கொரோனா வைரஸ்: பரிசோதனை குறைவாக செய்வதே தெற்காசியாவில் தொற்று குறைவாக பதிவாக காரணமா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஸ்ருதி மேனன்
- பதவி, பிபிசி ரியாலிட்டி செக்
அமெரிக்கா, பிரேசிலுக்கு அடுத்து கொரோனா வைரஸால் மிகவும் பாதிக்கப்பட்ட உலகின் மூன்றாவது நாடாக உள்ள இந்தியாவில் நோய்த்தொற்று பாதிப்புகளின் எண்ணிக்கை பத்து லட்சத்தை தாண்டியுள்ளது.
மிகப் பெரிய மக்கள் தொகையை கொண்ட இந்தியாவுக்கு வேண்டுமானால் இது வியப்பளிப்பதாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் குறைந்த மக்கள்தொகையை கொண்ட அதன் அண்டை நாடுகள் கோவிட்-19 நோய்த்தொற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், இந்தியா மற்றும் அதன் அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம், இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தானில் என்ன நடக்கிறது என்பதை ஆராய்ந்தோம்.
பெருந்தொற்றின் புதிய மையம்
20 நாட்களுக்கு ஒருமுறை நோய்த்தொற்று எண்ணிக்கை இரு மடங்காகும் இந்தியாதான் தற்போது உலக அளவில் கொரோனா வைரஸ் பரவலின் மையாக விளங்குகிறது. இந்தியாவில் நோய்த்தொற்று பாதிப்பு ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை அடைந்து வருகிறது.
இருப்பினும், கடந்த மே, ஜூன் மாதங்களில் கொரோனாவால் பெரிதும் பாதிக்கப்பட்ட பெரும்பாலான தெற்காசிய நாடுகளில் தற்போது நோய்த்தொற்று பாதிப்பு குறைந்த வண்ணம் உள்ளது.

குறிப்பாக, தெற்காசிய பிராந்தியத்தில் இந்தியாவுக்கு அடுத்து அதிக கொரோனா தொற்றுகளை கொண்ட பாகிஸ்தானில் ஜூன் மாதத்தின் மத்தியப் பகுதியில் ஒரு நாளைக்கு 6,000 புதிய நோய்த்தொற்றுகள் கண்டறியப்பட்ட நிலையில், அங்கு தற்போது தினசரி நோய்த்தொற்று எண்ணிக்கை இரண்டாயிரமாக குறைந்துள்ளது.
இருப்பினும், இந்த குறுகியகால போக்கை அடிப்படையாக கொண்டு நோய்த்தொற்று பரவல் கட்டுக்குள் வந்துவிட்டதாக கூறவியலாது என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
அதே போன்று, ஜூன் மாதத்தின் மத்தியப் பகுதியிலிருந்து ஜூலை மாதத்தின் தொடக்கம் வரை கோவிட்-19 நோய்த்தொற்று பாதிப்பில் தினமும் புதிய உச்சத்தை கண்டு வந்த வங்கதேசத்தில் சமீப வாரங்களாக புதிதாக நோய்த்தொற்று உறுதிசெய்யப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்த வண்ணம் உள்ளது. மேலும், அங்கு நோய்த்தொற்று பாதிப்பு இருமடங்காகும் காலம் 28 நாட்களாக உயர்ந்துள்ளது.
ஆப்கானிஸ்தானின் நோய்த்தொற்று இருமடங்காகும் காலம் அதன் அண்டை நாடுகளிலேயே குறைந்த அளவாக, 41 நாட்களாக உள்ளது. ஆனால், அரசின் அதிகாரபூர்வ தரவின் நம்பகத்தன்மை குறித்த கவலைகள் முன்வைக்கப்படுகின்றன.
மற்ற அண்டை நாடுகளுடன் ஒப்பிடுகையில் நேபாளம் மற்றும் இலங்கையில் மிகவும் குறைந்த அளவில் ஒட்டுமொத்த நோய்த்தொற்று பாதிப்பு எண்ணிக்கை உள்ளது. நேபாளத்தை பொறுத்தவரை, கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக அமல்படுத்தப்பட்ட முடக்க நிலை கட்டுப்பாடுகள் சுமார் 100 நாட்கள் நீடித்தன. அந்த காலகட்டத்தில், இந்தியாவுடனான எல்லைப்பகுதியை ஒட்டிய இடங்களிலேயே அதிகளவில் நோய்த்தொற்று பாதிப்புகள் கண்டறியப்பட்டன.
இந்த நிலையில், நேபாளத்தில் சமீப நாட்களாக நோய்த்தொற்று பரவல் குறைவாகப் பதிவாவதற்கு அங்கு பரிசோதனைகளின் எண்ணிக்கை போதுமானதாக இல்லாதது காரணமாக இருக்கலாம் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.

- கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ்: உங்களை தற்காத்துக் கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு மருந்து எப்போது கிடைக்கும்?
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா வைரஸ் : இதுவே கடைசி கொள்ளை நோய் அல்ல
- கொரோனா வைரஸ்: கோவிட் - 19 பற்றி நமக்கு தெரியாத விஷயங்கள் என்ன?

ஏப்ரல் மாதத்தில் அவ்வப்போது இலங்கையில் நோய்த்தொற்று பாதிப்புகள் அதிகரித்து வந்தபோதிலும், அங்கு அமல்படுத்தப்பட்ட கடுமையான ஊரடங்கு, நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிதல், கண்டிப்பான முறையில் கடைப்பிடிக்கப்பட்ட சுய தனிமைப்படுத்துதல் உள்ளிட்டவற்றின் காரணமாக அங்கு தற்போது கொரோனா பரவல் கட்டுப்பாட்டிற்குள் உள்ளதாக கூறப்படுகிறது.
"இலங்கையை பொறுத்தவரை, சுகாதாரத்துறை அதிகாரிகள், உள்ளூர் காவல்துறையினர், உளவுத்துறை அதிகாரிகள் மற்றும் உள்ளூராட்சி நிர்வாகத்தினர் உள்ளிட்டோர் ஒருங்கிணைந்து செயல்பட்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் அடையாளம் காணப்பட்டு கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டனர்" என்று கூறுகிறார் பிபிசி சிங்கள சேவையை சேர்ந்த சரோஜ் பத்திரானா.
இலங்கையில் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, அங்கு அமலிலிருந்த முடக்க நிலை கட்டுப்பாடுகள் சமீபத்தில் விலக்கிக்கொள்ளப்பட்டன.
குறைந்த அளவில் பரிசோதனை

உலக மக்கள் தொகையில் கால்வாசி பகுதியினர் தெற்காசியாவில் வசிக்கின்றனர். ஆனால், ஒட்டுமொத்த நோய்த்தொற்று பாதிப்பில் வெறும் 11 சதவீதம் மட்டுமே தெற்காசியாவில் பதிவாகியுள்ளது.
"இந்தியாவிலும் தெற்காசியாவின் பிற பகுதிகளிலும் மொத்த நோய்த்தொற்று பாதிப்புகளின் எண்ணிக்கை மட்டுமின்றி ஒரு மில்லியனுக்கான சோதனைகளின் எண்ணிக்கையும் குறைவாகவே உள்ளது" என்று கூறுகிறார் மருத்துவர் ஷாஹித் ஜமீல்.
எனினும், தெற்காசிய நாடுகளின் மக்கள் தொகையை அடிப்படையாக கொண்டு பார்க்கும்போது தற்போதைய நோய்த்தொற்று பரிசோதனையின் அளவு அதிகமாகவே உள்ளதாக அவர் கூறுகிறார்.
கொரோனா வைரஸ் பரவல் தொடங்கியதிலிருந்து படிப்படியாக பரிசோதனைகளின் அளவை அதிகரிக்கப்பட்டு வரும் இந்தியாவில், இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமானோருக்கு நோய்த்தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேபோன்று, பாகிஸ்தானில் இதுவரை 16 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
ஆனால், மற்ற தெற்காசிய நாடுகளில் நோய்த்தொற்று பரிசோதனை எண்ணிக்கை இவற்றை விட பல மடங்கு குறைவாகவே உள்ளது.
குறிப்பாக, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் சமீப வாரங்களில் நோய்த்தொற்று பரிசோதனைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதால், நோய்த்தொற்று உறுதிசெய்யப்படுபவர்களின் எண்ணிக்கையும் குறைவாகவே பதிவாகும் என்று அஞ்சப்படுகிறது.
பாகிஸ்தானில் இதுவரை அதிகபட்சமாக கடந்த மாத தொடக்கத்தின்போது ஒரு நாளைக்கு 31,000க்கும் மேற்பட்டோருக்கு நோய்த்தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், அது கடந்த மூன்று வாரங்களாக குறைக்கப்பட்டுள்ளது. தற்சமயத்தில் பாகிஸ்தானில் நோய்த்தொற்று அறிகுறி இல்லாதவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்வது நிறுத்தப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அந்த நாட்டு அரசாங்கத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில், அந்த நகரத்தில் மட்டும் சுமார் மூன்று லட்சம் பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று பாதிப்பு இருக்கும் என்றும் அவர்களில் பெரும்பாலானோருக்கு கொரோனா பாதிப்புக்கான அறிகுறிகளே இருக்காது என்றும் தெரியவந்துள்ளது.
வங்கதேசத்திலும் நோய்த்தொற்றை உறுதிசெய்யும் பரிசோதனைகளின் எண்ணிக்கை குறைக்கப்படுள்ளது ஒருபுறமிருக்க அங்கு சமீபத்தில் வெளிவந்த ஊழல் ஒன்று குறித்த தகவலின் காரணமாக ஏற்கனவே செய்யப்பட்ட பரிசோதனைகளின் நம்பகத்தன்மை குறித்த கேள்விகளும் எழுந்துள்ளன.

பட மூலாதாரம், Getty Images
ஜூலை 16ஆம் தேதி வரை நேபாளத்தில் 3,00,000க்கும் மேற்பட்ட சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. ஜூலை முதல் ஒரு நாளைக்கு 10,000 சோதனைகளை நடத்துவதாக அரசாங்கம் முன்பு கூறியிருந்தது, ஆனால் அந்த எண்ணிக்கை இன்னும் நான்காயிரத்தை கூட தாண்டவில்லை.
ஒரு நாட்டில் அல்லது பிராந்தியத்தில் மேற்கொள்ளப்படும் 10 முதல் 30 பரிசோதனைகளில் ஒருவருக்கு நோய்த்தொற்று உறுதியாகும் என்ற வரையறையை உலக சுகாதார நிறுவனம் நிர்ணயித்துள்ளது.
இதை அடிப்படையாக கொண்டு பார்க்கும்போது, தெற்காசிய நாடுகளின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. உதாரணமாக, வங்கதேசத்தில் ஐந்து பரிசோதனைகளில் ஒருவருக்கும், நேபாளத்தில் ஜூன் 14 வரையிலான தரவின்படி, 25 பரிசோதனைகளில் ஒருவருக்கும் நோய்த்தொற்று உறுதிசெய்யப்படுகிறது.
நம்பகத்தன்மையற்ற தரவுகள்
நோய்த்தொற்று பாதிப்புகளின் எண்ணிக்கை அல்லது மக்கள் தொகை உள்ளிட்டவற்றை கொண்டு பார்க்கும்போது, தெற்காசிய நாடுகளில் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் மேற்கத்திய நாடுகளை விட மிகவும் குறைவாக உள்ளது.
இது உத்வேகம் அளிப்பதாக இருக்கலாம், ஆனால் அதே நிலையில் சுகாதார கட்டமைப்புகளுக்காக மிகவும் குறைவாக செலவிடும் இந்த நாடுகளின் அதிகாரபூர்வ தரவின் நம்பகத்தன்மை குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பப்படுகிறது.
"நோய்த்தொற்றால் உயிழந்தவர்களின் விவரங்கள் முறைப்படி பதிவுசெய்யப்பட்டவில்லை. அதுமட்டுமின்றி, நோய்த்தொற்றால் உயிரிழந்த பலரின் இறப்பிற்கான காரணம் தவறாக வகைப்படுத்தப்படுகிறது" என்று யார்க் பல்கலைக்கழகத்தின் பொது சுகாதார நிபுணர் பேராசிரியர் கம்ரான் சித்திகி கூறினார்.
"ஐரோப்பா மற்றும் அமெரிக்காவை விட தெற்காசிய நாடுகளின் மக்கள் தொகையில் இளையவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம் என்ற வலுவான விளக்கம் இதற்கு பதிலாக முன்வைக்கப்படுகிறது."
தெற்காசிய நாடுகளின் மக்கள் தொகையின் சராசரி வயது 18 முதல் 34 மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
டாக்காவிலிருந்து வலியூர் மிராஜ், காத்மண்டுவிலிருந்து ராமா பரஜுலி அளித்த கூடுதல் தகவல்களுடன்...
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












