வங்கியில் காத்திருந்தபோது பிறந்த குழந்தை தொடர்பான சண்டை - நடந்தது என்ன?

ஒரு வங்கியில் வரிசையில் காத்திருந்த போது பிறந்ததால் அவனுடைய பிறப்பு உலக அளவில் செய்தியானது.
படக்குறிப்பு, ஒரு வங்கியில் வரிசையில் காத்திருந்த போது பிறந்ததால் அவனுடைய பிறப்பு உலக அளவில் செய்தியானது.

இந்த உலகிற்கு பெரிய கவனிப்புடன் வந்தான் அவன். ஒரு வங்கியில் வரிசையில் காத்திருந்த போது பிறந்ததால் அவனுடைய பிறப்பு உலக அளவில் செய்தியானது.

ஆனால் இரண்டரை வயதான காழஞ்சி நாத் இப்போது அவனுடைய குடும்பத்தில் இரு தரப்பினருக்கும் இரண்டு கிராமத்தினருக்கும் இடையில் கடும் சண்டைக்கு காரணமாகிவிட்டான்.

அவனுடைய பிறப்பின் சரித்திரம் அதற்குக் காரணம். பி.பி.சி.யின் கீதா பாண்டே வட இந்தியாவில் கான்பூர் அருகே கிராமப் பகுதிக்குச் சென்று, அந்தக் குழந்தையின் செய்தியைத் திரட்டியிருக்கிறார். அவர் தனது அனுபவங்களை விவரித்துள்ளார்.

காழஞ்சி என்றால் ``புதையல்'' என்று பொருள். உத்தரப்பிரதேசத்தில் 2016 டிசம்பர் 2 ஆம் தேதி, அதாவது இந்திய அரசு 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாதவை என அறிவித்து ஒரு மாதத்துக்குள் அந்தக் குழந்தை பிறந்தது.

உள்நாட்டில் பண மதிப்பு நீக்கம் என்று சொல்லப்படும், பிரதமர் நரேந்திர மோடியின் இந்த முடிவு பெரிய பண நெருக்கடியை ஏற்படுத்தியது. பல வாரங்களாக லட்சக்கணக்கான இந்திய மக்கள் புதிய ரூபாய் நோட்டுகளை எடுப்பதற்காக வங்கிகளுக்கு வெளியே வரிசையில் காத்திருந்தார்கள்.

நிறைமார கர்ப்பிணியான சர்வேஷா தேவி, சர்தார்பூர் கிராமத்தில் உள்ள தன்னுடைய வீட்டில் இருந்து பணம் எடுப்பதற்காக ஜினிஹக் நகருக்கு நடந்து சென்று, வரிசையில் நின்றிருந்தார். அவருடைய மாமியார் சாஷி தேவியும், மூத்தக் குழந்தை, 10 வயது மகள் ப்ரீத்தியும் அவருடன் இருந்தனர். நூற்றுக்கணக்கில் மற்றவர்களும் இருந்தனர். அப்போது அவருக்குப் பிரசவ வலி ஏற்பட்டது.

அவரைப் பற்றிய செய்தி தலைப்புச் செய்தியானது. சின்னஞ்சிறு காழஞ்சி மாநில தேர்தல் பிரச்சாரத்தில் சுவரொட்டிகளில் இடம் பெற்றுவிட்டான். ஆளும் பாஜகவுக்கு எதிரான பிரச்சாரத்தின் சுவரொட்டியில் குழந்தை இடம் பெற்றது. குழந்தைக்கு அப்போது இரண்டு மாதங்கள்தான் ஆகியிருந்தது. அவனைப் பார்ப்பதற்காக, புழுதி படர்ந்த அவர்களுடைய கிராமத்துக்கு நான் பயணம் மேற்கொண்டேன்.

காழஞ்சியின் பிறப்பு உலகளவில் செய்தியானது
படக்குறிப்பு, காழஞ்சியின் பிறப்பு உலகளவில் செய்தியானது

இந்தச் சிறுவன் பிறப்பதற்கு நான்கு மாதங்கள் முன்னதாக, அவனுடைய தந்தை காசநோயால் காலமானார். வங்கியின் எதிரே பிரசவித்ததன் துன்பத்தை விவரித்த அவனுடைய தாயார், தன்னுடைய மாமியார் இல்லாமல் போயிருந்தால் தானும் இறந்திருக்க நேரிட்டிருக்கும் என்று கூறுகிறார்.

ஆனால், கடந்த வாரம் காழஞ்சியை மீண்டும் நான் பார்க்க விரும்பியபோது, அனந்த்பூர் டாவ்க்கல் என்ற மற்றொரு புழுதிபடர்ந்த கிராமத்துக்கு நான் செல்ல வேண்டியிருந்தது. தனது மாமியார் குடும்பத்தினருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக அவனுடைய தாயார் கடந்த ஆண்டு அங்கு சென்றுவிட்டார். சர்யேஷா தேவியின் பெற்றோர் அங்கு வசிக்கின்றனர். அவருடைய தாயாரும் மூன்று சகோதரர்களும் தங்கள் குடும்பத்தினருடன் அங்கு வசிக்கின்றனர்.

என்னை ஆச்சர்யத்துடன் பார்த்தான் காழஞ்சி- மை தீட்டிய விழிகளை என்மீது பதித்திருந்தான். அவனுடைய தாயார் கூறியபோது என்னுடன் கை குலுக்கினான். அவனுடைய நகங்களுக்கு இளஞ்சிவப்பு நிறம் தீட்டியது யார் என்று அவனிடம் கேட்டேன். அவன் புன்னகைத்தவாறு தனது சகோதரி ப்ரீத்தியைக் காட்டினான்.

தன்னை குறித்து நடைபெறும் கடுமையான சண்டையைப் பற்றி அறியாத அவன், புகைப்படம் எடுப்பதற்காக நெருங்கியபோது, என்னுடைய கண்ணாடியை எடுப்பதிலும், செல்போனை எடுப்பதிலும் ஆர்வம் காட்டினான்.

இலங்கை
இலங்கை

பக்கத்து வீட்டில் இருந்து இரண்டு பழைய பிளாஸ்டிக் நாற்காலிகளை சர்வேஷா தேவி இரவல் வாங்கி வந்தார். பேசுவதற்காக ஒருவரை ஒருவர் பார்த்தவாறு அமர்ந்து கொண்டோம். சில நிமிடங்களில் காழஞ்சி பொறுமை இழக்கத் தொடங்கினான். ``அவனுக்குப் பசிக்கிறது'' என்று கூறிவிட்டு, தாய்ப்பால் ஊட்டத் தொடங்கினார். இதற்குள் நான் வந்திருக்கும் தகவல் பரவிவிட்டது. அவருடைய தாயார், சகோதரர்கள் மற்றும் அருகில் உள்ள சிலரும் அங்கு வந்துவிட்டனர்.

காழஞ்சி அமைதியானவுடன், மாமியாருடன் உள்ள உறவு பற்றி சர்வேஷா தேவியிடம் நான் கேட்டேன். இந்த முறை சாஷி தேவி பற்றி பாராட்டிப் பேசுவதற்கு அவரிடம் ஏதும் இருக்கவில்லை. உண்மையில், உறவு மிகவும் மோசமாகிவிட்டது. தனக்கும், காழஞ்சிக்கும் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாகத் தெரிவித்தார்.

குழந்தை பிறந்த பிறகு, சர்வேஷா தேவிக்கு, வங்கி வரிசையில் காத்திருந்தபோது குழந்தை பிறந்தமைக்காக நிவாரணமாக அரசு 200,000 ரூபாய் ($2,990; £2,395) அளித்தது.

காழஞ்சி தனது தாய் மற்றும் நான்கு உடன்பிறப்புகளுடன் வசிக்கிறான்
படக்குறிப்பு, காழஞ்சி தனது தாய் மற்றும் நான்கு உடன்பிறப்புகளுடன் வசிக்கிறான்

முன்பு உயிரைக் காப்பாற்றிய மாமியார் இப்போது கொடுமைக்கார மாமியாராக வர்ணிக்கப்பட்டார். நிவாரண நிதியில் பாதியை தமக்குத் தருமாறு கேட்டு அடிக்கடி அடித்து துன்புறுத்தியதாகவும் சொல்கிறார்.

நிரந்தர வருமானம் இல்லாமல், வறுமையில் வாடும் ஒரு குடும்பத்துக்கு இது கணிசமான ஒரு தொகை. அப்போது தான் குடும்பத்துக்குள் உறவுகள் மோசமடையத் தொடங்கின.

குடும்பம் இப்படி பிரிந்து போகும் அளவுக்கு என்ன நடந்தது? இந்தக் கேள்வியைத்தான் சர்வேஷா தேவியிடமும் - பிறகு சர்தார் புர் சென்றபோது அவருடைய மாமியாரிடமும் கேட்டேன். அவர்களுடைய குடும்பத்தினரிடமும், கிராம மக்களிடமும் இதைக் கேட்டேன்.

அவர்கள் கூறுவது, அதற்கு மறுப்பு வருவது ஆகியவற்றைக் கொண்டு எது சரி என பிரித்துப் பார்ப்பது சிரமமாக இருந்தது. யார் நேர்மையானவர்கள், யார் பெரிதுபடுத்திச் சொல்கிறார்கள் என புரிந்து கொள்வது சிரமமாக இருந்தது.

காழஞ்சியின் குடும்பம், இந்தியாவில் மிக ஏழ்மையான மற்றும் மிகவும் ஒடுக்கப்பட்ட சமுதாயமான, பைகா மலைவாழ் சமூகத்தைச் சேர்ந்தது. கல்வி அறிவு குறைந்தவர்கள், சொந்தமாக நிலம் கிடையாது. பெரும்பாலும் பிச்சை எடுத்து வாழ்பவர்கள்.

காலம் காலமாக பைகா மக்கள் பாம்பு பிடிப்பவர்கள். நீண்டகாலத்துக்கு முன்பே பாம்பு பிடிப்பது தடை செய்யப்பட்டு விட்டது என்றாலும், ஒவ்வொரு முறை அவர்களை நான் சந்திக்கும்போதும், பெருமையுடன் பாம்புகளைக் காட்டுவார்கள்.

காழஞ்சியின் குடும்பம் பைகா மலைவாழ் சமூகத்தைச் சேர்ந்தது. காலம் காலமாக பாம்பு பிடிக்கும் தொழில் செய்து வருகிறார்கள்.
படக்குறிப்பு, காழஞ்சியின் குடும்பம் பைகா மலைவாழ் சமூகத்தைச் சேர்ந்தது. காலம் காலமாக பாம்பு பிடிக்கும் தொழில் செய்து வருகிறார்கள்.

இந்த முறையும், அப்போது பிடித்த பாம்பைப் பார்க்கிறீர்களா என கிராமத்தினர் கேட்டனர். நான் பதில் சொல்வதற்குள், ஒரு கூடையில் இருந்து சீறிக் கொண்டிருந்த நாகப்பாம்பு ஒன்றை வெளியே எடுத்தார்கள். பாம்பை அவர் தட்டிவிட்டார். என்னிடம் இருந்து ஒரு மீட்டர் தூரத்தில் அது தரையில் ஊர்ந்து கொண்டிருந்தது. அது ஆபத்தில்லாதது என்று அவர் எனக்கு உத்தரவாதம் கொடுத்தார்.

இப்போதுள்ளதைவிட மூன்று மடங்கு பெரியதாக இது வளரும் என்று அவர் விளக்கம் கொடுத்துவிட்டு, கூடையில் எடுத்துப் போட்டார். நாங்கள் மீண்டும் பேசத் தொடங்கிய போது, அச்சத்துடன் அதன் மீதும் ஒரு பார்வை வைத்துக் கொண்டேன்.

சர்தார் பூர் மற்றும் அனந்த்பூர் டாவ்க்கல் கிராமங்கள் உள்ள உத்தரப்பிரதேச மாநிலம், இந்தியாவில் அதிக மக்கள் தொகை உள்ள மாநிலம். அங்கு 200 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். தினமும் 15,000-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பிறக்கின்றனர். எனவே ஒரு குழந்தையின் பிறப்பு இவ்வளவு எழுச்சியை உண்டாக்கும் என நினைத்துப் பார்ப்பது கஷ்டம்.

ஆனால், காழஞ்சியின் பிறப்பு சூழ்நிலை மாறுபட்டது என்பதால் அதற்கு நட்சத்திர அந்தஸ்து கிடைத்தது. அதுவும் முக்கியமான பிராந்தியத் தேர்தலுக்கு மாநிலம் தயாராகிக் கொண்டிருந்த நேரத்தில் நடந்தது அது. பணமதிப்பு நீக்கம் எந்த அளவுக்கு கஷ்டங்களைக் கொடுத்தது என்பதைக் காட்டுவதற்காக ``வங்கி காத்திருப்பு வரிசையில் நடந்த பிறப்பு'' என்பதை அப்போதைய முதல்வர் அகிலேஷ் யாதவ் பயன்படுத்திக் கொண்டார்.

அரசியல் கூட்டம் ஒவ்வொன்றிலும் இந்தக் குழந்தையைப் பற்றி அகிலேஷ் பேசினார். பிரதமர் மோடியின் ரூபாய் நோட்டு தடையால் ஏழைகள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டனர். காழஞ்சியின் குடும்பத்தினரைப் போல கஷ்டப்பட்டனர் என்று அவர் கூறினார்.

காழஞ்சி பிறந்த சில மாதங்களில், அவனுடைய தாயாருக்கு திரு. யாதவ் நிவாரண நிதி அளித்தார்.

காழஞ்சி பிறந்த போது, தனது மாமியார் இல்லாமல் போயிருந்தால் தாம் இறந்திருக்க நேரிட்டிருக்கும் என்று சர்வேஷா தேவி (வலது) கூறினார்.
படக்குறிப்பு, காழஞ்சி பிறந்த போது, தனது மாமியார் இல்லாமல் போயிருந்தால் தாம் இறந்திருக்க நேரிட்டிருக்கும் என்று சர்வேஷா தேவி (வலது) கூறினார்.

தனது கணவர் விட்டுச் சென்ற கடனை அடைப்பதற்கும், காசநோயால் பாதிக்கப்பட்டுள்ள மூத்த மகனின் சிகிச்சைக்கும் பாதி தொகையை செலவு செய்துவிட்டதாக சர்யேஷா தேவி கூறினார். மீதித் தொகையை வங்கியில் டெபாசிட்டாக போட்டுள்ளார்.

ஆனால் பிறகு, பாதி தொகையை தமக்குத் தர வேண்டும் என்று மாமியார் கேட்டதாகவும், அதற்கு தாம் மறுத்துவிட்டதாகவும், அவர் தெரிவித்தார். அப்போது ``அந்தக் குடும்பத்தினர் என்னை கீழே தள்ளி தாக்கினார்கள்'' என்றும் குறிப்பிட்டார். சென்றுவிடுவது என்று அப்போது முடிவு செய்திருக்கிறார்.

ஐந்து குழந்தைகளுக்குத் தாயான 37 வயதான அந்தப் பெண்மணி, தாங்கலாக நடக்கிறார். ``என் கணவரும் போய்விட்டு, நானும் ஊனமுற்று இருப்பதால், என் குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள யாரும் கிடையாது. அவர்களின் எதிர்காலத்தை நான் பார்க்க வேண்டும்'' என்பதால் பணத்தைத் தர மறுத்துவிட்டேன் என்கிறார்.

சகோதரியை திருப்பி அனுப்புமாறு சமுதாயத்தினர் அழுத்தம் கொடுத்ததாக மல்கான் நாத் கூறினார்.
படக்குறிப்பு, சகோதரியை திருப்பி அனுப்புமாறு சமுதாயத்தினர் அழுத்தம் கொடுத்ததாக மல்கான் நாத் கூறினார்.

அவர் பிரிந்து வந்த பிறகு பிரச்சினை மேலும் மோசமாகிவிட்டது என்று அவருடைய மூத்த சகோதரர் மல்கான் நாத் தெரிவித்தார். அவரை திருப்பி அனுப்புமாறு சமுதாயத்தினர் அழுத்தம் கொடுத்ததாக மல்கான் நாத் கூறினார்.

``அது உன்னுடைய குடும்பம், உன்னுடைய வீடு, தயவுசெய்து திரும்பிச் சென்றுவிடு என்று நாங்கள் சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆனால் அவர்கள் அடிக்கிறார்கள், மோசமாக நடத்துகிறார்கள் என்று சொல்லி அங்கு செல்ல அவர் மறுக்கிறார். என்ன செய்வதென்று எங்களுக்குத் தெரியவில்லை. அவள் என் சகோதரி. விருப்பம் இல்லாவிட்டாலும், போய்விடு என்று நான் எப்படி சொல்ல முடியும்?'' என்று அவர் கேட்கிறார்.

குடும்பப் பிரச்சினை இப்போது சமுதாயப் பஞ்சாயத்தில் இருக்கிறது. அதுதான் தங்களுடைய ``உயர்நீதிமன்றம்'' என்கிறார் மல்கான் நாத். சமுதாயத்தின் மூத்தவர்கள் அந்தப் பஞ்சாயத்தில் இருக்கிறார்கள். பைகா சமூகத்தவர் தொடர்பான விஷயங்களில் அவர்கள் தான் விசாரித்து தீர்ப்பு கூறுவார்கள். அவர்களுடைய தீர்ப்புக்கு சட்டபூர்வமான கட்டுப்பாடு எதுவும் கிடையாது. ஆனால், அதை ஏற்க மறுப்பவர்கள் சமூகப் புறக்கணிப்புக்கு ஆளாக நேரிடும் என்பதாலும், பெரிய தொகை அபராதம் செலுத்த வேண்டியிருக்கும் என்பதாலும் அபூர்வமாகத்தான் அதை புறக்கணிப்பார்கள்.

கடந்த ஆண்டில் ``பஞ்சாயத்தில்'' மூன்று முறை தாம் ஆஜரானதாக மல்கான் நாத் கூறினார். காழஞ்சியுடன் பஞ்சாயத்துக்கு வர வேண்டும் என்ற உத்தரவின்படி சகோதரி வராத காரணத்தால் ஒரு முறை 650 ரூபாய் அபராதத்தை தாம் செலுத்தியதாகவும் தெரிவித்தார்.

தன் சகோதரியை மாமியார் வீட்டுக்கு அனுப்பி வைக்குமாறு சமுதாயத்தினர் அழுத்தம் தருவதாக மல்கான் நாத் கூறுகிறார்.

இலங்கை
இலங்கை

இந்த மாத ஆரம்பத்தில் பிரச்சினை தலைதூக்கியது. காழஞ்சியின் பிறந்த நாளுக்கு ஒரு நாள் முன்னதாக, டிசம்பர் 1 ஆம் தேதி, பின்னிரவு நேரத்தில் இரண்டு கார்களில் அதிகாரிகள் தன்னுடைய வீட்டுக்கு வந்ததாக சர்வேஷா தேவி கூறினார்.

``இரவு சாப்பாட்டுக்காக நான் உட்கார்ந்திருந்தேன். காழஞ்சி தூங்கிவிட்டான். மறுநாள் பிறந்த நாளை ஒட்டி சர்தார் பூர் கிராமத்துக்கு நாங்கள் வர வேண்டும் என்று அவர்கள் வற்புறுத்தினார்கள். நான் மறுத்தேன். எனவே அவர்கள் காழஞ்சியை தூக்கிக் கொண்டு காருக்கு சென்றார்கள். அவன் விழித்துக் கொண்டு அழுதான். நாங்கள் சப்தம் போட்டு அவர்களை விரட்டியடித்தோம். அருகில் வசித்த அனைவரும் வந்து எங்களுக்கு உதவி செய்து அவனை மீட்டார்கள். அவனை கடத்துவதற்கு அவர்கள் முயற்சி செய்தார்கள்'' என்று அவர் கூறினார்.

கடந்த ஆண்டு மாநிலத் தேர்தலில் திரு. யாதவ் வெற்றி பெறவில்லை என்றாலும், காழஞ்சி குடும்பத்தினருடன் அவர் தொடர்பில் இருக்கிறார். வரவிருக்கும் பொதுத் தேர்தலில் இந்தக் குழந்தையை அடையாள விஷயமாகப் பயன்படுத்துவதற்கு அவர் திட்டமிட்டுள்ளார் என்றும், அவனுடைய பிறந்த நாளில் இரண்டு வீடுகள் -சர்தார் பூரில் ஒன்றும் அனந்த்பூர் டவ்க்கலில் ஒன்றும் - பரிசாகத் தருவதாக அறிவித்துள்ளார் என்றும் உள்ளூர் பத்திரிகையாளர்கள் கூறுகின்றனர்.

சிறுவனின் பிறந்த நாளில் முன்னாள் முதல்வரான யாதவ் அந்தக் கிராமத்துக்குச் சென்று சாவிகளை காழஞ்சியிடம் ஒப்படைப்பதாகத் திட்டமிடப் பட்டிருந்தது. செய்தி சேகரிக்க வருமாறு உள்ளூர் செய்தியாளர்களுக்கு அழைப்பு விடுக்கப் பட்டிருந்தது. புகைப்படம் எடுத்துக் கொள்வதற்கான வாய்ப்பாக அது ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.

ஆனால் திரு. யாதவ் சர்தார் பூர் சென்றபோது, காழஞ்சி அங்கே இல்லை என்பதால், சாவிகளை சாஷி தேவியிடம் ஒப்படைத்தார்.

குழந்தை இல்லாததால் ஏமாற்றம் அடைந்த திரு. யாதவ், ``பிறந்த வீட்டாருக்கும், புகுந்த வீட்டாருக்கும் இடையில் உள்ள பிரச்சினை'' பற்றி தமக்குத் தெரியாது என்று கூறினார். தமக்கு ``சங்கடத்தை'' ஏற்படுத்தியமைக்காக கட்சியின் இரண்டு மூத்த நிர்வாகிகளை அவர் நீக்கிவிட்டார்.

சாஷி தேவியின் உறவினர்கள் அவர்களுடைய மருமகளுடன் கடந்த ஆண்டு பிடிக்காதவர்களாகிவிட்டனர்..
படக்குறிப்பு, சாஷி தேவியின் உறவினர்கள் அவர்களுடைய மருமகளுடன் கடந்த ஆண்டு பிடிக்காதவர்களாகிவிட்டனர்..

சில தினங்களுக்குப் பிறகு நான் சர்தார்பூர் சென்ற போது, சாலையோரத்தில் பெரிய புதிய வீடு ஒன்றைப் பார்த்தேன். சாஷி தேவி சந்தைக்குப் போயிருந்தார். எனவே, அவர் வரும் வரை காத்திருந்தபோது அவருடைய உறவினர்கள் மற்றும் அருகில் வசிப்பவர்களுடன் பேசிக் கொண்டிருந்தேன். வீட்டை அலங்கரித்துக் கொண்டிருந்த சாமந்துப் பூ செடிகள் வாடிக் கிடந்தன. உற்சாகமும் குறைந்திருந்தது.

``காழஞ்சியை பார்ப்பதற்கு நிறைய பேர் கூடிவிட்டனர். ஆனால் அவருடைய தாயார் விலகி இருக்க விரும்பினார்'' என்கிறார் அவனுடைய பெரிய பெரியப்பா அஷ்ரபி நாத். ``திரு. யாதவ் பரிசுகளுடன் வந்திருந்தார். ஆனால் அவற்றையெல்லாம் திரும்ப எடுத்துச் சென்றுவிட்டார். சர்வேஷா தேவி ஒரு மணி நேரம் வந்திருக்கலாம். கொண்டாட்டங்களுக்கு வர மறுத்ததன் மூலம் திரு. யாதவை அவர் அவமதித்துவிட்டார்'' என்று கூறினார்.

காழஞ்சி பிறக்கும் வரையில் எல்லாம் நன்றாகத்தான் இருந்தது என்று கிராம மக்கள் கூறினர். ``அவனுடைய தாயாரின் குடும்பத்தினர் மற்றும் கிராமத்தின் பேராசையும், பொறாமையும் தான் அழிவுக்குக் காரணமாகிவிட்டது'' என்றார்கள். அவளுடைய குடும்பத்தினர் பணம் வேண்டும் என நினைக்கிறார்கள். காழஞ்சி அங்கே இருந்தால், கிராமத்துக்கு வளர்ச்சிப் பணிகள் வரும் என கிராம மக்கள் நம்புகிறார்கள்.

இதில் பெரிய அரசியல் சதி இருப்பதாகவும் கிராமத்தினர் குறிப்பிடுகின்றனர். சர்தார் பூர் திரு. யாதவின் சமாஜ்வாதி கட்சியை ஆதரிக்கக் கூடியதாக உள்ளது. திரு. மோடியின் பாஜகவை ஆதரிக்கும் மேல்சாதி தாக்குர்கள் அனந்த்பூர் டவ்க்கலில் பெரும்பான்மையாக உள்ளனர்.

சர்வேஷா தேவி திரும்பிச் செல்ல விரும்பாவிட்டால், பிறந்த வீட்டாரின் கிராமத்திலேயே தங்கியிருக்கலாம் எனறு அந்தக் கிராமத்தைச் சேர்ந்த முலாயம் நாத் கூறினார். ஆனால், ``காழஞ்சியை அவர் திருப்பி அனுப்பிவிட வேண்டும். ஏனென்றால் அவன் எங்களுடைய குழந்தை. எங்கள் கிராமத்துக்குச் சொந்தமானவன். அதிகாரிகள் அறிவித்துள்ள வளர்ச்சிப் பணிகள் எங்களுக்கு வந்தாக வேண்டும்'' என்கிறார்.

சாஷி தேவி வரும்போது இருட்டத் தொடங்கிவிட்டது. புதிதாகக் கட்டப்பட்ட வீட்டுக்கு வெளியே அவர் தரையில் அமர்ந்து கொண்டார். அவருக்கு எதிரான புகார்கள் பற்றி நான் கேட்டேன்.

``அதெல்லாம் பொய்கள்'' என்றார் அவர். ``என் மருமகளிடம் நான் பணம் எதுவும் கேட்கவில்லை. அப்படி சொல்லுமாறு அவளுக்கு பயிற்சி கொடுத்திருக்கிறார்கள்'' என்று கூறினார்.

வங்கியில் காத்திருந்த போது பிறந்த இந்திய குழந்தை தொடர்பான சண்டை
படக்குறிப்பு, வங்கியில் காத்திருந்த போது பிறந்த இந்திய குழந்தை தொடர்பான சண்டை

தனது மகன் வேலை செய்ய முடியாமல் நோயுற்றிருந்த போது ஐந்து குழந்தைகளுக்கும் குடும்பத்தினர் உணவு கொடுத்து, உடைகள் கொடுத்தது பற்றி சாஷி தேவி கூறினார். மகனின் மரணத்துக்குப் பின் சில மாதங்களில், தனது கணவர் வீட்டுக்குக்கொண்டு வரும் சிறிதளவு பணத்தையும் மற்ற மகன்களுக்கும், அவருக்கும் பிரித்துக் கொடுப்பது பற்றியும், அப்படி கொடுக்க வேண்டியதில்லை என்றாலும், பிரித்துக் கொடுத்தோம் என்றும் கூறினார்.

சர்வேஷா தேவியை தாக்கியதாகக் கூறிய குற்றச்சாட்டுகளை அவர் மறுத்தார். ``எனக்கு இன்னும் நான்கு மருமகள்கள், 16 பேரக் குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்கள் யாரும் தாக்கப்படாமல் இருப்பது எப்படி?'' என்று அவர் கேட்கிறார்.

தாக்கப்பட்டது மற்றும் வசைபாடியது என்று அவர் நிறைய சொல்கிறார். ``அவளையும், குழந்தையையும் திரும்ப அழைத்து வருவதற்கு இரண்டு முறை அந்தக் கிராமத்துக்கு நான் சென்றேன். ஒவ்வொரு முறையும் காழஞ்சியை அவர்கள் மறைத்து வைத்துக் கொண்டு, அங்கிருந்த பெண்கள் என்னைத் தாக்கினார்கள்'' என்று தெரிவித்தார்.

தாமோ அல்லது குடும்பத்தில் யாருமோ சர்வேஷா தேவியையோ அல்லது காழஞ்சியையோ தாக்குவதாக சொல்வதை சாஷி தேவி மறுத்தார். ``எங்களுடைய மருமகள், பேரக் குழந்தையை நாங்கள் எப்படி கொல்ல முடியும்?'' என்று கேட்டார்.

நான் புறப்படத் தயாரானபோது, சமாதானத்துக்கு ஏதும் வாய்ப்பு இருக்கிறதா என கேட்டபோது, அவரிடம் அதிக நம்பிக்கையைக் காண முடியவில்லை.

``சமீபத்தில் அவளை நான் மூன்று முறை சந்தித்தேன். திரும்ப வந்து புதிய வீட்டில் வாழ்க்கை நடத்துமாறு கேட்டுக் கொண்டேன். ஆனால், அவள் மறுத்துவிட்டாள்'' என்று கண்ணீரை முந்தானையால் துடைத்தபடி அவர் சொன்னார். ``முன்பு என் மகனை இழந்தேன். இப்போது என் பேரனையும் இழந்துவிட்டேன்'' என்று கூறினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: