டிரம்பின் பயணத் தடை: சாவின் விளிம்பில் உள்ள மகனை பார்க்க முடியாத ஏமன் தாய்

பட மூலாதாரம், CBS
யேமன் உள்ளிட்ட சில நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு டிரம்ப் நிர்வாகம் விதித்துள்ள தடையால் கலிஃபோர்னியாவில் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் தனது மகனை பார்க்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் யேமனை சேர்ந்த பெண்ணொருவர்.
இரண்டு வயதாகும் அப்துல்லா ஹஸன் மூளை சார்ந்த நோயுடன் பிறந்தார். தற்போது மோசமான கட்டத்தில் மருத்துவமனையில் உள்ள அப்துல்லா இனி உயிர் பிழைக்க மாட்டார் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
உயிர் காக்கும் கருவிகளைப் பொருத்தியிருக்கும் வரைதான் அவர் உயிருடன் இருப்பார். எனவே உயிர்காக்கும் கருவிகளை அகற்றும் முன்பு மகனை ஒரு முறை பார்த்துவிடவேண்டும் என்று அவனது தாய் விரும்புவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் டிரம்ப் நிர்வாகம் விதித்துள்ள தடையின் காரணமாக தனது மனைவியால் குழந்தையைப் பார்க்க வரமுடியாது என்று அவரது தந்தை தெரிவித்துள்ளார்.
அப்துல்லாவும், அவரது தந்தையும் யேமனில் பிறந்திருந்தாலும் இருவரும் அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ளனர் என்று அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர்.
"குழந்தையின் உயிர் பிரிவதற்கு முன்னர் அவனது கையை கடைசியாக ஒருமுறை பிடிப்பதற்கு எனது மனைவி விரும்புகிறார்" என்று 22 வயதாகும் அலி ஹஸன் சான்பிரான்ஸிஸ்கோ கிரானிக்கில் செய்தித்தாளிடம் கூறியுள்ளார்.

பட மூலாதாரம், CBS
தற்போது சிறுவனின் தாய் எகிப்தில் வசிக்கிறார். அங்கு குழந்தையை அழைத்துச் சென்றால் அவன் உயிரிழக்கக்கூடும் என்று எண்ணுவதாக அவர் மேலும் கூறினார்.
தமது நாள்களை எண்ணிக்கொண்டிருக்கும் தனது மகனை உடனடியாக நேரில் பார்ப்பதற்கு அனுமதிக்கக்கோரி தாய் ஷைமா ஸ்விலே அமெரிக்க அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
பயணத்தடை எதற்காக?
அமெரிக்க அதிபராக பதவியேற்ற உடனேயே, பெரும்பான்மையாக முஸ்லீம்கள் வசிக்கின்ற 7 நாடுகளில் இருந்து அமெரிக்கா வருவோருக்கு பயணத்தடையை விதித்து டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டார்.
சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்க உச்சநீதிமன்றம் டிரம்பின் பயணத்தடையை உறுதிசெய்வதற்கு முன்பு பலமுறை அதில் திருத்தங்கள் செய்தது.
டிரம்பின் பயணத்தடையின் காரணமாக இரான், வடகொரியா, வெனிசுவேலா, லிபியா, சோமாலியா, சிரியா, யேமன் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
'மிகவும் கொடூரமானது'
அமெரிக்காவிலும் எகிப்திலும் பிரிந்து வாழும் இந்த குடும்பத்தினரை சேர்த்து வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள அமெரிக்க-இஸ்லாமிய அமைப்பொன்றை சேர்ந்த சாத் ஸ்வைலெம், அப்துல்லாவின் தாயை அமெரிக்காவிற்கு வரவிடாமல் தடுப்பது "புரிந்துகொள்ள முடியாத கொடூரமாக" உள்ளதாக கூறுகிறார்.
ஹஸனின் குடும்பத்தினர் 1980களின் தொடக்கத்தில் கலிஃபோர்னியாவுக்கு வந்துவிட்டாலும், யேமனுடனான தங்களது உறவை தொடர்ந்தனர்.

பட மூலாதாரம், Getty Images
அப்துல்லா பிறக்கும்போதே மூளை சார்ந்த நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததால் மூச்சு விடுவதற்கு சிரமப்பட்டு வந்தார்.
யேமனில் போர் தீவிரமடைந்ததால், அப்துல்லா எட்டு மாத குழந்தையாக இருக்கும்போது அவரது குடும்பம் எகிப்துக்கு சென்றது.
மூன்று மாதங்களுக்கு முன்பு, ஹஸன் தனது மகனை மேலதிக சிகிச்சைக்காக அமெரிக்காவிற்கு அழைத்து சென்றார். சிறிதுகாலத்திற்கு பிறகு தனது மனைவியும் தங்களுடன் இணைந்து கொள்வார் என்ற எண்ணத்தில் அவர் இருந்தார்.
அப்துல்லாவின் நிலைமை மோசமான கட்டத்தை அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்த பின்னர் அமெரிக்காவிற்கு வருவதற்கு அனுமதிக்கக் கோரி ஷைமா விண்ணப்பித்திருந்தார்.
இந்நிலையில், டிரம்பின் பயணத் தடையை காரணம் காட்டி, அவரது விசா விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக அமெரிக்க அரசிடமிருந்து கடிதம் வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பிபிசியிடம் பேசிய தனது பெயரை வெளியிட விரும்பாத அமெரிக்க அதிகாரி ஒருவர், "சட்டத்தின்படி முறையாக அமெரிக்காவிற்கு வரும் சர்வதேச பார்வையாளர்களை அனுமதிப்பதற்குரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்" என்று கூறினார்.
"அமெரிக்காவின் குடிவரவு சட்டத்தை நிர்வகிப்பதற்கும், நாட்டின் எல்லையில் உள்ள ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் நாங்கள் முழுமையாக கடமைப்பட்டுள்ளோம்" என்று அவர் மேலும் கூறினார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












