உணவு வீணாவதை குறைக்க ஏழு வழிகள்: வீட்டில் செய்வது முதல் பொருட்களை வாங்குவது வரை

பழங்களை வாங்கும் பெண்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சாப்பிடுவதை விட அதிக பொருட்களை வாங்க பலரும் முற்படுகின்றனர். எனவே, பொருட்களை வாங்குவதில் புத்திசாலிதனமாக இருங்கள்.

ஒவ்வோர் ஆண்டும் சுமார் 130 கோடி டன் உணவுப் பொருட்கள் வீணாகின்றன. வீணாகும் உணவுப் பொருட்களின் பெரும்பகுதி விளைவிக்கப்படும் நிலத்திலேயே வீணாகிறது. பருவநிலை மாற்றமும் இதற்கு ஒரு காரணமாகும்.

"உணவு வீணாதல் மனிதகுலம் எதிர்கொள்ளும் மிக பெரியதொரு பிரச்சனை," என்கிறார் நியூயார்க் நகரைச் சேர்ந்த சமையல் கலைஞர் மேக்ஸ் லா மன்னா.

"மோர் பிளான்ஸ், லெஸ் வேஸ்ட்" என்ற நூலின் ஆசிரியரான இவர், உணவு வீணாவதை குறைக்க தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவராலும் பங்காற்ற முடியும் என்கிறார்.

"எனது வாழ்க்கைக்கு உணவு முக்கியமானதாக உள்ளது. தந்தைக்கு சமையல்காரர் இருந்ததால், அதிக உணவு கிடைக்கும் நிலைமையில் நான் வளர்ந்தேன். உணவை வீணாக்கக்கூடாது என்பதை எனது பெற்றோர் எனக்கு சொல்லி கொடுத்தார்கள்," என்கிறார் மேக்ஸ் லா மன்னா.

மேக்ஸ் லா மன்னா

பட மூலாதாரம், Andrew Burton

படக்குறிப்பு, சமையல் கலைஞர் மேக்ஸ் லா மன்னா

சுமார் 700 கோடி மக்கள் வாழும் இந்த பூமியில் எல்லா நிலைகளிலும் உணவு பாதுகாப்பின்மையை எதிர்கொண்டுள்ளோம். 82 கோடி மக்களுக்கும் மேலானோர் போதிய உணவில்லாமல் வாழ்ந்து வருகின்றனர்.

உணவு வீணாதல் இன்றைய தினம் மனிதகுலம் எதிர்கொள்ளும் மிக பெரியதொரு பிரச்சனையாகும். உற்பத்தி செய்யப்படும் மூன்றில் ஒரு பங்கு உணவு வீணாகி விடுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

உணவு வீணாதல் என்பது, உணவு பொருட்கள் வீணாவதை மட்டுமே குறிப்பதில்லை. அந்த உணவை உற்பத்தி செய்ய பயன்படுத்தப்பட்ட பணம், நீர், உழைப்பு, நிலம் மற்றும் போக்குவரத்து அனைத்தும் வீணாவதை இது குறிக்கிறது.

உணவை வீணாக்கி விடுவது கூட பருவநிலை மாற்றத்திற்கு பங்காற்ற முடியும். இவ்வாறு வீணாகும் உணவு குப்பைக்கு செல்வதால், மீத்தேன் வாயு உருவாகிறது.

வீணாகும் உணவுப் பொருட்களின் அளவை ஒரு நாட்டில் வீணாகும் அளவாகக் கருத்துவோமானால், அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு அடுத்தபடியாக அதிகப்படியான பசுங்குடில் வாயுக்களை வெளியேற்றும் நாடாக அந்நாடு விளங்கும்.

இந்நிலையை மாற்றுவதற்கு என்ன செய்யலாம் என்பதை விளக்குவதுதான் இந்த கட்டுரை.

1. புத்திசாலித்தனமாக பொருட்களை வாங்குதல்

காய்கறிகள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, உலகில் உற்பத்தி செய்யப்படும் மூன்றில் ஒரு பங்கு உணவு வீணாகி விடுகிறது

தங்களுக்கு தேவையானதைவிட அதிகமான பொருட்களை பலரும் வாங்க முற்படுகின்றனர்.

வாங்குகின்ற பொருட்களை பட்டியலிட்டு, அந்த பட்டியலில் இருந்து உங்களுக்கு மிகவும் தேவையான பொருட்களை மட்டுமே வாங்குங்கள்.

மீண்டும் சென்று பொருட்களை வாங்குவதற்கு முன்னால், கடந்த முறை வாங்கியுள்ள அனைத்து உணவு பொருட்களையும் சமைத்து விட்டோமா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

2. உணவு பொருட்களை சரியாக சேமித்து வைக்கவும்

பழங்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தவறான உணவு வகைகளை குளிர்சாதன பெட்டியில் வைப்பதால், அதிக உணவு வீணாகும்

உணவு பொருட்கள சரியாக சேமிக்காவிட்டால், உணவு வீணாவதற்கு வழிவகுக்கும்.

பழங்களையும், காய்கறிகளையும் பாதுகாப்பாக வைப்பது எப்படி என்று பலருக்கும் சரியாக தெரியாததால், சரியான நேரத்திற்கு முன்னரே அவை பழுத்து, அழுகி விடுகின்றன.

எடுத்துக்காட்டாக, உருளைக்கிழங்கு, தக்காளி, வெள்ளைப்பூண்டு மற்றும் வெங்காயத்தை குளிர்பதன பெட்டியில் வைக்கக்கூடாது. அறையில் நிலவும் தட்பவெப்பத்தில்தான் அவை வைக்கப்பட வேண்டும்.

கீரை மற்றும் மூலிகை தண்டுகளை தண்ணீரில் வைத்து கொள்ளலாம்.

காலக்கெடு முடிவதற்குள் சாப்பிட்டுவிட முடியாது என்று எண்ணினால், ரொட்டி துண்டை குளிர்சாதன பெட்டியில் வைத்துகொள்ளவும்.

நீங்கள் வாங்குன்ற பொருட்களை முடிந்தால் விவசாயியிடம் இருந்து நேரடியாக வாங்குங்கள். மளிகை கடையில் வாங்கினால், சற்று குறையுள்ள பொருட்களை வாங்குங்கள்.

3. மீதியுள்ள உணவை சேமியுங்கள் (அவற்றையும் சாப்பிடுங்கள்)

மீதியான உணவை பயன்படுத்த பல வழிமுறைகள் உள்ளன

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மீதியான உணவை வீணாக்காமல் இருக்க பல வழிமுறைகள் உள்ளன

மீதியான உணவுகள் விடுமுறை நாட்களுக்காக மட்டும் வைக்கப்படுவதில்லை.

நீங்கள் அதிகமாக சமைப்பதால், வழக்கமாகவே உணவுகள் மீதியாகுமானால், குளிர்பதன பெட்டியில் வைத்திருக்கும் அந்த உணவை உண்டு முடிப்பதற்கு ஒரு நாளை ஒதுக்குங்கள்.

மீதியான உணவை வீணானதாக வீசிவிடுவதை தவிர்க்கும் சிறந்த வழியாக இது இருக்கும். இதனால், உங்கள் நேரமும், பணமும் மிச்சமாகும்.

4. குளிர்சாதன பெட்டி நன்றாக பயன்படுத்துங்கள்

பதப்படுத்தப்பட்ட காய்கறிகள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, உணவையும், சமையல் பொருட்களையும் பதப்படுத்தி உறைநிலையில் வைத்து கொள்வது உணவை பாதுகாக்க உதவும்

உணவை பதப்படுத்தி வைப்பது அதனை பாதுகாக்கின்ற மிக எளிய வழிகளில் ஒன்றாகும். உறைநிலையில் வைத்து பாதுகாக்கும் உணவு பொருட்கள் பல உள்ளன.

எடுத்துக்காட்டாக, உங்களுக்கு பிடித்தமான சலாட்டுகளில் பயன்படுத்துகின்ற மிகவும் மென்மையான பச்சை பயிறுகளை, பைகளில் அல்லது கலன்களில் போட்டு ஃபிரீஸரில் வைத்து பின்னர் பயன்படுத்தி கொள்ளலாம்.

மீதியான கீரை மற்றும் மூலிகை செடிகள் இருந்தால், அவற்றை எண்ணெயில் கலந்து, நறுக்கிய வெள்ளைப்பூண்டோடு சில சுவையூட்டிகளையும் சேர்த்து ஐஸ்கட்டி உறைய வைக்கும் ட்ரேயில் வைத்து பின்னர் சாப்பிடலாம்.

உங்களுக்கு பிடித்தமான உணவு மீதியாகிவிட்டால், அவற்றை உறைநிலையில் வைத்து பாதுகாக்கலாம். ஆரோக்கியமான, வீட்டில் சமைத்த உணவு எப்போதும் உட்கொள்வதை இதன் மூலம் உறுதி செய்துகொள்ள முடியும்.

5. மதிய உணவை எடுத்து செல்லுங்கள்

மீதியான உணவை சேமித்து வைக்கும் கொள்கலன்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மீதியான உணவை கொள்கலனில் அடைத்து சேமித்து வைத்தால், உணவை வீணாக்குவதை குறைக்கலாம்

உங்களோடு வேலை செய்பவரோடு மதிய உணவுக்கு வெளியே செல்வது அல்லது உங்களுக்கு பிடித்தமான உணவகத்தில் உணவு உட்கொள்வது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கலாம். ஆனால், இதனால் அதிகம் செலவாகும். உணவை வீணாக்குவதற்கும் இது வழிவகுக்கும்.

பணத்தை சேமிப்பதற்கும், கரியமில வாயு வெளியேற்றத்திற்கு நீங்கள் காரணமாவதை தடுக்கவும் உங்களுக்கான மதிய உணவை நீங்களே எடுத்து வரலாம்.

காலையில் நேரம் குறைவாக இருக்கும் என்றால், முந்தைய நாள் மீதியானதை கொள்கலனில் சேமித்து குளிர்நிலையில் வைத்து விடவும். இவ்வாறு முன்னரே செய்யப்பட்ட, பிடித்தமான மதிய உணவை நீங்கள் எப்போதும் கொண்டு செல்லலாம்.

6.வீட்டில் இருக்கும் பொருட்களில் உணவை தயார் செய்யவும்

சமைக்கும் ஆண்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, எஞ்சிய காய்கறி துண்டுகளை கொண்டு சமைப்பது பணத்தை சேமிக்க உதவும்

வீட்டில் இருக்கும் காய்கறிகளை கொண்டு உணவை தயார் செய்வது உணவு வீணாவதை தடுக்கும் எளிதான வழியாகும்.

முளைகள், தண்டுகள், தோல்கள் மற்றும் எஞ்சியிருப்பவற்றை ஆலீவ் எண்ணெய் அல்லது வெண்ணெயில் போட்டு வதக்கவும். பின்னர் தண்ணீர் சேர்த்து நறுமணம் மிக்க காய்கறி குழம்பாக சமையுங்கள்.

7. முடிந்தால் உரம் தயாரியுங்கள்

உரக்குழியில் வீணான உணவை போடும் பெண்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சிறிய வீடுகளில் வீணான உணவை உரமாக்கும் வதிகளும் இப்போது உள்ளன.

மீதமாகும் உணவு பொருட்களை உரமாக உருவாக்குவது, வீணாகும் உணவை தாவரங்கள் வளரும் சக்தியாக உருமாற்றுவதாக அமையும்.

வீணான உணவுப் பொருட்களை வீட்டுக்கு வெளியே வைத்து உரமாக்க இட வசதி இல்லாமல் போகலாம். மாடிகளில் உரமாக மாற்றும் பல அமைப்புகளும் உள்ளன. இதனால் குறைவான இடம் இருந்தாலும் அனைவரும் விணாகும் உணவு பொருட்களை உரமாக மாற்றுவதற்கான வசதி உள்ளது.

பெரிய தோட்டம் கொண்டிருப்போருக்கு உரக்குழி முறை நன்றாக வேலை செய்யலாம். வீட்டு தாவரங்கள் அல்லது சிறிய செடி தோட்டங்களோடு நகர்புறங்களில் வாழ்வோருக்கும் உரமாக்கும் மாடி அமைப்பு முறைகள் உதவலாம்.

சிறிய முயற்சிகள், பெரிய பயன்கள்

வீணாகும் உணவு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பொருட்கள் வாங்குவதில், சமைப்பதில், உணவு உட்கொள்வதில் செய்யக்கூடிய சிறிய மாற்றங்கள், சுற்றுச்சூழல் பாதிப்புகளை குறைக்கும்.

உணவு வீணாவதை நாம் அனைவருமே தடுக்க முடியும். இதற்கு பல வழிமுறைகள் உள்ளன.

ஒவ்வொரு நாளும் உங்கள் வீட்டில் இருந்து வெளியே எறியப்படும் உணவை பார்த்து, பூமியின் மிகவும் விலை மதிப்பற்ற மூலவளங்களை பாதுகாப்பதற்கு நேர்மறை மாற்றங்களை கொண்டு வர நீங்களே உதவலாம்.

பொருட்கள் வாங்குவதில், சமைப்பதில், உணவு உட்கொள்வதில் நீங்கள் செய்யக்கூடிய சிறிய மாற்றங்கள் கூட சுற்றுச்சூழலில் ஏற்படும் பாதிப்பை குறைக்க உதவும். இவை கடினமான முயற்சிகளாக இருக்க வேண்டிய தேவையில்லை.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

குறிப்பு - இந்த கட்டுரை பிபிசி எர்த்-தில் முதலில் வெளியிடப்பட்டது.