நவ்ரூ: ‘ஒரு நாடே அகதிகள் முகாமாக’ - உலகின் மிக சிறிய நாட்டின் துயர்மிகு கதை

பட மூலாதாரம், Getty Images
நவ்ரூ அகதிகள் முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கடைசி நான்கு குழந்தைகளும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுவிட்டனர். அவர்கள் அமெரிக்காவுக்கு செல்கின்றனர் என்கின்றனர் ஆஸ்திரேலிய அதிகாரிகள்.
அமெரிக்காவுடன் போடப்பட்டுள்ள மீள்குடியேற்றம் ஒப்பந்தத்தின் விளைவாக அந்த குழந்தைகள் தங்கள் குடும்பத்தினருடன் செல்கின்றனர்.
நவ்ரூ தீவு குறித்த முன்கதை சுருக்கம்
நவ்ரூ - இது உலகின் மிக சிறிய தீவு நாடு. முன்பொரு சமயத்தில் இந்நாடு பிரிட்டனின் காலனியாக இருந்தது. இந்நாட்டை பார்வையிட்ட முதல் ஐரோப்பிய பயணி இந்நாட்டினை 'இனிமையான நாடு' என்று வர்ணித்தார். அப்படிதான் அந்த நாடு அழைக்கப்பட்டது. ஆனால், இப்போது அந்நாடெங்கும் துயர்மிகு கதைகள்தான் நிறைந்திருக்கின்றன.
ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோரி சட்டவிரோதமாக நுழைய முயலும் குடியேறிகள், நவ்ரூவில் ஆஸ்திரேலிய அரசினால் நடத்தப்படும் தடுப்பு காவல் முகாம்களில்தான் அடைக்கப்படுகிறார்கள்.

பட மூலாதாரம், Getty Images
பசிபிக் பெருங்கடலில் வடகிழக்காக ஆஸ்திரேலியாவிலிருந்து 3000 கி.மீ தொலைவில் அமைந்திருக்கும் இத்தேசத்தில் பத்தாயிரம் பேர் வசிக்கிறார்கள்.
ஆஸ்திரேலிய அரசால் நடத்தப்படும் இந்த தடுப்பு காவல் முகாம்கள்தான் இந்த சிறு தேசத்திற்கு அதிக வேலைவாய்ப்புகளை வழங்கி வருகிறது. வருவாய் வழியாகவும் இருக்கிறது.
இந்த சிறிய நாட்டில் பாஸ்பேட் சுரங்கங்கள்தான் மற்றொரு வருவாய் வளமாக இருக்கிறது. ஆனால் இன்னும் முப்பது ஆண்டுகளில் அதுவும் தீர்ந்து போய்விடும் என கணிக்கப்படுகிறது. பெரும்பாலும் மற்ற நாடுகளின் உதவியையே இந்நாடு நம்பி இருக்கிறது.

பட மூலாதாரம், Getty Images
இப்படியான சூழ்நிலையில் இந்த நாட்டில் உள்ள தடுப்பு முகாம்களில் அகதிகள் சந்தித்து வரும் பிரச்சனைகள் சர்வதேச அளவில் விவாத பொருளாகி உள்ளது.
இங்கு தடுப்பு முகாம்களில் உள்ள சிறுவர்களுக்கு கூட தற்கொலை எண்ணம் அதிகமாக எழுவதாக கூறுகிறார்கள் இந்த முகாம்களில் உள்ளவர்களும், உளவியலாளர்களும்.
மெல்போர்ன் பல்கலைக்கழகத்தின் உளவியல் துறை பேராசிரியர், "இந்த முகாம்களில் உள்ள எட்டு வயது, பத்து வயது சிறுவர்களிடம் கூட தற்கொலை நடத்தையை பார்க்கிறோம்." என்கிறார்.

பட மூலாதாரம், Getty Images
இவர் அந்த முகாம்களில் உள்ளவர்களிடையே பணிபுரிந்து வருகிறார்.
இவர் மட்டும் அல்ல முகாம்களில் உள்ள மக்களை கவனித்து வரும் பலரும் இதனையே சொல்கிறார்கள். அவர்களின் வாழ்க்கை முற்றும் சிதைந்து இருக்கிறது. இந்த முகாம்களில் உள்ள பலர் மரணித்துவிட்டனர். அவர்களின் எதிர்காலம் என்னவாக போகிறது என்பதை நினைத்தாலே அச்சமாக உள்ளது என்கின்றனர்.
தஞ்சம் கோருவோர் வள மையத்தை சேர்ந்த நடாஷா ப்ளச்சர், முகாம்களில் உள்ளவர்களின் பாதுகாப்பு கருதி அவர்கள் குறித்த தகவலை பகிர மறுத்துவிட்டார்.

பட மூலாதாரம், WORLD VISION AUSTRALIA
ஆனால் பதினைந்து வயதுடைய குழந்தைகள் தொடர்ந்து தற்கொலைக்கு முயற்சித்து வருவதாகவும், தங்களை தாங்களே வருத்தி வருவதாகவும் கூறுகிறார்.
அமெரிக்க ஒப்பந்தம்
ஆஸ்திரேலியா நோக்கி தஞ்சம் கோரி வரும் அகதிகளை 2013ஆம் ஆண்டிலிருந்து அந்நாடு தடுத்து நிறுத்த தொடங்கியது. அவர்களை நவ்ரூ மற்றும் மனூஸ் தீவில் தடுத்து வைத்தது. இதற்காக அந்நாட்டுடன் ஒப்பந்தம் போட்டிருக்கிறது.

பட மூலாதாரம், Getty Images
கடந்த நவம்பர் மாதம் 1200க்கும் அதிகமான புகலிடம் கோருவோர், அந்த தீவுகளில் இருந்ததாக கூறுகிறது ஆஸ்திரேலியா அகதிகள் மன்றம்.
ஒவ்வொரு தீவிலும் தலா 600 பேர் இருந்துள்ளனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












