கை கால் இல்லாமல் பிறக்கும் குழந்தைகள் முதல் காந்திக்குத் தடை வரை - கடந்த வார உலகம்

கடந்தவாரம் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்த ஐந்து முக்கிய செய்திகளை பகிர்கிறோம்.

கால் கை இல்லாமல் பிறக்கும் குழந்தைகள்

பிரான்சில் கை கால்கள் இல்லாமல் கொத்து கொத்தாக குழந்தைகள் பிறந்ததை தொடர்ந்து, இதன் காரணத்தை கண்டுபிடிக்க தேசிய அளவிலான விசாரணையை அந்நாடு முடுக்கிவிட்டுள்ளது.

பிரான்சில் மூன்று இடங்களில் இவ்வாறு டஜன் கணக்கான குழந்தைகள் பிறந்ததை தொடர்நது சுகாதாரத் துறை விசாரணை நடத்தியது. ஆனால், அதற்கான காரணத்தை சுகாதாரத் துறை அதிகாரிகளால் கண்டறிய முடியவில்லை.

சுவிஸ் எல்லையை ஒட்டி உள்ள கிராமப்புற பகுதிகளிலும், வடமேற்கு கடற்கரை பகுதிகளிலும் இவ்வாறான குழந்தைகளின் பிறப்புகள் தற்போது பதிவாகி உள்ளன. இதையடுத்து மீண்டும் இது குறித்து விசாரிக்கிறது பிரான்ஸ்.

தெய்வ நிந்தனை

பாகிஸ்தானில் தெய்வ நிந்தனை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருந்த பெண்ணை விடுதலை செய்து உத்தரவிட்டது பாகிஸ்தான் நீதி மன்றம்.

விடுதலையான கிறித்துவ பெண்ணின் கணவர், அமெரிக்கா, கனடா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளில் தஞ்சம் கோரியுள்ளார். ஆசியா பீபி தெய்வ நிந்தனை செய்துவிட்டார். அதாவது முகமது நபிகள் குறித்து அவதூறாக பேசிவ்ட்டார் என்று கூறி 2010ஆம் ஆண்டு அவருக்கு தூக்கு தண்டனை வழங்கியது. எட்டு ஆண்டுகள் அவர் தனிமை சிறையில் கழித்த சூழலில், அவரை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது பாகிஸ்தான் உச்ச நீதி மன்றம்.

இந்த தீர்ப்புக்கு எதிராக அடிப்படைவாதிகள் போராட்டம் நடத்தி வரும் சூழலில், ஆசியாவின் கணவர், அமெரிக்கா, கனடா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளில் தஞ்சம் கோரியுள்ளார்.

இதே நேரம் பாகிஸ்தான் செயற்பாட்டாளர்கள் தெய்வ நிந்தனை சட்டங்கள் திருத்தி அமைக்கப்பட வேண்டும் என்று கோரி வருகின்றனர்.

காந்தி சிலை அமைக்க ஆப்பிரிக்க நாடான மலாவி தடை விதித்தது ஏன்?

காந்தி சிலை அமைக்க ஆப்பிரிக்க நாடான மலாவி தடை விதித்துள்ளது.

ஆப்பிரிக்க நாட்டினரை காந்தி காட்டுமிராண்டிகள் என்று குறிப்பிட்டுள்ளார் என்று கூறி, காந்தி சிலைக்கு தடை விதிக்கும்படி சில பேராசிரியர்கள் கோரினர்.

அந்நாட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த 'காந்தி வீழ வேண்டும்' என்ற அமைப்பு காந்தியின் கருத்துகள் கருப்பினத்தவரான தங்களுக்கு வெறுப்பை ஏற்படுத்துவதாக கூறி இருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மிக்கேல் டெம்போ சிலை கட்டுமான பணிகளுக்கு இடைகால தடை விதித்துள்ளார்.

காந்தி தங்கள் நாட்டுக்கு எதுவும் செய்யவில்லை என்று கூறி 3000 மலாவி மக்கள் கையொப்பமிட்டு மனு ஒன்றை அளித்துள்ளனர்.

கொலை முன்னரே திட்டமிடப்பட்டது

கடந்த அக்டோபர் மாதம் 2ஆம் தேதி சௌதி பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி, இஸ்தான்புல்லிலுள்ள துணைத் தூதரகத்துக்குள் நுழைந்த உடனேயே, அவரது கழுத்து நெரிக்கப்பட்டது என்று துருக்கி விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்தக் கொலை முன்னரே திட்டமிடப்பட்டது என்றும், கஷோக்ஜி கொல்லப்பட்டதும் அவரது உடல் பல துண்டுகள் ஆக்கப்பட்டது என்றும் அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த கொலை தொடர்பாக சௌதி அரேபிய அரசிடம் இருந்து போதிய ஒத்துழைப்பு இல்லாதது குறித்து துருக்கி அதிகாரிகள் கோபமடைந்துள்ளனர்.

கஷோக்ஜியின் உடல் எச்சங்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. அவர் கூலிப்படையாக கொலை செய்பவர்களால் கொல்லப்பட்டதாக சௌதி கூறுகிறது.

கருப்புப் பெட்டி

விபத்துக்குள்ளான இந்தோனீசியா லயன் ஏர் விமானத்தின் கருப்புப் பெட்டி முக்குளிப்பு வீரர்களால் கண்டறியப்பட்டது.

ஜெடி-610 என்ற எண்ணுடைய இந்த லயன் ஏர் விமானம் தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து பங்கால் பினாங் நகரத்துக்கு சென்று கொண்டிருந்த போது உள்ளூர் நேரப்படி கடந்த திங்கள்கிழமை அதிகாலை கடலில் விழுந்து நொறுங்கியது.

இதன் காரணமாக அந்த விமானத்தில் பயணித்த 189 பேரும் பலியாகினர்.

விமானத்தின் கருவிகளில் ஏற்பட்ட கோளாறே இந்த விபத்துக்குக் காரணம் என்று பிபிசிக்கு கிடைத்த விமானத்தின் தொழில்நுட்பம் மற்றும் இயங்குமுறை குறித்த ஆரம்ப கட்டத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

நீருக்கடியில் இயங்கும் டிரோன் மற்றும் பிங்கர் லொகேட்டர் போன்ற கருவிகளைக் கொண்டு விமானத்தின் கருப்புப் பெட்டியைத் தேடியதில் அந்த பெட்டி கண்டுபிடிக்கப்பட்டது.

லயன் ஏர் நிறுவனம் தமது தொழில்நுட்ப இயக்குநர் முஹம்மது ஆசிஃபை பணி நீக்கம் செய்துள்ளது.

போக்குவரத்து அமைச்சகத்திலிருந்து வந்த உத்தரவை தொடர்ந்து தொழில்நுட்ப இயக்குநர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறுகிறது லயன் ஏர் நிறுவனம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: