சீனா கொரோனா வைரஸால் 25 பேர் பலி: ஆசிய நாடுகள் எப்படி சமாளிக்க போகின்றன?

சீனா கொரோனா வைரஸால் 17 பேர் பலி

பட மூலாதாரம், Getty Images

சீனாவில் இதுவரை 25 பேர் உயிரிழப்புக்குக் காரணமான புதிய வைரஸ் மேலும் பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கில் வுஹானையடுத்து, மற்றுமொரு சீன நகரும் முடக்கப்படுகிறது.

1.1 கோடி மக்கள் தொகை கொண்ட வுஹான் நகரத்திற்கு வந்து செல்லும் விமானங்கள், ரயில்கள், பொதுப் போக்குவரத்து மற்றும் படகு போக்குவரத்து ஆகியவை ஏற்கனவே முடக்கப்பட்டுள்ளது.

அதே போல வியாழக்கிழமை இரவு முதல் ஹுவாங்காங்க் நகரும் முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. இந்த நகரத்தின் மக்கள் தொகை சுமார் ஆறு மில்லியன் ஆகும்.

வெள்ளிக்கிழமை நிலவரப்படி சீனாவில் இந்த வைரஸ் தொற்றால் 25 பேர் உயிரிழந்துள்ளனர், 830 பேர் பாதிக்கப்டட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சீனாவில் அல்லாது வெளிநாடுகளில் மட்டும் இதுவரை 500க்கும் மேற்பட்டோருக்கு இந்த வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

விமானப் பயணிகள் அனைவரும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டே அனுமதிக்கப்படுவார்கள் என்று பல உலக நாடுகள் அறிவித்துள்ளன.

சீனாவின் வுஹான் நகரத்தில்தான் முதன்முதலில் இந்த வைரஸ் கண்டறியப்பட்டது.

பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Presentational grey line

சீன வைரஸை ஆசிய நாடுகள் எப்படி சமாளிக்க போகின்றன?

பிபிசி மானிடரிங்

சீனாவின் கொரானா வைரஸ், பலருக்கு சார்ஸ் வைரஸ் நெருக்கடியை நியாபகப்படுத்தி வருகிறது. தொற்று நோயாக இது மாறுவதற்கு முன்பே, தேவையான தடுப்பு நடவடிக்கைகள் ஆசியா முழுவதும் எடுக்கப்பட்டு வருகின்றன.

2002ஆம் ஆண்டு பரவிய சார்ஸ் வைரஸால் உலகம் முழுவதும் 774 பேர் கொல்லப்பட்டனர்.

சீனா கொரோனா வைரஸால் 17 பேர் பலி

பட மூலாதாரம், Getty Images

வடகொரியா

• சீன வைரஸ் தனது நாட்டிற்குள் தொற்றாமல் இருப்பதற்காக, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகைக்கு வடகொரியா தடை விதித்துள்ளது.

• வடகொரியாவுக்கு வரும் பெரும்பாலான சுற்றுலா பயணிகள், சீனாவுடனான எல்லைப்பகுதி வழியாக வருகின்றனர். மேலும் வடகொரியா மீதான சர்வதேச பொருளாதார தடைகளில் பட்டியலிடப்படாத ஒரு சில துறைகளில் சுற்றுலாவும் ஒன்று.

• இந்த வாரம், வட கொரியாவின் அரசு ஊடகமான கொரியன் மத்திய தொலைக்காட்சியின் முக்கிய செய்தி நிகழ்ச்சியின் போது, சீனாவில் வைரஸ் பரவி வருவது குறித்தும், அதனை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்தும் செய்தி ஒளிபரப்பப்பட்டது. உள்ளூர் மக்களுக்கு சீன வைரஸ் பரவல் குறித்து தெரிவிப்பதற்காக இந்த முயற்சி எடுக்கப்பட்டது.

• இந்த வைரஸ் பரவுவதை தடுக்க உலக சுகாதார நிறுவனத்துடன் இணைந்து செயலாற்றி வருவதாக வட கொரியாவின் சுகாதார அமைச்சர் அரசு தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்தார்.

தென் கொரியா

• சீனாவின் வுஹான் மாகாணத்திலிருந்து தென்கொரிய தலைநகர் சோலுக்கு விமானம் மூலம் வந்த பெண் ஒருவருக்கு சீன வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர்தான் சீன வைரஸால் தென் கொரியாவில் பாதிக்கப்பட்ட முதல் நபர். அந்த பெண் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தென்கொரியாவின் நோய் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.

சீனா கொரோனா வைரஸால் 17 பேர் பலி

பட மூலாதாரம், Anthony Kwan / getty

• இருப்பினும், இந்த வைரஸ் பரவல் நாட்டின் பொருளாதாரத்திலும், சுற்றுலாத் துறையிலும் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது போல அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிடுவது போன்றுள்ளது.

• சீன சுற்றுலா பயணிகளை தங்கள் நாட்டுக்குள் அனுமதிக்க தென் கொரியா தடை விதித்துள்ளது,

• சீனா மற்றும் தென் கொரியாவுக்கு இடையிலான பதற்றம் குறைந்துள்ள நிலையில், சீன வைரஸ் பரவல், சோலுக்கு வரும் சீன சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என அந்நாட்டு உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

• வைரஸ் பரவல் காரணமாக பங்குச் சந்தையில் சரிவு ஏற்பட்டுள்ளதாக மற்றொரு தென்கொரிய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

News image

ஜப்பான்

• வைரஸ் தொற்று இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நபர்களை தொடர்ந்து கண்காணிப்பில் வைத்திருக்குமாறு ஜப்பான் பிரதமர் ஷின்ஷோ அபே தனது அமைச்சர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் நோயாளிகளை தனிமைப்படுத்தி வைக்கும் நடவடிக்கைகளை வலுப்படுத்துமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

• முப்பது வயதாகும் ஒரு ஜப்பானிய நபருக்கு சீன வைரஸ் தொற்று இருப்பதை அந்நாட்டு அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். அந்த நபருக்கு வைரஸ் தொற்றால் நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

• கனகவா பகுதியை சேர்ந்த ஒரு உணவு பதார்த்த கடை, தனது கடைக்குள் சீன சுற்றுலா பயணிகள் வருவதற்கு தடை விதித்துள்ளது. ஜப்பானிய சமூக வலைதளங்களில் இது பேசு பொருளாகியுள்ளது.

தாய்லாந்து

சீனா கொரோனா வைரஸால் 17 பேர் பலி

பட மூலாதாரம், Kevin Frayer / Getty

• தாய்லாந்தின் பாத்தோம் மாகாணத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சீன வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ள 73 வயது மூதாட்டிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

• தற்போது அந்நாட்டில் மூன்று சீன சுற்றுலா பயணிகள் மற்றும் ஒரு உள்ளூர் நபர் உள்ளிட்ட நால்வருக்கு வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

சிங்கப்பூர்

• தற்போது வரை வைரஸ் தொற்றினால் யாரும் பாதிக்கப்படவில்லை என்றாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அந்நாட்டு அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.

• கடந்த இரண்டு வாரங்களாக நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சீன சுற்றுலா பயணிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளதாக உள்ளூர் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

• மேலும், உலகின் மிகவும் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றான செங்கி விமான நிலையம், சீனாவிலிருந்து வரும் சுற்றுலா பயணிகளை பிரத்யேகமாக பரிசோதனை செய்வதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளதாக தனியார் செய்தி நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியா

• நாடு முழுவதிலும் உள்ள 7 பெரிய விமான நிலையங்களில் சீனாவிலிருந்து வரும் சுற்றுலா பயணிகளை பரிசோதிக்க வேண்டும் என விமான போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது.

• சீனாவின் ஷென்சென் நகரில் உள்ள பள்ளி ஒன்றில் பணியாற்றி வரும் இந்தியாவைச் சேர்ந்த 45 வயது ஆசிரியை ஒருவருக்கு வைரஸ் தாக்குதல் காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

• டெல்லியைச் சேர்ந்த மிண்ட் வர்த்தக நாளிதழிடம் பேசிய சுகாதாரத்துறை நிபுணர் ஒருவர், 'நாட்டின் துறைமுகங்களில் வந்திறங்கும் நபர்களை பரிசோதிக்க போதுமான வசதிகள் இல்லை' என தெரிவித்துள்ளார்.

• இந்திய மாணவர்கள் 500 பேர் கல்வி கற்று வரும் சீனாவின் வுஹான் மாகாணத்திற்கு செல்லும் இந்திய குடிமக்கள் பாதுகாப்பாக செல்ல வேண்டும் என இந்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

Presentational grey line

கொரோனா வைரஸ் - இதுவரை என்ன தெரியும்?

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

Presentational grey line

வங்க தேசம்

• வங்கதேச அதிகாரிகள் உச்சகட்ட எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அந்நாட்டின் ஆங்கில செய்தித்தாளான டாக்கா டிரிப்யூன் செய்தி வெளியிட்டுள்ளது.

• டாக்கா மற்றும் சில்ஹெட் ஆகிய இரண்டு சர்வதேச விமான நிலையங்களில் பயணிகளை சோதனைக்கு உட்படுத்தும் வேலைகள் தொடங்கியுள்ளன. சீனாவுக்கும் சிட்டாகாங் நகருக்கும் எந்த விமானங்களும் இல்லாத போதும், கடந்த ஜனவரி 21ஆம் தேதி முதல் அந்த விமான நிலையத்தில் பயணிகள் சோதிக்கப்பட்டு வருகின்றனர்.

• "மாற்று விமான பயணம் மூலம் எந்த பயணியாவது சீனாவிலிருந்து சிட்டாகாங் வந்திருந்தால், அவர்கள் கண்டிப்பாக பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்" என விமான நிலைய மேலாளர் தெரிவித்ததாக டாக்கா ட்ரிபியூன் செய்தி வெளியிட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: