கொரோனா வைரஸ் ஊரடங்கு: மீண்டும் திறக்கப்பட்ட முடிதிருத்தும் நிலையங்கள் - எச்சரிக்கைகள், கட்டுப்பாடுகள் என்ன?

கோப்புப்படம்

பட மூலாதாரம், Getty Images

கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தல் விதிகளை சமீபத்தில் தளர்த்திய நாடாக ஜெர்மனி மாறியுள்ளது. ஆனால் ஐரோப்பா முழுக்க முடி திருத்தும் நிலையங்கள் கவனமாக செயல்பட வேண்டிய தேவை எழுந்துள்ளது.

காத்திருப்புக்கான பகுதி கிடையாது, பத்திரிகைகள் கிடையாது, நுனிகளை மட்டும் சீர் செய்வதற்கான கட்டிங் கிடையாது, வாடிக்கையாளருக்கும், முடி திருத்துபவருக்கும் முகக்கவசம் கட்டாயம்.

ஜெர்மனியில் மார்ச் 23ல் இருந்து அமலில் இருந்த முடக்கநிலை முடிந்து சலூன்களை இப்போது திறக்க அனுமதி தரப் பட்டுள்ளது. ஆனால், வேலை செய்யும் முறை, வழக்கமான நடைமுறைகளில் இருந்து மாறியுள்ளது.

ஜெர்மன் பொருளாதார மற்றும் சமூக நல விவகாரங்கள் அமைச்சகங்கள் இதற்கான விதிமுறைகளை அறிவித்துள்ளன. வாடிக்கையாளருக்கு இடையில் 1.5 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

வாடிக்கையாளரின் தலைமுடியைக் கழுவுவதற்கு (பாக்டீரியாக்களை நீக்கம் செய்ய) முன்பு கையுறைகளை கழற்றக் கூடாது. ஆனால் முடி வெட்டும் போது அகற்றலாம்.

சலூன்களில் அமர்ந்திருக்கும் வாய்ப்புகள் கிடையாது.

கோப்புப்படம்

பட மூலாதாரம், Getty Images

நேருக்கு நேராக முகம் பார்த்து பேச முடியாது. எதைச் சொல்வதாக இருந்தாலும் கண்ணாடியை பார்த்தபடிதான் தகவல் தெரிவித்துக் கொள்ளலாம். அதுவும் கூட குறைந்தபட்ச அளவில்தான் இருக்க வேண்டும் என்றும் விதிகளில் கூறப்பட்டுள்ளது.

முடிதிருத்தும் தொழில் நெருக்கத்தில் நடைபெறக் கூடியது என்பதால், இந்த விதிமுறைகள் அவசியமானவையாக உள்ளன என்று கட்டுப்பாட்டு அமைப்புதெரிவித்துள்ளது.

பயத்தை மிஞ்சும் தற்பெருமை

இப்போது பெரும்பாலான மக்களின் முடி அலங்காரம் எப்படி உள்ளது? பெர்லின் மாவட்டத்தில் ஹார்ம்ஸ் முடி திருத்தும் நிலையத்தின் முதலாளிகளில் ஒருவரான ரெனோ ஹார்ம்ஸிடம் இந்தக் கேள்வியை நான் கேட்டேன். ``ரொம்பவும் வேடிக்கையாக உள்ளது. நிறைய பேர் தாங்களாக முடிவெட்டிக் கொண்டிருக்கிறார்கள். சிலர் தாங்களாகவே கலர் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். நாங்கள் இப்போது பெரும்பாலும் சீர் செய்யும் வேலைகளைத் தான் செய்கிறோம்'' என்று சிரித்தபடி அவர் கூறினார்.

இந்த ஆறு வார கால முடக்கநிலையில், வழக்கமான வாடிக்கையாளர்கள் வேறொரு நாளில் பயன்படுத்திக் கொள்வதற்கான வவுச்சர்களை வாங்கியுள்ளனர். தாங்கள் வழக்கமாகச் செல்லும் உள்ளூர் கடைகள், காபி நிலையங்கள், உணவகங்களுக்கு உதவுவதற்காக பெர்லின்வாசிகள் இப்படி வவுச்சர்களை வாங்கும் நடைமுறையை கடைபிடித்தனர். வழக்கமாக கிடைக்கும் வருவாயில் 50 சதவீதம் அளவுக்கு இதில் கிடைத்தது, அதனால் தொழிலை தக்க வைத்துக் கொள்ள முடிந்துள்ளது.

அப்படி வவுச்சர்கள் கொடுத்துவிட்டதால், இன்று முழுக்க ரெனோ வருமானம் இல்லாமல் வேலை பார்க்க வேண்டியதாயிற்று. வந்தவர்கள் எல்லோரும் வவுச்சர்கள் வைத்திருந்தனர். புதிய விதிகளின்படி பார்த்தால், வழக்கமானதைவிட பாதியளவு வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே ரெனோ சேவை செய்ய முடியும். ஒருவருக்கு வேலை முடித்து, இன்னொருவருக்கு ஆரம்பிப்பதற்கு முன்னதாக அனைத்து பொருட்களையும் கிருமி நீக்கம் செய்ய வேண்டும், சமூக இடைவெளி விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்.

கோப்புப்படம்

பட மூலாதாரம், Getty Images

வாடிக்கையாளர் வருகையில் எந்தக் குறைபாடும் இல்லை. பெர்லினில் பல சலூன்களில் அப்பாயின்மெண்ட் வாங்குவதே சிரமமாக உள்ளது. மார்ச் மாதம் முடக்கநிலை அமல் செய்வதற்கு முன்னதாக கொரோனா வைரஸ் தொற்றுமோ என்ற அச்சத்தில், ஏறத்தாழ பாதியளவு வாடிக்கையாளர்கள் தாங்கள் வாங்கிய நேர ஒதுக்கீட்டை ரத்து செய்துவிட்டனர்.

மக்கள் பதற்றமாக இருப்பதாக ரெனோ உணர்கிறார். ஆனாலும் நேரம் பெறுவதற்கு அவர்கள் விரும்புகிறார்கள். ``பயத்தையெல்லாம் அழகாகக் காட்டிக் கொள்ள வேண்டும் என்ற தற்பெருமை மிஞ்சிவிட்டது'' என்று அவர் ஜோக் அடிக்கிறார்.

மற்ற பொருட்கள் விற்கும் கடைகளைவிட, முடி திருத்தும் நிலையங்களில் வாடிக்கையாளரும், தொழிலாளியும் நெருக்கத்தில் நிற்கும் சூழ்நிலை ஏற்படுகிறது என்று அவர் விவரிக்கிறார்.

வாடிக்கையாளர்களின் பெயர் விவரங்களையும் சலூன்களில் பதிவு செய்திட வேண்டும். தேவை ஏற்பட்டால், நோய்த் தொற்றுக்கு தொடர்பு தடமறிதலுக்காக இந்த விவரங்கள் பெறப்படுகின்றன.

ஐரோப்பாவில் முழுக்க முடக்கநிலை அமல் நீக்கியபோது, முதலில் அனுமதிக்கப்பட்ட தொழில்களில் முடி திருத்தும் நிலைய தொழில்களும் அடங்கியிருந்தது.

சலூன்களில் வாடிக்கையாளர்களுக்கு இடையில் 1.5 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும்.

Banner image reading 'more about coronavirus'
Banner image reading 'more about coronavirus'

ஸ்பெயினில் முடிதிருத்தும் சலூன்கள் மே 4 ஆம் தேதி திறக்கப்பட்டன. ஆனால் வாடிக்கையாளர்கள் முன்கூட்டியே நேரம் நிர்ணயித்துக் கொண்டு வர வேண்டும். மொத்த திறனில் 30 சதவீத அளவுக்கு மட்டுமே சலூன்கள் செயல்பட முடியும்.

டென்மார்க்கில் முடி திருத்தும் நிலையங்களைத் திறக்க ஏப்ரல் 17 ஆம் தேதி அறிவிக்கப்பட்ட போது, ஆன்லைனில் பதிவு செய்யும் வசதி செயல்பட முடியாத அளவுக்கு ஒரே சமயத்தில் நிறைய பேர் அதைப் பயன்படுத்தினர். அந்தப் பதிவு முறையே ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டது. முடிவெட்டிக் கொள்ள அலைமோதும் குடிமக்கள் என்று ஒரு செய்தித்தாள் தலைப்பு போடும் அளவுக்கு நிலைமை இருந்தது.

ஆனால் இந்த விதிமுறைகளைப் பின்பற்றுவது எந்த அளவுக்கு சாத்தியம், அவை இந்தத் தொழிலை எந்த வகையில் மாற்றுவதாக இருக்கும்?

அலிசன் பாட்ரிக் என்ற பெண், இங்கிலாந்து பக்கிங்ஹாம்ஷயரில் நடமாடும் முடிதிருத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளி. தாம் எப்படி மீண்டும் வேலைக்குச் செல்வது என்பது தொடர்பாக பிரிட்டன் அரசின் வழிகாட்டுதல்களை அறிவதற்காக இந்தப் பெண்மணி காத்திருக்கிறார். அந்த வழிகாட்டுதல் வருவதற்கு இன்னும் சிறிது அவகாசம் ஆகலாம் என்று அவர் கவலைப்படுகிறார்.

பெரும்பாலான விதிகள் அர்த்தம் உள்ளவையாக தெரிவதாக அவர் கூறுகிறார். ஆனால், அவற்றைப் பின்பற்றுவது கடினம். குறிப்பாக வாடிக்கையாளர் முகக்கவச உறை அணிந்திருக்கும் போது முடிவெட்டுவது கடினம் என்கிறார்.

கோப்புப்படம்

பட மூலாதாரம், Getty Images

ஒவ்வொரு பயன்பாட்டுக்குப் பிறகும் கவுன்களை சுத்தம் செய்ய வேண்டும் என்று புதிய விதிமுறைகள் கூறுகின்றன.

முகக் கவச உறையை கட்டியிருக்கும் நாடா, காதின் அருகில் முடிகளை வெட்ட முடியாமல் இடையூறாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார். ``முகத்தில் ஒட்டிக் கொள்ளக் கூடிய வகையிலான முகக் கவச உறையை தயாரிக்காத வரையில், இது எப்படி சாத்தியமாக இருக்கும் என்று தெரியவில்லை'' என்று அவர் கூறினார்.

வாடிக்கையாளர்கள் சிறிது நேரத்துக்கு முகக் கவச உறையை காதுகளில் இருந்து கழற்றி, முகத்துடன் சேர்த்து கையால் பிடித்துக் கொள்ள வேண்டியிருக்கும் என்று, ஜெர்மனியில் முடிதிருத்தும் நிலையங்களின் சங்கத்தின் தலைவர் தொலைக்காட்சிப் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

நோய்த் தொற்றுக்கு முந்தைய காலத்தில், முடிவெட்டிக் கொள்வது அழுத்தம் தரும் நேரமாக அல்லது ஓய்வான நேரமாக இருந்ததா என்று தெரியாது. ஆனால், முடக்கநிலை முடிந்த பிறகு, அது மிகவும் வேறு மாதிரியாக இருக்கப் போகிறது.

சமூக இடைவெளி குறித்த விதிகளைப் பின்பற்றினால், ஒரு மணி நேரத்தில் எவ்வளவு பேருக்கு முடி வெட்டலாம் என்ற எண்ணிக்கை குறைந்துவிடும் என்று லண்டனை சேர்ந்த முடி திருத்தும் நிலையங்களின் குழும நிறுவனம் கூறுகிறது. ப்ளூ டிட் என்ற அந்த நிறுவனம், இனிமேல் வழக்கமானதைவிட 50 சதவீதம் பேருக்கு மட்டுமே முடிதிருத்தும் வேலையை செய்ய முடியும் என்று கூறியுள்ளது.

கோப்புப்படம்

பட மூலாதாரம், Getty Images

முடி திருத்தி முடித்ததும், சுத்தம் செய்து கொள்வதற்காக வாடிக்கையாளருக்கு கூடுதலாக 15 நிமிடங்களை அளிக்க அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. வேலை நேரத்தை அதிகரிக்கவும், அலுவலர்களை இரண்டு ஷிப்டுகள் வர வைத்து, முடி திருத்தும் நிலையம் செயல்படும் நேரத்தை அதிகரிக்கவும் உத்தேசித்துள்ளது.

தலைமுடி வெட்டுவதில் மட்டும் இவை கவனம் செலுத்துகின்றன. தலைக்கு மசாஜ் செய்தல், ஷாம்பு போடுதல் அளித்தல் போன்ற ``சில ஆடம்பர சேவைகள்'' செய்வது குறித்தும் கேள்விகள் எழுப்பப்படுகின்றன.

வரும் காலத்தில் சூழ்நிலைகளுக்கு ஏற்ப அரசு எந்த புதிய நடைமுறைகளை அமல்படுத்தினாலும், இதற்கான கட்டணங்கள் அதிகரிக்கும் என்பது தெளிவாகத் தெரிகிறது.

``வாடிக்கையாளருக்கு ஒதுக்கும் நேரம் அதிகரிப்பதாலும், தனிப்பட்ட முழு உடல் கவச உறைக்கான செலவுகளாலும் எங்களுடைய செலவுகள் அதிகரிக்கும். ஆனால் எங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் அலுவலர்களின் பாதுகாப்புக்கு உயர் முன்னுரிமை தர வேண்டும்'' என்று ப்ளூ டிட் கூறியுள்ளது.

முடிவெட்டுவது குறித்த வதந்தி என்ன சொல்கிறது?

``முடி திருத்துபவர்களைப் பொருத்த வரை நாங்கள் பேசுவோம் - அதுதான் எங்களை வித்தியாசப்படுத்திக் காட்டும்'' என்று திருமதி பாட்ரிக் கூறுகிறார்.

கோப்புப்படம்

பட மூலாதாரம், Getty Images

``முடிதிருத்தும் நேரத்தில் நிறைய பேசுவோம் என்பதுதான் ஓர் அனுபவத்தைத் தருவதாக இருக்கும். இனிமேல் என்ன நடக்கும் என்பதைப் பார்க்க ஆவலாக இருக்கிறது'' என்று அவர் குறிப்பிடுகிறார்.

ஜெர்மனியின் புதிய விதிமுறைகள்:

· சலூனில் வாடிக்கையாளர்கள் காத்திருத்தலைத் தவிர்க்க, முன்கூட்டியே நேரத்தை நிர்ணயித்துக் கொண்டு (அப்பாயின்மெண்ட் பெற்று) வர வேண்டும்.

· முடி வெட்டும் சமயம் தவிர, முடி திருத்தம் செய்பவருக்கும், வாடிக்கையாளருக்கும் இடையில் 1.5 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும்.

· வாடிக்கையாளரும், முடி திருத்துபவரும் முகக் கவச உறைகள் அணிந்திருக்க வேண்டும்.

· ``நேரடியாகப் பேசுவதற்கு'' அனுமதி கிடையாது. ஹேர்ஸ்டைல், கலர் போன்ற தகவல்களை கண்ணாடியைப் பார்த்தபடி தெரிவிக்க வேண்டும், அதுவும் குறைந்தபட்ச அளவில் இருக்க வேண்டும்.

· முடிந்த வரையில் காற்று வீசும் சாதனத்தால் உலர வைக்கக் கூடாது.

கோப்புப்படம்

பட மூலாதாரம், Getty Images

· சுத்தமான காற்றோட்டம் இருக்க வேண்டும். அதாவது ஒரு முடி திருத்தும் நபருக்கு 100m3/h என்ற அளவில் இருக்க வேண்டும் என விதிமுறைகள் கூறுகின்றன.

· ஒரு வாடிக்கையாளருக்கு வேலை முடிந்து அடுத்தவருக்குத் தொடங்குவதற்கு முன்பு, கத்தரிக்கோல் உள்ளிட்ட பொருட்களை நன்கு கிருமி நீக்கம் செய்ய வேண்டும். வாடிக்கையாளருக்கான இருக்கைகளும் இதில் அடங்கும்.

· முடி திருத்துவதற்கான துணிகள் ஒவ்வொரு பயன்பாட்டுக்குப் பிறகும் சுத்தம் செய்யப்பட வேண்டும். சாத்தியமானால், உபயோகித்துவிட்டு தூக்கி விசும் வகையிலானவற்றை பயன்படுத்தலாம்.

· சலூனில் நுழைவதற்கு முன் வாடிக்கையாளர் தன் கைகளைக் கழுவ வேண்டும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: