அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பு - ”ஒபாமா கால குடியேற்ற கொள்கையை முடிவுக்கு கொண்டுவரும் டிரம்ப் முயற்சி சட்டவிரோதமானது”

ஒபாமா - டிரம்ப்

பட மூலாதாரம், Getty Images

அமெரிக்காவில் இளம் குடியேறிகளை நாடு கடத்துவதில் இருந்து பாதுகாக்கும் குடியேற்ற கொள்கையை முடிவுக்கு கொண்டுவர அதிபர் டிரம்பின் திட்டத்திற்கு எதிராக அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

குடியேற்ற கொள்கை திட்டத்திற்கு தடை விதிப்பது என்பது சட்டவிரோதமானது என்றுகூறி அமெரிக்க உச்ச நீதி மன்றம் அதிபர் டிரம்பிற்கு எதிராக தீர்ப்பளித்துள்ளது.

சிறுவயதில் அமெரிக்காவிற்குள் குடியேறியவர்களை பாதுகாக்கும் (டாகா) திட்டத்தை நீக்குவது சட்டவிரோதமானது என அமெரிக்க கீழமை நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்திருந்தது. தற்போது உச்ச நீதிமன்றம் அந்த தீர்ப்பை உறுதி செய்துள்ளது.

சுமார் 650,000 இளைஞர்கள், தங்கள் சிறுவயதில் ஆவணங்கள் எதுவுமின்றி அமெரிக்காவிற்குள் குடிபெயர்ந்தனர். இவர்களை பாதுகாக்கும் "டிரீமர்ஸ்" திட்டமும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால் தற்போது பாதுகாக்கப்பட்டுள்ளது.

சிறுவயதில் ஆவணங்கள் எதுவுமின்றி அமெரிக்காவில் குடியேறியவர்களை பாதுகாத்து, கல்வி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை வழங்கும் திட்டத்தை முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா கடந்த 2017ஆம் ஆண்டு அமல்படுத்தினார்.

ஒபாமா நிறைவேற்றிய இத்திட்டத்தை ஏன் முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்பதற்கான சரியான விளக்கத்தை வெள்ளை மாளிகை வழங்கவில்லை என்றும் அமெரிக்க உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

 எனவே சட்டத்திற்கு உட்பட்ட திட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில் அரசாங்கம் தன்னிச்சையாக, செயல்பட முடியாது என நீதிபதிகள் கூறியுள்ளனர்.

அதிபர் டிரம்ப் தனது ட்விட்டர் பதிவுகள் மூலம் நீதிமன்றத்தின் இந்த முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

Presentational grey line

இந்திய - சீன எல்லை மோதலில் பயன்பட்டதாக கூறப்படும் ஆயுதங்களின் படம் வெளியானது

இந்திய - சீன எல்லை

லடாக், கல்வான் பள்ளத்தாக்கில் ஜூன் 15ம் தேதி இரவு இந்திய - சீனப் படையினருக்கு இடையே நடந்த மோதலில் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் ஆயுதங்களின் படம் ஒன்று வெளியாகியுள்ளது. அந்தப் படத்தில் இருப்பவை ஆணிகள் பொருத்தப்பட்ட வலுவான இரும்புக் கம்பிகள்.

ஜூன் 15ம் தேதி லடாக் பகுதியில் உள்ள கால்வன் பள்ளத்தாக்கில் எல்லையோரத்தில் இந்திய - சீன ராணுவத்தினர் இடையே ஏற்பட்ட மோதலில் 20 இந்தியப் படையினர் கொல்லப்பட்டனர். சீனத் தரப்பிலும் உயிர்ச்சேதம் ஏற்பட்டதாக இந்திய அரசு கூறியது. ஆனால், சீனத் தரப்பில் இருந்து அவர்களுக்கு ஏற்பட்ட சேதாரம் குறித்து அதிகாரபூர்வத் தகவல் ஏதும் இல்லை. இந்த சம்பவத்தை அடுத்து இரு தரப்பும் ஒன்றை ஒன்று குற்றம்சாட்டுகின்றன. தங்கள் பகுதியில் எதிராளி ஊடுருவியதாக இரு தரப்பும் புகார் கூறுகின்றன.

இந்நிலையில் இந்த தாக்குதலில் சீனர்கள் பயன்படுத்திய ஆயுதங்களின் படங்கள் என்று கூறி, இந்திய சீன எல்லையில் பணியாற்றும் மூத்த ராணுவ அதிகாரி ஒருவர் ஒரு படத்தை பிபிசிக்கு அனுப்பியிருந்தார். அந்தப் படம்தான் இங்கே பகிரப்படுகிறது.

Presentational grey line

சென்னை ஊரடங்கு விதிகள்: இன்று முதல் என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது?

சென்னை ஊரடங்கு விதிகள்

பட மூலாதாரம், Getty Images

சென்னையில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் ஊரடங்கு அமல்படுத்தப்படும் நிலையில், கட்டுப்பாடுகள் கடுமையாக இருக்குமென சென்னை நகரக் காவல்துறை தெரிவித்துள்ளது. தேவையில்லாமல் வெளியில் வருவோர் மீது வழக்குப் பதியப்படுமெனவும் காவல்துறை எச்சரித்துள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில் அதன் பெரும் பகுதியினர் சென்னையில்தான் உள்ளனர். கிட்டத்தட்ட 70 சதவீத கொரோனா நோயாளிகள் சென்னையில்தான் உள்ளனர்.

இதையடுத்து ஜூன் 19ஆம் தேதி முதல் 30ஆம் தேதிவரை சென்னை நகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுமென தமிழக அரசு அறிவித்தது.

Presentational grey line

இந்தியா - சீனா எல்லை மோதல்: 'இந்திய ராணுவத்தினரிடம் ஆயுதம் இருந்தது' - ராகுல் காந்திக்கு ஜெய்சங்கர் பதில்

இந்தியா - சீனா எல்லை மோதல்:

பட மூலாதாரம், Getty Images

சீனப் படையினருடன் எல்லையில் ஏற்பட்ட கைகலப்பில் கொல்லப்பட்ட இந்தியப் படையினர், மோதல் நடந்தபோது ஆயுதம் வைத்திருந்தார்கள் என்று கூறியிருக்கிறார் வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்.

"நிராயுதபாணியான நமது சிப்பாய்களைக் கொல்வதற்கு சீனாவுக்கு எவ்வளவு துணிச்சல்? நமது சிப்பாய்கள் ஏன் ஆயுதமில்லாமல் உயிர்த்தியாகம் செய்யும்படி அனுப்பப்பட்டார்கள்?" என்று ட்விட்டரில் கேள்வி எழுப்பியிருந்தார் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி.

இதற்கு ட்விட்டரிலேயே பதில் சொல்லியிருக்கிறார் ஜெய்சங்கர்.

Presentational grey line

இலங்கை அகழாய்வில் ஆதிமனிதர்களின் 48,000 ஆண்டுகளுக்கு முந்தைய ஆயுதங்கள்

இலங்கை அகழாய்வில் ஆதிமனிதர்களின் 48,000 ஆண்டுகளுக்கு முந்தைய ஆயுதங்கள்

இலங்கையில் சுமார் 48,000 ஆண்டுகளுக்கு முன்னர் ஆதி மனிதர்கள் மிருகங்களின் எலும்புகளில் வடிவமைக்கப்பட்ட கருவிகளைக் கொண்டு மிருகங்களை வேட்டையடியமைக்கான சான்றுகள் கிடைத்துள்ளன.

ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்ககழகத்தின் விரிவுரையாளரும், தொல்பொருள் ஆராய்ச்சியாளருமான ஒசான் வெடகே பிபிசி தமிழிடம் இதனைக் குறிப்பிட்டார்.

ஐரோப்பா மற்றும் ஆபிரிக்கா ஆகிய நாடுகளுக்கு வெளியில் இவ்வாறான சான்றுகள் முதன்முறையாக இலங்கையிலேயே கிடைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

மிருகங்களின் எலும்புகளில் தயாரிக்கப்பட்ட வில் மற்றும் அம்புகளைப் பயன்படுத்தி, மிருகங்களை வேட்டையாடியமைக்கான ஆதாரங்கள் தமக்கு கிடைத்துள்ளதாக அவர் தெரிவிக்கின்றார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: