ஒசாமா பின் லேடன் மகனின் தலைக்கு விலை வைத்த அமெரிக்கா மற்றும் பிற செய்திகள்

Bin Laden

பட மூலாதாரம், REWARDS FOR JUSTICE/STATE DEPARTMEN

ஒசாமா பின் லேடனின் மகன்களில் ஒருவரான ஹம்சா பின் லேடன் குறித்த தகவல்களைத் தருபவர்களுக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் சன்மானம் வழங்கப்படும் என அமெரிக்க வெளியுறவுத் துறை அறிவித்துள்ளது.

அல்-கய்தா அமைப்பின் முக்கியத் தலைவராக ஹம்சா உருவாகி வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

தனது தந்தை கொல்லப்பட்டதற்கு அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளைப் பழி வாங்க வேண்டுமென, சமீப ஆண்டுகளில் ஹம்சா காணொளி மற்றும் ஒலி வடிவச் செய்திகளை வெளியிட்டு வருகிறார்.

சுமார் 30 வயதாகும் ஹம்சா பின் லேடன் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவால் சர்வதேசத் தீவிரவாதி என அறிவிக்கப்பட்டார்.

"அவர் ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லைப் பிரதேசத்தில் இருக்கிறார் எனக் கருதுகிறோம். அவர் இரானுக்குள் செல்லலாம். தெற்கு மத்திய ஆசியாவில் எங்கு வேண்டுமானாலும் அவர் இருக்கலாம், " என ஹம்ஸாவின் இருப்பிடம் குறித்து அமெரிக்கா அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

இலங்கை
பாலகோட் விமான தாக்குதல்

'எத்தனை பேர் இறந்தார்கள் என்பது தெரியாது'

இந்தியாவும் பாகிஸ்தானும் பரஸ்பரம் எல்லை தாண்டி விமானத் தாக்குதல் நடத்திய நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய இந்திய முப்படைகளின் பிரதிநிதிகள், எல்லையில் பதற்றம் தணியும் என்று கூறுவதைத் தவிர்த்தனர்.

இந்திய விமானங்கள் பாகிஸ்தானில் பாலகோட்டில், ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தளத்தின் மீது நடத்தியதாக கூறப்பட்ட தாக்குதலில் எத்தனை பேர் இறந்தார்கள் என்று செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த இந்திய விமானப்படையின் ஏர் வைஸ் மார்ஷல் ஆர்.ஜி.கே.கபூர், விரும்பிய இலக்கு தாக்கப்பட்டது. ஆனால், எத்தனை பேர் இறந்தார்கள் என்பது தெரியவில்லை என்றார்.

இலங்கை
தெரு

பட மூலாதாரம், Getty Images

போர் பதற்ற வேளையில் வீடின்றி தவிக்கும் மக்கள்

இந்தியா, பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட பதற்றத்தை தொடர்ந்து, கட்டுபாட்டு எல்லை கோட்டு பகுதியில் வாழும் மக்களால் ஏற்கெனவே அனுபவிக்கப்பட்டு வந்த பிரச்சனைகள் மேலும் அதிகரித்துள்ளன.

அந்த மக்களின் வீடுகளும், முகாம்களும் எப்போதும் குண்டுகளால் இலக்கு வைக்கப்படுபவை என்பதால், ஸ்திரமில்லாத நிலையில் தங்களின் வாழ்க்கையை ஆண்டு முழுவதும் இந்த மக்கள் நடத்தி வருகிறார்கள். இந்த பதற்றத்தில் இவர்கள் வீடில்லாதவர்களாகவும் உருவாக வேண்டியுள்ளது.

பாகிஸ்தான் எல்லையில் இந்தியா நுழைந்து நடத்திய தாக்குதலுக்கு பின்னர், மென்ரக மற்றும் கனரக ஆயுதங்களோடு எல்லை கட்டுப்பாட்டு கோட்டின் பிற பகுதிகளோடு சாகோதி செக்டரும் துப்பாக்கி சத்தங்களால் நிறைந்திருந்தது.

இலங்கை
Stream flowing into Ganges in Kanpur

பட மூலாதாரம், Getty Images

கங்கையில் மாசு குறைந்துள்ளதா?

பாஜக அரசாங்கம் கங்கை நதியை சுத்தம் செய்ய ஐந்தாண்டு செயல்திட்டத்தை வடிவமைத்து, அதனை செயல்படுத்துவதற்காக மூன்று பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு நிகரான பணத்தை ஒதுக்கியது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், தனது சொந்த தொகுதியான வாரணாசியில் பேசிய நரேந்திர மோதி கங்கையில் மாசு அளவை குறைப்பதில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றார்.

இப்போதைய அரசு 2015ஆம் ஆண்டு முதல் கங்கையை சுத்தப்படுத்த அதிகளவில் நிதி ஒதுக்கத் தொடங்கியது.

ஆனால், ஏகப்பட்ட தாமங்களும், எட்டப்படாத இலக்குகளும் இருந்தன. 2017ஆம் ஆண்டு அரசுத் தணிக்கையிலேயே இவை சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

நாடாளுமன்றத்தில் கடந்தாண்டு தாக்கல் செய்யப்பட்ட தரவுகளின் படி 236 சுத்திகரிப்பு திட்டங்களில் 63 மட்டுமே முழுமையாக முடிக்கப்பட்டுள்ளன.

மார்ச் மாதத்திற்குள் கங்கை நதி 70 முதல் 80 சதவீதம் வரை சுத்தமாகும் என்றும் அடுத்தாண்டுக்குள் முழுமையாக சுத்தமாகும் என்றும் அரசாங்கம் கூறுகிறது.

2035ஆம் ஆண்டுக்குள் 3.6 பில்லியன் லிட்டர் கழிவு நீர் வெளியேறும் என அரசு தரவுகளே கூறுகின்றன.

46 நகரங்களில் உள்ள 84 சுத்திகரிப்பு நிலையங்களில் 34 முழுமையாக வேலை செய்யவில்லை. 14 முழுதிறனில் வேலை செய்யவில்லை.

இலங்கை
இம்ரான்கான்

பட மூலாதாரம், ANADOLU AGENCY

இம்ரான்கான் கையாளும் உத்தி

அபிநந்தனை விடுவிக்கும் முடிவை அறிவித்தபோது இம்ரான்கான் எந்த நாட்டின் பெயரையும் குறிப்பிடவில்லை, தாம் அழுத்தத்துக்கு ஆளானதாகவும் தெரிவிக்கவில்லை.

ஆனால், இந்திய பாகிஸ்தான் உறவில் பதற்றம் தனிவதற்கான நேர்மறையான அறிகுறிகள் தெரிவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார். சௌதி வெளியுறவு அமைச்சர் திட்டமிடப்படாத முறையில் பாகிஸ்தானுக்கு திடீரென பறந்து சென்றார். இந்த இரண்டு நிகழ்வுகளும் இந்த விவகாரத்தில் ஏதோ ஒருவகையில் சர்வதேச சக்திகள் ஈடுபட்டிருப்பதைக் காட்டின.

பாகிஸ்தானின் முக்கிய முடிவுகள் பாகிஸ்தானின் அரசியல் தலைமையினால்தான் எடுக்கப்படுகின்றன. அதன் ராணுவத் தலைமையினால் அந்த முடிவுகள் எடுக்கப்படவில்லை என்பதை உலகத்துக்கு காட்ட விரும்பினார் அவர்.

இலங்கை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: