கருப்பு மரணம்: ஐரோப்பாவை நிலைகுலைய வைத்த பூபோனிக் பிளேக் பணக்காரர்களை மேலும் வசதியாக்கியது எப்படி?

கருப்பு மரணம்

பட மூலாதாரம், Alamy

(இந்தக் கட்டுரை The Conversation-ல் முதலில் வெளியானது. பிறகு Creative Commons உரிமத்தின் கீழ் மறுபிரசுரம் செய்யப்பட்டுள்ளது.)

ஜூன் 1348ல் இங்கிலாந்தில் மக்களுக்கு புதிரான நோய் அறிகுறிகள் தென்படுவதாகத் தகவல்கள் பதிவாயின. அவை லேசான அறிகுறியாக மற்றும் தெளிவில்லாமல் இருந்தன. தலைவலி, வேறு வலிகள் மற்றும் குமட்டல் என இருந்தது. அதைத் தொடர்ந்து வலி மிகுந்த கருப்பான மேடுகள் அல்லது நிண நீர்க் கட்டிகள் போன்றவை அக்குள் அல்லது தொடை இடுக்கில் தோன்றின. அதனால் அதற்கு பூபோனிக் பிளேக் என பெயர் வைக்கப்பட்டது. இந்த நோய் ஏற்பட்டவர்களுக்கு முற்றிய நிலையில் அதிக காய்ச்சல் ஏற்பட்டு, பிறகு மரணம் நேர்ந்தது.

மத்திய ஆசியாவில் இது உருவானது. ராணுவ வீரர் குழுக்களும், ஒட்டக கூட்டங்களும் பூபோனிக் பிளேக் என்ற இந்த நோயை கருங்கடலில் உள்ள துறைமுகங்களுக்குக் கொண்டு வந்தன. Yersina pestis என்ற இந்த பாக்டீரியம் எலிகளின் உடலில் வாழ்ந்த உன்னி மூலம் பரவியது. மத்திய தரைக்கடல் பகுதி வணிக செயல்பாடுகள் மிகுந்திருந்த காரணத்தால் இத்தாலி மற்றும் பிறகு ஐரோப்பா முழுவதிலும் இருந்த வணிகக் கப்பல்களுக்கு இந்த நோய் பரவியது. இந்த நோய் ஏற்படுத்திய இறப்புகளை கருப்பு மரணம் என்றும் அழைக்கிறார்கள். ஐரோப்பா மற்றும் அண்மைக் கிழக்கு நாடுகளின் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதி முதல் அரைவாசி மக்கள் வரை இந்தக் கருப்பு மரணத்தைத் தழுவினர்.

பெருமளவிலான மரணங்களுடன், பொதுவான பொருளாதார பேரழிவும் ஏற்பட்டது. உழைக்கும் மக்களில் மூன்றில் ஒரு பகுதியினர் மரணம் அடைந்துவிட்ட நிலையில், பயிர்களை அறுவடை செய்ய முடியவில்லை, சமுதாயங்கள் தனித்து நின்றன. இங்கிலாந்தில் (மற்றும் டஸ்கேனியில்/ மற்றும் பிற பிராந்தியங்களில்) பத்தில் ஒரு கிராமம் காணாமல் போனது. அவை மறுபடியும் மீட்டுருவாக்கம் செய்யப்படவே இல்லை. வீடுகள் தரைமட்டம் ஆயின. புற்கள் முளைத்து அவற்றையும், நிலப் பரப்பையும் மூடிவிட்டன. தேவாலயங்கள் மட்டுமே தப்பின. வயல்வெளியில் ஒரு தேவாலயம் அல்லது சிற்றாலயம் தனியே இருப்பதை நீங்கள் பார்த்தால், ஐரோப்பாவில் தரைமட்டமாகிவிட்ட ஏதோ ஒரு கிராமத்தின் எச்சங்களை நீங்கள் பார்க்கிறீர்கள் என்பது பொருள்.

துயரங்கள் மிகுந்த கருப்பு மரணம், அந்த நோய் பாதித்தவர்களில் 80 சதவீதம் பேரை பலி வாங்கியது. தாங்கள் அனுபவித்தது என்ன என்பதைப் பதிவு செய்யும் நோக்கில் பலரும் அதை எழுதி வைக்க முயற்சி செய்துள்ளனர். அபெர்தீன் என்னும் இடத்தில் ஸ்ட்காட்லாந்தைச் சேர்ந்த வரலாற்றுப் பதிவாளர் ஜான் ஆஃப் போர்டன் அதைப் பின்வருமாறு பதிவு செய்திருக்கிறார்:

எங்கு பார்த்தாலும் மக்களை இந்த நோய் தாக்கியது. குறிப்பாக அடித்தட்டு மற்றும் மத்தியதர வர்க்கத்தினர் பாதிக்கப்பட்டனர். அரிதாக மேல்தட்டில் இருந்தவர்களையும் தாக்கியது. மரணத்தின் பிடியில் இருக்கும் பெற்றோரை அவருடைய பிள்ளைகளோ, அதே நிலையில் இருக்கும் பிள்ளைகளை பெற்றோர்களோ பார்க்கச் செல்வதற்கு கூட பயப்படும் அளவில் பெரிய அச்சத்தை அது ஏற்படுத்தி இருந்தது. தொழு நோய் வந்தவர்களை, அல்லது பாம்பைக் கண்டது போல தொற்றில் இருந்து காத்துக்கொள்ள மக்கள் விலகி ஓடினார்கள்.

இந்த வரிகள் ஏறத்தாழ இன்றைய காலக்கட்டத்தில் எழுதியதைப் போலவே இருக்கின்றன.

அமேசான்

பட மூலாதாரம், Alamy

படக்குறிப்பு, அமேசான் போன்ற நிறுவனங்கள் ஏற்கெனவே மெகா கார்ப்பரேட் நிறுவனங்களாக இருக்கின்றன. ஆனால் கோவிட்-19 சூழ்நிலையால் அவை இன்னும் வசதி மிக்கதாக, வலிமை மிக்கதாக மாறுமா?

கோவிட் 19 நோயில் ஏற்படும் இறப்பு விகிதம் கருப்பு மரணத்தைவிட மிகவும் குறைவு தான் என்றாலும், தாராளமயமாக்கல் காரணமாகவும், நவீன பொருளாதாரத்தின் அதிக ஒருங்கிணைந்த தன்மை காரணமாகவும், பொருளாதாரத் துறையில் ஏற்பட்டுள்ள பாதிப்பு மிக மோசமானதாக இருக்கிறது. இன்றைய சூழ்நிலையில் பயணத்தில் இருக்கும் மக்கள் அதிகம் என்பதால் பிளேக் நோய் போல அல்லாமல், கொரோனா வைரஸ் ஆண்டு கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், சில மாதங்களில் உலகம் முழுக்க பரவியுள்ளது.

கருப்பு மரணங்களால் குறுகிய கால பொருளாதார பாதிப்பு ஏற்பட்டது என்றாலும், நீண்ட காலத்துக்கான பின்விளைவுகள் குறைவாக இருந்தன. பிளேக் வருவதற்கு முன்பு, பல நூறாண்டு கால மக்கள் தொகை பெருக்கத்தால், உழைப்பாளிகள் எண்ணிக்கை தேவைக்கு மேல் உபரியாக இருந்தது. நிறைய பண்ணை அடிமைகளும், உழவர்களும் இறந்துவிட்டதால் தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டது. இதன் காரணமாக, நோயில் இருந்து தப்பிய உழவர்கள் கூடுதல் சம்பளம் கேட்டனர் அல்லது வேறு நல்ல வேலைகளை நாடினர் என்று வரலாற்றாளர்கள் கூறியுள்ளனர். அரசு தடுத்து நிறுத்த முயன்றாலும், பண்ணையடிமை முறை கடைசியில் அழிந்து போனது.

ஆனால் கருப்பு மரணத்தால் ஏற்பட்ட, பணவசதி மிகுந்த தொழில்முனைவோர் அதிகரிப்பு மற்றும் தொழில்கள் - அரசாங்க தொடர்புகள் அதிகரிப்பு ஆகியவை அமைந்தது ஆகிய பின்விளைவுகள் குறைவாகவே பதிவு செய்யப் பட்டுள்ளன. கருப்பு மரணத்தால் ஐரோப்பாவின் மிகப் பெரிய நிறுவனங்களில் குறுகிய கால இழப்புகள் ஏற்பட்டது என்றாலும், நீண்ட கால நோக்கில், அவர்கள் சொத்துகளை ஒன்று குவித்தார்கள், மார்க்கெட்டில் அதிக பங்கு மதிப்பை பெற்றார்கள், அரசுகளிடம் செல்வாக்கை உயர்த்திக் கொண்டார்கள். இப்போதைய காலக்கட்டத்தில் உலகம் முழுக்க பல நாடுகளில் உள்ள இதே போன்ற நிலை, அன்றைய காலத்திலும் இருந்திருக்கிறது. சிறிய நிறுவனங்கள் நலிந்து போய்விடாமல் இருப்பதற்கு அரசின் தயவை நாடியுள்ள நிலையில், மற்ற நிறுவனங்கள் - வீடுகளுக்குச் சென்று டெலிவரி செய்வது போன்ற தொழிலில் உள்ள முக்கியமாக பெரிய நிறுவனங்கள் - புதிய வர்த்தக சூழ்நிலைகளில் கணிசமாக அதிகமாக லாபம் சம்பாதித்து வருகின்றன.

14 ஆம் நூற்றாண்டின் மத்தியில் நிலவிய பொருளாதார சூழ்நிலைகள் அளவில், வேகத்தில், நவீன சந்தையுடன் பிணைப்பு போன்றவற்றில் சிறியதாக இருந்ததால், அப்படியே ஒப்பீடு செய்து பார்க்க முடியாது. ஆனால், கருப்பு மரணம் மூலம் அரசின் அதிகாரம் வலுப்பெற்றது மற்றும் ஒரு சில மெகா கார்ப்பரேசன்கள் முக்கிய சந்தைகளில் ஆதிக்கம் செலுத்தும் நிலை உருவானது ஆகியவற்றில் ஒரே மாதிரி உள்ளன என்பதை நிச்சயமாகச் சொல்ல முடியும்.

கருப்பு மரண வணிகம்

திடீரென ஐரோப்பிய மக்கள் தொகையில் குறைந்தது மூன்றில் ஒரு பங்கு பேர் இறந்த நிலையிலும்கூட செல்வம் எல்லோருக்கும் மறுபங்கீடு செய்யப்படவில்லை. மாறாக, பணத்தை குடும்பத்துக்குள்ளேயே தக்கவைத்துக்கொண்டனர்.

வில்ஸ் குடும்பத்தினர் மிகவும் உயர்வான குறிப்பிடத்தக்க சொத்து மிகுந்த தொழிலதிபர்களாக ஆயினர். மரணத்திற்குப் பிறகு தங்களுடைய பரம்பரை சொத்துகள் பிரிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய, தங்கள் அனைத்து வளங்களில் மூன்றில் ஒரு பகுதியை அறக்கட்டளைக்கு அளிக்கும் முந்தைய கால பாணிகளை மாற்றினார். மூலதனங்களை தொடர்ந்து சிறிய எண்ணிக்கையிலானவர்களுக்குள் பகிர்ந்து கொண்டதால், அவருடைய வாரிசுகள் பயன் பெற்றனர்.

அதே சமயத்தில், நிலப்பிரபுத்துவம் வீழ்ச்சி அடைந்து, ஊதிய அடிப்படையிலான பொருளாதாரம் வளர்ந்ததால், உழவர்கள் நகர்ப்புற மேல்தட்டு வர்க்கத்தினர் போன்றவர்கள் நல்ல பணிச் சூழலை கோரினர். கருணை சார்ந்த அனுமதிகளாக இல்லாமல் (விறகு சேகரிக்கும் உரிமை போன்றவற்றுக்கு அனுமதித்தல்) பணமாக ஊதியம் கிடைத்ததால், உழவர்கள் நகரங்களில் செலவு செய்ய நிறைய பணம் கிடைத்தது.

செல்வம் சில இடங்களில் குவிந்ததால், முன்பிருந்த போக்கு தீவிரம் அடைந்தது. வணிகத் தொழில் முனைவோர் வணிக நடவடிக்கைகளோடு பொருள் உற்பத்தியிலும் ஈடுபட்டனர். பெருமளவு முதலீடு வைத்திருப்போர் மட்டுமே செய்யக்கூடிய அளவுக்கு பெரிய அளவில் அவர்களின் உற்பத்தி நடவடிக்கைகள் இருந்தன.

உதாரணமாக, ஆசியா மற்றும் பைஜான்டியத்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பட்டு, ஐரோப்பாவிலேயே தயாரிக்கப்பட்டது. பண வசதிமிக்க இத்தாலி வியாபாரிகள் பட்டு மற்றும் துணி உற்பத்திக்கூடங்களைத் தொடங்கினர்.

பொருளாதாரம்

பட மூலாதாரம், Getty Images

கருப்பு மரணத்தால் திடீரென ஏற்பட்ட ஆள் பற்றாக்குறையை சமாளிக்கும் தனித்துவமான ஏற்பாடுகளைக் கொண்டவர்களாக இந்தத் தொழில் முனைவோர் இருந்தனர். தனிப்பட்ட நெசவாளர்களுக்கு மூலதனம் இல்லை, நிலபிரபுக்களின் சொத்துகள் நிலங்களில் முடங்கிவிட்டன, நகர்ப்புற தொழில்முனைவோர் தங்களிடம் ரொக்கமாக இருந்த பணத்தை புதிய தொழில்நுட்பங்களில் முதலீடு செய்து, தொழிலாளர் பற்றாக்குறையை இயந்திரங்களின் மூலம் சரி செய்தனர்.

14 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் மற்றும் 15வது நூற்றாண்டிலும் ஐரோப்பாவின் அதிக வணிகமயமான பகுதியாக தெற்கு ஜெர்மனி உருவானது.

வெல்சர் (பின்னாளில் வெனிசுவேலா நாட்டை தனியார் காலனியாக ஆக்கிக்கொண்டது ) போன்ற நிறுவனங்கள் சணல் உற்பத்தி மற்றும் தறிகளை அமைத்தலில் ஈடுபட்டன. அதில் சணலைக் கொண்டு தொழிலாளர்கள் லினென் துணி தயாரித்தனர். அவற்றை வெல்சர் விற்பனை செய்தது. கருப்பு மரணத்துக்குப் பிந்தைய காலத்தில், 14ம் மற்றும் 15ம் நூற்றாண்டுகளில் ஆதாரவளங்களை குவிப்பது தான் பாணியாக இருந்தது. மூலதனம், தொழில் திறன், கட்டமைப்பு வசதிகள் ஒரு சில கார்ப்பரேட்களின் கைகளில் குவிந்தன.

அமேசான் காலகட்டம்

இப்போதைய சூழ்நிலைக்கு வந்தால், ஒரு சில விஷயங்கள் அப்படியே ஒத்துப்போகின்றன. கோவிட்-19 அளித்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள சில பெரிய நிறுவனங்கள் அடியெடுத்து வைத்துள்ளன. உலகில் பல நாடுகளில், சிறிய உணவகங்கள், பானங்கள் அருந்தும் இடங்கள் மற்றும் கடைகள் திடீரென மூடப்பட்டுவிட்டன. உணவு, பொதுவான பொருட்களுக்கான சந்தை மற்றும் பொழுபோக்கு விஷயங்கள் ஆன்லைனுக்கு மாறிவிட்டன. ரொக்கம் பயன்படுத்தும் நடைமுறை குறைந்துவிட்டது.

உணவகங்கள் அளித்து வந்த உணவுகள் சூப்பர் மார்க்கெட்கள் மூலமாக செல்கின்றன. இதில் பெரும்பாலான விநியோகத்தை சூப்பர் மார்க்கெட் சங்கிலி அமைப்புகள் எடுத்துக் கொண்டுவிட்டன. அவற்றுக்கு நிறைய சொத்துகள், ஏராளமான பணியாளர்கள் உள்ளனர். துரிதமாக கூடுதல் ஆட்களைத் தேர்வு செய்வதற்கான பணியாளர் நிர்வாகத் துறை பலம் இருக்கிறது. சரிவர வேலையில்லாத, வேலை தேடும் நபர்கள் பெருமளவில் இருக்கிறார்கள். அவர்களுக்கு கிடங்குகள், சரக்கு வாகனங்கள் மற்றும் சரக்குகள் சேமிப்பு வளாக திறன்கள் உள்ளன.

அமேசான் போன்ற ஆன்லைன் சில்லறை வணிக பெரு நிறுவனங்கள் இப்போதைய சூழலில் பெரிய வெற்றியாளர்களாக மாறியுள்ளனர். இந்த நிறுவனம் அமெரிக்கா, இந்தியா மற்றும் பல ஐரோப்பிய நாடுகளில் ``பிரைம் பேண்ட்ரி'' சேவையை அளிக்கிறது. சாலையோர கடைகள் விலையிலும், சவுகரியங்களை அளிப்பதிலும் இன்டர்நெட் நிறுவனங்களுடன் போட்டியிட முடியாமல் பல ஆண்டுகளாக சிரமத்தில் இருந்து வருகின்றன, திவாலாகும் அறிவிப்புகள் வழக்கமான செய்திகளாகிவிட்டன. இப்போது ``அத்தியாவசியம் அல்லாத'' சில்லறை வணிக கடைகள் பலவும் மூடப்பட்டுள்ளன. நமக்கு வேண்டியவற்றை அமேசான், eBay, Argos, Screwfix மற்றும் அவை போன்ற நிறுவனங்கள் மூலம் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆன்லைன் வணிகத்தில் உண்மையிலேயே வளர்ச்சி ஏற்பட்டுள்ளது என்பதைத் தெளிவாகக் காண முடிகிறது. இதுதான் கணினிசார் உலகை நோக்கிய உறுதியான நகர்தலாக இருக்குமா, பெரிய கார்ப்பரேட்கள் தான் மேலும் ஆதிக்கம் செலுத்துமா என்று சில்லறை வணிக ஆய்வாளர்கள் ஆச்சரியப்பட்டு நிற்கிறார்கள்.

ஃபேஸ்புக்

பட மூலாதாரம், Getty Images

கருப்பு மரண காலத்தைப் போல கோவிட் 19 பாதிப்பில், உலகம் முழுக்க சிறு வணிக நிறுவனங்கள் நிச்சயமாக பாதிக்கப்பட்டுள்ளன. இதில் மார்க்கெட்டில் பெரிய நிறுவனங்கள் அதிக பங்கை பெற்றுள்ளன.

நமது பார்சல்கள் வரும் வரையில் வீட்டிலேயே காத்திருக்கச் செய்யும் வகையில் நம் கவனத்தை ஈர்க்கும் வகையில் பொழுதுபோக்கு துறை உள்ளது. இந்தத் துறையில் நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் (இங்கும் அமேசான்), டிஸ்னி மற்றும் பிற நிறுவனங்கள் தான் ஆதிக்கம் செலுத்துகின்றன. கூகுள் (Youtube உரிமையாளர்), ஃபேஸ்புக் (Instagram உரிமையாளர்) மற்றும் ட்விட்டர் போன்ற பிற ஆன்லைன் ஜாம்பவான் நிறுவனங்கள், ஆன்லைன் சேவைகளை அளிக்கும் களங்களில் ஆதிக்கம் செலுத்துகின்றன.

இந்த சங்கிலி அமைப்பில் கடைசியாக இருப்பது பொருட்களை தாங்களாகவே டெலிவரி செய்யும் நிறுவனங்கள் : UPS, FedEx, Amazon Logistics (இதிலும் அமேசான்) போன்றவையும் Just Eat மற்றும் Deliveroo போன்ற உணவுகள் டெலிவரி செய்யும் நிறுவனங்களும் உள்ளன. அவர்களின் வணிக மாடல் மாறுபட்டு உள்ள நிலையில், அனைத்து வகையான பொருட்களை வழங்குவதிலும் அவர்களுடைய தளங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன. உங்களுடைய புதிய Toshiba பிராண்ட் செய்த Amazon Fire TV-யாக இருந்தாலும், அல்லது பீட்சா ஹட் (Yum-ன் துணை நிறுவனம். KFC, Taco Bell மற்றும் பிற பிராண்ட்களையும் இந்த நிறுவனம் நடத்துகிறது) மூலமாக வரும் உணவுப் பொருளாக இருந்தாலும், இதில் கிடைக்கிறது.

கோவிட் 19

பட மூலாதாரம், Getty Images

கார்ப்பரேட் ஆதிக்கத்தில் மற்றொரு மாற்றமாக, அரசின் ரொக்க பரிவர்த்தனையில் இருந்து, தொடர்பு இல்லாத நிலையிலான பணப் பட்டுவாடா சேவைகள் அதிகரிப்பு முறை உள்ளது. சொல்லப்போனால், ஆன்லைன் சந்தைகளின் துணை செயல்பாடாக தான் இது உள்ளது. ஆனால், இந்தப் பணம் பெரிய கார்ப்பரேட்கள் மூலம் கை மாறுகிறது, இதில் அந்த நிறுவனங்களுக்கு ஒரு பங்கு கிடைக்கிறது என்பது தான் விஷயம். இதில் விசா மற்றும் மாஸ்டர்கார்டு ஆகியவை தான் மிகப் பெரிய சேவை நிறுவனங்களாக உள்ளன. ஆனால் Apple Pay, PayPal, மற்றும் Amazon Pay (மறுபடியும் அமேசான்) போன்ற நிறுவனங்களும் கணிசமாக வளர்ந்துள்ளன. பணம் என்ற விஷயம் பர்ஸ்களில் பயன்படாமல் அப்படியே உள்ளது. பரிவர்த்தனைக்கான அம்சமாக பணம் இன்னும் இருக்கிறது என்று நினைத்தாலும், சில்லறை வணிகர்கள் அதை வாங்காமல் போய், வாடிக்கையாளர்கள் பயன்படுத்தாத நிலை ஏற்படுகிறது.

கருப்பு மரண காலத்தைப் போல கோவிட் 19 பாதிப்பில், உலகம் முழுக்க சிறு வணிக நிறுவனங்கள் நிச்சயமாக பாதிக்கப்பட்டுள்ளன. இதில் மார்க்கெட்டில் பெரிய நிறுவனங்கள் அதிக பங்கை பெற்றுள்ளன. இதுபோன்ற கட்டுரைகளை எழுதுவதற்கு வீட்டில் இருந்தே பணிபுரிபவர்களும் கூட Skype (Microsoft நிறுவனத்துக்குச் சொந்தமானது) மூலமாக, Zoom மற்றும் BlueJeans மூலமாக வேலை பார்க்கின்றனர். இமெயில் வசதிகளை பயன்படுத்துகிறார்கள், உலகில் சிறிய எண்ணிக்கையிலான நிறுவனங்கள் தயாரிக்கும் லேப்டாப்கள் மூலம் அவற்றைச் செய்கின்றனர். பெரும் பணக்காரர்களின் பண வசதி அதிகரித்துக் கொண்டே போகிறது, சாமானிய மக்கள் வேலைகளை இழந்து கொண்டிருக்கிறார்கள். அமேசான் நிறுவன தலைமை செயல் அதிகாரி ஜெஃப் பெசோஸ் இந்த ஆண்டின் ஆரம்பத்தில் இருந்ததைக் காட்டிலும் சொத்து மதிப்பை 25 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு உயர்த்திக் கொண்டுள்ளார்.

ஆனால் இத்துடன் கதை முடிந்துவிடவில்லை. இந்த வைரஸ் தாக்குதல் காரணமாக, அரசின் அதிகாரம் பலம் பெறும் அம்சமும் மற்றொரு பெரிய விஷயமாக உள்ளது.

உலகத் தொற்று காலத்தில் ஆட்சி நிர்வாகம்

கருப்பு மரணம் நிகழ்ந்த காலத்தில் மையமாக்கல், வரிவிதிப்பு வளர்ச்சி மற்றும் பெரிய நிறுவனங்களை அரசு சார்ந்திருக்கும் நிலை ஆகிய போக்குகள் அதிகரித்தன.

இங்கிலாந்தில் நிலத்தின் மதிப்பு சரிந்தது. அதன் தொடர்ச்சியாக வருமானம் சரிந்தது. எனவே நாட்டின் மிகப் பெரிய நில உடைமையாளரான மன்னர் குடும்பம், பிளேக் நோய்த் தாக்குதலுக்கு முந்தைய காலத்து ஊதியங்களின் அளவுக்கு ஊதியத்தை நிர்ணயிக்க முயற்சி செய்தது. 1351 தொழிலாளர் சட்டத்தின் படி இதைச் செய்ய முற்பட்டது. மக்கள் மீது கூடுதல் வரிகள் விதிக்கவும் முற்பட்டது. முந்தைய காலத்தில் செலவுகளை அரசே ஏற்றுக் கொள்ள வேண்டும், போர் போன்ற அசாதாரணமான சூழ்நிலைகளில் மட்டும் வரிகள் விதிக்கப்படும். ஆனால் பிளேக் நோய்க்குப் பிந்தைய காலத்தில் பொருளாதாரத்தில் அரசின் தலையீடுகளுக்கு முக்கிய முன்னுதாரணமாக வரி விதிப்புகள் அமைந்துவிட்டன.

ஒவ்வொரு 20 ஆண்டுகள் அல்லது அதை ஒட்டிய காலத்திற்கு ஒரு முறை நிகழும் பிளேக் நோய்த் தாக்குதலில், ஊரடங்கு, பயணத்துக்குத் தடைகள் மற்றும் தனிமைப்படுத்துதல் மூலம் நடமாட்டங்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அரசு அதிகாரம் ஓரிடத்தில் குவிதலின் அம்சங்களாக இவை இருந்தன. வட்டார அளவில் பங்கீடு செய்யப்பட்டிருந்த அதிகாரம் ஒரு மத்திய அரசாங்கத்திடம் குவிந்தது.

பிளேக் பாதிப்புக்குப் பிந்தைய நிர்வாகத்தை நடத்திய பலரும், ஜெப்ரி சாவ்சர் போன்ற கவிஞர்களும் ஆங்கிலேய வணிகக் குடும்பங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்டவர்கள். அவர்களில் சிலர் கணிசமான அரசியல் அதிகாரத்தைப் பெற்றனர்.

இத்தாலி

பட மூலாதாரம், Alamy

படக்குறிப்பு, இத்தாலியில் மெடிசி குடும்பம் மிகுந்த பணக்கார குடும்பங்களில் ஒன்று. பிளேக் பாதிப்புக்குப் பிறகு அதிகாரம் மிக்கதாக உருவான குடும்பம் அது - அந்தக் குடும்பம் அடிப்படையில் மெகா-கம்பெனியாக இருந்தது

இதில் மிகவும் தனிச்சிறப்பு பெற்றதாக de la Pole குடும்பம் உள்ளது. அந்தக் குடும்பம் இரண்டு தலைமுறை காலத்திற்குள் கம்பளி வியாபாரிகளாகத் தொடங்கி சஃபோல்க் பகுதி கோமான்களின் குடும்பங்களில் ஒன்றாக வளர்ந்தது. கருப்பு மரண காலத்தில் தற்காலிகமாக சர்வதேச வர்த்தகம் மற்றும் நிதித் துறை பின்னடைவுகள் ஏற்பட்ட காலத்தில் ரிச்சர்ட் லா போலே மன்னர் குடும்பத்துக்கு நிதியளிக்கும் நபராக மாறி, ரிச்சர்ட் 2-வின் நெருங்கிய நண்பராக ஆனார். 14வது நூற்றாண்டின் பிற்பகுதி மற்றும் 15வது நூற்றாண்டில் இத்தாலிய மெகா நிறுவனங்கள் மீண்டும் தலையெடுத்தபோது, வணிக நிறுவனங்களை சார்ந்திருக்க வேண்டிய தேவை மன்னர் குடும்பத்துக்கு அதிகரித்ததால் பயன் பெற்றன.

புளோரோன்சை ஆட்சி செய்யும் அளவுக்கு உயர்ந்த மெடிசி குடும்பம், மிக பிரபலமான உதாரணமாக உள்ளது.

கருப்பு மரண காலத்துக்குப் பிறகு விலைகள் சரிந்தபோது, நிலங்களை வாங்கியதன் மூலம் வியாபாரிகள் அரசியல் செல்வாக்கை பெற்றனர். நில உரிமையாளர்கள் என்ற வகையில் சமூகத்தில் அதற்கான மேன்மை அல்லது நிலபிரபுத்துவ அந்தஸ்து கிடைத்தது. தங்கள் பிள்ளைகளுக்கு பண வசதி குறைந்து போன பிரபுக்களின் குடும்பங்களில் திருமணம் செய்தனர். அவர்களுக்குக் கிடைத்த புதிய அந்தஸ்து காரணமாக, செல்வாக்கு மிகுந்த புதிய உறவினர்கள் மூலமாக, நகர்ப்புற மேல்தட்டு வர்க்கத்தினர் நாடாளுமன்றத்தில் அரசியல் பிரதிநிதித்துவம் பெற்றனர்.

14வது நூற்றாண்டின் இறுதியில், அரசுக் கட்டுப்பாட்டில் தலையீடு மற்றும் வணிக நிறுவனங்களுடன் தொடர்புகள் நீடிப்பு ஆகியவற்றால், ரிச்சர்ட் 2-க்கு எதிராக பிரபுக்கள் குரல் எழுப்பினர். அவருடைய ஒன்றுவிட்ட சகோதரர் நான்காம் ஹென்றிக்கு அவர்கள் ஆதரவு அளித்தனர். அது பயன்படாமல் போனது. ரிச்சர்டின் கொள்கைகளை ஹென்றி பின்பற்ற மாட்டார் என்ற நம்பிக்கையில் அவ்வாறு செய்தனர்.

இதுவும், அதைத் தொடர்ந்து நடந்த ரோசஸ் போர்களும் (வார்ஸ் ஆஃப் ரோசஸ்) அரசு அதிகாரம் மையப்படுத்தப்படுவதைப் பிடிக்காத பிரபுத்துவத்தால் நடத்தப்பட்டது. மூன்றாம் ரிச்சர்டை 1485ல் ஹென்றி டியூடோர் வெற்றி கொண்டது, போரை முடிவுக்குக் கொண்டு வந்தது மட்டுமின்றி, கார்ப்பரேசன்கள் மற்றும் மத்திய அரசாங்க வளர்ச்சி தொடர்வதற்கு பாதை வகுக்கும் வகையில் பிராந்திய அதிகாரத்தை ஆங்கிலேய பெருங்குடியினர் மீண்டும் பெறுவதற்கான எந்த முயற்சியும் நடைபெறாத வகையில் தடுப்பதாக இருந்தது.

தற்காலத்திய அரசு

உலகெங்கும், இறையாண்மை தேசங்கள் என்ற சிந்தனை ஏகாதிபத்திய அரசியல் மற்றும் பொருளாதாரத்தின் மையமான அம்சங்களாக கடந்த சில நூற்றாண்டுகளாக இருந்து வருகின்றன.

1970களில் இருந்து, அரசு நிர்வாகம் என்பது அதிக முக்கியத்துவம் அற்றது என்றும், குறிப்பிட்ட எல்லைக்குட்பட்ட பகுதியில் அதன் அதிகாரத்துக்கு பன்னாட்டு நிறுவனங்கள் சவால் விடுகின்றன என்பதும் அறிவுஜீவிகளிடம் காணப்படும் பொதுவான சிந்தனையாகிவிட்டது. 2016 ஆம் ஆண்டின் கணக்குப்படி, உலகின் மிகப் பெரிய 100 பொருளாதார அமைப்புகளில், 31 மட்டுமே நாடுகளாகவும், 69 கம்பெனிகளாகவும் இருந்தன. வால்மார்ட்டின் பொருளாதாரம், ஸ்பெயின் நாட்டின் பொருளாதாரத்தைவிட பெரியது. டொயோட்டாவின் பொருளாதாரம் இந்திய பொருளாதாரத்தைவிட பெரியதாக இருந்தது.

அரசியல்வாதிகள் மற்றும் ஒழுங்குமுறை அமைப்புகள் மீது இந்த நிறுவனங்கள் செலுத்தும் செல்வாக்கு கண்கூடாகத் தெரிந்தது: பருவநிலை மாற்றம் இல்லவே இல்லை என்று மறுப்பதில் எண்ணெய் நிறுவனங்கள் செலுத்தும் தாக்கம் என்னவாக இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்.

எண்ணெய் நிறுவனங்கள்

பட மூலாதாரம், Getty Images

இங்கிலாந்தில் 1979 முதல் 1990 வரையில் பிரதமராக இருந்த மார்கரெட் தாட்சர் அரசின் சில பணிகளை விலக்கிக்கொள்வதாக அறிவித்தார். அதைத் தொடர்ந்து முன்பு அரசுக்குச் சொந்தமான சொத்துகள் இப்போது கம்பெனிகளாக செயல்படுகின்றன. அல்லது அரசு வழிநடத்தும் அரசு - தனியார் சேர்ந்து இயங்கும் சந்தைகளில் செயல்படுகின்றன. உதாரணத்துக்கு, பிரிட்டனின் தேசிய சுகாதார சேவையில் தோராயமாக 25 சதவீதம், தனியாருடனான ஒப்பந்தங்கள் மூலம் அளிக்கப் படுகின்றன.

உலகின் மற்ற பகுதிகளில், அரசின் மூலமாக மட்டும் இயங்கி வந்த போக்குவரத்து, வீட்டு உபயோக சேவைகள், தொலைத் தொடர்புகள், பல் மருத்துவர்கள், கண் மருத்துவர்கள், தபால் நிலையம் மற்றும் இன்னும் பிற சேவைகள் இப்போது லாபம் சம்பாதிக்கும் நிறுவனங்கள் மூலமாக நடத்தப் படுகின்றன. நாட்டு உடைமையாக்கப்பட்ட அல்லது அரசுக்குச் சொந்தமான தொழிற்சாலைகள் மெதுவான செயல்பாடு கொண்டவைகளாக வர்ணிக்கப்படுகி்றன. அதி நவீனமாகவும், செயல் திறன் மிக்கதாகவும் மாறுவதற்கு சந்தை ஒழுங்கு தேவை என்று கூறப்படுகிறது.

ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக அரசுகள் மீண்டும் பழைய நிலையை நோக்கி சுனாமி அலைகள் போல திரும்பிச் செல்கின்றன. சில மாதங்களுக்கு முன்பு வரை ``மாயாஜால பண மரம்'' என விமர்சிக்கப்பட்ட அளவிலான செலவினங்கள்

தேசிய சுகாதாரத் திட்டங்களுக்காக, வீடற்றவர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக, மில்லியன் கணக்கான மக்களுக்கு அடிப்படை வருவாய் அளிப்பதற்காக, நிறுவனங்களுக்கு கடன் உத்தரவாதங்கள் அளிப்பதற்காக அல்லது பல்வேறு தொழில்களுக்கு நேரடியாக பணம் வழங்குவதற்காக செய்யப்படுகின்றன.

இது பேருருக் கொண்ட கீன்சியப் பொருளாதாரம். வரி செலுத்துபவர்கள் மூலம் எதிர்காலத்தில் கிடைக்கும் வருமானத்தின் அடிப்படையில், தேசிய பத்திரங்கள் மூலம் கடன் வாங்குவதாக இது உள்ளது. இப்போதைக்கு பட்ஜெட்டை சமன் செய்வது பற்றிய சிந்தனை இப்போதைக்கு இல்லை. ஒட்டுமொத்த தொழில் துறையும் அரசின் உதவியை எதிர்நோக்கியுள்ளன. உலகெங்கும் அரசியல்வாதிகள் திடீரென தலையீடு செய்ய வேண்டிய பொறுப்புக்கு ஆளாகியுள்ளனர். போர்க்கால காரணங்களைக் கூறி, பெருமளவு செலவினங்களை நியாயப்படுத்த வேண்டியுள்ளது.

தனிப்பட்ட சுதந்திரங்களின் மீது வியப்பூட்டும் அளவிலான கட்டுப்பாடுகள் குறைவாகவே கவனிக்கப்படுகின்றன. தனிநபர் தன்னாட்சி என்பதுதான் புது தாராளவாத சிந்தனைகளின் மையமான விஷயம். தங்கள் வாழ்க்கையை மேலாதிக்க நுகத்தடியின் கீழ் வாழ நேர்ந்துள்ள மக்களும், பெரியண்ணன் மனோபாவத்தோடு மக்களைக் கண்காணிக்கும் அரசுகளிடம் இருந்தும் மாறுபட்டவர்கள் "சுதந்திரம் விரும்பும் மக்கள்".

ஆனால் கடந்த சில மாதங்களாக உலகம் முழுவதும் பெருமளவு மக்களின் நடமாட்டம் வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் பொது இடங்களிலும், தனியார் இடங்களிலும் கூடுவது போலீஸ், ஆயுதப் படைகளை வைத்து தடுக்கப்பட்டுள்ளது.

பானங்கள் அருந்தும் இடங்கள்

பட மூலாதாரம், Alamy

படக்குறிப்பு, பானங்கள் அருந்தும் இடங்கள் மூடப்பட்டது முதல், பயணக் கட்டுப்பாடுகள் வரை, கொரோனா நோய் பரவல் நமது வாழ்வில் பல கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்துவிட்டது - பிளேக் போன்ற சுகாதார நெருக்கடி காலங்களில் பொதுவாக இருந்த கட்டுப்பாடுகள் இப்போது வந்துள்ளன

தியேட்டர்கள், பானம் அருந்தும் இடங்கள், உணவகங்கள் ஆகியவை மூடப்பட்டுள்ளன. பூங்காக்கள் பூட்டப்பட்டுள்ளன. பெஞ்ச்களில் அமர்ந்தால் உங்களுக்கு அபராதம் விதிக்கப்படும். இன்னொருவருக்கு நெருக்கமாக ஓடினால், யாரோ ஒருவர் உங்களைப் பார்த்து சப்தம் போடுவார். இந்த அளவிலான அதிகாரத்துவம் ஒருவேளை மத்திய காலத்து மன்னர்களை மகிழ்ச்சியடைய வைத்திருக்கலாம்.

நோய்த் தொற்று காரணமாக, நல்லறிவு மற்றும் சுதந்திரம் பற்றிய வாதங்களை உடைத்துத் தள்ளுவதற்கு பெரிய அரசுகளுக்கு நிதி மற்றும் நிர்வாக அதிகாரங்கள் கிடைத்துள்ளன. இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலத்தில் பார்த்திராத வகையில், அரசின் அதிகாரங்கள் இப்போது பயன்படுத்தப்படுகின்றன. அதற்கு மக்களின் பரவலான ஆதரவு உள்ளது.

மக்கள் எதிர்ப்பு

கருப்பு மரணம் பற்றி மீண்டும் பார்த்தால், சொத்துகள் அதிகரிப்பு மற்றும் வணிகர்கள் மற்றும் தொழிலதிபர்களின் செல்வாக்கு அதிகரிப்பு , ஏற்றுமதிக்கு எதிரான மனப்போக்கை தீவிரப்படுத்தியது. மத்தியகால சிந்தனை (அறிவுஜீவி மற்றும் ஜனரஞ்சக சிந்தனை) வர்த்தகம் அற மதிப்பீடுகளின் படி சந்தேகத்துக்குரியது, வியாபாரிகள், குறிப்பாக பணவளம் மிகுந்தவர்கள் பேராசைக்காரர்களாக இருக்கக் கூடியவர்கள் என்பதாக இருந்தது. ஐரோப்பாவின் பாவங்களுக்கு இறைவனின் தண்டனையாக கருப்பு மரணங்கள் கூறப்பட்டன. பிளேக் பாதிப்புக்குப் பிந்தைய காலத்தைய எழுத்தாளர்கள், அற வீழ்ச்சிக்கு திருச்சபை, அரசுகள் மற்றும் பணவளம் மிகுந்த நிறுவனங்கள் மீது குற்றஞ்சாட்டினர்.

வில்லியம் லாங்லேண்ட்டின் பிரலமான போராட்ட கவிதையான Piers Plowman ஏற்றுமதி வணிக சிந்தனைக்கு கடும் எதிர்ப்பு கொண்டதாக உள்ளது. 15வது நூற்றாண்டின் மத்தியில் வெளியான Libelle of Englysche Polycye கவிதை வர்த்தகத்தை ஏற்றுக் கொண்டது ஆனால் அது ஆங்கிலேய வியாபாரிகளின் கைகளில் இருக்க வேண்டும், இத்தாலியர்களின் கட்டுப்பாட்டில் இருக்கக் கூடாது என்று கூறுகிறது. இத்தாலியர்கள் நாட்டை ஏழ்மைக்கு ஆளாக்கிவிட்டதாக அந்தக் கவிஞர் கூறியுள்ளார்.

14ம் மற்றும் 15ம் நூற்றாண்டுகளில் காலம் செல்லச் செல்ல சந்தையில் கார்ப்பரேட் நிறுவனங்கள் அதிகம் பங்கை பெற்றன, வெகுஜன, அறிவிஜீவி எதிர்ப்பு அதிகரித்தது. நீண்டகாலத்தில் அதற்கு கெடுதலான பலன்கள் கிடைத்தன. 16வது நூற்றாண்டில், வர்த்தகம் மற்றும் நிதி கார்ப்பரேசன்களிடம் குவிந்தது, ஏறத்தாழ அரச குடும்பத்தின் ஏகபோக ஆதிக்கத்துக்கு இணையாக அல்லது ஏகபோக நிலைமையை எட்டின. ஐரோப்பாவின் முக்கிய பொருட்களான வெள்ளி, தாமிரம், பாதரசம் போன்றவற்றில் ஏகபோக ஆதிக்கம் செலுத்தின. ஆசியா மற்றும் அமெரிக்காவில் இருந்து இறக்குமதிகள், குறிப்பாக மசாலா நறுமணப் பொருட்கள் இறக்குமதியில் ஆதிக்கம் செலுத்தின.

தங்கம்

பட மூலாதாரம், Getty Images

இந்த சொத்துக் குவிப்பு குறித்து, அனுபவித்தல் கட்டணங்களை வசூலிக்க குறிப்பாக ஏகபோக நிறுவனங்களை கத்தோலிக்க திருச்சபை பயன்படுத்தியதை மார்ட்டின் லூதர் கவனித்தார். 1524ல் லூதர் ஒரு பாதையை வகுத்து அறிவித்தார். அதன்படி வர்த்தகம் என்பது பொது (ஜெர்மன்) நன்மைக்காக இருக்க வேண்டும் என்றும், வியாபாரிகள் அதிக விலைகள் வசூலிக்கக் கூடாது என்றும் கூறியிருந்தார். பிலிப் மெலன்த்தான் மற்றும் அல்ரிச் வோன் ஹுட்டென் போன்ற மற்ற பிராட்டஸ்டன்ட் எழுத்தாளர்களைப் போல லூதர் அப்போதைய ஏற்றுமதிக்கு எதிரான சிந்தனையைக் குறிப்பிட்டு, அரசின் மீது தொழிலதிபர்களின் செல்வாக்கை விமர்சனம் செய்தார். மத சீர்திருத்தம் செய்வதற்கான அழைப்பில் நிதி சார்ந்த அநீதி என அதைக் குறிப்பிட்டார்.

பிராட்டஸ்ட்டண்ட் இயக்கத்தை முதலாளித்துவத்தின் எழுச்சியோடுயும், நவீன பொருளாதார சிந்தனையோடும் தொடர்புப் படுத்துகிறார் சமூகவியலாளர் மேக்ஸ் வெபர். ஆனால் ஆரம்பகால பிராட்டஸ்டன்ட் எழுத்தாளர்கள், ஏகபோக நிறுவனங்களுக்கும் தினசரி வாழ்வை வணிகமயமாக்குவதற்கும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கு அடிப்படைக் காரணமான வணிகவாத எதிர்ப்புணர்வு கருப்பு மரணத்தில் வேர்கொண்டிருந்தது.

இந்த பிரபலமான மற்றும் மத ரீதியிலான எதிர்ப்புகள் ரோமில் இருந்து பிரிதல் மற்றும் ஐரோப்பிய உருமாற்றத்தில் முடிந்தன.

சிறியது எப்போதும் அழகானதா?

21வது நூற்றாண்டில் நாம் முதலாளித்துவ நிறுவனங்கள் சொத்துகளைக் குவிக்கும் என்ற சிந்தனைக்கு பழக்கப்பட்டு விட்டோம். வெற்றி பெற்ற தொழிலதிபர்களாக இருந்தாலும், அமெரிக்க முதலாளிகளாக இருந்தாலும் அல்லது டாட் காம் கோடீஸ்வரர்களாக இருந்தாலும், வியாபாரம் மற்றும் அரசின் மீதான செல்வாக்கால் ஊழல் செய்தல் ஆகியவை தொழில் புரட்சி காலத்தில் இருந்து வணிகம் தொடர்பான விவாதத்தை வடிவமைத்து வருகின்றன. பெரிய வணிக நிறுவனங்கள் என்பதை இதயமற்ற செயல்பாடுகளைக் கொண்டதாக, இயந்திரங்களின் சக்கரங்களில் சாமானிய மக்களை நசுக்குவதாக அல்லது உழைக்கும் வர்க்கத்தினரிடம் இருந்து உழைப்பு என்ற லாபத்தை உறிஞ்சும் காட்டேரிகளை போன்றவர்கள் என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.

தொழில் புரட்சி

பட மூலாதாரம், Alamy

படக்குறிப்பு, தொழில் புரட்சி காலத்தில் இருந்து முதலாளித்துவம் மற்றும் மெகா காப்பரேசன்கள் தான் மனித சமுதாயத்தை வரையறை செய்கின்றன

நாம் பார்த்துள்ளதைப் போல, உள்ளூர் சிறு வணிகர்கள் மற்றும் கார்ப்பரேசன்களுக்கும், அரசின் அதிகாரத்துக்கும் ஆதரவானவர்களிடையே விவாதங்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே நடந்து வருகின்றன. இந்த ஏகபோக நிறுவனங்கள் நாட்டுப்புற பகுதிகளை அழித்து, மக்களை இயந்திரங்களின் ஒரு இணைப்புப் பாகம் போல ஆக்கியிருப்பது குறித்து காதல் கவிஞர்களும், தீவிரப் போக்குடையவர்களும் விமர்சனம் செய்கின்றனர். நேர்மையான கைவினைஞருக்கு மாற்றாக ஊதியத்துக்கு அடிமையான, தனிமைப்படுத்திய ஒரு தொழிலாளி பயன்படுத்தப்படுவது சாதாரணமாகிவிட்டது. புரட்சிகரமான விமர்சகர்கள் முதலாளித்துவத்தின் ஆரம்ப காலத்தில் இருந்து இந்த விமர்சனத்தைக் கூறி வருகின்றனர்.

1960களில், சிறிய மற்றும் பெரிய தொழில் நிறுவனங்களுக்கு இடையில் சில அடிப்படையான வேறுபாடுகள் இருந்தது, நீண்டகால வாதங்களுக்கான காரணங்களாக இருந்தன.

உள்ளூர் தொழில்கள் மீதான இந்த நம்பிக்கையும், கார்ப்பரேசன்கள் மற்றும் அரசு மீதான சந்தேகமும் அதிகரித்த காரணத்தால் ஆக்கிரமித்தல் மற்றும் வெளியேற்றுதல் புரட்சி இயக்கங்கள் தோன்றின. உள்ளூரில் விளைந்த உணவை சாப்பிடுவது, உள்ளூர் பணத்தைப் பயன்படுத்துவது, மருத்துவமனைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் போன்ற ``முக்கிய நிறுவனங்களின்'' கொள்முதல் சக்தியை சிறிய சமூக தொழில்முனைவோருக்கு ஆதரவாக மாற்றுவது ஆகியவை பல சமகாலத்தைய பொருளாதார எண்ணம் கொண்டவர்களின் பொதுவான உணர்வாக இருந்தது.

ஆனால், சிறியது நல்லது, பெரியது கெடுதலானது என்ற வாதத்தை சில அடிப்படையான வழிகளில் கோவிட்-19 நெருக்கடி கேள்விக்கு உரியதாக ஆக்கியுள்ளது. இந்த வைரஸ் உருவாக்கியுள்ள பெரிய அளவிலான பிரச்சினைகளை சமாளிக்க பெரிய அளவிலான நிறுவன அமைப்பு முறைகள் தேவைப்படுகின்றன. கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டில் அதிக தீவிரமாக நடவடிக்கை எடுத்த அரசுகள் தான் அதிக வெற்றி பெற்றவையாக மாறியுள்ளன. சிறிய சமூக நிறுவனங்களால், மிகப் பெரிய மருத்துவமனை கட்டமைப்பை சில வாரங்களில் ஏற்படுத்த முடியாது என்பதை முதலாளித்துவத்துக்குப் பிந்தைய காலத்து தீவிர ஆதரவாளர்களும் கூட ஒப்புக்கொள்வார்கள்.

உணவு டெலிவரி செய்வதில் உள்ளூர் வணிக நிறுவனங்களின் பங்கு தொடர்பான நிறைய உதாரணங்கள் உள்ள போதிலும், பாராட்டத்தக்க அளவுக்கு பரஸ்பர உதவி நடைபெறுகிற போதிலும், பல வெளிநாடுகளில் பெருமளவிலான மக்களுக்கு சூப்பர் மார்க்கெட் சங்கிலி அமைப்புகள் மற்றும் வளாகம் சார்ந்த சரக்கு கையிருப்பு ஏற்பாடுகள் மூலம் தான் உணவு அளிக்கப்படுகிறது.

கொரோனா வைரசுக்குப் பிந்தைய காலம்

கருப்பு மரணத்தின் பின்னர் நீண்டகால விளைவாக, பெரிய தொழிலதிபர்களின் சக்தி மற்றும் அரசின் சக்தி அதிகரித்தது. கொரோனா வைரஸ் முடக்கநிலை காலத்திலும் அதே மாதிரியான செயல்பாடுகள் அதிக வேகமாக நடந்து கொண்டிருக்கின்றன.

ஆனால் வரலாற்றுப் பாடங்களைப் பார்த்து நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வரலாறு ஒரு போதும் தானாகவே திரும்பவும் நிகழ்வது கிடையாது. ஒவ்வொரு முறையும் சூழ்நிலைகள் தனித்துவமானவை. எனவே, பொதுவான சில விதிகளை நிரூபிக்க வரலாற்றின் ``பாடத்தை'' தொடர்ச்சியான பரிசோதனைகளாக நாம் எடுத்துக் கொள்வது புத்திசாலித்தனமாக இருக்காது. கோவிட்-19 காரணமாக மூன்றில் ஒரு பங்கு மக்கள் இறக்க மாட்டார்கள். எனவே அதன் தாக்கங்கள் அதிகமாக இருந்தாலும், முன்பு ஏற்பட்டதைப் போல உழைப்பாளிகள் பற்றாக்குறை ஏற்படாது. அப்படி ஏதும் நடப்பதாக இருந்தால், அது உண்மையில் முதலாளிகளின் அதிகாரத்தை பலப்படுத்திய விஷயமாகத்தான் இருக்கும்.

கொரோனா

பட மூலாதாரம், Getty Images

பருவநிலை மாற்றம் என்ற மற்றொரு நெருக்கடியின் இடைப்பட்ட காலத்தில் இந்த வைரஸ் தாக்குதல் நிகழ்ந்திருக்கிறது என்பது தான் இதில் மிக முக்கியமான மாறுபாடு. பொருளாதார வளர்ச்சியை மீண்டும் உத்வேகப்படுத்தும் கொள்கை என்பது, கார்பன் உற்பத்தியைக் குறைக்கும் அவசியத்தை மேலாதிக்கம் செய்வதாக மாறக் கூடிய உண்மையான ஆபத்து உள்ளது. இது கொடுமையான கெட்ட கனவு போன்ற சூழ்நிலை தான். கோவிட்-19 தாக்கமானது வேறொரு மிக மோசமான விஷயத்தின் முன்னோட்டமாகவே இருக்கிறது.

ஆனால், பெருமளவில் மக்கள் இடப் பெயர்வுக்கும் மற்றும் பணத்துக்கும் அரசும் கார்ப்பரேசன்களும் ஏற்பாடு செய்திருப்பது, அவர்கள் விரும்பினால் தங்களையும் உலகையும் அசாதாரணமாக மாற்றி அமைக்க முடியும் என்பதைக் காட்டியுள்ளது. எரிசக்தி உற்பத்தி, போக்குவரத்து, உணவு வழங்கும் நடைமுறைகள் மற்றும் கொள்கை உருவாக்கத்தில் பங்கு வகிக்கும் பலர் முன்னெடுத்துள்ள புதிய பசுமை பேரம் போன்றவற்றில் மீண்டும் வளர்ச்சிகள் காண்பதில் நமது கூட்டு செயல் திறன்கள் மீதான நம்பிக்கைக்கு உண்மையான அடித்தளமாக அவை இருக்கின்றன.

கருப்பு மரணம் மற்றும் கோவிட்-19 ஆகியவை தொழில் நிறுவனங்கள் மற்றும் அரசு அதிகாரத்தின் குவிப்பு மற்றும் மையமாக்கலை ஏற்படுத்தியுள்ளன. இது கவனிக்கப்பட வேண்டிய விஷயம். ஆனால் வரக்கூடிய நெருக்கடி எப்படி இருக்கும் என்பது தான் மிகப் பெரிய கேள்வியாக இருக்கும்.

(எலியனோர் ரஸ்ஸெல், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் துறையில் பி.எச்டி ஆராய்ச்சி மாணவர். மார்ட்டின் பார்க்கர், பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தில் நிறுவனங்கள் ஆய்வுகள் துறை பேராசிரியர் ஆகியோர் எழுதியது).

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: