மணமக்களுக்கு வெங்காயம் பரிசளித்த கடலூர் நண்பர்கள்

பருவம் தவறிய மழையால் வெங்காய விளைச்சல் பாதிக்கப்பட்டு, விலை விண்ணைத் தொட்டுவருகிறது.
இதனால் நுகர்வோரும், சில்லறை வணிகர்களும் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர். சமையலில் அத்தியாவசியப் பொருளான வெங்காயத்தை எளிய மக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று பலரும் புகார் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் கடலூர் மஞ்சக்குப்பத்தில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில் மணமக்களுக்கு வெங்காயம் பரிசளிக்கப்பட்ட சுவாரசிய சம்பவம் நடந்துள்ளது.
சப்ரீனா - ஷாகுல் ஆகிய இருவருக்கும் நடந்த திருமணத்தில் அவரது நண்பர்கள் சேர்ந்து வெங்காயத்தை திருமணப் பரிசாக அளித்தனர். இது திருமண விழாவுக்கு வந்திருந்தவர்களுக்கு வியப்பையும், குறுகுறுப்பையும் தந்தது.

பட மூலாதாரம், Getty Images
வெங்காயம் பரிசளித்தவர்களில் ஒருவரான சித்தன் இது பற்றி சொல்லும்போது "திருமண சமையலுக்கு காய்கறி வாங்க கடலூர் மஞ்சக்குப்பம் மார்க்கெட் சென்றபோது வெங்காயத்தின் விலை கிலோ 180 ரூபாயில் இருந்து 200 ரூபாய் வரை இருந்தது.
வேறு வழி இல்லாமல் வாங்கி வந்தோம். ஆனால், பிரியாணிக்கு வழக்கம் போல தேவையான அளவு வெங்காயம் போடாமல் வெள்ளரிக்காய் பயன்படுத்தினோம். எனவே, பழங்களை விட அதிக விலைக்கு விற்கும் வெங்காயத்தை மணமக்களுக்கு திருமணப் பரிசாக அளிக்க நண்பர்கள் அனைவரும் முடிவெடுத்தோம். மார்க்கெட் சென்று 5 கிலோ வெங்காயம் வாங்கி வந்து பரிசளித்தோம். மணமக்கள் இந்த எதிர்பாராத பரிசைப் பார்த்து அதிர்ச்சியும் பின்பு மகிழ்ச்சியும் அடைந்தனர்" என்று தெரிவித்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












