இந்தியாவில் தீவிரமடையும் கொரோனா வைரஸ் பாதிப்பு; 5 முக்கிய கேள்வி பதில்கள்

கொரோனா

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், செளதிக் பிஸ்வாஸ்
    • பதவி, பிபிசி

இந்தியாவில் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து அமல்படுத்தப்பட்ட கடுமையான ஊரடங்கு ஒருசில நாட்களுக்கு முன்புதான் தளர்த்தப்பட்டது. தற்போது கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாள்தோறும் உயர்ந்து வருகிறது.

இந்த நெருக்கடி குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்களை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.

நாளுக்கு நாள் புதிய உச்சம் தொட்டுவரும் கொரோனா தொற்று குறித்து இந்தியா கவலைப்பட வேண்டுமா?

சரியாக சொல்ல வேண்டுமென்றால், இந்தியா மோசமான நிலையில் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

குறைந்தது 3 லட்சம் பேர் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகிலேயே தற்போது நான்காவது இடத்தில் உள்ளது. முதல் 3 இடங்களில் அமெரிக்கா, பிரேசில் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் உள்ளன.

ஆனால், மக்கள் தொகை சராசரி அடிப்படையில் கொரோனா தொற்று எண்ணிக்கை என்று பார்த்தால், இந்தியா 143வது இடத்தில் உள்ளது என்கிறார் கார்னல் பல்கலைக்கழகத்தின் பொருளாதார பேராசிரியர் கெளஷிக் பாசு.

மேலும் இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுப்பரவல் இரட்டிப்பாகும் காலமும் அதிகரித்துள்ளது.

Banner image reading 'more about coronavirus'

ஆனால், நீங்கள் உன்னிப்பாக பார்த்தால் கொரோனா தொற்றுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதே போல கொரோனா நோயாளிகள் மருத்துவமனைகளில் சேரும் விகிதமும், இறப்பு விகிதமும் மும்பை, டெல்லி மற்றும் அகமதாபாத் போன்ற நகரங்களில் அதிகரித்து வருகிறது.

"கொரோனா பரவவுது தொடர்நது இவ்வாறு அதிகரித்தால், இந்த நகரங்கள் எல்லாம் நியூயார்க் போல ஆகிவிடும்" என்கிறார் கோவிட் 19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர் ஒருவர்.

நோயாளிகள் அனுமதி மறுக்கப்படுவது, போதிய படுக்கை வசதிகள் இல்லாதது, கழிவறையில் சடலங்கள் இருப்பது போன்ற செய்திகளும் வெளியாகின்றன.

பொருளாதாரத்தை எடுத்துக்கொண்டால் இந்த உலகத் தொற்றுக்கு முன்பே அது மோசமான நிலையில்தான் இருந்தது. அதனால் மீண்டும் ஓர் ஊரடங்கை அமல்படுத்துவது, பல தரப்பு மக்களையும் பாதிக்கும்.

அதனால்தான் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த இந்தியா தவித்து வருகிறது.

இந்தியாவின் இறப்பு விகிதம் குறைவு என்பது தவறானதா?

கொரோனா வைரஸ்

பட மூலாதாரம், Getty Images

இதற்கு இரண்டு பதில்கள் இருக்கின்றன.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களில் 2.8 சதவீதம் பேர் இறந்துள்ளனர். இது ஒப்பீட்டளவில் குறைவானதுதான்.

ஆனால், இந்த கணக்கீட்டு முறை சர்ச்சைக்குள்ளாகி வருகிறது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையை மட்டும் வைத்து இறப்பு விகிதத்தை கணக்கிடுவது சரியாக இருக்காது. கண்டறியப்படாத கொரோனா தொற்றுகள் இந்தக் கணக்கில்வராது என்கிறார் லண்டன் ஸ்கூல் ஆஃப் ஹைஜீன் அண்ட் டிராபிகல் மெடிசின் கல்வி நிறுவனத்தில் கணிதவியலாளரராக இருக்கும் ஏடம் குச்ரஸ்கி.

தற்போது இருக்கும் குறைவான கொரோனா இறப்பு விகிதங்களை பார்த்து அரசாங்கங்கள் நிம்மதியாகிவிட முடியாது என வல்லுநர்கள் கூறுகின்றனர்.

ஆனால் இந்தியாவில் நிகழும் கொரோனா உயிரிழப்புகளில் முக்கால்வாசி இறப்புகள் மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் டெல்லியில்தான் நிகழ்கின்றன என்பது கவலையளிக்கக்கூடிய விஷயமே.

எனினும், சென்னையில் குறைவான இறப்புகளே அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது போன்ற குழப்பங்களும் நிலவுகின்றன.

எது கொரோனா மரணம், எது சாதாரண மரணம் என்று வகைப்படுத்துவதிலும் உலகம் முழுக்க குழப்பம் இருக்கிறது.

இந்நிலையில், இந்தியாவில் எதிர்பார்த்த விகிதத்தை விட இளம் வயதினர் அதிகம் உயிரிழப்பதாக புதிய ஆய்வுகளை மேற்கோள் காட்டிச் சொல்கிறார் பொருளாதார நிபுணர் பார்த்தா முகோபத்யாய.

"இளம் வயதினர் ஏன் அதிகம் உயிரிழக்கிறார்கள் என்பதை நாம் கண்டறிய வேண்டும். காற்று, நீரிழிவு நோய், சுவாசப்பிரச்சனை போன்றவை காரணமா? உலக நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் இளைஞர்கள் ஆரோக்கியமற்றவர்களாக இருக்கிறார்களா?"

எனினும், இந்தியாவில் மொத்த இறப்பு விகிதம் குறைவாகவே இருக்கும் என்றும் அதிகம் உயரிழப்பவர்கள் பெரும்பாலும் முதியவர்களாகவே இருப்பார்கள் என்றும் வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

"நம் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருக்கலாம். ஆனால், குறைவான நபர்களுக்கே தீவிர சிகிச்சை தேவைப்படுகிறது" என்கிறார் முகோபாத்யாய.

இந்தியா எது குறித்து கவலைப்பட வேண்டும்?

கொரோனா வைரஸ்

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவில் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு மாதிரி வைரஸ் தொற்று பரவல் இருக்கிறது.

இது அந்தந்த பகுதியில் கடைபிடிக்கப்படும் சமூக விலகல், பரிசோதனை எண்ணிக்கை, மக்கள் தொகை, வயது வரம்பு மற்றும் அதிருஷ்டம் போன்ற காரணிகளால் தொற்று பரவல் மாறுபடும் என்று கூறுகிறார் அறிவியல் எழுத்தாளரான எட் யோங்.

இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டவுடன் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு நடந்தும், கூட்டம் நிறைந்த ரயில்கள் மற்றும் பேருந்துகள் மூலமாகவும் திரும்பினார்கள். இதனால், நாட்டின் பல இடங்களுக்கும் வைரஸ் பரவியுள்ளது.

உதாரணமாக ஒடிஷா மாநிலத்தில் பரவியுள்ள 80 சதவீத தொற்றுக்கு இதுதான் காரணம்.

இந்தியாவில் பல மாநிலங்களும் கொரோனா வைரஸ் தொற்றின் உச்சநிலையை அடுத்தடுத்து எட்டும் என்று கூறும் மருத்துவர் முகர்ஜி, சுகாதாரத் திறனை இந்தியா அதிகப்படுத்த வேண்டும் என்கிறார்.

அதாவது மருத்துவர்கள், மருத்துவப்பணியாளர்கள், பாதுகாப்பு கவசங்கள், மருந்துகள், வென்டிலேட்டர் கருவிகள் ஆகியவற்றை கொரோனா உச்சமடைய தொடங்கும் மாநிலங்களுக்கும் இடங்களுக்கும் அவ்வப்போது நகர்த்த வேண்டும்.

சிறப்பான மருத்துவர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களை கொண்டிருக்கும் ராணுவத்தின் மருத்துவ சேவை போன்று நடமாடும் சேவைகள் இதற்கு உதவும் என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

இதுபோன்ற சேவை தயார்நிலையில் இருந்தால், கொரோனா மையப்பகுதிகளுக்கு அவர்களை உடனடியாக அனுப்பி கட்டுப்படுத்தலாம்.

இந்தியாவில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உதவியதா?

கொரோனா வைரஸ்

பட மூலாதாரம், Getty Images

வைரஸ் பரவுவதை குறைக்க மார்ச் 25ஆம் தேதியே இந்திய அரசு ஊரடங்கை அமல்படுத்தியது சிறந்த உத்தி என்கிறார்கள் வல்லுநர்கள்.

"இந்த ஊரடங்கு காலம் அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதற்கான போதிய கால அவகாசத்தை அளித்ததோடு பல உயிரிழப்புகளையும் தடுத்தது" என்கிறார் ஹார்வர்ட் க்ளோபல் சுகாதார நிறுவனத்தின் இயக்குநரான மருத்துவர் ஆஷிஷ் ஜா.

ஆனால், ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்பதை நான்கு மணி நேரத்திற்கு முன்புதான் அரசு அறிவித்தது. இது முறைசாரா புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்புவதில் சிக்கலை ஏற்படுத்தியது.

மேலும் இந்த ஊரடங்கு காலத்தை பயன்படுத்தி கொரோனா பரிசோதனையை அரசுகள் அதிகப்படுத்தியதா, சுகாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்தியதா என்பது மற்றொரு கேள்வி.

குஜராத், மகாராஷ்டிரா, டெல்லி போன்ற மாநிலங்களைவிட கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்கள் இதில் சிறப்பாக செயலாற்றி உள்ளதாக தெரிகிறது.

இன்னும் நன்றாக தங்களை தயார்படுத்திக் கொண்டிருந்தால், மும்பை, அகமதாபாத் மற்றும் டெல்லி போன்ற இடங்களில் தொற்று அதிகரிப்பதை தடுத்திருக்கலாம்.

மருத்துவர்கள், மருத்துவப்பணியாளர்கள், மற்றும் படுக்கை வசதிகளின் பற்றாற்குறை, அரசு மருத்துவமனைகள் மீது மக்கள் நம்பிக்கை இல்லாமல் இருப்பது போன்றவையால் அவை போராடிக் கொண்டிருக்கின்றன.

இதன் காரணமாக இந்த கொரோனா அவரசநிலைக்கு முழுமையாக தயாராகாத தனியார் மருத்துமனைகளுக்கு அழுத்தம் அதிகரித்தது.

இன்னும் எதையெல்லாம் சந்திக்க உள்ளோம்?

கொரோனா வைரஸ்

பட மூலாதாரம், Getty Images

இந்தியா தற்போது நாள் ஒன்றுக்கு 1,50,000 கொரோனா பரிசோதனைகளை செய்து வருகிறது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட போது வெறும் ஆயிரக்கணக்கில்தான் இது இருந்தது.

தற்போது கொரோனா பரிசோதனை செய்வது அதிகமாகி இருப்பதாக நம்பப்படுகிறது.

எனினும் மக்கள்தொகை அடிப்படையில் இது மிகவும் குறைவுதான்.

"நம்மிடம் வசதிகள் இருந்தன. இந்தியா இதையெல்லாம் செய்ய முடியாத நாடு இல்லை. ஆனால், போதிய திட்டமிடப்படாததுதான் இந்த நிலைக்கு காரணம். இதனால் முன்னரே அமல்படுத்தப்பட்ட ஊரடங்கின் பலன் தற்போது நமக்கு கிடைக்கவில்லை" என்கிறார் பேராசிரியர் முகோபாத்யாய.

இதற்கு சிறந்த உதாரணம் தலைநகர் டெல்லி.

நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், மருத்துவமனைகள் நோயாளிகளை அனுமதிக்காததால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் சூழல் நிலவுகிறது.

வரும் வாரங்களில் கொரோனா தொற்றுவோர் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படும் நிலையில், தனியார் மருத்துவமனைகள், அரங்கங்கள் மற்றும் ஹோட்டல்களில் படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

மூட்டை முடிச்சோடு கிளம்பும் மக்கள் | BBC Ground Report from Chennai border | Corona Virus

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

ஆனாலும் இது பலனளிக்குமா என்று வல்லுநர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

திருமண மண்டபங்கள் மற்றும் ஹோட்டல்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்தினால், வென்டிலேட்டர் கருவிகளை எல்லாம் இவ்வளவு குறுகிய காலத்தில் பொறுத்துவது எப்படி சாத்தியமாகும்? மருத்துவர்கள், செவிலியர்கள் எல்லாம் எங்கிருந்து வருவார்கள்? அங்கு எப்படி தீவிர சிகிச்சை அளிக்க முடியும்?

"புதிய கட்டமைப்பு தேவைப்படுகிறது. கோவிட் 19 நோயாளிகளுக்கான வார்டுகளை ஏற்படுத்துவது மட்டும் போதுமானது இல்லை" என்கிறார் டெல்லி கங்காராம் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நிபுணராக இருக்கும் மருத்துவர் அம்பரிஷ் சாத்விக்

"இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறோம். இந்தியாவில் கொரோனா உலகத் தொற்றின் ஆரம்பகாலம் இது. இதெல்லாம் சற்று இயல்பு நிலைக்கு திரும்ப ஒரு வருடம் ஆகலாம். அடுத்த 12 - 16 மாதங்களைத் தாண்ட இந்தியா என்ன திட்டம் வைத்திருக்கிறது என்பது தான் இப்போதைய கேள்வி" என்கிறார் மருத்துவர் ஜா.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: