காங்கிரஸ் தலைவராக ஓராண்டை நிறைவு செய்த ராகுல் : நரேந்திர மோதியை வெல்வாரா?

ராகுல் காந்தி

பட மூலாதாரம், Getty Images

காங்கிரஸ் கட்சியின் நடைமுறை தலைவராக இருந்த ராகுல் காந்தி கடந்த ஆண்டு (2017) டிசம்பர் 16ஆம் தேதி கட்சியின் தலைவராக பதவியேற்றார்.

ஒரு தலைவராக பொறுப்பேற்று ஓராண்டிற்குள் இந்தி பேசும் மாநிலங்களான ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் சத்திஸ்கர் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றிப்பெற்றுள்ளது. இது அவருக்கு கிடைத்த ஒரு சிறந்த பரிசு அல்லது இதைதான் காங்கிரஸ் கட்சி எதிர்பார்த்துக் கொண்டிருந்தது என்றும் கூறலாம்.

சத்திஸ்கரில் காங்கிரஸ் பெற்ற வெற்றி ஒரு தீர்க்கமான வெற்றி என்றே கூறலாம். இது வெற்றியாளர்கள் மற்றும் எதிர்க்கட்சி பெற்ற வாக்கு எண்ணிக்கையையோ அல்லது தொகுதிகளையோ மட்டும் குறிப்பிட்டு சொல்லவில்லை, பாஜக அரசின் வெற்றிகள் என்று கருதப்பட்டவை அங்கு எடுபடவில்லை என்பதையும் இது காட்டுகிறது.

இதன்மூலம் பொது தேர்தலில் நாம் என்ன எதிர்பார்க்கலாம்? பாஜகவிற்கு எதிரான ஒரு நிலையை. ஆனால் அது காங்கிரஸுக்கு ஆதரவான நிலை என்று கூற முடியாது. தெலங்கானாவை போன்றும் சூழல் அமையலாம்.

ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசம் மாநிலங்களில், வாக்கு எண்ணிக்கையை பொறுத்தவரையில், பாஜக மற்றும் காங்கிரஸுக்கு இடையே மிக குறைவான வாக்கு வித்தியாசமே இருந்தன. மத்திய பிரதேசத்தில் பாஜக காங்கிரஸைக் காட்டிலும் சற்று அதிகமான வாக்குகளையே பெற்றிருந்தது. இருப்பினும் கூட்டணிகளின் துணையுடன் அங்கு ஆட்சி அமைத்துள்ளது. இந்நிலை 2019ஆம் ஆண்டிலும் தொடரும் என்று எதிர்பார்க்கலாம்.

2018 தேர்தல் காங்கிரஸ் தொண்டர்களை நாடாளுமன்ற தேர்தலை நோக்கி பணிபுரிய வைத்துள்ளது. மேலும் தங்களின் தலைமையின் திறமை மீது தங்களுக்கு இருந்த சந்தேகநிலையை அது நேர்மறையாக மாற்றியுள்ளது. இந்த மூன்று மாநிலங்களில் மொத்தமுள்ள 65 மக்களவை தொகுதிகளில் பாஜகவிடம் 59 இடங்கள் உள்ளன.

தற்போதைய வாக்கு விகிதங்களை வைத்து கூறினால், அடுத்த வருடம் காங்கிரஸிடம் 33 இடங்கள் இருக்கும். இது பாஜக எதிர்ப்பு கூட்டணியின் முன்னோடியாக யார் இருப்பார்கள் என்ற பேச்சுக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும். மேலும் திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் தேசியவாத காங்கிரஸின் தலைவர் ஷரத் பவார் ஆகியோர் ராகுல் காந்தியை பிரதமராக ஏற்பதாக முன்மொழிந்துள்ளனர்.

காங்கிரஸுக்கு வெற்றி முகமா?

கடந்த ஒரு வருடத்தில் குஜராத் மாநில சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் தன்னுடைய வாக்கு எண்ணிக்கையை அதிகரித்துள்ளது. மேலும் கர்நாடகாவில் தனது ஆட்சியை தக்க வைத்துள்ளது.

அமித் ஷா

பட மூலாதாரம், Getty Images

ராஜஸ்தான் மாநிலத்தில் வசுந்தரா ராஜே ஆட்சிக்கு எதிரான ஒரு மனநிலை இருந்தநிலையில், காங்கிரஸ் அங்கு இடைத்தேர்தல்களில் வெற்றிப்பெற்றது. மேலும் ஆல்வார், அஜ்மிர் மக்களவை தொகுதிகளில் வென்றது. கர்நாடக மாநிலத்தில் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் இரண்டு இடங்களை பிடித்தது. இது அனைத்தும் ராகுல் காந்தியின் தலைமையில்.

ஆனால் தற்போது காங்கிரஸ் பெற்ற வெற்றி மிகவும் முக்கியத்துவம் வாயந்தது. 2013 டிசம்பர் தோல்விக்கு பிறகு காங்கிரஸ் நிரந்தர சரிவு என்ற நிலையை இது தடுத்திருக்கிறது.

காங்கிரஸின் தோல்வி முகம், தொடங்கியது 2013ஆம் ஆண்டு நடைபெற்ற ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல்கள். அந்த தேர்தலின் முடிவுகள் 2014 நாடாளுமன்ற தேர்தலிலும் பிரதிப்பலித்தது. காங்கிரஸ் வெறும் 44 தொகுதிகளை மட்டுமே வென்றது.

2013ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ராஜஸ்தானில் 96 தொகுகளிலிருந்து 21 தொகுதிகள் என்ற நிலைக்கு காங்கிரஸ் தள்ளப்பட்டது. டெல்லியில் காங்கிரஸுக்கு எதிராக உருவெடுத்த ஆம் ஆத்மி கட்சி, 15 ஆண்டுகாலம் தொடர்ந்து ஆட்சி செய்த காங்கிரஸை வீழ்த்தியது. மத்திய பிரதேசத்தில் 230 தொகுதிகளில் 165 தொகுதிகளை கைப்பற்றினார் சிவ்ராஜ் சிங் செளஹான்.

ஆனால் தற்போதைய முடிவுகளை கொண்டு அடுத்த வருடத்தில் பாஜகவை காட்டிலும் காங்கிரஸ் அதிக வாக்குகளை பெறும் என்று சொல்லமுடியாது.

2014ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜக 282 சீட்டுகளும், காங்கிரஸ் 44 சீட்டுகளும் பெற்றிருந்தன. இந்த ஐந்து வருடத்தில் காங்கிரஸ் அதை சரி செய்திருக்கும் என்று கூறமுடியாது.

தற்போது நாடாளுமன்ற கீழவையில் வெறும் 47 இடங்களை கொண்டு காங்கிரஸ் வெறும் பெயருக்கே எதிர்க்கட்சியாக இருக்கிறது.

ராகுல் காந்தி

பட மூலாதாரம், Getty Images

மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி ஜனரஞ்சகமான சில தேர்தல் வாக்குறுதிகளை வழங்கியது. விவசாயக் கடன்கள் ரத்து மற்றும் வேலையில்லாதவர்களுக்கு சலுகைகள் போன்ற வாக்குறுதிகளை அறிவித்திருந்தது.

மத்திய பிரதேசத்தில் பாஜகவுக்கு வாக்களிப்போரை கவர 23,000 கிராம பஞ்சாயத்துகளிலும் மாட்டுக் கொட்டகை அமைத்து தரப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தது காங்கிரஸ்.

இந்துத்துவா கொள்கைகளை சற்று பின்பற்றுவதாக எழுந்த கருத்துக்களை குறித்து ராகுல் காந்தி எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

ஒரு வருட காலத்தில் ராகுல் காந்தி பல கோவில்களுக்கு சென்று வந்தார்.

1984 ஆம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிராக நடைபெற்ற கலவரங்களில் தொடர்புடையவர் என்று கருதப்படும் கமல் நாத்தை மத்திய பிரதேச மாநில முதலமைச்சராக தேர்ந்தெடுத்திருப்பது குறித்தும் பல விமர்சனங்கள் எழுந்துள்ளன. எனவே ஒரு அரசியல் மாற்றாக காங்கிரஸ் கட்சி உள்ளதே தவிர மாற்று அரசியலின் ஒதுக்கமுடியாத காங்கிரஸ் இல்லை என்று கூறலாம்.

இவை எல்லாம் இருப்பினும் சில அரசியல் ஆதாயங்களையும் ராகுல் காந்தி பெற்றுள்ளார்.

ராகுல் காந்தி, மூன்று மாநிலங்களிலும் காங்கிரஸ் பிரிவுகளை ஒன்றிணைத்த விதம், இளைஞர்களின் ஆற்றல் மற்றும் அனுபவசாலிகளின் அறிவு ஆகியவற்றை இணைத்துள்ளதை காட்டுகிறது. மேலும் அது கட்சியின் தலைமையில் ஏற்பட்ட மாற்றம் இனி முதிர்ச்சியடைந்த அனுபவசாலிகளுக்கு கட்சியில் இடமில்லை என்ற கருத்தை பொய்யாக்கியுள்ளது.

காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரையில் வயதில் மூத்தவர்களாக இருப்பினும் கட்சியின் மறுமலர்ச்சிக்கு அவர்கள் பங்களிப்பார்கள் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

2019 நாடாளுமன்ற தேர்தலுக்காக கட்சியின் உள்ளேயும் வெளியேயும் ஆதரவுகளை ராகுலால் பெற முடியும். மேலும் பாஜக தலைவரான அமித் ஷாவின் நிர்வாக திறனுக்கு ஈடுகொடுக்க ராகுலுக்கு அது உதவும். ஆனால் நரேந்திர மோதி பெற்ற ஆதரவை உடைக்க ஒவ்வொரு மாநிலத்திலும் வலுவான கூட்டணி அமைக்க வேண்டும்.

(இந்தக் கட்டுரை, பத்திரிகையாளரும் மற்றும் ராகுல் காந்தியின் அரசியல் வாழ்க்கை புத்தகத்தின் இணை ஆசிரியரால் எழுதப்பட்டது. )

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: