செளதி மாணவர் அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு நடத்தியது ஏன்? - விரிவான தகவல்கள்

பட மூலாதாரம், Getty Images
அமெரிக்காவின் ஃபுளோரிடாவிலுள்ள கடற்கரை தளத்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய சௌதி அரேபியாவை சேர்ந்த துப்பாக்கிதாரி, இந்த தாக்குதலில் ஈடுபடுவதற்கு முன்னர், துப்பாக்கிச்சூடுகள் குறித்த காணொளியை பார்த்ததாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஃபுளோரிடாவின் பென்சாக்கோலாவில் ஏவியேஷன் பயின்று வரும் சௌதி மாணவர், உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை காலை 6:51 மணிக்கு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் உயிரிழந்தனர், குறைந்தது 8 பேர் காயமடைந்துள்ளனர்.
சில நாட்களுக்கு முன்னர், துப்பாக்கிச்சூடு சார்ந்த காணொளிகளை அவர் மற்ற மாணவர்களுக்கும் காண்பித்ததாக அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறியதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், தாக்குதல் நடத்திய சௌதி மாணவருக்கு சொந்தமானதாக கருதப்படும் ட்விட்டர் பக்கத்தில், இந்த தாக்குதல் நடத்தப்படுவதற்கு முன்னதாக அமெரிக்கா குறித்த எதிர்மறையான கருத்துகள் பதியப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், இந்த தாக்குதல் குறித்த விசாரணை ஆரம்ப நிலையிலேயே உள்ளதால், இதை 'தீவிரவாத' நடவடிக்கையாக கருத முடியாது என்று அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலர் மார்க் எஸ்பெர் தெரிவித்துள்ளார்.
டிரம்ப் - சல்மான் பேச்சு
அமெரிக்க கடற்படைத் தளத்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய சௌதி மாணவரை "காட்டுமிராண்டித்தனமானவர்" என்று சௌதி அரேபியாவின் மன்னர் சல்மான் கண்டித்துள்ளார் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.
சௌதி மன்னர் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்குமாறு தன்னிடம் கேட்டுக்கொண்டார் என அதிபர் டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு சௌதி அரசாங்கம் "கடன்பட்டிருக்கிறது" என்று ஃப்ளோரிடா ஆளுநர் ரான் டிசாண்டிஸ் கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
அமெரிக்கக் கடற்படைத் தளத்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய சௌதி மாணவரை "காட்டுமிராண்டித்தனமானவர்" என்று சௌதி அரேபியாவின் மன்னர் சல்மான் கண்டித்துள்ளார் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.
தாக்குதல் நடத்தியது ஏன்?
தாக்குதல் நடத்தியவரின் பெயர் முகமது சயீத் அல்ஷாம்ரானி என்று அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதன் நோக்கத்தை இன்னும் எஃப்.பி.ஐ அறிவிக்கவில்லை, ஆனால் பயங்கரவாதத்துடன் தொடர்பு உள்ளதா என்று விசாரித்து வருகிறது.
மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்கா உடன் தொடர்ந்து நட்பு பாராட்டும் ஒரே நாடாக சௌதி அரேபியா விளங்குகிறது. இவ்விரு நாடுகளும் நீண்ட காலமாக ராணுவ ஒப்பந்த திட்டங்களையும் மேற்கொண்டு வருகின்றன.

பட மூலாதாரம், Reuters
துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கு செளதி அரேபியா கண்டனம்
''செளதி அரேபியாவின் மன்னர் சல்மான் தனது இரங்கலைத் தெரிவித்து, தாக்குதலில் கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்த வீரர்களின் குடும்பங்கள் மற்றும் நண்பர்களுக்கு தனது அனுதாபங்களையும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டார்'' என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
செளதி வெளியுறவு அமைச்சகம் இந்த தாக்குதலை "கொடூரமானது" என்று கூறியதுடன், விசாரணைக்கு "முழு ஆதரவையும்" வழங்கத் தயாராக இருப்பதாகவும் தனி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அக்டோபர் 2018ம் ஆண்டு துருக்கியில் உள்ள தூதரகத்தில் பத்திரிக்கையாளர் ஜமால் கஷோக்ஜி கொல்லப்பட்டுள்ள பிறகும் கூட அமெரிக்க அதிபர் டிரம்ப் செளதி தலைவர்களுடன் நல்ல நட்பு பாராட்டி வருகிறார்.

பென்சாக்கோலாவில் நடத்தப்பட்ட தாக்குதல் எவ்வாறு வெளிவந்தது?
உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை காலை 6:51 மணிக்கு பென்சகோலாவின் தென்மேற்கு நீர்முனையில் உள்ள ஒரு வகுப்பறையில் துப்பாக்கிச் சூடு நடந்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
செரிப்பின் துணை அதிகாரி, துப்பாக்கிச் சூடு நடத்திய மாணவரைச் சுட்டுக் கொன்ற போதுதான் தாக்குதல் முடிவுக்கு வந்துள்ளது.
"தாக்குதல் குறித்து விவரிக்கும்போது, திரைப்படம் போல எனக்குத் தோன்றுகிறது'' என எஸ்காம்பியா கவுண்டியின் ஷெரிப் டேவிட் மோர்கன் கூறுகிறார்.
பென்சகோலாவின் கடற்படை விமான நிலையத்தில் 16,000க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்களும் ,மற்ற துறைகளில் 7,400 பேர் பணியாற்றுவதாக அதிகாரபூர்வ இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
துப்பாக்கி சூடு நடத்திய மாணவர் யார் ?
முகமது சயீத் அல்ஷாம்ரானி சௌதி விமானப்படையில் இரண்டாவது லெப்டினெண்டாக பயிற்சி எடுத்துக்கொண்டிருந்தார் என்று அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனர்.
இந்த தாக்குதலுக்குப் பிறகு, துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தின் அருகே இருந்த பல சௌதி நாட்டவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகப் பெயரிடப்படாத ஆதாரங்களை மேற்கோளிட்டு நியூயார்க் நேரம் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் சமீபத்திய வாரங்களில் 18 சௌதி கடற்படை விமானிகள் மற்றும் இரண்டு விமானக் குழு உறுப்பினர்கள் பென்சகோலாவில் பயிற்சி பெற்று வந்தனர் என்று அமெரிக்கக் கடற்படையினர் தெரிவிக்கின்றனர்.
ஃப்ளோரிடாவின் முன்னாள் ஆளுநரான செனட்டர் ரிக் ஸ்காட், அமெரிக்க மண்ணில் பயிற்சி பெற்று வரும் வெளிநாட்டு இராணுவ வீரர்களுக்கான திட்டங்களை மறு ஆய்வு செய்ய வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார். நமக்குத் தீங்கு விளைவிக்கும் வெளிநாட்டவர்களுக்கு ராணுவ பயிற்சி அளிக்கக்கூடாது என அவர் மேலும் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
செளதி பாதுகாப்பு துறையின் துணை அமைச்சர் காலித் பின் சல்மான், ''செளதி இராணுவத்தில் உள்ள பலரைப் போலவே அவரும் அமெரிக்க தளத்தில் பயிற்சி பெற்றதாகக் கூறுகிறார்.''
கடந்த வாரம் ஹவாயிலுள்ள அமெரிக்க கடற்படை தளத்தில் அந்நாட்டு மாலுமி ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழந்த சம்பவம் நடந்தேறிய இரண்டே நாட்களில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்:
- "குழந்தை என்னை அடித்தால்கூட அவர் தாங்கமாட்டார்" - சூடானில் இறந்த தமிழரின் மனைவி குமுறல்
- 30 கோடி சந்தாதாரர்களை பாதிக்கும் குறைபாட்டை சரிசெய்த ஏர்டெல் - நடந்தது என்ன?
- உன்னாவ் பாலியல் வல்லுறவு வழக்கு: தீ வைக்கப்பட்ட பெண் உயிரிழப்பு - நடந்தது என்ன?
- உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்: இந்தி கற்பிக்கும் முயற்சி நிறுத்தம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












