வாக்குப்பதிவு இயந்திரங்களை நம்பாத ஆப்பிரிக்க நாட்டு மக்கள்

நம்பிக்கையின்மையால் தீக்கிரையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்

பட மூலாதாரம், Hindustan Times

படக்குறிப்பு, கோப்புப்படம்
    • எழுதியவர், ரியாலிட்டி செக்
    • பதவி, பிபிசி

2001ஆம் ஆண்டிற்கு பிறகு முதல் முறையாக காங்கோ ஜனநாயக குடியரசில் (டி ஆர் காங்கோ)புதிய அதிபருக்கான தேர்தல் வரும் 23ஆம் தேதி நடக்க உள்ளது.

டி ஆர் காங்கோவின் தற்போதைய அதிபரான ஜோசப் கபிலா பதவி விலகுவதையடுத்து, சர்ச்சைகள் ஏதுமின்றி அந்நாட்டில் தேர்தலை நடத்துவதற்கு முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், கடந்த வியாழக்கிழமையன்று, அந்நாட்டு தலைநகர் கின்சாசாவிலுள்ள தேர்தல் ஆணையத்தின் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் அந்நகரின் வாக்குப்பதிவுக்காக வைக்கப்பட்டிருந்த மூன்றில் இரண்டு மடங்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சேதமாகிவிட்டன.

இந்த தீ விபத்திற்காக காரணம் குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.

கிட்டத்தட்ட 17 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் இந்த தேர்தலின் பிரசாரத்தின்போது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்துவதே முக்கிய வாதமாக இருந்தது.

நம்பிக்கையின்மையால் தீக்கிரையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்

பட மூலாதாரம், GETTY/JOHN WESSELS

நாட்டின் அதிபராவதற்கான போட்டியில் இருக்கும் எதிர்க்கட்சி தலைவர்களான பெலிஸ், மார்ட்டின் பாயுலு ஆகியோர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து அச்சத்தை வெளிப்படுத்தியது மட்டுமல்லாது தேர்தலில் போட்டியிடாமல் புறக்கணிக்கப்போவதாகவும் கூறி வருகின்றனர்.

ஐ.நாவுக்கான அமெரிக்காவின் தூதரான நிக்கி ஹாலே, சமீபத்தில் நடந்த கூட்டம் ஒன்றில், டி ஆர் காங்கோவின் தற்போதைய சூழ்நிலையை கண்டித்ததுடன், "பரிசோதிக்கப்பட்ட, நம்பகமான, வெளிப்படையான, எளிதாக வாக்களிக்கக்கூடிய" பழமையான வாக்குச்சீட்டு முறையே சிறந்தது என்றும் தெரிவித்திருந்தார்.

வாக்காளர்களின் கவலைப்படுதற்கான காரணம் என்ன?

முந்தைய தேர்தல்கள் கடுமையான முறைகேடுகள் நடைபெற்ற காங்கோவில் இந்த தேர்தலாவது எவ்வித பிரச்சனையுமின்றி நடைபெறுமா என்று கவலையில் உள்ளனர்.

பெரும்பாலும் கிராமப்புற பகுதிகளை அதிகளவு கொண்ட டிஆர் காங்கோவில், 6 மில்லியன் தகுதி வாய்ந்த வாக்காளர்கள் உள்ளனர். மொத்தமுள்ள 500 தேசிய மற்றும் 715 மாகாண இடங்களுக்கு 34,900 வேட்பாளர்களும், அதிபர் பதவிக்கு 21 பேரும் போட்டியிடுகின்றனர்.

நம்பிக்கையின்மையால் தீக்கிரையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்

பட மூலாதாரம், GETTY/JOHN WESSELS

தென்கொரியாவை சேர்ந்த நிறுவனமொன்று தயாரித்த குறைந்தது 105,000 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை இந்த தேர்தலுக்காக பயன்படுத்துவதற்கு அந்நாட்டு தேர்தல் ஆணையம் திட்டமிட்டிருந்தது.

டி ஆர் காங்கோ தேர்தலில் பயன்படுத்துவதற்கு முடிவுசெய்யப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒத்தவை ஏற்கனவே பெல்ஜியம், பிரேசில், இந்தியா, நமீபியா, வெனிசுவேலா ஆகிய நாடுகளின் தேர்தலில் உபயோகிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்த தேர்தலில்தான் இதுபோன்ற மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல் முறையாக பயன்படுத்தப்படவுள்ளது என்பதால் அந்நாட்டு அரசியல்வாதிகள், மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

மின்ணணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் எப்படி வேலை செய்கிறது?

வாக்குச் சாவடிக்குள் சென்றவுடன் வாக்காளர்கள் கையடக்க கணினியை போன்ற கருவியில் பட்டியலிடப்பட்டுள்ள வேட்பாளர்களில் தங்களுக்கு விருப்பமான ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டும்.

நம்பிக்கையின்மையால் தீக்கிரையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்

பட மூலாதாரம், CENI

வாக்காளர் குறிப்பிட்ட வேட்பாளரை தேர்ந்தெடுத்தவுடன், அந்த தகவல்களை தாங்கிய சீட்டு அச்சாகி வந்தவுடன், அதை அங்குள்ள அதிகாரியிடம் கொடுக்க வேண்டும். பின்பு, அந்த சீட்டுகளை முதலாக கொண்டு வாக்கு எண்ணிக்கை நடத்தப்படும். மேலும், கையடக்க கணினி போன்ற கருவியில் பதிவாகியுள்ள தரவுகள் சீட்டுகளில் பதிவாகிலுள்ள வாக்குகளுடன் பொருத்தி பார்த்து சரிபார்க்கப்படும்.

வாக்குப்பதிவை எளிமையாக்குவதற்கும், துரிதமாக்குவதற்கும், செலவை குறைப்பதற்கும் இந்த புதிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படும் என்று கருதப்படுகிறது.

ஒருவேளை வாக்குச்சீட்டில் ஒரு எண்ணிக்கையும், கணினியில் மற்றொரு எண்ணிக்கையும் காணப்பட்டு குழப்பம் உண்டாகும்பட்சத்தில் வாக்குச்சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணிக்கையே இறுதியானதாக கருதப்படும் என்று அந்நாட்டு தேர்தல் ஆணையம் கூறுகிறது.

இருந்தபோதிலும், இந்த புதிய வகை மின்னணு இயந்திரங்கள் சரிவர பரிசோதிக்கப்படாமலேயே பயன்படுத்த முடிவுசெய்யப்பட்டுள்ளதாக பல்வேறு தரப்பினரும் குற்றஞ்சாட்டுகின்றனர்.

எந்தெந்த நாடுகள் இதை பயன்படுத்துகின்றன?

ஜனநாயகம் மற்றும் தேர்தல் உதவிக்கான சர்வதேச நிறுவனத்தின் தரவுகளின்படி, உலகம் முழுவதும் 33 நாடுகள் ஏதோ ஒரு விதமான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்துகின்றன.

நம்பிக்கையின்மையால் தீக்கிரையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்

பட மூலாதாரம், GETTY/JOHN WESSELS

மிகவும் சில நாடுகளில் மட்டுமே எவ்வித சர்ச்சையுமின்றி மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்துகின்றன.

அர்ஜெண்டினாவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அறிமுகப்படுவதற்கு அந்நாட்டு தேர்தல் ஆணையம் ஆர்வமுடன் இருந்தபோதிலும், கடந்த ஆண்டு அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட ஓட்டெடுப்பில் பாரம்பரிய வாக்குச்சீட்டு முறையே வெற்றிப்பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்த வருடத்தின் தொடக்கத்தில் இராக்கில் நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் பயன்படுத்த சில மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் சில இடங்களில் மறுவாக்குப்பதிவு நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து அரசியவாதிகள் மட்டுமல்லாது, மக்களிடையேயும் நிலவும் அச்சத்துக்கு முதற்காரணம் அவற்றை 'ஹேக்' செய்து தேர்தல் முடிவுகளை மாற்ற முடியும் என்பதேயாகும்.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் நடந்த தேர்தல்களில் வெளிநாடுகளின் தலையீடு இருந்ததாக ஊடகங்கள் வெளியிட்ட செய்திகளே இதற்கு அடித்தளமாக கருதப்படுகிறது.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: