கொரோனா வைரஸ்: ஒரேநாளில் சென்னை - 324, அரியலூர் -188; அதிர்ச்சியில் தமிழகம்

கோப்புப்படம்

பட மூலாதாரம், Getty Images

தமிழ்நாட்டில் ஒரே நாளில் 771 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால், தமிழ்நாட்டில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 4829ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 324 பேருக்கு இத்தொற்று ஏற்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35ஆக அதிகரித்துள்ளது. இன்று 31 பேர் முழுமையாக குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளனர். ஆகவே குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1516ஆக உள்ளது.

தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ஆக்டிவ் நோயாளிகளின் எண்ணிக்கை 3,275ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 13,413 பேருக்கு சோதனைகள் செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக 1,88,241 சோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

கொரோனா

771 பேருக்கும் யாரிடமிருந்து தொற்று வந்தது என்பது கண்டறியப்பட்டுள்ளதால், இவர்கள் 'கான்டாக்ட்' என வகைப்படுத்தப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டிலேயே அதிகபட்சமாக சென்னையில் 324 இந்த நோய் ஏற்பட்டுள்ளது. அரியலூரில் 188 பேருக்கும், கடலூரில் 95 பேருக்கும் இந்நோய்த் தொற்று இன்று கண்டறியப்பட்டுள்ளது.

காஞ்சிபுரத்தில் 45 பேருக்கும் மதுரையில் 20 பேருக்கும் திருவள்ளூரில் 34 பேருக்கும் திருவண்ணாமலையில் 17 பேருக்கும் வேலூரில் 6 பேருக்கும் விழுப்புரத்தில் 5 பேருக்கும் இந்நோய் தாக்கியுள்ளது.

சென்னையில் மட்டும் இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2328ஆக உயர்ந்துள்ளது.

கோப்புப்படம்

பட மூலாதாரம், Getty Images

கடந்த 24 மணி நேரத்தில் இருவர் இந்நோயால் உயிரிழந்துள்ளனர். இருவருமே சென்னையைச் சேர்ந்தவர்கள். 68 வயதான ஆண் ஒருவர் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வேறு நோய்களும் இருந்தன.

3ஆம் தேதியன்று கீழ்ப்பாக்கம் மருத்துமனையில் சேர்க்கப்பட்ட 59 வயது நபரும் நேற்று இரவில் உயிரிழந்தார்.

அரியலூரில் இன்று ஒரே நாளில் 188 பேருக்கு கொரோனா

அரியலூர் மாவட்டத்தில் நேற்றுவரை கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் 34ஆக இருந்தது. ஆனால், இன்று ஒரே நாளில் 188 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 222ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை அரியலூரில் இந்நோய்த் தொற்றிலிருந்து 6 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: