குழந்தைகள் திருட்டு: நைரோபி கள்ளச்சந்தைகள் இலக்கு வைக்கும் அபலை பெண்கள் - பிபிசி ஆப்பிரிக்கா ஐ புலனாய்வில் அதிர்ச்சித் தகவல்கள்

ரெபெக்காவின் மகனை இரவில் பிடுங்கிக் கொண்டு போய்விட்டார்கள். ``ஒரு நாள் அவன் திரும்பி வருவான் என்ற நம்பிக்கை உள்ளது'' என்று அவர் கூறுகிறார்.
படக்குறிப்பு, ரெபெக்காவின் மகனை இரவில் பிடுங்கிக் கொண்டு போய்விட்டார்கள். ``ஒரு நாள் அவன் திரும்பி வருவான் என்ற நம்பிக்கை உள்ளது'' என்று அவர் கூறுகிறார்.
    • எழுதியவர், பீட்டர் முரிமி, ஜோயல் குண்ட்டர், டாம் வாட்ஸன்.
    • பதவி, பிபிசி ஆப்பிரிக்கா ஐ

கள்ளச்சந்தையில் விற்பதற்காக கென்யாவில் குழந்தைகள் திருடப்படுகிறார்கள். சுமார் 300 பவுன்ட் விலைக்கு குழந்தைகளை விற்கும் தொடர்புகளை பிபிசியின் ஆப்பிரிக்கா ஐ குழு கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பான விரிவான தகவல்களை இங்கே வழங்குகிறோம்.

ரெபெக்காவின் மகனுக்கு இப்போது 10 வயது இருக்கும். ரெபெக்கா வாழும் நைரோபியிலேயே அவன் இருக்கலாம் அல்லது வேறு எங்காவது இருக்கலாம். தன்னுடைய முதலாவது மகன் லாரன்ஸ் ஜோஸய்யாவுக்கு ஒரு வயதாக இருந்த போதுதான் கடைசியாக ரெபெக்கா அவரை பார்த்துள்ளார்.

ரெபேக்காவின் அப்போதைய வயது 16.

2011 மார்ச் மாதம் ஒரு நாள் இரவு அதிகாலை 2 மணி இருக்கும். ஒரு கைக்குட்டையை நுகர்ந்ததில் ரெபெக்கா சோர்வாக இருந்தார். நகர தெருக்களில் மலிவான விலைக்கு கிடைக்கும் ஜெட் எரிபொருளை கைக்குட்டையில் தடவி நுகர்ந்து கொண்டிருந்தார்.

அறிமுகம் இல்லாதவர்களை அணுகி பிச்சை கேட்பதற்கான தைரியத்தை வரவழைக்க ஜெட் எரிபொருள் அவருக்கு தூண்டுதலாக இருந்தது. ரெபெக்காவுக்கு 15 வயதாக இருந்தபோது, அவருக்கான செலவுகளுக்குப் பணம் தர அவரது தாயார் மறுத்துவிட்டார்.

அவரது பள்ளிக் கட்டணத்தைக் கட்டவில்லை. அதனால் படிப்பை கைவிட்டு, வாழ்க்கையை ஓட்ட தெருவுக்கு வர வேண்டியதாயிற்று. வயதான ஒருவர் அவரை திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்திருக்கிறார்.

ஆனால் ரெபெக்காவை கர்ப்பமாக்கிவிட்டு அவர் காணாமல் போய்விட்டார். அடுத்த ஆண்டு லாரன்ஸ் ஜோஸய்யா பிறந்தான். ஒரு வருடம் மற்றும் சில மாதங்கள் வரை குழந்தையை ரெபெக்கா வளர்த்து வந்தார். அன்றிரவு தூங்கிய பிறகு அவர் எழுந்த போது மகனைக் காணவில்லை. அதன் பிறகு குழந்தையை பார்க்க முடியாமலே போய்விட்டது.

``எனக்கு வேறு குழந்தைகள் இருக்கிறார்கள் என்றாலும், அவன் தான் முதலாவது குழந்தை. அவன்தான் என்னை தாயாக்கியவன்'' என்று கண்ணீரை அடக்க முடியாமல் ரெபெக்கா கூறினார்.

``கியாம்பு, கயோலே நகரங்களில் குழந்தைகள் காப்பகங்கள் அனைத்திலும் தேடிவிட்டேன். எங்கேயும் அவனைக் காணவில்லை'' என்று அவர் தெரிவித்தார்.

நைரோபியில் அதே தெருக்களில் தான் ரெபெக்கா வாழ்க்கையை நடத்துகிறார். குள்ளமான உருவம், எலும்பு தெரியும் அளவுக்கு ஒட்டிய கன்னம், இறுக்கிக் கட்டிய தலைமுடி என்று வாழ்க்கை போய்க் கொண்டிருக்கிறது.

அவருக்கு இப்போது எட்டு, ஆறு, நான்கு வயதில் மகள்கள் உள்ளனர். அதே பகுதியில் சுற்றிக் கொண்டிருக்கும் ஓர் ஆண், ஒரு நாள் கடைசி மகளை தூக்கிக் கொண்டு வந்தார். குடிப்பதற்கு ஏதாவது வாங்கித் தருமாறு அந்தக் குழந்தை தன்னிடம் கேட்டதாக அவர் கூறியிருக்கிறார். பிறகு அந்த நபருடன் காருக்கு ரெபெக்கா சென்றபோது, அங்கு ஒரு பெண் காத்திருந்தார். மறுநாள் அந்த ஆள் மீண்டும் வந்தார்.

ரெபெக்காவும், கடைசி மகளும். ``நீ கவனமாக இருக்க வேண்டும்'' என்று அவர் கூறினார். ``நீ தூங்கும்போது பணக்காரர்கள் உன் குழந்தையைத் திருடிவிடுவார்கள்'' என்றார்.
படக்குறிப்பு, ரெபெக்காவும், கடைசி மகளும். ``நீ கவனமாக இருக்க வேண்டும்'' என்று அவர் கூறினார். ``நீ தூங்கும்போது பணக்காரர்கள் உன் குழந்தையைத் திருடிவிடுவார்கள்'' என்றார்.

நைரோபியில் வீடு இல்லாமல் தெருக்களில் வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கும் ரெபெக்கா போன்றவர்களிடம் இதேபோன்ற கதைகளை கேட்க நீங்கள் அதிகம் கஷ்டப்பட வேண்டியிருக்காது.

எஸ்தரின் 3 வயது மகன் 2018 ஆகஸ்ட் மாதம் காணாமல் போய்விட்டான். ``என் மகனை இழந்ததில் இருந்து என் நிம்மதியே போய்விட்டது'' என்கிறார் அவர்.

``மொம்பாசா முழுக்க அவனை நான் தேடிவிட்டேன்'' என்று அவர் தெரிவித்தார். கரோலினின் 2 வயது மகனை நள்ளிரவில் யாரோ திருடிக் கொண்டு போய் ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டன.

``நான் அவனை மிகவும் நேசித்தேன். என் மகனை மட்டும் திருப்பிக் கொடுத்தால் போதும். அவர்களை நான் மன்னித்துவிடுவேன்'' என்று அவர் கூறினார்.

கள்ளச்சந்தையில் குழந்தைகளை விற்க வேண்டும் என்பதற்காக, நைரோபியில் எளிதில் ஏமாறக் கூடிய பெண்களை பலிகடா ஆக்குகிறார்கள்.

ஆப்பிரிக்கா ஐ அமைப்பு ஓராண்டு காலம் ஆய்வு நடத்தியதில், வீடில்லா தாய்மார்களிடம் இருந்து குழந்தைகளைப் பறித்துச் சென்று அதிக விலைக்கு விற்கிறார்கள் என்பதைக் கண்டறிய முடிந்தது.

சாலையோர சிகிச்சை நிலையங்களில் சட்டவிரோதமாக குழந்தைகள் விற்கப்படுவதையும், ஆர்டரின் பேரில் பெரிய அரசு மருத்துவமனையில் இருந்து குழந்தைகள் திருடப்படுவதையும் நாங்கள் கண்டறிந்தோம்.

அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தும் நபர்களை அம்பலப்படுத்த வேண்டும் என்பதற்காக, ஆதரவற்ற ஒரு குழந்தையை மருத்துவமனை அதிகாரியிடம் இருந்து வாங்குவதற்கு நாங்கள் ஏற்பாடு செய்தோம். பிறந்து 2 வாரம் ஆன ஆண் குழந்தையை எங்களிடம் ஒப்படைப்பதற்கு, சட்டபூர்வ ஆவணங்களை அவர் உருவாக்கிக் கொண்டார்.

சந்தர்ப்பத்தால் திருடுபவர்கள் முதல், இதையே தொழிலாகச் செய்யும் கிரிமினல்கள் வரை குழந்தைகளை திருடுகிறார்கள். சில நேரம் இரண்டு மாதிரி ஆட்களும் கைகோர்த்துக் கொள்கிறார்கள்.

சந்தர்ப்ப தேவைக்காக குழந்தைகளைத் திருடி விற்கும் அனிதா என்பவர், அதிகமாக மது அருந்தும் மற்றும் போதை மருந்து பயன்படுத்தும் பழக்கம் கொண்டவராக இருக்கிறார். 3 வயதுக்கும் குறைவான குழந்தைகளையும், அவர்களின் தாயாரையும் இவர் குறி வைத்து செயல்படுகிறார்.

அனிதாவின் நண்பர்கள் மூலமாக அனிதாவை பற்றி ஆப்ரிகா ஐ அமைப்பு தகவல்கள் சேகரித்தது. தன்னை அடையாளம் காட்டிக் கொள்ள விரும்பாத ஒரு நண்பர் தன்னை எம்மா என்ற பெயரில் அறிமுகம் செய்து கொண்டார். தெருவில் குழந்தைகளைத் திருடுவதற்கு அனிதா பல வழிமுறைகளைக் கையாள்வதாக அவர் தெரிவித்தார்.

``சில நேரங்களில் குழந்தையின் தாயுடன் அனிதா பேசுவார். தனது திட்டத்தை அந்தப் பெண் புரிந்து கொள்கிறாரா என்பதை நோட்டம் பார்ப்பார். சில நேரம் குழந்தையின் தாய்க்கு போதை மருந்து கொடுப்பார் அல்லது தூக்க மாத்திரைகள் கொடுப்பார். சில நேரம் குழந்தைகளுடன் விளையாடுவார்.

குழந்தைகளை எடுத்துச் செல்வதற்கு பல வழிமுறைகளை அனிதா கையாள்வார்'' என்று எம்மா என்ற பெயரில் உள்ள அவரது தோழி தெரிவித்தார்.

சந்தேகம் ஏற்படாமல் தெருவோர தாய்மார்களிடம் இருந்து குழந்தைகளைத் திருடும் ஒரு பெண்ணின் செயல்பாடுகளை அம்பலப்படுத்த எம்மா உதவியாக இருந்தார்.
படக்குறிப்பு, சந்தேகம் ஏற்படாமல் தெருவோர தாய்மார்களிடம் இருந்து குழந்தைகளைத் திருடும் ஒரு பெண்ணின் செயல்பாடுகளை அம்பலப்படுத்த எம்மா உதவியாக இருந்தார்.

குழந்தை வாங்குபவர் போல நடித்த ஆப்ரிக்கா ஐ அமைப்பினர், நைரோபியில் உணவகம் ஒன்றில் அனிதாவை சந்திக்க ஏற்பாடு செய்தனர். தெருவோரத்தில் வாழ்பவர்கள் அந்த உணவகத்திற்கு அடிக்கடி செல்வது வழக்கம்.

நிறைய குழந்தைகளை திருடிக் கொண்டு வருமாறு தன் எஜமானர் நெருக்கடி தருவதாக எங்களிடம் அனிதா கூறினார். கடைசியாக ஒரு குழந்தையைத் திருடியது பற்றி அவர் விவரித்தார்.

``அந்தத் தாயார் தெருவோர வாழ்க்கைக்குப் புதியவர். அவர் குழப்பத்தில் இருந்தார். என்ன நடக்கிறது என்று புரியாதவராக இருந்தார். அவர் என்னை நம்பி குழந்தையுடன் பழக அனுமதித்தார். இப்போது அந்தக் குழந்தை என்னிடம் உள்ளது'' என்று அனிதா தெரிவித்தார்.

சிறிய கிரிமினல்களிடம் இருந்து திருட்டுக் குழந்தைகளை வாங்கி விற்கும் தங்கள் எஜமானர் உள்ளூரில் வணிகம் செய்யும் பெண்மணியாக இருக்கிறார். அந்தக் குழந்தைகளை நல்ல லாபத்துக்கு அவர் விற்றுவிடுகிறார்.

``குழந்தை பிறக்காத பெண்கள், தத்து எடுத்துக் கொள்வதைப் போல'' இந்தக் குழந்தைகளை விலைக்கு வாங்குகிறார்கள் என்று அவர் தெரிவித்தார். ஆனால், இப்படி விலைக்கு வாங்கும் ``சிலர் நரபலி கொடுக்கவும் பயன்படுத்துகிறார்கள்'' என்ற அதிர்ச்சித் தகவலையும் சொன்னார்.

``ஆமாம், குழந்தைகளை அவர்கள் பலி கொடுக்கிறார்கள். இந்தக் குழந்தைகள் திடீரென தெருக்களில் இருந்து காணாமல் போகும். அதன் பிறகு அவர்களைப் பார்க்கவே முடிவதில்லை'' என்று அவர் கூறினார்.

``சடங்குகளுக்கு குழந்தைகளை எடுத்துச் செல்லுங்கள்'' என்று குழந்தைகளை வாங்கும் சிலரிடம் அனிதா கூறியதாக ஏற்கெனவே எம்மா எங்களிடம் கூறியது அப்போது எங்களுக்கு நினைவுக்கு வந்தது.

உண்மை சூழலில், ஒரு குழந்தையை அனிதா விற்றுவிட்டால், பிறகு அந்தக் குழந்தைக்கு என்ன நடக்கிறது என்பது அவருக்குத் தெரிவதில்லை. பெண் குழந்தையாக இருந்தால் 50 ஆயிரம் ஷில்லிங், ஆண் குழந்தையாக இருந்தால் 80 ஆயிரம் ஷில்லிங் என்ற விலைக்கு பெண் வியாபாரியிடம் அவர் விற்பார் என்று எம்மா தெரிவித்தார்.

நைரோபியில் தெருவில் திருடும் குழந்தைகளுக்கான தோராயமான விலையாக அது இருக்கிறது.

``குழந்தைகளை விற்கும் வியாபாரம் செய்வதாக அந்தப் பெண் சொல்லிக் கொள்ள மாட்டார்'' என்று எம்மா தெரிவித்தார். ``வாங்கும் குழந்தைகளை அந்தப் பெண் என்ன செய்கிறார் என்று உனக்குத் தெரியுமா என்று அனிதாவிடம் நான் கேட்டிருக்கிறேன்.

சூனியக்காரர்களிடம் கொடுக்கிறாரா அல்லது வேறு ஏதாவது செய்கிறாரா என்பது பற்றி எனக்கு கவலையில்லை என்று அனிதா சொல்வார். தனக்கு வேண்டிய பணத்தைக் கொடுத்துவிட்டால், அதுபற்றி எதுவும் கேட்க மாட்டாள்'' என்றும் எம்மா கூறினார்.

முதலாவது சந்திப்புக்குப் பிறகு, இன்னொரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்யுமாறு அனிதா அழைத்தார். நாங்கள் சென்றபோது, பெண் குழந்தையுடன் அனிதா அமர்ந்திருந்தார். அந்தக் குழந்தை பிறந்து 5 மாதங்கள் ஆகிறது என்றும், சற்று முன்னர் தான் குழந்தையின் தாயாரை நம்ப வைத்துவிட்டு தெருவில் இருந்து குழந்தையை தூக்கி வந்ததாகவும் தெரிவித்தார்.

``ஒரு நொடி குழந்தையை அந்தத் தாயார் என்னிடம் கொடுத்தார். நான் தூக்கிக் கொண்டு ஓடி வந்துவிட்டேன்'' என்று அனிதா கூறினார்.

அந்தப் பெண் குழந்தையை 50 ஆயிரம் ஷில்லிங் விலைக்கு வாங்க ஒருவர் காத்திருப்பதாக அவர் தெரிவித்தார். அப்போது இடைமறிக்க எம்மா முயற்சித்தார். 80 ஆயிரம் ஷில்லிங் விலை தர தயாராக இருப்பதாக ஒருவரை தமக்கு அறிமுகப்படுத்தியதாக எம்மா தெரிவித்தார்.

``அது நல்லது. நாளைக்கு நாம் பேரத்தை முடித்துவிடுவோம்'' என்று அனிதா கூறினார்.

திருடிக் கொண்டு வந்த குழந்தையை 80 ஆயிரம் கென்யா ஷில்லிங்கிற்கு எங்களிடம் விற்க அனிதா முன்வந்தார்.

மாலை 5 மணிக்கு சந்திக்க நேரம் குறித்திருந்தோம். குழந்தையின் உயிருக்கு ஆபத்து இருப்பதால், காவல் துறையினருக்கு ஆப்ரிக்கா ஐ அமைப்பு தகவல் கொடுத்திருந்தது. அனிதாவை கைது செய்து, குழந்தையை மீட்பதற்காக காவல் துறையினர் மறைமுக ஏற்பாடு செய்திருந்தனர். இந்தக் குழந்தை காணாமல் போவதற்கு முன்னதாக, அதைக் காப்பாற்றுவதற்கான கடைசி வாய்ப்பாக அந்தச் சந்திப்பு இருந்தது.

ஆனால் அனிதா வரவே இல்லை. பல நாட்கள் முயற்சித்தும் அனிதாவை எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. சில வாரங்கள் கழித்து, ஒருவழியாக அனிதாவை எம்மா கண்டுபிடித்தார்.

தனக்கு அதிக பணம் கிடைத்ததால் குழந்தையை அவர்களிடம் விற்றுவிட்டதாகவும், அந்தப் பணத்தில் நகரில் ஒரு குப்பத்தில் இரண்டு அறைகள் கொண்ட தகரத்தாலான வீட்டை உருவாக்கியுள்ளதாகவும் அனிதா தெரிவித்தாராம். குழந்தை காணாமல் போய்விட்டது. அனிதா குறித்த விசாரணை கோப்பு காவல் துறையில் அப்படியே இருக்கிறது.

`நாங்கள் இதை செய்தால்'

கென்யாவில் குழந்தைகள் கடத்தப்படுவது குறித்து நம்பகமான புள்ளிவிவரங்கள் எதுவும் இல்லை. அரசின் அறிக்கைகள், தேசிய அளவிலான கணக்கெடுப்புகள் என எதுவும் கிடையாது. காணாமல் போகும் குழந்தைகளைக் கண்டுபிடிப்பது மற்றும் கள்ளச்சந்தையில் குழந்தைகள் விற்கப்படுவதைக் கண்டுபிடிப்பதற்கான ஏஜென்சிக்குப் போதிய நிதி ஆதாரம், போதிய அலுவலர் பலம் கிடையாது.

மரியனா முன்யென்டோ என்பவர் நடத்தி வரும் காணாமல் போகும் கென்ய குழந்தைகள் என்ற என்.ஜி.ஓ. தான், பாதிக்கப்பட்ட தாய்மார்களுக்கு ஆறுதல் தரும் ஒரே அமைப்பாக உள்ளது. 4 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இந்த அமைப்பு சுமார் 600 வழக்குகளில் முயற்சிகள் மேற்கொண்டுள்ளது என்று முன்யென்டோ கூறினார்.

``கென்யாவில் இது மிகப் பெரிய விஷயம். ஆனால் குறைவாகத்தான் புகார்கள் பதிவாகின்றன. காணாமல் போகும் கென்ய குழந்தைகள் அமைப்பின் மூலம் பிரச்சினையின் மேல்பகுதியை மட்டுமே நாங்கள் தொட்டிருக்கிறோம்'' என்று அவர் குறிப்பிட்டார். ``சமூக நலனுக்கான செயல் திட்டங்களில் முன்னுரிமை விஷயமாக இது கருதப்படவில்லை'' என்று அவர் கூறினார்.

இதில் பாதிக்கப்படுபவர்கள் ரெபெக்காவை போன்ற பலவீனமான, குரல் கொடுக்க ஆதரவு இல்லாத பெண்களாக இருக்கிறார்கள் என்பது தான் இதற்குக் காரணம். ஊடகங்களின் கவனத்தை ஈர்க்கவோ அல்லது அதிகாரிகளை செயல்பட வைக்கவோ இவர்களிடம் செல்வாக்கோ வசதியோ இல்லை.

``புகார்கள் குறைவாக மட்டுமே பதிவு செய்யப்படுவதற்கு, பாதிக்கப்பட்டவர்களின் பொருளாதார நிலையும் காரணமாக இருக்கிறது. அவர்களிடம் வசதி இல்லை, எங்காவது சென்று `காணாமல் போன என் குழந்தையை கண்டுபிடித்துத் தாருங்கள்' என்று கேட்பதற்கான நெட்வொர்க் அல்லது தகவல் வசதிகள் அவர்களிடம் இல்லை'' என்று அவர் கூறுகிறார்.

குழந்தையின்மை குறித்து சமூகத்தில் மரியாதைக் குறைவாகப் பேசுவார்கள் என்ற கலாச்சார அமைப்பு தான், குழந்தைகள் திருடப்படுவதற்கு காரணமாக இருக்கிறது. ``ஆப்பிரிக்காவில் திருமணமான பெண்களுக்குக் குழந்தை பிறக்காமல் இருப்பதை நல்லவிதமாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள்.

குழந்தை பிறக்க வேண்டும், அதுவும் ஆண் குழந்தையாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் வீட்டைவிட்டு வெளியே விரட்டிவிடுவார்கள். எனவே என்ன செய்ய முடியும்? குழந்தையை திருட வேண்டியதாகிறது'' என்று முன்யென்டோ தெரிவித்தார்.

நைரோபியில் கயோலே பகுதியில் ஒரு சிறுவன். குழந்தை கடத்தல் ``செழிப்பாக'' நடக்கிறது என்று உள்ளூர் பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நைரோபியில் கயோலே பகுதியில் ஒரு சிறுவன். குழந்தை கடத்தல் ``செழிப்பாக'' நடக்கிறது என்று உள்ளூர் பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்தார்.

அதுபோன்ற நிலையில் இருக்கும் ஒரு பெண் அனிதாவின் எஜமானி போன்ற பெண்ணை தொடர்பு கொள்வார். தெருவில் திரியும் குழந்தைகளைத் திருட அனிதாவை போன்ற பெண்களை அவர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அல்லது மருத்துவமனையுடன் தொடர்பில் உள்ள யாருடனாவது, குழந்தையில்லாத பெண்கள் தொடர்பு கொள்கிறார்கள்.

நைரோபியில் அரசு மருத்துவமனைகளில், மூடிய கதவுகளுக்குப் பின்னால் குழந்தைத் திருட்டுகள் நடக்கின்றன என்று ஆப்ரிக்கா ஐ ஆய்வில் தெரிய வந்துள்ளது. மமா லூசி கிபாக்கி மருத்துவமனையில் கிளினிகல் சமூகப் பணியாளராக இருக்கும் பிரெட் லெப்பரன் என்பவரை ஒருவர் மூலமாக நாங்கள் அணுகினோம்.

மமா லூசி மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்குப் பாதுகாப்பு தர வேண்டியது லெபரனின் பணி. ஆனால் குழந்தைகளைத் திருடி விற்பதில் அவருக்கு நேரடி தொடர்பு உள்ளது என்று எங்களிடம் சொன்னார்கள்.

லெபரனை சந்திக்க ஒருவர் ஏற்பாடு செய்தார். கருத்தரிக்க முடியாத நிலையில் இருக்கும் பெண் ஒருவர், ஒரு குழந்தையை வாங்கியே ஆக வேண்டும் என்ற நிலையில் இருப்பதாக அவரிடம் சொல்லப்பட்டது.

``மருத்துவமனையில் இப்போது இந்த ஆண் குழந்தை இருக்கிறது. இரண்டு வாரங்களுக்கு முன்பு விட்டுச் சென்றுவிட்டனர். பிறகு வரவே இல்லை'' என்று லெபரன் தெரிவித்தார்.

குழந்தையை விற்க லெபரன் முன்வருவது இது முதலாவது தடவை கிடையாது என்று எங்களை அழைத்துச் சென்றவர் கூறினார்.

``கடைசியாக நடந்த சம்பவம் எனக்கு பயத்தை ஏற்படுத்திவிட்டது'' என்று சந்திப்பின் போது லெபரன் கூறியதை நாங்கள் பதிவு செய்து வைத்திருக்கிறோம். ``இதை நாம் செய்தால், பிற்காலத்தில் நமக்குப் பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்க ஒரு திட்டத்தை செய்ய நான் விரும்புகிறேன்'' என்று அவர் கூறினார்.

3 லட்சம் கென்யன் ஷில்லிங் விலைக்கு மமா லூசி மருத்துவமனையில் இருந்து ஒரு குழந்தையை திருடித் தருவதற்கு பிரெட் லெபரன் ஒப்புக்கொண்டார்.
படக்குறிப்பு, 3 லட்சம் கென்யன் ஷில்லிங் விலைக்கு மமா லூசி மருத்துவமனையில் இருந்து ஒரு குழந்தையை திருடித் தருவதற்கு பிரெட் லெபரன் ஒப்புக்கொண்டார்.

கைவிடப்படும் குழந்தைகளை, அரசின் குழந்தைகள் காப்பகத்திற்கு தான் கொண்டு செல்ல வேண்டும். தத்து எடுக்க விரும்புபவர்களின் பின்னணி, குழந்தையின் நலன்களை ஆய்வு செய்து அதிகாரப்பூர்வமாக தத்து கொடுக்கப்படும்.

பிரெட் லெபரன் போன்றவர்களால் சட்ட விரோதமாக குழந்தைகளை விற்கும்போது, அந்தக் குழந்தை எங்கே கொண்டு செல்லப்படுகிறது என்பது யாருக்கும் தெரியாது. ரோஸ் என்ற பெண் போல ஆப்ரிக்கா ஐ அமைப்பைச் சேர்ந்தவர் சென்று லெபரனை மருத்துவமனைக்கு அருகில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்தார்.

ரோஸ் பற்றி சம்பிரதாயமான சில கேள்விகளை லெபரன் கேட்டார். தனக்கு திருமணம் ஆகிவிட்டது என்றும், கருத்தரிக்கவில்லை என்றும், கணவரின் குடும்பத்தினர் செயல்பாடு காரணமாக மிகுந்த மன அழுத்தத்தில் இருப்பதாகவும் இந்தப் பெண் கூறினார்.

``தத்து எடுப்பதற்கு முயற்சி செய்தீர்களா'' என்று லெபரன் கேட்டார்.

``அதுபற்றி யோசித்தோம். ஆனால் அது கொஞ்சம் சிக்கல் போல தெரிகிறது'' என ரோஸ் பதில் அளித்தார்.

அதைத் தொடர்ந்து லெபரன் ஒப்புக்கொண்டார். 3 லட்சம் ஷில்லிங் தர வேண்டும் என்று கூறினார்.

``இந்த டீலை நாம் முடித்தால், இதில் 3 பேர் மட்டுமே ஈடுபடுவோம். நான், நீங்கள், அவர்'' என்று ரோஸ் மற்றும் அவரை அழைத்துச் சென்றவரைக் காட்டி லெபரன் கூறியுள்ளார். ``யாரையாவது நம்புவது தான் எனக்குப் பிரச்சினை. அதில் அதிக ஆபத்து இருக்கிறது. அதனால் அதிக கவலை ஏற்படுகிறது'' என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

வியாபாரம் பற்றி ஏற்பாடு செய்ய மீண்டும் தொடர்பு கொள்வதாக அவர் கூறினார்.

அடாமாவின் தேர்வு

தெருக்களில் குழந்தைகளைத் திருடும் அனிதாவைப் போன்றவர்கள், லெபரன் போன்ற ஊழல் அதிகாரிகள் தவிர, நைரோபியில் குழந்தைகள் கடத்தல் தொழிலில் இன்னொரு குழுவும் இருக்கிறது.

நகரில் குப்பத்துப் பகுதிகளில் பிரசவம் பார்க்கும் சட்டவிரோத கிளினிக்குகள் அதிகமாக இருக்கின்றன. குழந்தைகளை திருடி விற்பதற்கான மையங்களாக இவை உள்ளன.

கெட்டோ வானொலின் உள்ளூர் பகுதி நிருபர் ஜூடித் கனைதா உதவியுடன், நைரோபியில் கயோலே பகுதியில் உள்ள ஒரு கிளினிக்கை ஆப்பிரிக்கா ஐ அமைப்பு தொடர்பு கொண்டது. நகரில் பரம ஏழைகள் ஆயிரக்கணக்கில் அந்தப் பகுதியில் வசிக்கின்றனர். கயோலே பகுதியில் குழந்தைகள் விற்பனை அமோகமாக நடைபெறுகிறது என்று கனைதா கூறினார்.

நாங்கள் அணுகிய கிளினிக்கை மேரி அவுமா என்பவர் நடத்தி வந்தார். நைரோபியில் பெரிய மருத்துவமனை ஒன்றில் நர்ஸாக வேலை பார்த்ததாக அவர் சொன்னார். குழந்தை வாங்குபவராக தன்னை கனைதா அறிமுகம் செய்து கொண்டார். கிளினிக்கில் ஏற்கெனவே 2 பெண்கள் பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருந்தனர்.

``இந்தப் பெண் எட்டரை மாத கர்ப்பிணி. எந்த நேரத்திலும் குழந்தை பிறந்துவிடும்'' என்று மெல்லிய குரலில் அவுமா கூறினார் பிறக்காத அந்தக் குழந்தையை 45 ஆயிரம் ஷில்லிங்கிற்கு கனைதாவிற்கு விற்க அவர் முன்வந்தார்.

பிரசவத்திற்குப் பிறகு, அந்த தாய்க்கு என்னவாகும் என்பதில் அவுமா கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. ``பணம் கிடைத்ததும், அவள் போய்விடுவள்'' என்று கூறி கையைக் காட்டினார். ``அவர்கள் ஒருபோதும் மீண்டும் வர மாட்டார்கள் என்பதை நாங்கள் தெளிவுபடுத்துகிறோம்'' என்று அவர் கூறினார்.

தெருவோரத்தில் உள்ள தன் கிளினிக்கில், குழந்தை விற்பனைக்கான பேச்சுவார்த்தையில் மேரி அவுமா.

பிரசவிக்காத நிலையில் விலைபேசப்பட்ட அந்தக் குழந்தையின் தாயார் பெயர் அடாமா.

அடாமா மனம் உடைந்திருந்தார். ரெபெக்காவை போல, இவரையும் கர்ப்பமாக்கியவர் கைவிட்டுவிட்டார். கர்ப்பம் ஆனதால் கட்டுமான வேலைக்குப் போக முடியாமல் போய்விட்டது. அதிக பாரம் உள்ள சிமென்ட் மூட்டைகளை தூக்க முடியாது என்பதால் வேலைக்குப் போகவில்லை. 3 மாதங்களாக, அவருடைய வீட்டு உரிமையாளர் கருணை காட்டினார். பிறகு அவர் விரட்டிவிட்டார்.

அதனால் தன் குழந்தையை விற்பது என அடாமா முடிவு செய்தார். எங்களிடம் வாங்குவதாக இருந்த 45 ஆயிரம் ஷில்லிங்குகளை மேரி அவுமா அந்தப் பெண்ணுக்குத் தருவதாக இல்லை. வெறும் 10 ஆயிரம் ஷில்லிங்கிற்கு தான் விற்பதாக அந்தப் பெண்ணிடம் அவர் தெரிவித்தார்.

``அவருடைய இடம் குப்பையாக இருந்தது. ரத்தத்தைப் பிடிக்க சிறிய டப்பா வைத்திருந்தார். பேசின் கிடையாது. படுக்கையும் சுத்தமாக இல்லை'' என்று பின்னர் தன் கிராமத்தில் பேட்டியளித்தபோது அடாமா கூறினார். ``ஆனால் நான் நெருக்கடியில் இருந்தேன். எனக்கு வேறு வழி தெரியவில்லை'' என்றார் அவர். கிளினிக்கிற்கு நாங்கள் சென்ற அந்த நாளில், எச்சரிக்கை எதுவும் இல்லாமல் சில மாத்திரைகளை அவுமா கொடுத்து விழுங்கச் சொல்லி, பிரசவிக்கும் சூழலை உருவாக்கியதாக அடாமா தெரிவித்தார். குழந்தையை வாங்க ஆள் வந்திருப்பதால், விற்பனையை முடித்துவிட அவுமா ஆர்வம் காட்டியிருக்கிறார்.

ஆனால் பிரசவம் நல்லபடியாக அமையவில்லை. ஆண் குழந்தைக்கு மார்பில் கோளாறுகள் ஏற்பட்டன. சிகிச்சைக்கு குழந்தையை மமா லூசி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு அடாமாவிடம் அவுமா கூறியிருக்கிறார். இரண்டு வாரங்கள் கழித்து, குழந்தையுடன் அடாமா வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவர் அவுமாவுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பி, அவர் எங்களுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பினார்.

``புதிய பேக்கேஜ் வந்துள்ளது. 45,000 கே.'' என்று அவர் அனுப்பியிருந்தார்.

தெருவோர சட்டவிரோத கிளினிக்குகள் நைரோபியில் கயோலே போன்ற பகுதிகளில் அதிகம் உள்ளன.

பட மூலாதாரம், TONY KARUMBA

படக்குறிப்பு, தெருவோர சட்டவிரோத கிளினிக்குகள் நைரோபியில் கயோலே போன்ற பகுதிகளில் அதிகம் உள்ளன.

கிளினிக்கில் அவுமா மற்றும் அவரது உதவியாளர் ஆகியோரை அடாமா சந்தித்தார். ``குழந்தை நன்றாக இருப்பதாக அவர்கள் சொன்னார்கள். வாங்குபவருக்கு குழந்தையை பிடித்திருந்தால் நேரடியாக குழந்தையை எடுத்துச் செல்வார்'' என்று அவர் கூறினார்.

தன் குழந்தையை விற்பதற்கு, மிகுந்த மன வலியுடன் அடாமா முடிவு செய்தார். இப்போது அவர் மறுபரிசீலனை செய்தார்.

``என் குழந்தையை நன்றாக பார்த்துக் கொள்ளாத யாருக்கோ என் குழந்தையை விற்க நான் விரும்பவில்லை. வேறு எதற்காகவேனும் என் குழந்தையைப் பயன்படுத்தக் கூடியவர்களுக்கு விற்க விரும்பவில்லை'' என்று பிறகு அடாமா கூறினார்.

எனவே தன் ஆண் குழந்தையை எடுத்துக் கொண்டு அடாமா கிளினிக்கில் இருந்து வெளியேறிவிட்டார். அரசு நடத்தும் குழந்தைகள் மருத்துவமனையில் குழந்தையை அவர் விட்டுவிட்டார். குழந்தையை அங்கு யாராவது தத்தெடுத்துக் கொள்வார்கள் என்றும், குழந்தைக்கு நல்ல வாழ்க்கை கிடைக்கும் என்றும் அவர் நம்பிக்கை கொண்டிருக்கிறார். தன் தேவைக்கான பணம் அவருக்குக் கிடைக்கவில்லை. இப்போது நைரோபியில் இருந்து தள்ளி, தனியாக வாழ்கிறார். சிலநேரங்களில் தன் மகன் பற்றி அவர் கனவு காண்கிறார். அதிகாலை நேரத்தில் திடீரென எழுந்து கொண்டு, மகனைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறார். சிலநேரங்களில், தூக்கம் வராவிட்டால் இருட்டில் சாலையில் நடந்து செல்கிறார். ஆனால் தன்னுடைய முடிவுக்காக அவர் வருத்தப்படவில்லை.

``என் குழந்தையை அரசிடம் விட்டுவிட்டதில் நிம்மதியாக இருக்கிறேன். ஏனெனில் அவன் பாதுகாப்பாக இருப்பான் என எனக்குத் தெரியும்'' என்று அடாமா கூறினார்.

மருத்துவமனையில் விற்பனை

தாயாரால் கைவிடப்பட்ட ஆண் குழந்தை ஒன்றை தாம் பார்த்திருப்பதாகவும், எங்களுக்காக அந்தக் குழந்தையை திருடிக் கொண்டு வர விரும்புவதாகவும் கூறி, அரசு மருத்துவமனை சமூக அலுவலர் பிரெட் லெபரன் எங்களை தொடர்பு கொண்டு பேசினார்.

அருகில் உள்ள குழந்தைகள் நல காப்பகத்துக்குக் கொண்டு செல்லப்படுவதாக இருந்த மூன்று குழந்தைகளில் ஒன்றாக அந்த ஆண் குழந்தை இருந்தது. அந்தக் குழந்தைகளை பத்திரமாகக் கொண்டு போய் சேர்க்க வேண்டிய பொறுப்பில் லெபரன் இருந்தார். ஆனால் மமா லூசி மருத்துவமனையில் இருந்து குழந்தைகள் புறப்பட்டுவிட்டால், காப்பகத்துக்கு அவை சென்று சேர்ந்ததா என்பதை சரிபார்க்க வாய்ப்புகள் குறைவு என்பதை லெபரன் அறிந்திருந்தார்.

மருத்துவமனையில், தேவையான ஆவணங்களை லெபரன் பூர்த்தி செய்தார். அங்கிருந்த அலுவலரிடம் சிறிது நேரம் பேசினார். அவர்களுடைய கண்காணிப்பில் இருக்கும் ஒரு குழந்தை திருடப்பட போகிறது என்று அந்த அலுவலருக்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை. ரோஸ் என்ற பெயரில் சென்றிருந்த நிருபர் வெளியில் காரில் காத்திருந்தார்.

லெபரன் மருத்துவமனை நர்ஸ்களை அணுகி, பாதுகாப்பு இல்லத்தில் தாம் வேலை பார்ப்பதாகவும், குழந்தைகளை கொண்டு வரும் படியும் கேட்டுக் கொண்டார். தன்னை நர்ஸ்கள் பின்தொடர மாட்டார்கள் என்று எங்கள் ஆளிடம் லெபரன் உறுதி அளித்தார். ``இல்லை, அவர்களால் வர முடியாது. அவர்களுக்கு வேறு வேலை இருக்கிறது'' என்று அவர் கூறினார்.

சீக்கிரம் சென்றுவிடுங்கள் என்று எங்கள் ஆட்களை அவர்கள் வற்புறுத்தினார். ``இதுபோல நாம் பேசிக் கொண்டிருந்தால், யாராவது சந்தேகப்படுவார்கள்'' என்று அவர் கூறினார்.

மமா லூசி மருத்துவமனையில் குழந்தையை ஒப்படைக்கும் வேலைக்கு ஏற்பாடு செய்கிறார் பிரெட் லெபரன்

சில நிமிடங்கள் கழித்து, அந்தக் குழுவினர் குழந்தைகளுடன் மமா லூசி மருத்துவமனையில் இருந்து புறப்பட்டுச் செல்கின்றனர். இரண்டு குழந்தைகளை மட்டும் காப்பகத்தில் ஒப்படைக்க வேண்டும் என அவர்களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது. மூன்றாவது குழந்தை அங்கிருந்து எங்கு வேண்டுமானாலும், யாருடன் வேண்டுமானாலும் அனுப்பலாம்.

இந்தக் குழு மூன்று குழந்தைகளையும் பத்திரமாக காப்பகத்தில் ஒப்படைத்தது. சட்டபூர்வ தத்தெடுப்பு வரையில் பத்திரமாக அந்தக் குழந்தைகள் அங்கு பராமரிக்கப்படும்

பிறகு மதியத்தில் ரோஸ் உடன் தொடர்பு கொண்ட லெபரன் சந்திப்புக்கு அழைத்தார். பேசியபடி 3 லட்சம் ஷில்லிங்குகளை டேபிளில் வைக்குமாறு லெபரன் கேட்டுக் கொண்டார் சத்துணவு நிபுணரை சந்திக்குமாறு அவர் கூறினார். ``இந்தக் குழந்தையின் உடலில் தடுப்பூசி போட்ட அடையாளம் இருக்கும் என்பதை வைத்து தான் அடையாளம் காண வேண்டும்'' என்று அவர் குறிப்பிட்டார்.

``மிக கவனமாக இருங்கள், ஜாக்கிரதையாக இருங்கள்'' என்றார் அவர்.

இந்தப் பரிவர்த்தனை பற்றி பிரெட் லெபரனிடம் பிபிசி கேள்வி எழுப்பியது. அவர் பதில் அளிக்க மறுத்துவிட்டார். மருத்துவமனை தரப்பிலும் கருத்து கூற மறுத்துவிட்டனர். லெபரன் வேலையை காப்பாற்றிக் கொண்டிருப்பது போல தெரிகிறது.

மேரி அவுமாவின் சட்டவிரோத கிளினிக் பற்றி குழந்தைகள் உரிமைக்கான என்.ஜி.ஓ.விடம் நாங்கள் தகவல் தெரிவித்தோம். அந்த அமைப்பு பிறகு காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தது. ஆனால் அவுமாவின் வியாபாரம் அப்படியே தொடர்வதாகத்தான் தெரிகிறது. குற்றச்சாட்டுகள் பற்றி தெரிவித்தபோது, அவுமா பதில் அளிக்கவில்லை.

அனிதாவிடம் இதுபற்றி கேட்க முயற்சி செய்தோம் ஆனால் மறுபடியும் அவர் காணாமல் போய்விட்டார்.

``நாங்கள் எல்லோருமே எங்கள் குழந்தைக்கு தாயாகிட விரும்புகிறோம்'' என்று ரெபெக்கா கூறினார். ``தெருவில் வாழ்வது எங்களின் குற்றமல்ல'' என்றார் அவர்.
படக்குறிப்பு, ``நாங்கள் எல்லோருமே எங்கள் குழந்தைக்கு தாயாகிட விரும்புகிறோம்'' என்று ரெபெக்கா கூறினார். ``தெருவில் வாழ்வது எங்களின் குற்றமல்ல'' என்றார் அவர்.

குழந்தைகள் திருடப்பட்ட தாய்மார்களுக்கு உண்மையான தீர்வு எதுவும் கிடைக்காது. மறுபடியும் பிள்ளையை பார்ப்போம் என்று பலர் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். அநேகமாக அப்படி காண முடியாது என்பதும் அவர்களுக்குத் தெரியும். தன் மகனை பார்க்க ``எதையும் செய்யக் கூடியவராக'' ரெபெக்கா இருக்கிறார். ``ஒருவேளை அவன் இறந்திருந்தால், அதையும் நான் தெரிந்து கொள்ள வேண்டும்'' என்கிறார் அவர்.

கடந்த ஆண்டு அவருடைய மூத்த மகளைப் போலவே ஒரு சிறுவனை நைரோபிக்கு அருகே பார்த்ததாகக் கடந்த ஆண்டு ஒருவர் ரெபெக்காவிடம் கூறியிருக்கிறார். அது உண்மையாக இருந்தால், அருகில் உள்ள பகுதிக்குச் சென்று, சிறுவனை தேடுவதற்கு ரெபெக்காவுக்கு வாய்ப்பு வசதிகள் இல்லை. உள்ளூர் காவல் நிலையம் வரை மட்டுமே அவரால் செல்ல முடிந்தது. ஆனால் அவருக்கு அங்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை. அத்துடன் முயற்சியை கைவிட்டுவிட்டார்.

``இந்தப் பெண்கள் தங்கள் குழந்தையை மீண்டும் பார்ப்பதற்கு ஒரு மில்லியனில் ஒருவருக்கு என்ற அளவில் தான் வாய்ப்பு உள்ளது'' என்று காணாமல் போகும் கென்ய குழந்தைகள் அமைப்பைச் சேர்ந்த மரியனா முன்யென்டோ தெரிவிக்கிறார். ``தெருவோர தாய்மார்கள் பலர், தாங்களே குழந்தைகளாகத் தான் இருக்கிறார்கள். அதை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு குழந்தைகளை திருடிவிடுகிறார்கள்'' என்று அவர் கூறினார்.

ரெபெக்கா போன்றவர்கள் பெரும்பாலும் பாதிப்புக்கு ஆளான பரிதாபத்துக்கு உரியவர்களாக பார்க்கப்படுவதில்லை. ``தெருவில் வசிப்பவர்களுக்கு உணர்வுகள் கிடையாது, அவர்களுக்கு நீதி பெறுவதற்கான தகுதி இல்லை என்று யாரும் நினைத்துவிடக் கூடாது. அவர்களுக்கும் உணர்வுகள் இருக்கின்றன. நகர்ப்புறத்தில் வாழும் போது உங்கள் குழந்தை காணாமல் போனால் எந்த மாதிரியான உணர்வுகள் இருக்குமோ, அதேபோன்ற உணர்வுதான் தெருவோர தாய்க்கும் இருக்கும்'' என்று அவர் கூறினார்.

தெருக்களில் இருந்து திருடப்படும் சில குழந்தைகள் நகர்ப்புறங்களுக்குப் போகக்கூடும். சிலநேரங்களில் நிறைய பணம் கொடுத்து வாங்கிய பெண்கள் பற்றியும் ரெபக்கா நினைத்துப் பார்ப்பார். வேறு யாரிடம் இருந்தோ திருடப்பட்ட குழந்தை என்று தெரிந்தும் வளர்ப்பவர்கள் பற்றி நினைத்துப் பார்ப்பார்.

``அந்தப் பெண்கள் என்ன நினைத்துக் கொள்வார்கள்? எப்படி உணர்வார்கள்?'' என்று ரெபக்கா கேட்கிறார்.

புகைப்படங்கள்: பிரையன் இன்கங்கா

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: