இந்தியா - சீனா எல்லை மோதல்: 'இந்திய ராணுவத்தினரிடம் ஆயுதம் இருந்தது' - ராகுல் காந்திக்கு ஜெய்சங்கர் பதில்

பட மூலாதாரம், Getty Images
சீனப் படையினருடன் எல்லையில் ஏற்பட்ட கைகலப்பில் கொல்லப்பட்ட இந்தியப் படையினர், மோதல் நடந்தபோது ஆயுதம் வைத்திருந்தார்கள் என்று கூறியிருக்கிறார் வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்.
"நிராயுதபாணியான நமது சிப்பாய்களைக் கொல்வதற்கு சீனாவுக்கு எவ்வளவு துணிச்சல்? நமது சிப்பாய்கள் ஏன் ஆயுதமில்லாமல் உயிர்த்தியாகம் செய்யும்படி அனுப்பப்பட்டார்கள்?" என்று ட்விட்டரில் கேள்வி எழுப்பியிருந்தார் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி.
இதற்கு ட்விட்டரிலேயே பதில் சொல்லியிருக்கிறார் ஜெய்சங்கர்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
அவரது பதில் ட்வீட்: "எல்லைப் பணியில் உள்ள எல்லாப் படையினரும் ஆயுதம் வைத்திருப்பார்கள். அதிலும் குறிப்பாக சாவடியை விட்டு வெளியே செல்லும்போது அவர்களிடம் ஆயுதம் இருக்கும். ஜூன் 15 அன்று கல்வான் பள்ளத்தாக்கிலும் அவர்கள் அப்படியே செய்தார்கள். இது போன்ற மோதல்களில் ஆயுதங்களைப் பயன்படுத்துவதில்லை என்பது நீண்ட கால நடைமுறை (1996, 2005 ஒப்பந்தங்களின் அடிப்படையில்)".
'இந்திய ராணுவத்தினர் யாரும் காணாமல் போகவில்லை'
திங்கள் இரவு நடந்த மோதலில் இந்திய ராணுவத்தினர் யாரும் காணாமல் போகவில்லை என்று இந்திய வெளியுறவுத் துறையின் செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவத்சவா தெரிவித்துள்ளார்.
களத்தில் உள்ள இருநாட்டு ராணுவ அதிகாரிகளும் தொடர்ந்து சந்தித்து பேசி வருகின்றனர். இந்தியாவின் அனைத்து நடவடிக்கைகளும் இந்திய எல்லைக்குள்ளேயே உள்ளன. சீனாவும் அவ்வாறே செயல்பட வேண்டும் என்று விரும்புகிறோம் என்றும் வியாழன் மாலை நடந்த செய்தியாளர் வெளியுறவுத் துறையின் வாராந்திர சந்திப்பில் அவர் தெரிவித்தார்.
சீனா தன்னிச்சையாக செயல்படாமல் இருநாட்டு ஒப்பந்தங்களின் அடிப்படையிலேயே இயங்க வேண்டும். எல்லைப் பகுதியில் அமைதியை நிலைநாட்டவும், பிரதமர் கூறியதைப் போல இந்திய இறையாண்மையைக் காக்கவும் இந்தியா உறுதியாக உள்ளது என்றும் இந்திய வெளியுறவுத் துறையின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
கல்வான் பள்ளத்தாக்கு பகுதி மோதல்
லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் திங்கள் இரவு இருநாட்டு ராணுவங்களுக்கும் இடையே நடந்த மோதலில் இந்திய ராணுவத்தினர் 20 பேர் இறந்ததாக இந்திய அரசு தெரிவித்தது.
இரு நாட்டு ராணுவ வீரர்களும் ஆணிகள் அடங்கிய கட்டை, மூங்கில் குச்சி, மட்டை போன்றவற்றால் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதாக கூறப்படுகிறது.
அப்போது ஆயுதப் பயன்பாடு எதுவும் நிகழவில்லை என்று இருதரப்பும் தெரிவித்தன.
சீன தரப்பில் எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் என்று தெளிவாகத் தெரியவில்லை. சீன ராணுவத்தினர் 43 பேருக்கு காயம் அல்லது உயிரிழப்பு ஏற்பட்டிருக்கலாம் என இந்திய ராணுவம் தெரிவிக்கிறது.

பட மூலாதாரம், Getty Images
ஆனால், இது குறித்த விவரங்கள் எதையும் சீனா வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை.
இந்திய மற்றும் சீன ராணுவ அதிகாரிகள் இடையே கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் தொடர்ந்து இரண்டு முறை பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. எனினும், படைகளை விலக்கிக்கொள்வது குறித்து இன்னும் முடிவு எட்டப்படவில்லை.
இந்தியா - சீனா எல்லை மோதல்
கடந்த 45 ஆண்டுகளில் இரு நாட்டு ராணுவத்தினரிடையே மிக மோசமான தாக்குதலாக இது அமைந்துள்ளது.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
கடைசியாக 1975-ம் ஆண்டு இந்தியாவின் அருணாச்சல பிரதேச எல்லை இந்தியா மற்றும் சீன ராணுவத்தினர் இடையே துப்பாக்கிச்சூடு நடந்தது. இதில் நான்கு இந்திய ராணுவத்தினர் கொல்லப்பட்டனர். இதை சில முன்னாள் தூதர்கள் தாக்குதல் என்றும், சிலர் விபத்து என்றும் கூறினர்.
எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுக்கு 2 கிலோமீட்டருக்கு அருகில் துப்பாக்கிச்சூடு மற்றும் குண்டுகளை வீசக்கூடாது என 1996-ம் ஆண்டு இரு நாடுகள் இடையே ஒரு ஒப்பந்தம் போடப்பட்டது.
சீன வெளியுறவுத்துறை அமைச்சருடனான தொலைபேசி அழைப்பின்போது, கல்வான் பள்ளத்தாக்கில் சீனா நடத்திய முன்கூட்டியே திட்டமிட்ட செயல்தான் தொடர்நிகழ்வுகளுக்கு காரணம் என்று சீன வெளியுறவு அமைச்சர் வாங் யிடம் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் கூறியதாக இந்திய அரசு புதன்கிழமையன்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் தங்களுக்கு இறையாண்மை இருப்பதாக சீன வெளியுறவுத் துறை தெரிவித்தது இரு நாடுகளுக்கும் இடையே ஏற்கனவே உள்ள ஒப்பந்தத்துக்கு முரணானது என்றும் இந்தியா தெரிவித்துள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












