நியூசிலாந்து தொடரை 4-1 என்ற கணக்கில் வென்றது இந்தியா

பட மூலாதாரம், Getty Images
நியூசிலாந்து அணியை 35 ரன்கள் என்ற வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது இந்திய அணி.
வெலிங்டனில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையே நடைபெற்றுவந்த ஐந்தாவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 252 ரன்கள் எடுத்து நியூசிலாந்து அணிக்கு 253 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
பின் 252 ரன்களை இலக்காக வைத்து ஆடிய நியூசிலாந்து அணி 44.1 ஒவரில் 217 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதனால் தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது இந்திய அணி.
அம்பத்தி ராயுடு ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அடித்து ஆடிய ராயுடு, பக்கபலமாக விஜய்ஷங்கர்
டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட் செய்ய தீர்மானித்தது. அதன்படி களத்தில் இறங்கிய இந்திய அணி தொடக்கத்தில் தடுமாறியது.
தொடக்க ஆட்டக்காரார்கள் ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவான் ஆகிய இருவரும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர். பின்னர் களமிறங்கிய சுப்மன் கில் 7 ரன்களும், முன்னாள் அணித்தலைவர் எம் .எஸ். தோனி 1 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
அதேவேளையில் நிதானமாக விளையாடிய அம்பத்தி ராயுடு ஒருபுறம் விக்கெட்டுகள் விழுந்தாலும் தனது பொறுப்பை உணர்ந்து நன்றாக விளையாடினார்.
4 சிக்ஸர்களையும், 8 பவுண்டரிகளையும் விளாசிய அம்பத்தி ராயுடு, 113 பந்துகளில் 90 ரன்கள் எடுத்து வலுவான ஸ்கோரை இந்தியா எடுக்க பெரிதும் உதவினார்.
அவருக்கு பக்கபலமாக விளையாடிய தமிழக வீரர் விஜய்ஷங்கர் 64 பந்துகளில் 45 ரன்கள் எடுத்தார்.
அதிரடியாக பேட்டிங் செய்த ஹர்திக் பாண்ட்யா 22 பந்துகளில் 5 சிக்ஸர்கள் மற்றும் 2 பவுண்டரிகள் உதவியோடு 45 ரன்கள் எடுத்தார்.
49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்தியா 252 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து தரப்பில் மேட் ஹென்றி 4 விக்கெட்டுக்களையும், ட்ரென்ட் போல்ட் 3 விக்கெட்டுக்களையும் எடுத்தனர்.

பட மூலாதாரம், Getty Images
முன்னதாக, 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஏற்கெனவே முதல் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை இந்தியா கைப்பற்றியது.
ஹாமில்டனில் நடந்த நான்காவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட் செய்த இந்தியா 92 ரன்கள் மட்டும் எடுக்க, நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் போட்டியை வென்றது.
5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில், தொடரை வென்று 3-1 என்ற நிலையில் இந்தியா முன்னிலை வகித்த சூழலில், இறுதி போட்டியையும் இந்திய அணி வென்றுள்ளது ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












