பாலியல் கொடுமைக்கு உள்ளான மாணவிகள்: டியூஷன் ஆசிரியை, ஆண் நண்பர் கைது

பட மூலாதாரம், Tinnakorn Jorruang / Getty
இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான சில முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.
டைம்ஸ் ஆஃப் இந்தியா - மாணவிகளை ஆபாசமாக படம் எடுத்த டியூஷன் ஆசிரியை
டியூஷன் படிக்க வந்த மாணவிகளை மிரட்டி அவர்களை ஆபாசமாக படம் பிடித்ததாக குற்றம்சாட்டப்பட்டு சென்னையைச் சேர்ந்த 28 வயதாகும் டியூஷன் ஆசிரியை மற்றும் அவரது அண்டை வீட்டு ஆண் நண்பர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட அந்த நபர் இந்தக் காணொளிகளை வைத்து மிரட்டி மாணவிகளை பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளார். அதற்கு அந்த ஆசிரியை உதவியுள்ளார் என்று அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இதை வெளியில் சொன்னால் அந்தக் காணொளிகள் இணையத்தில் பகிரப்படும் என்று அந்த மாணவிகள் மிரட்டப்பட்டுள்ளனர்.
வேறு பல மாணவிகளும் இவ்வாறு மிரட்டி படம் எடுக்கப்பட்டிருக்கலாம் என்று காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர் என்றும் அவர்களில் 14 வயதாகும் ஒரு மாணவி மட்டுமே புகார் கொடுக்க முன்வந்ததாகவும் அந்த செய்தி தெரிவிக்கிறது.
இருவர் மீதும் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம், பாலியல் வல்லுறவு உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி - வீட்டுவசதித் திட்டங்களுக்கு ரூ.25,000 கோடி

பட மூலாதாரம், Getty Images
நிலுவையில் இருக்கும் சுமார் 1,600 வீட்டுவசதித் திட்டங்களை நிறைவு செய்வதற்காக ரூ.25,000 கோடி நிதியை வழங்குவதற்கு மத்திய அரசு புதன்கிழமை ஒப்புதல் வழங்கியதாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இதில் ரூ.10,000 கோடியை மத்திய அரசும், எஞ்சிய நிதியை இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் (எல்ஐசி), பாரத ஸ்டேட் வங்கி ஆகியவையும் வழங்க உள்ளன என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய நிதியமைச்சா் நிர்மலா சீதாராமன் பேசுகையில், "வீடு வாங்குவதற்காக கடன் வாங்கியுள்ள வாடிக்கையாளா்கள், அந்தக் கடனுக்கான தவணைத் தொகையை செலுத்தி வருகின்றனா். ஆனால், வீடு அவா்களிடம் ஒப்படைக்கப்படவில்லை. அத்துடன், தற்போது குடியிருக்கும் வீட்டுக்கான வாடகையும் அவா்கள் செலுத்த வேண்டியிருக்கிறது. அவா்களின் இந்த இக்கட்டான நிலையை அரசு அறிந்துள்ளது.
நாட்டில் நிலுவையில் இருக்கும் 1,600-க்கும் அதிகமான வீட்டுவசதித் திட்டங்களை நிறைவு செய்வதற்கு உதவும் வகையில் ரூ.25,000 கோடியை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டது.
இந்தத் திட்டம் தொடா்பாக கடந்த செப்டம்பா் 14-ஆம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. எனினும், அதில் சில மாற்றங்கள் செய்யப்பட்ட பிறகு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதில் முக்கியமானது, வாராக் கடன் மற்றும் திவால் நடவடிக்கையை எதிர்கொண்டுவரும் வீட்டுவசதித் திட்டங்களை நிறைவு செய்யவும் இந்த நிதி அளிக்கப்படவுள்ளது.
சம்பந்தப்பட்ட வீட்டுவசதித் திட்டங்கள் ஒவ்வொரு படிநிலையாக நிறைவு செய்யப்படுவதன் அடிப்படையிலேயே அதற்கான நிதி படிப்படியாக வழங்கப்படும். இந்த நிதியானது பாரத ஸ்டேட் வங்கி முதலீடுகள் மூலம் நிா்வகிக்கப்படும்" என்று தெரிவித்தார்.

தினமலர்: பிச்சை எடுக்கும் பாட்டியிடம் லட்சக்கணக்கில் பணம்

பட மூலாதாரம், ChristianChan / Getty images
புதுச்சேரியில் பிச்சை எடுக்கும் பாட்டியிடம், வங்கிக்கணக்கு இருப்பதும் , அதில் லட்சக்கணக்கில் பணமும், கையில் தங்க செயின், மோதிரம், தோடு மற்றும் ரூ.15,000 ரொக்கம் இருப்பதையும் கண்டு நகராட்சி ஊழியர்களை வியந்ததாக தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
புதுச்சேரி காந்தி வீதியிலுள்ள ஈஸ்வரன் கோவிலில் பிச்சைக்காரர்களால், பொதுமக்கள் அவதிக்குள்ளாவதாக வந்த புகாரை அடுத்து அவர்களை நகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தினர்.
அங்கு பிச்சை எடுத்துக் கொண்டிருந்த பர்வதம்(80) என்ற பாட்டியை அப்புறப்படுத்திய போது அவரிடமிருந்த பை தவறி கீழே விழுந்தது. அதிலிருந்து ரூபாய் நோட்டிகள் சிதறி கீழே விழுந்தன. இதனையடுத்து அதனை எண்ணி பார்க்கும் போது, அதில் 15 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் பணம் இருந்தது.
அவரது பையில் சோதனை செய்த போது, வங்கி கணக்கும் அதில் ஒரு லட்ச ரூபாய்க்கும் அதிகமாக பணமும் இருந்தது. மேலும் பையில், தங்கத்தோடு, செயின், மோதிரமும் இருந்தது. ரேஷன் கார்டும், பென்ஷன் கார்டும் வைத்துள்ள அவர், கணவர் இறந்த பின், கோவிலில் பிச்சை எடுத்து வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து அவரை பாதுகாப்பாக முதியோர் இல்லம் ஒன்றில் தங்க வைத்துள்ளனர். தொடர்ந்து இதுகுறித்து விசாரணை நடத்தி வருவதாக அந்நாளிதழ் செய்தி விவரிக்கிறது.

பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












