கொலை வழக்கில் ஒரே பெயர் கொண்ட மற்றொருவர் ஆஜர் - அதிர்ச்சியடைந்த நீதிபதி

பட மூலாதாரம், Getty Images
கடந்த சில மணி நேரங்களில் நடந்த முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகிறோம்.
கொலைவழக்கில் ஒரே பெயர் கொண்ட மற்றொருவர் ஆஜர் - அதிர்ச்சியடைந்த நீதிபதி
ஆஸ்திரேலியாவில் நடந்த முக்கிய கொலை வழக்கு ஒன்றில் தீர்ப்புக்காக கொலையாளியின் பெயரிலுள்ள மற்றொரு தவறான நபர், சிறைத்துறை அதிகாரிகளால் ஆஜர்படுத்தப்பட்டதால் நீதிபதி கடும் விரக்தியடைந்தார்.
சைமன் பிரசர் என்பவரை கொன்றத்திற்காக 57 வயதான பீட்டர் பிரவுன் மெல்போர்னிலுள்ள விக்டோரியா உச்சநீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமென்று உத்தரவிடப்பட்டிருந்தது.
ஆனால், குற்றவாளி பீட்டர் பிரவுனுக்கு பதிலாக, அந்த வழக்கில் சம்பந்தமில்லாத அதே பெயரை கொண்ட மற்றொருவரை சிறைத்துறை அதிகாரிகள் ஆஜர்ப்படுத்தினர். பின்னர் தவறு நடந்தது புரிந்துக்கொள்ளப்பட்டு உண்மையான கொலையாளி நீதிமன்றத்திற்கு வரவழைக்கப்பட்டு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.

சிறுமியின் வினோதமான பெயரை கேலி செய்த பணியாளர்

பட மூலாதாரம், Reuters
அமெரிக்காவில் விமானத்தில் உள்நாட்டு பயணம் மேற்கொண்ட சிறுமியின் பெயரை கேலி செய்த பணியாளரின் செயலுக்கு சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் மன்னிப்பு கோரியுள்ளது.
ட்ரஸி ரெட்போர்டு என்பவரும் அவரது மகள் ஏபிசிடி-யும் அமெரிக்காவின் கலிஃபோர்னியாவிலிருந்து டெக்சாசுக்கு செல்லும் விமானத்தில் பயணிக்க சென்றனர்.
அப்போது, விமான நிலையத்தில் சிறுமியின் பயணச் சீட்டை பரிசோதித்த பணியாளர், அவரது பெயரை பார்த்து சிரித்ததோடு, அதை புகைப்படமெடுத்து சமூக வலைத்தளத்திலும் பகிர்ந்தார்.
இந்நிலையில், விமான நிலைய பணியாளரின் செயலுக்கு மன்னிப்பு கோருவதாக சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸின் செய்தித்தொடர்பாளர் கிறிஸ் மெய்ன்ஸ் தெரிவித்துள்ளார்.

நவீனகால அடிமைத்தனம்

பட மூலாதாரம், Getty Images
பெற்றோர்களற்ற குழந்தைகளை கடத்துவது என்பது நவீனகால அடிமைத்தனம் என்று ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. இவ்வாறு அறிவிக்கும் உலகின் முதல் நாடு என்ற பெயரையும் அந்நாடு பெற்றுள்ளது.
இந்தச் சட்டம், ஆஸ்திரேலியர்களை "தன்னார்வலர்" திட்டங்களில் பங்கு கொள்வதை தடுப்பதற்கான ஒரு பரந்த இயக்கத்தின் ஒரு பகுதியாக கருதப்படுகிறது. ஏனெனில், இது குழந்தைகளுக்கு உதவுவதற்கு மாறாக தீங்கு விளைவிப்பதே அதிகளவில் உள்ளது.
உலகம் முழுவதும் அனாதை இல்லங்களில் வாழும் 80 சதவீத குழந்தைகளுக்கு தாய் அல்லது தந்தை என எவரோ ஒருவராவது உயிருடன் உள்ளதாக மதிப்பீடு ஒன்று தெரிவிக்கிறது.

நாடாளுமன்றத்தில் பொய் சொன்னேன்

பட மூலாதாரம், Reuters
அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யா தலையிட்டதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நாடாளுமன்ற விசாரணையில் தாம் பொய் சொன்னதாக ஒப்புக்கொண்டார் அமெரிக்க அதிபர் டிரம்பின் முன்னாள் வழக்குரைஞர் மைக்கேல் கோஹன் (52).
மாஸ்கோவில் உள்ள டிரம்பின் ரியல் எஸ்டேட் திட்டம் ஒன்று குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களை தவறாக வழிநடத்தியதாக அவர் ஒப்புக்கொண்டார். அதிபர் டிரம்பின் மீதுள்ள விசுவாசத்தால் இவ்வாறு செய்து விட்டதாகவும் கோஹன் தெரிவித்துள்ளார்.
மான்ஹாட்டனில் உள்ள ஃபெடரல் நீதிமன்றம் ஒன்றில் வியாழக்கிழமை எதிர்பாராத வகையில் ஆஜரான கோஹன் நாடாளுமன்றத்தில் பொய் சொன்னதன் மூலம் தாம் குற்றமிழைத்ததாக ஒப்புக்கொண்டார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












