சௌதி உணவகங்களில் இனி ஆண் - பெண் தனித்தனி நுழைவாயில் தேவையில்லை மற்றும் பிற செய்திகள்

பட மூலாதாரம், Getty Images
சௌதி அரேபியாவில் உள்ள உணவகங்கள் இனி ஆண்கள் - பெண்களுக்கு என்று தனித் தனி நுழைவாயில் வைத்திருக்கவேண்டிய அவசியமில்லை என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இதுவரை, அந்நாட்டில் உள்ள உணவகங்கள் குடும்பங்கள் மற்றும் பெண்களுக்கு என்று ஒரு நுழை வாயிலும் தனியாக வரும் ஆண்களுக்கு மட்டும் தனியாக ஒரு நுழைவாயிலும் வைத்திருக்க வேண்டியது கட்டாயம் என்று இருந்தது.
அதே போல உணவகங்களின் உள்ளேயும், ஆண்கள் மட்டுமே இருக்கும் பகுதியும் பெண்கள் மற்றும் குடும்பமாக வந்த வாடிக்கையாளர்கள் இருக்கும் பகுதியும் திரைச்சீலை கொண்டு பிரிக்கப்பட்டு இருக்கும்.
எனினும், ஏற்கெனவே இந்த கட்டுப்பாடு கொஞ்சம் கொஞ்சமாக நடைமுறையில் தளர்ந்து வந்தது. பல உணவகங்கள், காபிக் கடைகள், சந்திக்கும் இடங்கள் போன்றவை இத்தகைய பாலினப் பிரிவினை முறையை கைவிட்டுவந்தன.
இந்நிலையில், உணவகங்கள் பாலின அடிப்படையில் நுழைவாயில் வைத்திருப்பது கட்டாயம் அல்ல என்றும், அப்படி தனித்தனி நுழைவாயில் வேண்டுமா என்பதை அந்தந்த உணவகங்களே முடிவு செய்துகொள்ளலாம் என்றும் சௌதி அரேபியாவின் நகராட்சி அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை கூறியுள்ளது.
பழமைவாத சமூகத்தில் மாற்றம்
2017ம் ஆண்டு முகமது பின் சல்மான் பட்டத்து இளவரசராக பதவி உயர்த்தப்பட்டதில் இருந்து, பழமைவாத சௌதி அரேபிய சமூகத்தை தாராளவாதத்தின் பக்கம் கொண்டு செல்ல அவர் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

பட மூலாதாரம், Getty Images
இத்தகைய நடவடிக்கைகள் சர்வதேச சமூகத்தால் பாராட்டப்படுகின்றன. அதே நேரம் அடுக்கடுக்கான ஒடுக்குமுறைகளும் அங்கே அரங்கேறி வருகின்றன.
சௌதி அரேபியாவில் அடுத்தடுத்து இப்படிப் பல சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவரும் அதே நேரம், கருத்து மாறுபடும் உரிமை பெரிய அளவில் நசுக்கப்பட்டும் வருகிறது.
அரசை விமர்சித்துவந்த சௌதி பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி துருக்கியில் உள்ள சௌதி தூதரகத்தில் 2018ம் ஆண்டு கொல்லப்பட்டது உரிமைகள் நசுக்கப்படுவதன் எடுத்துக்காட்டாக உள்ளது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் ஆண் துணையில்லாமல் பெண்கள் தனியாகப் பயணிப்பதற்கு இருந்த தடையை ரத்து செய்த சௌதி, கடந்த ஆண்டு பெண்கள் வண்டி ஓட்டுவதற்கு இருந்த தடையை அகற்றியது.
ஆனால், பெண்களுக்கு எதிராக பாகுபாடு காட்டும் பல சட்டங்கள் இன்னும் இருக்கவே செய்கின்றன என்று செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.
அரசாங்கம் சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுவந்தாலும், பெண்ணுரிமை செயற்பாட்டாளர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உன்னாவ் வழக்கு: நட்பு, திருமணம், பாலியல் வல்லுறவு மற்றும் எரித்துக் கொலை - நடந்தது என்ன?

உன்னாவ் பாலியல் வல்லுறவினால் பாதிக்கப்பட்ட பெண், டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை பின்னிரவு நேரத்தில் மரணம் அடைந்தார்.
தீக்காயங்கள் அடைந்த அந்தப் பெண்ணைக் காப்பாற்றுவதற்காக லக்னோவில் இருந்து டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் இரண்டு நாட்களில் அவர் தீக்காயங்களுக்குப் பலியானார்.
பெண்ணின் வீட்டில் ஏற்கெனவே துயரம் படர்ந்துவிட்டது. ஆனால், அந்தப் பெண்ணின் மரணத்துக்குப் பிறகு கிராமம் முழுக்க சோகத்தில் மூழ்கியுள்ளது. அதேசமயத்தில், அதே கிராமத்தில் வசிக்கும், குற்றஞ்சாட்டப்பட்ட நபர்களின் உறவினர்கள், தங்களுக்கு எதுவும் தெரியாது என்று கூறுகின்றனர். கிராமத்தில் பெருமளவிலான காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
விரிவாகப் படிக்க:உன்னாவ் வழக்கு: நட்பு, திருமணம், பாலியல் வல்லுறவு மற்றும் எரித்துக் கொலை - நடந்தது என்ன?

மீண்டும் உச்ச நீதிமன்றத்தை நாடுகிறது திமுக

கிராமப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்கள் இன்று முதல் பெறப்படும் நிலையில், உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் தேர்தலை நடத்தவேண்டும் என்பதற்காக திமுக மீண்டும் நீதிமன்றத்தை நாடவுள்ளதாக தெரிவித்துள்ளது.
சென்னையில் நேற்று (டிசம்பர் 8) நடைபெற்ற திமுக மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் குறித்து விவாதிக்கப்பட்டது.
விரிவாகப் படிக்க:உள்ளாட்சித் தேர்தல்: மீண்டும் உச்ச நீதிமன்றத்தை நாடுகிறது திமுக

யார் இந்த பில்லா, ரங்கா? இவர்கள் தூக்கில் போடப்பட்டது எப்படி?

பட மூலாதாரம், Twitter
1982ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதியன்று திஹார் ஜெயிலில் இருந்த இரண்டு கொலைகாரர்களுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முடிந்துவிட்டன.
காலை ஐந்து மணிக்கு இருவரும் எழுந்த்தும், அவர்களுக்கு தேநீர் வழங்கப்பட்டது.
மாஜிஸ்ட்ரேட்டின் முன்னிலையில் எதாவது பதிவு செய்ய விரும்புகிறார்களா என்று இறுதியாக அவர்களிடம் கேட்கப்பட்டது.
தேவையில்லை என்று இருவரும் மறுத்துவிட, தண்டனை வழங்குவதற்கு பத்து நிமிடத்திற்கு முன்னதாக தூக்குமேடைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
விரிவாகப் படிக்க:யார் இந்த பில்லா, ரங்கா? இவர்கள் தூக்கில் போடப்பட்டது எப்படி?

மணமக்களுக்கு வெங்காயம் பரிசளித்த கடலூர் நண்பர்கள்

பருவம் தவறிய மழையால் வெங்காய விளைச்சல் பாதிக்கப்பட்டு, விலை விண்ணைத் தொட்டுவருகிறது.
இதனால் நுகர்வோரும், சில்லறை வணிகர்களும் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர். சமையலில் அத்தியாவசியப் பொருளான வெங்காயத்தை எளிய மக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று பலரும் புகார் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் கடலூர் மஞ்சக்குப்பத்தில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில் மணமக்களுக்கு வெங்காயம் பரிசளிக்கப்பட்ட சுவாரசிய சம்பவம் நடந்துள்ளது.
விரிவாகப் படிக்க:மணமக்களுக்கு வெங்காயம் பரிசளித்த கடலூர் நண்பர்கள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












