ஹாங்காங் பாதுகாப்புச் சட்டம்: ஒப்பந்தத்தை ரத்து செய்த பிரிட்டன்; எச்சரிக்கை விடுத்த சீனா - என்ன நடக்கிறது?

பட மூலாதாரம், Getty Images
ஹாங்காங்குடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்படைப்பு ஒப்பந்தத்தை "உடனடியாக மற்றும் காலவரையின்றி" இடைநீக்கம் செய்துள்ளது பிரிட்டன்.
பிரிட்டனின் வெளியுறவுச் செயலர் டாமினிக் ராப் இந்த அறிவிப்பை வெளியிட்டார் மேலும் சீனாவுடன் ஒரு நேர்மறையான உறவை பேணவே பிரிட்டன் விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த ஒப்படைப்பு ஒப்பந்தம் மூலம், ஹாங்காங்கை சேர்ந்த யாரேனும் பிரிட்டனில் குற்றம் புரிந்தால் அவர்களை பிரிட்டன் அதிகாரிகள் தங்களிடம் ஒப்படைக்க கோரலாம் அதேபோல பிரிட்டனை சேர்ந்த யாரேனும் ஹாங்காங்கில் குற்றங்களை புரிந்தால் அவர்கள் ஹாங்காங்கிடம் ஒப்படைக்கப்படுவர்.
இந்த ஒப்பந்தம் 30 வருடங்களாக கடைபிடிக்கப்பட்டு வந்தது. ஆனால் ஹாங்காங்கிடம் ஒப்படைக்கப்படுபவர்கள் சீனாவுக்கு அனுப்பப்படலாம் என பிரிட்டன் அஞ்சுகிறது.
பாதுகாப்புச் சட்டம்
ஹாங்காங்கின் மீது புதிய அதிகாரத்தை செலுத்தும் வகையில் சீனா ஒரு சர்ச்சைக்குரிய பாதுகாப்பு சட்டத்தை இயக்கியது.
இந்த புதிய சட்டம் ஹாங்காங் நீதியமைப்பின் சுயேச்சை அதிகாரத்தை பெரிதும் பாதிக்கும் என விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் இதன்மூலம் ஜனநாயத்துக்கு ஆதரவாக போராடக் கூடியவர்களுக்கு ஆயுட்கால சிறை தண்டனை வழங்கப்படலாம் எனவும் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் பிரிட்டனின் காலனித்துவ நாடாக இருந்த ஹாங்காங், 1997ஆம் ஆண்டு சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது பிரிட்டனுடன் ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது.
இந்த பாதுகாப்புச் சட்டம் அந்த ஒப்பந்த விதிகளை மீறுவதாக உள்ளது என்றும் கூறப்படுகிறது.
அப்போது ஹாங் காங்கின் அடிப்படைச் சட்டத்தில் போராடும் உரிமை, பேச்சு சுதந்திரம், சுயேச்சையான நீதி அமைப்பு ஆகியவை குறிப்பிடப்பட்டன.
மேலும் "ஒரு தேசம், இரண்டு அமைப்பு" என்ற முறையில் ஹாங்காங் இயங்கும் என முடிவு செய்யப்பட்டது.
"சீனா தற்போது இயற்றியுள்ள இந்த பாதுகாப்புச் சட்டம் எவ்வாறு இயங்கும் என்பது குறித்து பல சந்தேகங்கள் உள்ளன. நான் ஒன்றை ஒன்று மட்டும் கூறுகிறேன்: பிரிட்டன் இதை பார்த்துக் கொண்டிருக்கிறது; மொத்த உலகமும் இதை பார்த்துக் கொண்டிருக்கிறது" என பீட்டர் தெரிவித்தார்.
இருநாட்டு உறவில் உரசல்
சமீப மாதங்களில் பொருளாதார மற்றும் அரசியல் ரீதியாக சீனா மற்றும் பிரிட்டனுக்கு இடையே சுமூக உறவு இல்லை.
சீன நிறுவனமான ஹூவாவே நிறுவனத்திற்கு தடை விதிப்பது குறித்தும் பேசினார் பிரிட்டனின் வெளியுறவுச் செயலர் பீட்டர்.
"எங்களின் ஜனநாயகம் மற்றும் தேசிய பாதுகாப்பில் சமரசம் செய்து கொண்டு ஒரு முதலீட்டை நாங்கள் ஏற்றுக் கொள்வதில்லை," என அவர் தெரிவித்தார்.
மேலும் சீனாவின் ஷின் ஜியாங் மாகாணத்தில் வீகர் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்படும் "மோசமான மனித உரிமை மீறல்கள்" குறித்தும் அவர் பேசினார்.
சீனாவின் பதில்
இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்கான "விளைவுகளை பிரிட்டன் சந்திக்கும்" எனவும், ஹாங்காங் விவகாரத்தில் பிரிட்டன் "தவறான பாதையில் செல்கிறது," என்றும் சீனா எச்சரித்துள்ளது.
லண்டனில் உள்ள சீன தூதர், "சீனா பிரிட்டனின் உள் விவகாரத்தில் தலையிட்டதில்லை. அதனை பிரிட்டனும் செய்ய வேண்டும்," என தெரிவித்தார்.
அமெரிக்க சீன உறவு

பட மூலாதாரம், Getty Images
சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய இருநாட்டு உறவிலும் பல்வேறு காரணங்களால் ஏற்கனவே மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது.
இந்த வார தொடக்கத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஹாங்காங்கிற்கு வழங்கப்பட்ட முன்னுரிமை வர்த்தக நிலையை ரத்து செய்தார்.
கொரோனா தொற்றை கையாண்ட விதம் குறித்தும், தென் சீனக் கடலில் அதன் ராணுவக் கட்டமைப்பு, சிறுபான்மை முஸ்லிம்களை நடத்தும் விதம் ஆகியவை தொடர்பாக சீனா மீது டிரம்ப் விமர்சனங்களை வைத்து வருகிறார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












