பருவநிலை மாற்றம்: கடைசி 4 ஆண்டுகள்தான் உலகின் மிக வெப்பமான ஆண்டுகள்

வறண்ட நிலம்

பட மூலாதாரம், Getty Images

தொடர்ந்து நான்காவது ஆண்டாக இம்முறையும் (2018) உலகின் வெப்பமான ஆண்டாக பதிவாகியிருப்பதாக உலக வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது .

தொழில் புரட்சிக்கு முந்தைய காலகட்டத்தில் (1850-1900) இருந்த அளவை விட இந்த ஆண்டின் முதல் பத்து மாதங்களில் மட்டும் உலகின் சராசரி வெப்பநிலையானது கிட்டத்தட்ட ஒரு செல்சியஸ் அதிகரித்திருக்கிறது.

கடந்த 22 ஆண்டுகளில் உலகின் 20 வெப்பமான ஆண்டுகள் பதிவாகியுள்ளன. அதில் 2015-2018 வரையிலான ஆண்டுகள் மிக அதிக வெப்பமான ஆண்டுகளாக பதிவாகியுள்ளன.

இந்த நிலை நீடித்தால் 2100-ல் 3-5 செல்சியஸ் அளவுக்கு வெப்பநிலை உயரக்கூடும் என உலக வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

2018-ல் வெப்பநிலையானது 0.98 செல்ஸியஸ் அளவுக்கு உயர்ந்திருப்பது ஐந்து தனித்தனி உலகத் தரவுகளில் இருந்து தெரியவருகிறது.

சுவீடனில் காட்டுத்தீக்கு வித்திட்ட அனல்காற்று

பட மூலாதாரம், Getty Images

முந்தைய ஆண்டுகளை விட 2018-ல் சற்றே வெப்பம் அதிகரிக்கும் வீதம் குறைந்ததற்கு லா-நினா காரணி உதவியது.

இந்நிலையில் ஒரு வலுவற்ற எல்-நினோ அடுத்த ஆண்டுத் துவக்கத்தில் (2019) உருவாகலாம். இதனால் அடுத்த வருடம் இவ்வருடத்தை விட வெப்பமான ஒன்றாக அமையக்கூடும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் நீண்ட காலமாக உள்ள வெப்பம் உயரும் போக்கு 2018-லும் தொடர்ந்துள்ளது. கடல் மட்ட உயர்வு, பெருங்கடலில் அமிலத்தன்மை அதிகரிப்பது , பனிப்பாறைகள் உருகுவது உள்ளிட்டவை இதற்கு சில உதாரணங்கள்.

''பருவநிலை மாற்றத்துக்கான இலக்குகளை நோக்கி நாம் சரியாக பயணிக்கவில்லை'' என்று உலக வானிலை ஆய்வு நிறுவன தலைமைச் செயலாளர் பெட்டெரி டாலஸ் தெரிவித்துள்ளார்.

''பசுமை இல்ல வாயுக்களின் செறிவுகள் மீண்டும் வரலாற்றில் அதிக அளவாக பதிவாகியிருக்கிறது. இந்நிலை நீடித்தால் இந்த நூற்றாண்டின் இறுதியில் 3-5 செல்சியஸ் வெப்பநிலை உயர்வை நாம் எதிர்கொள்வோம்'' என்கிறார் பெட்டெரி டாலஸ்.

'' பருவ நிலை மாற்றம் குறித்து முழுமையாக அறிந்து கொள்ளும் முதல் தலைமுறையும் நாம்தான். பருவநிலை மாற்ற விளைவுகளை சமாளிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க முடியக்கூடிய நிலையில் உள்ள கடைசி தலைமுறையும் நாம்தான். இதை மீண்டும் சொல்வது அவசியமானதாக இருக்கிறது.'' என்கிறார் பெட்டெரி டாலஸ்.

Sorry, your browser cannot display this map

Presentational grey line

உலக வானிலை ஆய்வு நிறுவனத்தின் அறிக்கையானது கடந்த தசாப்தத்தில் அதாவது 2009 -2018 காலகட்டத்தில் ஒவ்வொரு வருடமும் சராசரியாக 0.93 செல்சியஸ் வெப்பநிலை அதிகரித்துள்ளதாகவும், இது தொழில்துறைக்கு முந்தைய காலகட்டமான 1850 - 1900 வரையிலான ஆண்டுகளை கணக்கில் எடுத்துக்கொண்டு நிர்ணயிக்கப்பட்ட சராசரி வெப்பநிலை உயர்வை விட அதிகமாக இருப்பதாகவும், கடந்த ஐந்து ஆண்டுகளில் சராசரி உயர்வானது 1.04 செல்சியஸ் அளவில் உள்ளதாகவும் குறிப்பிடுகிறது.

'' வெறும் எண்கள் என்பதைத் தாண்டி இவற்றை நாம் முக்கியமாகப் பார்க்க வேண்டும். ஏனெனில் ஒரு டிகிரியில் மீச்சிறு அளவிலான வெப்ப உயர்வு கூட மனிதர்களின் உடல்நலன், தண்ணீர் மற்றும் சுத்தமான தண்ணீர் கிடைப்பது உள்ளிட்டவற்றில் வித்தியாசங்களை ஏற்படுத்தும். விலங்குகள், தாவரங்கள், பவளப்பாறைகள், கடல் உயிரிகள் போன்றவற்றிலும் இவை பாதிப்புகளை ஏற்படுத்தும்''

'' பொருளாதாரரீதியில் உற்பத்தித்திறன், உணவு பாதுகாப்பு, பனிப்பாறைகள் உருகும் வேகம், தண்ணீர் வழங்கல் மற்றும் கடலோர சமூகம் என பலவற்றிலும் பாதிப்புகளை ஏற்படுத்தும்'' என்கிறார் உலக வானிலை ஆய்வு நிறுவன துணை தலைமை செயலாளர் எலேனா மானென்கோவா.

2018-ல் நடந்த சில முக்கியமான நிகழ்வுகளை உலக வானிலை ஆய்வு நிறுவனம் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

கேரளாவில் ஐந்து மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போல ஜப்பானில் நூற்றுக்கானோர் வெள்ளத்தால் கொல்லப்பட்டுள்ளார்கள். அனல்காற்று ஸ்கேண்டிநேவியாவின் சில பகுதிகள் மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பாவின் பெரும் பகுதிகளிலும் காட்டுத்தீக்கு வித்திட்டது.

graphic

பட மூலாதாரம், WMO

ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் வடக்கு ஆர்க்டிக் பகுதியில் பலமுறை வரலாறு காணாத அளவுக்கு வெப்பநிலை உயர்வு ஏற்பட்டது. பின்லாந்தின் தலைநகரமான ஹெல்சின்கி 25 நாள்களுக்கு தொடர்ந்து சுமார் 25 செல்சியஸுக்கும் அதிகமான வெப்பநிலையை கண்டது.

அமெரிக்காவில் இந்த ஆண்டு அதிகளவு காட்டுத்தீ ஏற்பட்டது. இதனால் கடந்த நூறு ஆண்டுகளில் இல்லாத அளவு பலர் அமெரிக்காவில் மாண்டனர்.

கிரீஸிலும் காட்டுத்தீ காரணமாக மரணங்கள் ஏற்பட்டன. பிரிட்டிஷ் கொலம்பியாவில் முன்னெப்போதும் இல்லாத அளவு நிலங்கள் எரிந்து போயின.

பருவநிலை மாற்ற விளைவுகள் தற்போது தெளிவாக தெரிகின்றன என்கிறார்கள் அறிக்கையை தயாரிப்பதில் ஈடுபட்டுள்ள அறிவியல் ஆய்வாளர்கள்.

'' பசுமை இல்ல வாயு உமிழ்வு காரணமாக வெப்பமாதல் ஏற்படுவது உலகம் முழுவதும் தெளிவாக தெரிகிறது'' என்கிறார் ஆங்கிலியா பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பேராசிரியர் டிம் ஆஸ்போர்ன்.

சமீபத்திய அறிவியல் ஆய்வுகளுக்கு மிகவும் உதவக்கூடிய வகையில் உள்ள உலக வானிலை ஆய்வு நிறுவனத்தின் பருவநிலை அறிக்கை, போலந்தில் அடுத்தவாரம் நடக்கவுள்ள ஐநா பருவநிலை பேச்சுவார்த்தைகளுக்குச் செல்லும் பிரதிநிதிகளுக்கு தகவல் தெரிவிக்கும் வண்ணம் அமைந்துள்ளன.

பேச்சுவார்த்தையாளர்கள் கார்பனை குறைப்பதற்கான தங்களது கடமைகளை அதிகரிக்கவும் பாரிஸ் பருவநிலை உடன்படிக்கையின் விதி புத்தக உருவாக்கத்தை இறுதி செய்யவும் முயற்சிப்பார்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: