர்கள் எண்ணிக்கை முறையே 2.9 மற்றும் 1.6 சதவீதமாக இருக்கிறது.
பிகார் மற்றும் உத்திரப் பிரதேசத்தில் (மற்ற சில மாநிலங்களும் அடக்கம்) எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில், 50 சதவீதத்துக்கும் குறைவான பரிசோதனைகள் பி.சி.ஆர் முறையில் செய்யப்பட்டு இருக்கின்றன. எனவே, இந்த மாநிலங்கள் பல கொரோனா நோயாளிகளை தொடர்ந்து தவறவிட்டு வருகிறது.

பட மூலாதாரம், Getty Images
மகாராஷ்டிராவில், ஆர்.ஏ.டி பரிசோதனைகள் அதிகமாக பயன்படுத்தி வந்தாலும், 60 சதவீதத்துக்கும் மேற்பட்ட பரிசோதனைகள் பி.சி.ஆர் மூலம் செய்யப்பட்டு இருக்கின்றன.
தமிழ்நாடு, தன்னுடைய எல்லா சோதனைகளையும் பி.சி.ஆர் முலம் தான் செய்கிறது. அதாவது தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவலைப் பற்றி, கூடுதல் தெளிவு இருக்கும்.
மாநிலங்கள் முழுவதும் பரிசோதனை நிலைகள்
நோய்த்தொற்றுகள் கூடுதலாக இருக்க வாய்ப்பு இருக்கும், அதிக மக்கள் தொகை கொண்ட பகுதிகளில், மாநில அரசுகள் போதுமான அளவு சோதனை செய்யவில்லை என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்து இருக்கின்றன.
நவம்பர் 30 ஆம் தேதி நிலவரப்படி, உத்தரபிரதேசத்தின் 13% கொரோனா நோயாளிகள், அதன் தலைநகரான லக்னெளவில் காணப்பட்டன, இருப்பினும் மாநிலத்தின் மொத்த சோதனைகளில் 6% க்கும் குறைவான சோதனைகளே அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பட மூலாதாரம், Getty Images
லக்னெளவைத் தொடர்ந்து, உத்திரப் பிரதேச மாநிலத்திலேயே, கான்பூர் மாவட்டத்தில் தான் இரண்டாவதாக, அதிக எண்ணிக்கையிலான கொரோனா வைரஸ் நோயாளிகள் உள்ளனர். ஆனால் மாநிலத்தின் மொத்த பரிசோதனைகளில் 3% க்கும் குறைவான பரிசோதனைகளே இங்கு நடத்தப்பட்டுள்ளன.
பீகார் மாவட்ட அளவிலான தரவுகளும், இதே விவரங்களைத் தான் வெளிப்படுத்துகிறது. அதிக மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் ஒன்றான பாட்னாவில் தான், பிகார் மாநிலத்தில் பதிவாகி இருக்கும் மொத்த கொரோனா நோயாளிகளில் 18% நோயாளிகள் இருக்கின்றனர். ஆனால் பாட்னாவில், பீகார் மாநிலத்தில் நடத்தப்பட்ட மொத்த கொரோனா பரிசோதனைகளில் 3% மட்டுமே இஅங்கு நடத்தப்பட்டுள்ளது.
பீகார் மாநிலத்தின் மற்ற பகுதிகளில், ஒப்பீட்டளவில் அதிக எண்ணிக்கையிலான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றன, ஆனால் குறைவான கொரோனா நோயாளிகள் மட்டுமே பதிவாகி உள்ளன.
"கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் உள்ள பகுதிகளில் குறைவான பரிசோதனைகளையும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறைவாக இருக்கும் பகுதிகளில் அதிக சோதனைகளையும் செய்தால், நீங்கள் நிறைய பரிசோதனைகளைச் செய்தாலும், குறைந்த அளவிலான கொரோனா நோயாளிகளை மட்டுமே காண்பீர்கள். இது கொரோனா நோயாளிகள் தரவை கொஞ்சம் அர்த்தமற்றதாக்கிவிடும்" என கேரளத்தைச் சேர்ந்த பொது சுகாதாரக் கொள்கை பகுப்பாய்வாளரான டாக்டர் ரிஜோ ஜான் கூறுகிறார்.
மாறுபடும் கண்காணிப்பு அமைப்புகள்
ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானால், அடுத்த 72 மணி நேரத்திற்குள், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களோடு தொடர்பில் இருந்த 80% பேரையாவது கண்டறிய வேண்டும் என இந்தியாவின் கோவிட் -19 தேசிய வழிகாட்டுதல்கள் கூறுகின்றன.

பட மூலாதாரம், Getty Images
ஆனால் உடல்நலம் மற்றும் குடும்ப நலன் தொடர்பான இந்தியாவின் நாடாளுமன்றக் குழு, "மோசமான கான்டாக்ட் டிரேசிங் மற்றும் குறைவான பரிசோதனை ஆகியவை, இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிவேக வளர்ச்சி காண ஒரு முக்கிய காரணியாக இருந்திருக்கலாம்" எனக் குறிப்பிட்டுள்ளது.
கான்டாக்ட் டிரேசிங் குறித்து ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் நம்பகமான தகவல்களைப் பெறுவது கடினம்.
"அதிக ஆபத்துள்ள தொடர்புகளை ஆரம்ப கட்டத்திலேயே முறையாக கண்காணித்ததற்கு" சமீபத்தில் உத்திரப் பிரதேச அரசு, உலக சுகாதார அமைப்பால் பாராட்டப்பட்டது.
இதற்கு நேர்மாறாக, கர்நாடகாவில் முதன்மை மற்றும் இரண்டாம் நிலை கான்டாக்ட் டிரேசிங் எண்கள் செப்டம்பர் மாதத்திலிருந்து குறைத்துள்ளதைக் காட்டுகிறது தரவுகள்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் முதன்மை மற்றும் இரண்டாம் நிலை தொடர்புகளிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் தரவுகள் தெலுங்கானா மாநிலத்தில் உள்ளது.
தெலங்கானாவில் ஒட்டுமொத்தமாகவே கொரோனா பரிசோதனை எண்ணிக்கை குறைந்து இருக்கிறது. அதோடு, கடந்த செப்டம்பர் முதல், முதன்மை மற்றும் இரண்டாம் நிலை தொடர்புகளிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளும் குறைந்து இருக்கின்றன.
கேரளாவில், மே 4 முதல் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 95% நபர்களின் முதன்மை மற்றும் இரண்டாம் நிலைத் தொடர்புகள் வரை கண்டறியப்பட்டுள்ளன என்கிறது தரவுகள்.
ஆனால் இந்த தரவுகள், தேசிய வழிகாட்டுதல்களில் குறிப்பிடப்பட்டுள்ள காலக்கெடுவுக்குள் கண்டறியப்பட்டதா என தெளிவுபடுத்தப்படவில்லை.
பல மாநிலங்கள் இந்தத் தரவுகளை பொது வெளியில் கொடுப்பதில்லை.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:













