வாடகைத் தாய் மூலம் தந்தையான தன்பாலின சேர்க்கையாளர்

பட மூலாதாரம், Getty Images
இன்றைய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான சில முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகின்றோம்.
தமிழ் இந்து - "வாடகைத் தாய் மூலம் தந்தையான தன்பாலின சேர்க்கையாளர்"
ஆண் தன்பாலின சேர்க்கையாளர் ஒருவர், வாடகைத் தாய் மூலம் பெற்றெடுத்த மகனைச் சிங்கப்பூரில் முறைப்படி தத்தெடுக்க அந்நாட்டு நீதிமன்றம் அனுமதித்துள்ளதாக தமிழ் இந்து செய்தி வெளியிட்டுள்ளது.
"வாடகைத்தாய் மூலம் குழந்தை பெறுவதற்கும் சிங்கப்பூரில் இடமில்லை. இந்நிலையில் தன்பாலின ஈர்ப்பாளரான ஆண் ஒருவர், குழந்தை பெற விரும்பினார்.
இதனால் அமெரிக்காவில் வாடகைத் தாய் மூலம் குழந்தையைப் பெற முடிவு செய்தார். 2 லட்சம் டாலர்களுக்கு இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதைத் தொடர்ந்து அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. இப்போது சிறுவனுக்கு ஐந்து வயது ஆகிறது.
பெயர் உள்ளிட்ட விவரங்கள் வெளியிடப்படாத 46 வயதான மருத்துவரான தன்பாலின ஈர்ப்பாளர் தன் மகனை சிங்கப்பூர் அழைத்து வந்தார். முறைப்படி தத்தெடுக்க அனுமதி கோரினார். ஆனால் மாவட்ட நீதிபதி அவரின் கோரிக்கையை நிராகரித்து விட்டார். இதனால் அவர் சிங்கப்பூர் உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்தார்.
தத்தெடுப்பை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், சிறுவனின் நலனுக்காக அனுமதி வழங்குவதாகத் தெரிவித்துள்ளது. அத்துடன், 'இந்த தீர்ப்பு இந்த வழக்குக்கு மட்டுமே பொருந்தும்' எனவும் 'இதுமாதிரியான செயல்களுக்கான பொதுவான அனுமதியாகக் கருதக்கூடாது' என்றும் தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன் தெரிவித்துள்ளார்" என்று தமிழ் இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

தினத்தந்தி - "விவசாயக் கடனை ரத்துசெய்து கமல்நாத் முதல் உத்தரவு"

பட மூலாதாரம், Getty Images
ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் நேற்று காங்கிரஸ் முதலமைச்சர்கள் பதவி ஏற்றனர். மத்தியப்பிரதேச முதலமைச்சராக கமல்நாத் பதவி ஏற்றதும் விவசாய கடனை ரத்துசெய்து முதல் உத்தரவு பிறப்பித்தார் என்று தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.
"தேர்தல் பிரசாரத்தின் போது, மத்தியப்பிரதேசத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் 10 மணி நேரத்தில் விவசாய கடன் ரத்து செய்யப்படும் என்று ராகுல்காந்தி வாக்குறுதி அளித்து இருந்தார்.
அதன்படி, நேற்று கமல்நாத் முதல்-மந்திரியாக பதவி ஏற்றதும் முதன் முதலாக, விவசாயிகளின் ரூ.2 லட்சம் வரையிலான கடன்களை ரத்து செய்யும் கோப்பில் கையெழுத்திட்டார்.
இது தொடர்பாக அரசு பிறப்பித்துள்ள உத்தரவில், தேசிய மற்றும் கூட்டுறவு வங்கிகளில் கடந்த மார்ச் மாதம் வரை விவசாயிகள் வாங்கி இருக்கும் ரூ.2 லட்சம் வரையிலான குறுகியகால பயிர்க்கடன்கள் ரத்து செய்யப்படும் என்று கூறப்பட்டு உள்ளது" என்று அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி: "செயற்கைக்கோள் மூலம் மீனவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பும் கருவி"

பட மூலாதாரம், Getty Images
ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபடும் மீனவர்களுக்கு செயற்கைகோள் மூலம் குறுஞ்செய்தி அனுப்பும் கருவிகளை தமிழக அரசு வழங்கியுள்ளதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.
"இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் தொழில்நுட்பத்தில் செயற்கைகோள் மூலமாக குறுஞ்செய்தி பெறும் நேவிக் எனும் ஆழ்கடல் தகவல் தொடர்பு கருவிகள் தயாரிக்கப்பட்டன.
இந்த கருவிகள் ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபடும் 80 மீன்பிடி படகு குழுக்களுக்கு அளிக்கப்பட உள்ளன. இதற்கான, நிகழ்ச்சி நேற்று சென்னையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
'நேவிக்' கருவியானது, இந்திய மண்டல வழிகாட்டி செயற்கைகோள் அமைப்பின் உதவியுடன் வானிலை எச்சரிக்கை, வானிலை முன்னறிவிப்பு, சுனாமி, நிலநடுக்கம், புயல் போன்ற இயற்கை இடர்பாடுகள் குறித்த குறுஞ்செய்திகளை பெற்று புளூடூத் இணைப்பு வழியாக ஆண்ட்ராய்டு தொழில்நுட்பம் கொண்ட கைபேசிக்கு தகவல் அனுப்புகிறது" என்று அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தி இந்து (ஆங்கிலம்) - "இன்று நடக்கிறது ஐபிஎல் வீரர்கள் ஏலம்"

பட மூலாதாரம், Twitter
அடுத்தாண்டு கோடைகாலத்தில் நடக்கவுள்ள ஐபிஎல் போட்டிகளுக்கான வீரர்களை அணிகள் தேர்ந்தெடுப்பதற்கான ஏலம் இன்று ஜெய்ப்பூரில் நடக்கவுள்ளதாக 'தி இந்து' செய்தி வெளியிட்டுள்ளது.
"அடுத்தாண்டு இந்தியாவில் நாடாளுமன்றப் பொதுத் தேர்தல்கள் நடைபெறவுள்ளதால் 12-வது ஐபிஎல் தொடர் பகுதியளவு இந்தியாவிலோ அல்லது முற்றிலும் ஐக்கிய அரபு எமிரேட்டிலோ அல்லது தென்னாப்பிரிக்காவிலோ நடக்குமென்று கருதப்படுகிறது.
இந்நிலையில், இன்று ஜெய்ப்பூரில் நடக்கும் ஏலத்தில் இந்திய வீரர்கள், வெளிநாட்டு வீரர்கள் என 346 பேர் பங்கேற்கின்றனர். இந்த ஏலத்தைப் பொறுத்தவரை மிக அதிகபட்சமாக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 36 கோடி ரூபாயையும், குறைந்தபட்சமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8.4 கோடி ரூபாயையும் இந்த ஏலத்தில் செலவிட முடியும்" என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












