கோவை முஸ்கான் ரித்திக் கொலை வழக்கு - மரண தண்டனையை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்

உச்சநீதிமன்றம்

பட மூலாதாரம், Hindustan Times / Getty images

தமிழகத்தையே உலுக்கிய கோவை பள்ளி மாணவர்கள் ரித்திக் மற்றும் முஸ்கான் கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளி மனோகரனுக்கு தூக்கு தண்டனையை உறுதி செய்துள்ளது உச்ச நீதிமன்றம்.

2010ஆம் ஆண்டு கோவையை சேர்ந்த பள்ளிக் குழந்தைகள் முஸ்கான் மற்றும் ரித்திக் ஆகியோரை கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் தனது தூக்கு தண்டனையை குறைக்கக் கோரி மனோகரன் சீராய்வு மனு தாக்கல் செய்திருந்தார். அதனை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது.

கடந்த 2010 ஆண்டு கோவையில் தனியார் பள்ளி ஒன்றில் படித்து வந்த சிறுமி முஸ்கான்(10), சிறுவன் ரித்திக்(07) ஆகியோர், அந்த குழந்தைகளின் முன்னாள் பள்ளி வாகன ஓட்டுநர் மோகன்ராஜ் எனும் மோகனகிருஷ்ணன் என்பவரால் கடத்திப் படுகொலை செய்யப்பட்டனர்.

அவர்களது உடல்கள் பொள்ளாச்சி அருகே கண்டெடுக்கப்பட்டன. விசாரணையில், சிறுமி முஸ்கான் பாலியல் வல்லுறவுக்கு உள்ளானதும் சிறுவன் ரித்திக் உடல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டதும் உறுதி செய்யப்பட்டது. இது தொடர்பாக மோகன்ராஜூம், அவரது நண்பர் மனோகரும் கைது செய்யப்பட்டனர்.

முதலில் பெற்றோரிடம் பணம் கேட்டு மிரட்ட அவர்கள் முடிவு செய்ததாகவும் பின்னர் அச்சத்தின் காரணமாக அவர்களைக் கொலை செய்ததாகவும் அப்போது காவல்துறை தெரிவித்தது.

என்கவுண்டரில் இறந்த மோகன்ராஜ்

கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் இருவரையும் குற்றம் நடந்த இடத்துக்கு அழைத்துச் சென்றபோது நவம்பர் 9, 2010 அன்று, காவலர் ஒருவரின் துப்பாக்கியை பிடுங்கி வண்டியை நிறுத்துமாறு மோகன்ராஜ் மிரட்டினார் என்றும், அப்போது என்கவுண்டர் செய்து கொல்லப்பட்டார் என்று பின்னர் காவல் அதிகாரிகள் கூறினர்.

முஸ்கான்
படக்குறிப்பு, முஸ்கான்

கோவை மாவட்ட மகளிர் நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்ட இந்த வழக்கில் மனோகரனுக்கு இரட்டை தூக்குத் தண்டனையும், மூன்று ஆயுள் தண்டனையும் விதித்துக் கடந்த 2012, நவம்பர் 1ல் தீர்ப்பு வழங்கப்பட்டது.

சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் ஆகியன மகளிர் நீதிமன்றத் தீர்ப்பை உறுதிசெய்தன.

மனோகரன் தரப்பு வாதம் என்ன?

இதைத்தொடர்ந்து, மனோகரன் தரப்பில், கடந்த 2014ம் ஆண்டு செப்டம்பர் மாதம் உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. தனக்கு வழங்கப்பட்டுள்ள மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று மனோகரன் கேட்டிருந்தார்.

ரித்திக்
படக்குறிப்பு, ரித்திக்

மனோகர் தனது மனுவில், கீழமை நீதிமன்றத்தில் தன்னுடைய தரப்பில் ஆஜராக எந்த வழக்கறிஞரும் முன்வரவில்லை என்றும் தம்மால் முன்வைக்கப்பட்ட வாதங்களும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்றும் மனோகரன் கூறியிருந்தார்.

மேலும், முதல் குற்றாவாளி மோகன்ராஜ்தான் என்றும் தாம் இரண்டாவது குற்றவாளிதான் என்றும் குறிப்பிட்டார்.

இதற்கான எதிர்த்தரப்பு வாதங்களை தமிழக அரசு எழுத்துப்பூர்வமாக சமர்பித்து இருந்தது.

மாறுபட்ட தீர்ப்பு

இந்த மறுசீராய்வு மனு மீது மூன்று நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளது.

அமர்வில் இருந்த நீதிபதிகள் ரோஹிங்டன் பாலி நரிமன் மற்றும் சூரியகாந்த் ஆகியோர், மனோகருக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை உறுதி செய்தனர்.

அந்த அமர்வில் இருந்த நீதிபதி சஞ்சீவ் கண்ணாவின் தீர்ப்பு மாறுபட்டுள்ளது.

அவரது தீர்ப்பில், "மனோகர் செய்தது இரக்கமாற்ற செயல். அதை எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது. ஆனால், மனிதாபிமான அடிப்படையில் அவரது தண்டனையை குறைக்கலாம்" என்று கூறப்பட்டிருக்கிறது.

ஆனால், பெரும்பான்மை முடிவே தீர்ப்பாக எடுத்துக் கொள்ளப்படும் என்பதால், மனோகரின் மறு சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டு மரண தண்டனை உறுதியாகியுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :