அமெரிக்க தேர்தல் 2020: வெற்றியை தீர்மானிக்கும் முக்கிய பகுதிகள் எவை தெரியுமா?

அமெரிக்க அதிபர் தேர்தல் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 3) நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் ஆளும் குடியரசு கட்சியைச் சேர்ந்த அதிபர் டொனால்டு டிரம்புக்கும் எதிர்கட்சியான ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஜோ பைடனுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
2016ஆம் ஆண்டில் நடந்த தேர்தலில் குறைவான வாக்குகளை பெற்றிருந்த போதிலும் எலக்டோரல் காலேஜ் முறையின் சாதகம் டொனால்டு டிரம்புக்கு அதிபராகும் வாய்ப்பை அளித்தது. ஆனால், அதே சூழ்நிலை இம்முறை டொனால்டு டிரம்புக்கு கைகொடுக்குமா என்பதை அதே எலக்டோரல் காலேஜ் முறைதான் தீர்மானிக்கப்போகிறது.
அமெரிக்காவில் ஆறு மாகாணங்கள், அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றியை தீர்மானிக்கக் கூடியவையாக உள்ளன. அரிசோனா, ஃபுளோரிடா, மிஷிகன், வடக்கு கரோலைனா, பெனிசில்வேனியா, விஸ்கான்சின் ஆகியவைதான் அந்த மாகாணங்கள். இந்த மாகாணங்களில் சிலவற்றில் சொற்ப அளவிலான வாக்குகள் வித்தியாசத்திலேயே கடந்த முறை அதிபர் டிரம்ப் வெற்றி பெற்றார்.
இந்த மாகாணங்களில் பரவலாக ஆளும் குடியரசு கட்சிக்கும் ஜனநாயக கட்சிக்கும் ஆதரவான வாக்காளர்கள் இருக்கிறார்கள்.
ஃபுளோரிடா மாகாணம் பன்முகப்பட்ட வாக்காளர்களை கொண்டது. கடந்த முறை இங்கு டொனால்டு டிரம்புக்கு 49 சதவீத வாக்குகள் கிடைத்தன. இம்முறை இங்கு நடத்தப்பட்ட சமீபத்திய கருத்துக் கணிப்பில் அதிபர் டிரம்புக்கு 46 சதவீதமும் பைடனுக்கு 48 சதவீமும் கிடைக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
மியாமி டேட் பகுதியில் ஜனநாயக கட்சிக்கு அதிக செல்வாக்கு இருப்பதாக கருதப்படுகிறது. ஆனாலும் இங்கு அதிகமாக உள்ள கியூபா வம்சாவளி அமெரிக்கர்கள், தங்களுடைய ஆதரவை குடியரசு கட்சிக்கு வழங்கி வருவதால் இம்முறை இங்கு தேர்தல் முடிவுகள் அணி மாறலாம் என்ற சூழல் நிலவுகிறது.
பினெல்லாஸ் பகுதி, தொங்குநிலைக்கு பேர் போனது. கடந்த 2016ஆம் ஆண்டு தேர்தலின்போது டிரம்புக்கும் அவரை எதிர்த்து போட்டியிட்டவருக்குமான வித்தியாசம் ஒரு சதவீதம் மட்டுமே. 2012இல் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஒபாமா 52 சதவீத வாக்குகளையும், அதற்கு முன்பு நடந்த 2008ஆம் ஆண்டு தேர்தலில் ஒபாமா 53 சதவீத வாக்குகளையும் பெற்றார்.
ஏசியோலா பகுதி, ஓர்லான்டோவின் விரிவான இடமாக கருதப்படுகிறது. லட்சக்கணக்கான பியெர்டோ ரிக்கோவைச் சேர்ந்தவர்களின் ஆதரவு கடந்த முறை ஜனநாயக கட்சிக்கு ஆதரவாக இருந்தது. 2016, 2012, 2008 ஆகிய ஆண்டுகளில் நடந்த அதிபர் தேர்தலிலும் இங்கு ஜனநாயக கட்சியே தொடர்ந்து இடங்களை தக்க வைத்து வருகிறது.

வடக்கு கரோலைனாவின் வாக்குகள் இந்த தேர்தலில் முக்கிய பங்கு வகிக்கப்போகிறது. காரணம், இங்கு கருப்பினத்தவர்கள் அதிகமாக வாழ்கிறார்கள். மிதமான தொழில்முறை சமூகம், கல்லூரி மாணவர்கள், கிராமப்புறப்பின்னணி கொண்ட வெள்ளையினத்தவர்கள் ஆகியோரும் இங்கிருக்கிறார்கள், அமெரிக்காவில் சமீபத்திய கருப்பின இனவெறி தாக்குதல் சம்பவங்கள், ஆளும் கட்சிக்கு பின்னடைவைத்தரலாம் என சமீபத்திய கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. எனினும், இங்கு 2016இல் டிரம்புக்கு சாதகமாகவே வாக்குகள் கிடைத்து அவர் 50 சதவீத வாக்குகளை பெற்றார். 2012இல் குடியரசு கட்சியும், 2008இல் ஜனநாயக கட்சியும் இங்கு அதிக வாக்குகள் சதவீதத்தைப் பெற்றன.
யூனியன் கவுன்ட்டி, குடியரசு கட்சியின் கோட்டையாக கருதப்படுகிறது. 2016இல் நடந்த தேர்தலின்போது இங்கு டிரம்ப் 63 சதவீத வாக்குகளைப் பெற்றார். 2012இல் 65 சதவீதத்தையும் 2008இல் 63 சதவீத வாக்குகளையும் குடியரசு கட்சி பெற்றது. ஆனால், சமீப காலமாக இங்கு அதிபருக்கு எதிராக அதிருப்தி நிலவுவதாகக் கூறி ஜனநாயக கட்சியினர் பிரசாரம் செய்து வருவதால், அதன் தாக்கம் தேர்தலில் எதிரொலிக்குமா என்பதை பார்க்க வேண்டியுள்ளது.
வேக் கவுன்ட்டி, அமெரிக்காவின் மிகவும் வேகமாக வளரும் பகுதி. இது பாரம்பரியமாகவே ஜனநாயக கட்சியின் செல்வாக்கு அதிகம் உள்ள பகுதி. 2016ஆம் ஆண்டு தேர்தலில் ஹிலாரி கிளின்டனுக்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளை இந்த இடம் பெற்றுத் தந்தது. 2016, 2012, 2008 ஆகிய ஆண்டுகளில் குடியரசு கட்சியால் இந்த மாகாணத்தில் போட்டியிட்ட குடியரசு கட்சி வேட்பாளர்களை நெருங்கக்கூட முடியவில்லை.
ரோப்சன் பகுதி, ஜனநாயக கட்சிக்கு சாதகமான முடிவுகளை 2008, 2012 ஆகிய ஆண்டுகளில் தந்தாலும், 2016இல் எதிர்மறை முடிவையை இந்த இடம் அளித்து டிரம்புக்கு சாதகமான முடிவை வழங்கியது. இங்கு லும்பி இந்தியர்கள் என்ற பழங்குடி சமூகத்தினர் அதிகம் வாழ்கிறார்கள். அந்த சமூகத்தினருக்கான தேசிய அளவிலான அங்கீகாரம் வழங்கப்படும் என்ற முழக்கத்தோடு கடந்த அக்டோபர் மாதத்தில் அதிபர் டொனால்டு டிரம்ப் இங்கு பிரசாரம் செய்தார். அது அந்த வாக்காளர்களை ஈர்க்கிறதா என்பதை அறிய தேர்தல் முடிவுவரை காத்திருக்க வேண்டும்.

பெனிசில்வேனியா மாகாணத்தில் உள்ள இரண்டு மிகப்பெரிய நகரங்களில் ஜனநாயக கட்சி கோலோச்சி வருகிறது. அதே நேரம் புறநகர்ப்பகுதியில் குடியரசு கட்சி இங்கு முதலில் ஆதிக்கம் செலுத்தியது. இந்த இடங்களில் சில ஆளும் கட்சிக்கான ஆதரவை தருவது சந்தேகமே என்கிறது கள நிலவரம். சமீபத்திய கருத்துக் கணிப்பில் ஜோ பைடனுக்கு 51 சதவீதமும் டிரம்புக்கு 45 சதவீதமும் வாக்குகள் கிடைக்கலாம் என கூறுகிறது. 2016இல் இங்கு டிரம்புக்கு 48.2 சதவீதமும் 2012, 2008 ஆகிய ஆண்டுகளில் ஜனநாயக கட்சிக்கு 50 சதவீதத்தை தாண்டிய வாக்குகளும் கிடைத்தன.
ஃபிலடெல்ஃபியா தொகுதியில் கருப்பினத்தவர்கள் அதிகம் வாழ்கிறார்கள். பாரம்பரியமாகவே இந்த இடம் ஜனநாயக கட்சியின் செல்வாக்கு அதிகம் உள்ளது. 2016 தேர்தலில் இங்கு ஹிலாரி கிளின்டன் 82 சதவீத வாக்குகளைப் பெற்றார். 2012, 2008இல் இங்கு ஒபாமாவுக்கு முறையே 85 மற்றும் 83 சதவீத வாக்குகள் கிடைத்தன. இங்குள்ள கிராமப்புற வாக்காளர்களை ஈர்க்க பல உத்திகளை குடியரசு கட்சி இம்முறை கையாண்டதால் அவர்களின் வாக்குகள் யாருக்கு விழும் என்பதே இங்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.
மிஷிகன், வராலாற்று ரீதியாக ஜனநாயக கட்சியின் செல்வாக்குடன் விளங்கியபோதும், கடந்த தேர்தலில் 0.3 சதவீத வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை குடியரசு கட்சியிடம் ஜனநாயக கட்சி பறிகொடுத்தது. அங்கு டிரம்பின் தேர்தல் வெற்றி, அந்த தொகுதி மக்களுக்கே ஆச்சரியத்தை தந்தது. சமீபத்திய கருத்துக் கணிப்பில் இங்கு டிரம்புக்கு 43 சதவீதமும் பைடனுக்கு 51 சதவீதமும் வாக்குகள் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஓக்லேண்ட் பகுதி, ஒரு காலத்தில் குடியரசு கட்சியின் ஆதரவுக்குரலாக விளங்கியது. ஆனால், கடந்த மூன்று அதிபர் தேர்தல்களிலும் ஜனநாயக கட்சிக்கே இங்கிருந்து வெற்றி தீர்மானிக்கப்பட்டது. ஒரு யுகத்துக்குப் பிந்தைய மாற்றத்தின் தாக்கம் சாத்தியம் என்ற அரசியல் மாற்ற குரலுக்கு உதாரணமாக இந்த இடம் இருப்பதாக கருதப்படுகிறது.
விஸ்கான்சின் மாகாணத்தின் அரசியல் எப்போதுமே தாரளவாத கொள்கைகளால் மேம்பட்டது என்பார்கள். இங்குள்ள மில்வாக்கி, மேடிசன் ஆகிய நகரங்கள், வடக்கே உள்ள கிராமப்புற பகுதிகள், மேற்கே உள்ள பகுதிகள் மாறி வரும் அரசியலுக்கு சாட்சியாக உள்ளன. சமீபத்திய கருத்துக் கணிப்பில் ஜோ பைடனுக்கு 52 சதவீத வாக்குகளும் டிரம்புக்கு 42 சதவீத வாக்குகளும் கிடைக்கும் என தெரிய வந்துள்ளது. எனினும், கடந்த 2016ஆம் ஆண்டு தேர்தலில் டிரம்புக்கு இங்கு 47.2 சதவீத வாக்குகளும் ஹிலாரி கிளின்டனுக்கு 46.5 சதவீத வாக்குகளும் கிடைத்தன.
தேர்தல் கள நிலவரப்படி முக்கிய மாகாணங்களான மிஷிகன், பெனிசில்வேனியா, விஸ்கான்சின் ஆகியவற்றில் டிரம்பை விட ஜோ பைடனுக்கே தற்போதைய நிலையில் சாதகமான சூழல் இருப்பதாக கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












