கும்பமேளா : பெருங்கூட்டத்தில் காணாமல் போய் கண்டுபிடிக்கப்பட்டவர்கள்

உலகில் மிக அதிக அளவில் மக்கள் கூடிய நிகழ்வு கும்பமேளா

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு, உலகில் மிக அதிக அளவில் மக்கள் கூடிய நிகழ்வு கும்பமேளா
    • எழுதியவர், கீதா பாண்டே
    • பதவி, பிபிசி

உலகில் மிக அதிக அளவில் மக்கள் கூடும் நிகழ்வு கும்பமேளா. வட இந்தியாவில் அலகாபாத் நகரில் நடைபெறும் கும்பமேளா திருவிழா, உலகில் அதிக அளவில் மனிதர்கள் கூடியிருக்கும் விழாவாக கருதப்படுகிறது.

49 நாட்களில் 110 மில்லியன் பேர் இதில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், கூட்டத்தில் காணாமல் போனவர்களுக்கு, உதவி காத்திருக்கிறது.

``நாங்கள் மீட்கும் பலரும் முதியவர்கள் பெரும்பாலும் 60 வயதைக் கடந்த பெண்மணிகள்'' என்று காணாமல் போனவர்களை கண்டுபிடிக்கும் மையத்தின் தலைவர் உமேஷ் திவாரி கூறினார். உள்ளூரைச் சேர்ந்த பாரத் சேவா தளம் சார்பில் இந்த மையம் நடத்தப் படுகிறது.

பழைய அலகாபாத் (இப்போது பிரயாக்ராஜ் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) நகரில் 1946-ல் இவருடைய தந்தை ராஜாராம் திவாரியால் இந்த மையம் உருவாக்கப்பட்டது. காணாமல் போன 15 லட்சத்துக்கும் மேற்பட்டோரை இதுவரை கண்டுபிடித்து குடும்பத்தினருடன் சேர்த்துள்ளது.

நுழைவாயிலில் போலீஸ்காரர் ஒருவர், புதிதாக வருபவர்களின் விவரங்களை - அவர்களுடைய பெயர்கள், முகவரிகள், எந்த ஊரில் இருந்து வந்திருக்கிறார்கள், அவர் தொடர்பு கொள்ள வேண்டியவரைப் பற்றிய விவரங்களை - ஒரு பதிவேட்டில் எழுதுகிறார் .

நண்பர்கள் அல்லது குடும்பத்தினரை தவறவிட்டவர்கள் பலர் உள்ளே எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கிறார்கள். உள்ளே போட்டிருக்கும் கயிற்றுக் கட்டில்களில் சிலர் அமர்ந்திருக்கின்றனர். சிலர் வெளியே வெயிலில் அமர்ந்திருக்கின்றனர்.

அங்குள்ள சூழ்நிலை பதற்றம் நிறைந்ததாக இருக்கிறது. நேசத்துக்கு உரியவர்களைப் பற்றிய கவலையில், எதிர்பார்ப்புகளுடன் சில மணி நேரம் கழிகிறது. ``தயவுசெய்து என்னுடைய பெயரை (மைக்கில்) இன்னொரு முறை அறிவிப்பு செய்யுங்கள்'' என்று அவர்கள் கண்ணீருடன் கெஞ்சுகிறார்கள்.

``குளியல் அறைக்குச் செல்லும் போது நாங்கள் வழிதவறிவிட்டோம் ''

தனது எட்டு வயது மகளுடன் வந்துள்ள 35 வயது பெண்மணியும் (பெயரை வெளியிட வேண்டாம் என அவர் கேட்டுக் கொண்டார்) அவர்களில் ஒருவர். அவர்கள் வரும் போது துணி ஏதும் இல்லை என்பதால், குழந்தையை போர்வையால் போர்த்தியிருக்கிறார். ``எனது கணவரும், மகனும் குளித்தனர். நான் எனது மகளை குளியல் அறைக்கு அழைத்துச் சென்றேன். திரும்பி வந்தபோது அவர்களைக் காணவில்லை'' என்று அவர் என்னிடம் தெரிவித்தார்.

திருவிழாவுக்கு வந்திருக்கும் யாத்ரிகர்கள் கங்கை, யமுனை, புராண நம்பிக்கையின்படியான சரஸ்வதி நதிகள் கூடும் - முக்கூடலில் குளிக்கிறார்கள். அங்கு குளிப்பதால் தங்களுக்குப் பாவங்களில் இருந்து விடுதலை கிடைக்கும் என்றும், பிறப்பு இறப்பு சுழற்சியில் இருந்து விடுதலை பெறக் கூடிய ``மோட்சம்'' கிடைக்கும் என்றும் இந்துக்கள் நம்புகிறார்கள்.

``நாங்கள் விசாரித்துக் கொண்டு காலை 11 மணிக்கு இந்த இடத்துக்கு வந்தோம்'' என்றார் அந்தப் பெண்மணி. ``பல மணி நேரமாக இங்கே நாங்கள் காத்திருக்கிறோம். என்ன செய்வது என்று தெரியவில்லை'' என்று குறிப்பிட்டார்.

கும்பமேளா திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயினர்

பட மூலாதாரம், ANKIT SRINIVAS

படக்குறிப்பு, கும்பமேளா திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயினர்

அவருடைய செல்போன், கைப்பை எல்லாமே கணவரிடம் உள்ளன. எந்த தொலைபேசி எண்ணும் தாய்க்கும், மகளுக்கும் நினைவில் இல்லை. எப்படி வீட்டுக்குத் திரும்பப் போகிறோம் என்ற நிச்சயம் அவர்களிடம் இல்லை.

அளவுக்குப் பொருந்தாக பெரிய துணிகள் தான் குழந்தை அணிவதற்குக் கிடைத்தன. திரும்பத் திரும்ப அறிவிப்பு செய்தார்கள். ஆனால் இதுவரையில் யாருமே வரவில்லை.

பஸ் கட்டணத்துக்கு அவர்களுக்குப் பணம் தருவதற்கு திரு. திவாரி தயாராக இருக்கிறார். ஆனால் இரவில் பயணம் செய்ய அவர்கள் விரும்பவில்லை. ``நான் வாழும் பகுதிக்குப் போய் சேருவதற்கு பஸ் வசதி இல்லை. நாங்கள் எப்படி பாதுகாப்பாக வீட்டுக்குச் சென்று சேர முடியும்?'' என்று அந்தப் பெண்மணி கேட்டார். முகாமில் உள்ள டெண்ட்களில் இரவில் அவர்கள் தங்கலாம் என்று திரு. திவாரி கூறினார்.

என்ன செய்வது என்ற குழப்பத்துடன் அந்தப் பெண்மணி அமர்ந்திருந்த போது, அலுவலர் ஒருவர் வந்து, அவருடைய கணவர் வந்திருப்பதாகக் கூறினார். தெளிவு பெற்ற அந்தப் பெண் தன் மகளுடன் அங்கிருந்து சென்றார்.

``சில நாட்களில் நெரிசல் மிக அதிகமாக உள்ளதால், பலர் எளிதில் பிரிந்து விடுகிறார்கள். காலையில் இருந்து 560 பேர் இங்கே வந்திருக்கிறார்கள். அதில் 510 பேர் அவர்களுடைய குடும்பத்தினருடன் சேர்க்கப்பட்டுள்ளனர்'' என்று திரு. திவாரி கூறினார்.

மேளா

பட மூலாதாரம், ANKIT SRINIVAS

பொழுது சாயும்போதும், சிலருக்கு காத்திருப்பு தொடர்கிறது. காலையில் மனைவியைப் பிரிந்துவிட்ட முதியவரும் அவர்களில் ஒருவர். ``அவள் இப்போது எங்கிருக்கிறாளோ? அவள் ஏதாவது சாப்பிட்டிருப்பாளா? அவளிடம் தொலைபேசி எண்ணோ, பணமோ கிடையாதே'' என்று அவர் கூறினார்.

``என்ன தவறு நடந்துவிடும் என்று மக்கள் நினைக்கிறார்கள். ஆனால், எதிர்மாறாக ஏதும் நடக்கும்போது, உங்களால் எதுவும் செய்ய முடியாமல் போகிறது'' என்று திரு. திவாரி கூறினார்.

திருவிழா மைதானத்தில் சுற்றி வருவதற்கு 25 தன்னார்வலர்களை வைத்திருக்கிறார்கள். காணாமல் போனதாகத் தெரிபவர்களை முகாமுக்கு அழைத்து வரவேண்டியது அவர்களுடைய பணி. ``அவர்களைப் பிரியச்செய்து, சேரச் செய்வது கடவுளின் சித்தம். நான் அதற்கு உதவும் கருவி மட்டுமே. காணாமல் போன, இந்த மக்கள்தான் எனக்கு கடவுள்'' என்கிறார் அவர்.

``எனது உண்மையான பெயரை யாருக்கும் தெரியாது''

பூலே பக்தே முகாமில் இருந்து சில நிமிடங்கள் நடந்தால், பிரகாசமான வெளிச்சத்தில் அமைந்திருக்கிறது காவல் துறையினரால் நடத்தப்படும் கோயா பய்ய கேந்திரம் (காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்கும் மையம்). மதிய நேரத்தில் நான் அங்கு சென்றபோது பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தார்கள்.

பதிவு செய்யும் இடத்தில் தன்னார்வலர்கள் - பெரும்பாலும் இளம் வயது ஆண்களும் பெண்களும் - வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். காணாமல் போனவர்களைப் பற்றிய விவரங்களை கணினிகளில் பதிவு செய்து கொண்டிருந்தார்கள். வெளி மாநிலங்களில் இருந்து வந்திருக்கும் சில தன்னார்வலர்கள், உள்ளூர் பேச்சுவழக்கை புரிந்துகொள்ள முடியாமலும், அவர்களுடைய கலாசார நுணுக்கங்களையும் புரிந்துகொள்ள முடியாமலும் சிரமப்பட்டனர்.

காணாமல் போனவர்களில் பெரும்பாலானவர்கள் முதியவர்கள்

பட மூலாதாரம், ANKIT SRINIVAS

படக்குறிப்பு, காணாமல் போனவர்களில் பெரும்பாலானவர்கள் முதியவர்கள்

தனது குழுவினரிடம் இருந்து பிரிந்துவிட்ட 60 வயதான பெண்மணி ஒருவரிடம் ஒரு கவுண்ட்டரில், அவருடைய பெயரை தன்னார்வலர் கேட்டார். அவர் ஒரு படிவத்தைப் பூர்த்தி செய்து கொண்டிருந்தார்.

``ராம் பிசாலின் தாயார்'' என்று தெரிவித்தார். தன்னார்வலருக்குக் குழப்பமாகிவிட்டது. ``உங்கள் மகனுடைய பெயர் எனக்கு வேண்டாம். உங்கள் பெயர் தான் வேண்டும்'' என அவர் திரும்பக் கேட்டார். என்னுடைய உண்மையான பெயர் யாருக்குமே தெரியாது என்று அந்தப் பெண்மணி கூறினார். ஆனால், தன்னார்வலர் திரும்பத் திரும்பக் கேட்டதால், தன் பெயர் சரஸ்வதி தேவி மவுர்யா என்று அவர் கூறினார்.

தனது கிராமத்தில் அருகில் வசிக்கும் வேறு ஐந்து பேருடன் கும்பமேளாவுக்கு வந்ததாக சரஸ்வதி தேவி தெரிவித்தார். சங்கமம் பகுதியில் குழுவினரிடம் இருந்து பிரிந்துவிட்டதாகக் குறிப்பிட்டார். ஒரு மணி நேரமாக தேடியும் அவர்களைக் கண்டுபிடிக்க முடியாததால் இந்த மையத்துக்கு வந்திருக்கிறார். குழுவில் உள்ள இரண்டு ஆண்களின் பெயர்களை அவரால் கூற முடிந்தது என்றாலும், அவர்களுடைய தொலைபேசி எண்கள் எதுவும் அவரிடம் இல்லை.

நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் மீண்டும் சேர்க்கப் படுவதற்காகக் காத்திருந்த பலரும் இதே நிலையில் தான் இருந்தார்கள். முதியவர்களாக, குறைந்த கல்வி அல்லது கல்வி அறிவு இல்லாதவர்களாக, தொலைபேசி எண்கள் நினைவு இல்லாதவர்களாக இருந்தார்கள். எங்கிருந்து வந்தோம் என்பதே கூட சிலருக்கு நினைவு இல்லை. பலர் தங்கள் கிராமத்தின் பெயரை சொனார்கள், ஆனால் பலருக்கு அவர்களுடைய மாவட்டம் எது என்றே சரியாகத் தெரியவில்லை.

சரஸ்வதி தேவி பரவாயில்லை - அவருடைய தகவல்களைப் பதிவு செய்யும்போது, வேறொரு கவுண்ட்டரில் காணாமல் போனவர் பற்றிய தகவலைப் பதிவு செய்து கொண்டிருந்த இரண்டு இளைஞர்கள் அவரை அடையாளம் கண்டு கொண்டனர். உண்மையில், அவரைத் தேடித்தான் அவர்கள் அங்கே வந்திருந்தார்கள்.

சரஸ்வதி தேவி மவுர்யா தனது குழுவினருடன் சேர்க்கப்பட்டார்
படக்குறிப்பு, சரஸ்வதி தேவி மவுர்யா தனது குழுவினருடன் சேர்க்கப்பட்டார்

இருவரும் ஒரே நேரத்தில் பேசத் தொடங்கியதும், அவர்களுடைய முகங்களில் தெளிவு பிறந்துவிட்டது. ``அவருக்கு என்ன நடந்ததோ என்று நாங்கள் அச்சப்பட்டுக் கொண்டிருந்தோம். எங்களுக்குப் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்தவர் இவர். கிராமத்துக்கு எப்படித் திரும்பிப் போய் முகத்தைக் காட்டுவது என்று இருந்தோம்' என்று பர்வேஸ் யாதவ் கூறினார்.

அடுத்த சில நிமிடங்களில், மற்றொரு முதிய பெண்மணி ஷியாம்காளி, அந்தக் குழுவுடன் சேர்ந்து கொண்டார். இரு பெண்களும் மீண்டும் பார்த்துக் கொண்டதில் நிம்மதி அடைந்தார்கள். ஆனால் வேதனையாகவும் இருந்தார்கள். சரஸ்வதி தேவி அதிக நம்பிக்கையால் தனியாக ஆற்றில் குளிக்கச் சென்றார் என்று ஷியாம்காளி கருதினார். அவரை பிரியும் அளவுக்கு மற்றவர்கள் அக்கறையில்லாமல் இருந்தனர் என்றும் நினைக்கிறார். ஆனால், சீக்கிரத்தில் அவர்கள் கட்டித் தழுவிக்கொண்டார்கள்.

இதற்கிடையில், தொடர்ந்து நிறைய பேர் வந்ததால் தன்னார்வலர்கள் சுறுசுறுப்பாக இருந்தனர். பிரிந்துவிட்டவர்களில் பெரும்பாலானவர்கள் திரும்பவும் சேர்க்கப்பட்டுவிட்டனர் என்றாலும், சிலருக்கு மகிழ்ச்சியான முடிவு கிடைக்காத நிகழ்வுகளும் இருந்தன.

காணாமல் போனவர்களை கண்டுபிடிக்கும் மையங்களில் நாள் முழுக்க அறிவிப்புகள் செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றன

பட மூலாதாரம், ANKIT SRINIVAS

படக்குறிப்பு, காணாமல் போனவர்களை கண்டுபிடிக்கும் மையங்களில் நாள் முழுக்க அறிவிப்புகள் செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றன

காணாமல் போனவர்களை கண்டுபிடிக்கும் மையத்திற்கு நோகா தேவி வந்து பல மணி நேரம் ஆகிவிட்டது. அவரிடம் இருந்து எந்தத் தகவலையும் பெற முடியாமல் தன்னார்வலர்கள் திணறிக் கொண்டிருக்கிறார்கள். அவர் பொறுமை இழந்தவராக, கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாதவராக இருந்தார்.

``அடுத்த 12 மணி நேரத்துக்குள் இவரைத் தேடி யாரும் வராவிட்டால், இவரை காவல் துறையினரிடம் நாங்கள் ஒப்படைத்துவிடுவோம். ஆதரவற்றவர்களுக்கான தங்குமிடத்துக்கு இவரை அவர்கள் அழைத்துச் செல்வார்கள்'' என்று ஒரு தன்னார்வலர் தெரிவித்தார்.

``இவரைக் கண்டுபிடிக்க முடியாமல் போயிருந்தால், அவருடைய குடும்பத்தினருக்கு நாங்கள் என்ன பதில் சொல்லியிருக்க முடியும்?''

நான் அங்கே சுற்றிக் கொண்டு, செய்திகளுக்காக கவனித்துக் கொண்டிருந்தபோது, இரண்டு முதிய பெண்மணிகள் சிறிய துண்டுக் காகிதத்துடன் என்னை நாடி வந்தார்கள். இந்தியில் இரண்டு பெயர்கள் எழுதி, தொலைபேசி எண்கள் அதில் எழுதப் பட்டிருந்தன.

``தயவுசெய்து அவர்களைக் கூப்பிட்டு, என் நண்பர் எங்கள் முகாமுக்கு வந்துவிட்டாரா என்று கேட்க முடியுமா?'' என்று அவர்களில் ஒருவர் என்னிடம் கேட்டார்.

தன்னுடைய பெயர் பிரபா பென் பட்டேல் என்று குஜராத்தி மொழியில் அவர் என்னிடம் கூறினார். மேற்குப் பகுதியில் உள்ள அகமதாபாத் நகரில் இருந்து தனது இரு நண்பர்களுடன் வந்ததாக அவர் தெரிவித்தார்.

``நாங்கள் புனித நீராடிவிட்டு அருகில் உள்ள கோவிலுக்குச் சென்றோம். அங்கு எங்கள் நண்பரைப் பிரிந்துவிட்டோம்'' என்று அவர் கூறினார்.

காணாமல் போய்விட்ட நண்பரைப் பற்றிய கவலையில் பிரபா பென் பட்டேல்

பட மூலாதாரம், ANKIT SRINIVAS

படக்குறிப்பு, காணாமல் போய்விட்ட நண்பரைப் பற்றிய கவலையில் பிரபா பென் பட்டேல்

அதில் ஈடுபாடு காட்டாமல் இருப்பது கஷ்டமான காரியம். ``அவரைக் கண்டுபிடிக்க முடியாமல் போனால் அவருடைய குடும்பத்தினருக்கு நாங்கள் என்ன பதில் சொல்ல முடியும்?'' என்று அவர் என்னிடம் கேட்டார். உணர்ச்சிவசப் பட்டிருந்தார்.

அதில் ஒரு எண்ணுக்கு நான் தொடர்பு கொண்டேன். மறுமுனையில் பேசத் தொடங்கியதும், பிரபா பென்னிடம் செல்போனைக் கொடுத்தேன். சூழ்நிலையை விளக்கிவிட்டு அவர் துண்டித்தார்.

சிறிது நேரத்தில் என் செல்போனில் பெல் அடித்தது. மறுமுனையில் ஒரு பெண் பேசினார். உற்சாகமாகப் பேசினார். மறுபடி செல்போனை பிரபா பென்னிடம் கொடுத்தேன்.

கடைசியாக அவர் நிம்மதி அடைந்தார். புன்னகை செய்தார். தனது நண்பர் நன்றாக இருப்பதாகவும், முகாமுக்கு வந்திருப்பதாகவும் சொன்னார்.

பூலே பாத்கே ஷிவிருக்கு அருகே பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு மட்டுமான ஒரு முகாம் உள்ளது. இதுவும் உள்ளூர் அறக்கட்டளை மூலமாக நடத்தப் படுகிறது. ஹேமாவதி நந்தன் பகுகுணா ஸ்மிருதி சமிதி என்ற அந்த அமைப்பு 1956ல் இருந்து மையத்தை நடத்தி வருகிறது.

காலையில் இருந்து 950 பேரை சேர்த்து வைத்திருப்பதாக அந்த மையத்தின் மேலாளர் சந்த் பிரசாத் பாண்டே என்னிடம் தெரிவித்தார். இன்னும் 15 பேர் தங்களுடைய குடும்பத்தினரிடம் இருந்து தகவல் வரும் என காத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தாங்கள் எங்கிருந்து வருகிறோம் என்ற விவரங்களைக்கூட பலரால் அளிக்க முடியவில்லை.

பட மூலாதாரம், ANKIT SRINIVAS

படக்குறிப்பு, தாங்கள் எங்கிருந்து வருகிறோம் என்ற விவரங்களைக்கூட பலரால் அளிக்க முடியவில்லை.

``இங்கே காத்திருப்பவர்களுக்கு நாங்கள் சாப்பாடு, துணிகள், போர்வைகள் அளிக்கிறோம். தாங்களாக பயணம் செல்ல முடியும் நிலையில் உள்ளவர்களுக்கு - நாங்கள் டிக்கெட் வாங்கித் தருகிறோம் அல்லது வீட்டுக்குச் செல்வதற்குத் தேவையான பணத்தைத் தருகிறோம்''

திருவிழா மைதானத்தில் 32 சதுர கிலோ மீட்டர் பரப்பில் தங்களுடைய 100 க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் பணியில் இருப்பதாக திரு. பாண்டே கூறினார். குழந்தைகள் தனியாக, அழுது கொண்டு திரிபவர்களைக் கவனித்து இங்கே கொண்டு வரும்படி அவர்களுக்குச் சொல்லப் பட்டிருக்கிறது என்று குறிப்பிட்டார்.

``எனது ஐந்து வயது மகளை யாராவது கண்டுபிடித்துத் தருவார்கள் என்று நம்புகிறேன்''

தனது ஐந்து வயது மகள் ராதிகாவை தேடி இந்த முகாமுக்கு வந்து காத்திருந்தார் சந்தியா விஸ்வகர்மா.

``மகளைப் பிரிந்து ஒரு மணி நேரத்துக்கும் மேலாகிவிட்டது'' என்று அழுதபடி அவர் சொன்னார். ``எல்லா இடங்களிலும் நாங்கள் தேடிப் பார்த்துவிட்டு அறிவிப்பு செய்வதற்காக இங்கே வந்திருக்கிறோம். எனது மகளை யாராவது கண்டுபிடித்து இங்கே அழைத்து வருவார்கள் என்று நம்புகிறேன்'' என்று அவர் கூறினார். அவருக்கு ஆறுதல் கூற முயற்சி செய்து கொண்டிருந்தார் அவருடைய சகோதரி.

வேறு இரண்டு மையங்களுடன் காவல் துறையினர் தொடர்பு கொண்டிருப்பதாக அவரிடம் திரு. பாண்டே தெரிவித்தார். அங்கிருந்து தகவல் வந்தவுடன் கூறுவதாகவும் அவரிடம் பாண்டே தெரிவித்தார்.

சீக்கிரத்திலேயே, ராதிகாவின் அடையாளங்களுடன் ஒரு சிறுமி அருகில், காவல் துறையினரால் நடத்தப்படும் முகாமுக்கு அழைத்து வரப்பட்டிருப்பதாகத் தகவல் வந்தது.

தனது 5 வயது மகள் ராதிகாவுடன் மீண்டும் இணைந்த சந்தியா
படக்குறிப்பு, தனது 5 வயது மகள் ராதிகாவுடன் மீண்டும் இணைந்த சந்தியா

சந்தியாவும் அவருடைய சகோதரியும் மற்றொரு முகாமுக்குச் சென்றபோது, காவல் துறையைச் சேர்ந்த ஒருவர் ராதிகாவைப் பிடித்துக் கொண்டிருந்தார். சந்தியாவை குழந்தை அடையாளம் காண்கிறதா என கேட்டார். ``ஆமாம், அது என்னுடைய அம்மா'' என்று சிறுமி கூறினாள்.

ஆனால், முதலில் நடைமுறைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும். சந்தியா சொன்னவை எல்லாம் சரிதானா என்றும், குழந்தைகளைக் கடத்துபவர் அல்ல என்றும் உறுதி செய்து கொண்ட பிறகு அவரிடம் குழந்தையை காவல் துறையினர் ஒப்படைத்தனர்.

``இங்கிருந்து ரொம்ப தொலைவில் முதியவர் ஒருவர் சிறுமியைக் கண்டுபிடித்து இங்கே கொண்டு வந்ததாக'' சந்தியா கூறினார்.

தம்மை கண்டுபிடித்துக் கொண்டு வந்தவரை ``அங்கிள்'' என்று ராதிகா கூறினார். ``போலீஸ் அங்கிள்'' என்னை நன்றாகப் பார்த்துக் கொண்டார், சாப்பிடுவதற்கு இனிப்புகள் வாங்கிக் கொடுத்தார் என்றார்.

``நாங்கள் கண்ணீர் விட்டு அழுதோம். அவள் மகிழ்ச்சியாக இருக்கிறாள்'' என்று சந்தியா கூறினார். புகைப்படத்துக்கு அவர்கள் போஸ் கொடுத்தபோது கண்ணீர் மறைந்து மகிழ்ச்சியான சிரிப்பு அவர்கள் முகத்தில் குடி கொண்டது.

நல்ல வகையில் முடிந்துவிட்டது அவர்களுடைய பிரச்சனை.

மேப்

கும்பமேளா மேலோட்டப் பார்வை

•கங்கை, யமுனை, புராண நம்பிக்கையின்படியான சர்ஸ்வதி நதிகள் சங்கமிக்கும் பகுதியில் இந்துக்கள் கூடும் புனித யாத்திரை.

•இந்த ஆண்டில் திருவிழா நடைபெறும் ஏழு வார காலத்தில் 120 மில்லியன் பேர் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2.4 மில்லியன் பேர் கூடும் சவுதி அரேபியா ஹஜ் யாத்திரையில் கூடுபவர்களைவிட இது அதிகம்.

•தேதி, நேரம், அமைவிடம் உள்ளிட்ட பெரும்பாலான விஷயங்களை ஜோதிடம் முடிவு செய்திருக்கிறது.

•அலகாபாத்தில் 2013ல் இதற்கு முன்பு நடந்த முழு கும்பமேளாவும் , 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும், மகா கும்பமேளாவைப் போல இருந்தது. அதில் சுமார் 100 மில்லியன்பேர் கலந்து கொண்டதாக கணக்கிடப்பட்டது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :