டெல்லி விவசாயிகள் பேரணி: "விலை கொடு, கடனைத் தள்ளு" நாடாளுமன்றத்தை நோக்கி முழங்கிய குரல்கள்

விவசாயி

"எங்களுக்கு இந்தி அவ்வளவாகத் தெரியாது. நாங்கள் எந்த மாணவர் அமைப்பிலும் உறுப்பினராகவும் இல்லை.இங்கு கூடியுள்ள விவசாயிகளின் கோஷங்களை எங்களால் முழுதாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால், விவசாயிகளின் இன்னல்களை எங்களால் புரிந்துகொள்ள முடியும்."

இதைக் கூறியவர் 18 வயதாகும் ராணியா எனும் கல்லூரி மாணவி. கேரளாவைச் சேர்ந்த ராணியா, சாவித்ரி மற்றும் டிஜானா ஆகியோர் கேரளாவில் இருந்து வந்து டெல்லியில் உள்ள வெவ்வேறு கல்லூரிகளில் இளநிலை முதலாமாண்டு படிப்பவர்கள். வெள்ளிக்கிழமை டெல்லியில் விவசாயிகள் பேரணி நடப்பதை அறிந்து அவர்களுக்கு ஆதரவாக, அதில் கலந்துகொண்ட கல்லூரி மாணவர்களில் இவர்களும் அடக்கம்.

மகாராஷ்டிராவில் மார்ச் 2018இல் நடந்த விவசாயிகளின் பேரணி இந்தியாவின் கவனத்தையே ஈர்த்தது. அந்த பேரணி நடந்த சமயத்தில் விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் மட்டுமல்லாது குடிமைச் சமூகத்தைச் சேர்ந்தவர்களும் அளித்த ஆதரவால் அந்தப் போராட்டம் பெரிதும் பேசப்பட்டது.

ராணியா, சாவித்ரி மற்றும் டிஜானா (இடமிருந்து வலம்)
படக்குறிப்பு, ராணியா, சாவித்ரி மற்றும் டிஜானா (இடமிருந்து வலம்)

அதற்குப் பிறகு டெல்லியில் இன்று நடைபெறும் போராட்டம் தேசிய அளவில் பெரும் அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.

விவசாயிகள் மட்டுமல்லாது, விவசாயத் தொழிலுக்கு ஏற்பட்டுள்ள சிக்கலால் வேலை இழந்த நிலமற்ற விவசாயத் தொழிலார்களும் பெரும் திரளாக இந்தப் பேரணிக்கு வந்திருந்தனர்.

பேருந்தில் வந்தால் செலவு அதிகமாகும் என்பதால், தொலைதூர மாநிலங்களை, குறிப்பாக தென்மாநிலங்களைச் சேர்ந்த சில விவசாய அமைப்புகள் தங்கள் உறுப்பினர்களிடம் சிறிது சிறிதாக பணம் வசூலித்து ஒரு ரயிலையே இந்தப் பேரணிக்குச் செல்வதற்கென தனியாக முன்பதிவு செய்து வந்திருந்தனர்.

பள்ளிப் படிப்பை நிறுத்திவிட்டுத் தங்களை வேளாண்தொழிலில் ஈடுபடுத்திக்கொண்ட பதின்வயதினர் முதல், நன்றாக நடக்க முடியாத அளவுக்கு வயது மூப்பை அடைந்தவர்கள் வரை பல்லாயிரக்கணக்கானவர்கள் வியாழக்கிழமை மாலை முதலே பேரணியின் தொடக்கப் புள்ளியான ராம்லீலா மைதானத்தில் கூடியிருந்தனர்.

விவசாயி
படக்குறிப்பு, தன் குடும்பத்துடன் பீஹார் மாநிலத்தில் இருந்து வந்திருக்கும் ரிஷிகேஷ் எனும் விவசாயி தன் ஒரு வயது குழந்தைக்கு பால் வாங்கிக்கொண்டு செல்கிறார்

சிலர் தங்கள் குடும்பம் மற்றும் குழந்தைகளுடன் தலைநகரில் வந்திறங்கினர். அகில இந்திய கிசான் சங்கர்ஷ் ஒருங்கிணைப்பு குழு என்ற அமைப்பின் பேரில் விவசாயிகள் இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

விவசாயக் கடன், குறைந்தபட்ச விலை என்பதையும் தாண்டி பல பிரச்சனைகள் உள்ளதாக இந்தப் பேரணியில் கலந்துகொண்ட விவசாயிகள் கூறுகிறார்கள்.

"பாட்டிலில் அடைத்து விற்கும் ஒரு லிட்டர் நீருக்கு 20 ரூபாய் விலை வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நிலத்தின் மூலம் கிடைக்கும் கிடைக்கும் வருவாயை இழந்த விவசாயிகளுக்கு ஒரு லிட்டர் பாலுக்கு கிடைக்கும் பணம் 18 ரூபாய்தான்," என்கிறார் பிபிசி தமிழின் செய்தியாளர் விக்னேஷிடம் பேசிய விவசாயி ஒருவர்.

தமிழக விவசாயிகள்
Facebook பதிவை கடந்து செல்ல

தகவல் இல்லை

மேலதிக விவரங்களைக் காண Facebookவெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு பிபிசி பொறுப்பாகாது.

Facebook பதிவின் முடிவு

விவசாயிகளின் கோரிக்கைகள் என்ன?

விவசாயிகளின் பிரச்சனைகளை விவாதிக்க நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி வேளாண் கடன் சுமையில் இருந்து விவசாயிகளை விடுவிப்பதற்கான சட்டம் (THE FARMERS' FREEDOM FROM INDEBTEDNESS BILL, 2018) மற்றும் உற்பத்திச் செலவைவிட அதிகமான, குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு உத்தரவாதம் அளிக்கும் சட்டம் (THE FARMERS' RIGHT TO GUARANTEED REMUNERATIVE MINIMUM SUPPORT PRICES FOR AGRICULTURAL COMMODITIES BILL, 2018) ஆகியவற்றை நிறைவேற்ற வேண்டும் என்பது இந்தப் பேரணியின் முக்கியக் கோரிக்கைகளாக இருந்தன.

விவசாயிகள் பேரணியால் அதிரும் தலைநகர் டெல்லி

சுவாமிநாதன் அறிக்கை என்று அறியப்படும் தேசிய விவாசாயிகள் ஆணையத்தின் அறிக்கையையும் நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்றும் 'விவசாயிகள் விடுதலைப் பேரணி' என்று பெயரிடப்பட்டிருந்த இந்தப் பேரணியில் கலந்துகொண்ட, நாடெங்கிலும் இருந்து வந்திருந்த 200க்கும் மேலான விவசாயிகள் அமைப்பினர் வலியுறுத்தியிருந்தனர்.

"கடந்த முறையும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் திரண்டோம். ஆனால், பிரதமர் மோதி எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை. இந்த முறையும் எங்கள் கோரிக்கைக்கு செவி கொ0டுத்து கேட்கவில்லை என்றால் பேரணியில் நிர்வாணமாக செல்வோம்" என்று பிபிசி தமிழடம் பேசிய அய்யாக்கண்ணு தெரிவித்தார்.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

மும்பை விவசாயிகள் பேரணியில் கிடைத்த அளவுக்கு பொதுமக்கள் ஆதரவு பெரிய அளவில் இந்தப் பேரணிக்குக் கிடைக்கவில்லை. அதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று பேரணி நடைபெற்ற சுமார் நான்கு கிலோ மீட்டர் தொலைவிலும் குடியிருப்புப் பகுதிகள் மிகவும் குறைவு. இரண்டு, பேரணி நடைபெற்ற சாலைகளில் வாகனப் போக்குவரத்துக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டால், பேரணியில் பங்கேற்பவர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் காவல் அமைப்புகளை சேர்ந்தவர்களைத் தவிர வேறு யாரும் அதிக அளவில் உள்ளே வர முடியவில்லை.

மொழிகள் வேறு முழக்கம் ஒன்று - டெல்லியை அதிரவைத்த விவசாயிகள்

காணொளிக் குறிப்பு, டெல்லியில் விவசாயிகள் நடத்திய பேரணி (காணொளி)

ஆனால், சில குடியிருப்புப் பகுதிகள் வழியாக பேரணி கடந்து சென்றபோது தங்கள் வீடுகளில் இருந்து வெளியே வந்து விவசாயிகளுக்கு பொதுமக்கள் தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர்.

ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் இருந்து விவசாயிகளை பேரணி தொடங்கும் ராம்லீலா மைதானத்திற்கு அழைத்து வந்ததில் கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு முக்கிய பங்கு உண்டு என பிபிசி இடம் பேசிய விவசாயிகள் சிலர் கூறினர்.

ராம்லீலா மைதானில் இருந்து மஹாராஜா ரஞ்சித் சிங் சாலை, ஜந்தர் மந்தர் டால்ஸ்டாய் சாலை வழியாக நாடாளுமன்றத்தை நோக்கி விவவசாயிகள் பேரணி சென்று கொண்டிருக்கிறது. குடியிருப்புப் பகுதிகள் வழியாக அவர்கள் சென்றபோது, தங்கள் வீட்டில் இருந்து வெளியே வந்த பொதுமக்கள் விவசாயிகளுக்கு ஆதரவு அளித்தனர்.

விவசாயிகள் பேரணி

தென் இந்தியாவை பொறுத்த வரையில் தமிழகத்தை விட, ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநில விவசாயிகளை அதிகமான காண முடிகிறது.

இந்தி, பஞ்சாபி, மராத்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என எல்லா மொழிகளின் கோஷங்களாலும் ராம்லீலா மைதானம் முதல் நாடாளுமன்றச் சாலை வரையிலான பாதை நிரம்பி இருந்தது.

எதற்காக டெல்லி போராட்டம்? விளக்கும் விவசாயிகள்

காணொளிக் குறிப்பு, நாட்டின் பல பகுதிகளின் விவசாயிகள் டெல்லியில் குவிந்து பேரணி

கோஷங்கள் மட்டுமல்லாது தத்தம் மொழிகளில் கோரிக்கைகளைப் பாடல்களையும் பாடிக்கொண்டே விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் இந்தப் பேரணியில் பங்கேற்றனர்.

விவசாயிகளுக்கு ஆதரவாக இளைஞர்கள்

கல்லூரி மாணவர்கள் மற்றும் தொழிற்சங்க உறுப்பினர்களும் இந்தப் பேரணியில் கலந்துகொண்டனர்.

"இன்றைக்கு நாங்கள் வேலைக்கு போகவில்லை. விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்க இங்கு வந்துள்ளோம்" என்கிறார் 21 வயதான டெல்லியை சேர்ந்த பிரியங்கா.

விவசாயிகளுக்கு ஆதரவு அளிக்க வந்திருக்கும் 21 வயதான பிரியங்கா
படக்குறிப்பு, விவசாயிகளுக்கு ஆதரவு அளிக்க வந்திருக்கும் 21 வயதான பிரியங்கா

இன்குலாப் மஸ்தூர் கேந்திரா எனும் தொழிற்சங்கத்தைச் சேர்ந்த தொழிலாளிகள் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நோட்டீஸ் அளித்து வருகின்றனர்.

டெல்லி பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவர்கள் சிலரும் இந்த பேரணியில் கலந்து கொண்டனர். விவசாயிகளின் போராட்டத்தை பற்றி தெரிந்தவுடன் அவர்களுக்கு ஆதரவு அளிக்க வந்ததாக தெரிவித்தனர்.

பெண்கள், குழந்தைகள் முதியவர்கள் என அனைவரும் சாலைகளிலேயே அமர்ந்துள்ளனர். விவசாய அமைப்பினர் மற்றும் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் விவசாயிகளுக்கு ஆதரவாக அங்கு உரையாற்றி வருகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: