2000 ஆண்டுகளுக்கு முன் கொரியாவின் அரசியான இந்திய இளவரசி

அயோத்தியில் இருந்து வெளியேறி வனவாசம் சென்ற இளவரசர் ராமர் 14 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த ஊருக்கு திரும்பினார் என்று இந்திய இதிகாசம் ராமாயணம் கூறுகிறது. ஆனால், அதே அயோத்தியில் இருந்து சென்ற இளவரசி ஒருவர் திரும்பி வரவேயில்லை. வெளிநாட்டின் அரசியாகிவிட்டார்.

"இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு 'ஹு ஹவாங் ஓக் அயுதா'வில் இருந்து தென்கொரியாவின் க்யோங்சாங் பிராந்தியத்தில் இருக்கும் கிம்ஹாயே நகருக்கு இந்திய இளவரசி வந்தார்," என்று கொரியா வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், சீன மொழி ஆவணமான 'சாம்குக் யுஸாவின்படி, "அயோத்தி அரசரின் கனவில் தோன்றிய கடவுள், தன்னுடைய மகளை, ராஜா கிம் சூ-ரோவுக்கு திருமணம் செய்து கொடுக்கவேண்டும் என்று ஆணையிட்டார். அதை நிறைவேற்ற, கிம்ஹயே நகரத்திற்கு, அவரது சகோதரருடன் இளவரசியை அனுப்பவேண்டும் என்று கடவுள் அறிவுறுத்தினார்," என்று கூறப்படுகிறது.

அப்படி இந்தியாவில் இருந்து சென்ற இளவரசிதான், கொரிய அரசரை மணந்து மகாராணியான ஹு.

காரக் வம்சம்

காரக் வம்சத்தை சேர்ந்த சுமார் அறுபது லட்சம் மக்கள் தற்போது தென்கொரியாவில் வசிக்கின்றனர். கொரியப் பேரரசர் சூ-ரோ மற்றும் ராணி ஹு ஹவாங் -ஓக்கின் பரம்பரை வழி வந்தவர்கள் தாங்கள் என்று காரக் வம்சத்தினர் கூறுகின்றனர்.

ராணி சூரீரத்னா என்று அழைக்கப்படும் மகாராணி ஹு ஹவாங் -ஓக்கின் இந்தியப் பெயர் சரிவர தெரியவில்லை. தென்கொரியா மக்களில் பத்து சதவிகிதத்தினர் காரக் வம்சத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் கொரிய அதிபர் ஹியோ ஜியோங் மற்றும் முன்னாள் பிரதமர் ஜோங் பில் கிம், தற்போதைய காரக் வம்சத்தை சேர்ந்தவர்கள்.

அயோத்தியில் இருந்து கடல் மார்க்கமாக தென்கொரியாவிற்கு பயணம் கொண்ட இந்திய இளவரசி, கப்பலின் சமநிலையை பேணுவதற்காக கொண்டு வந்த கற்கள் இன்றும் அவரின் வழித்தோன்றல்களினால் பாதுகாக்கப்படுகிறது. கிம்ஹயே நகரில் இந்திய இளவரசியின் உருவச்சிலையும் நிறுவப்பட்டுள்ளது.

கொரியாவின் மகாராணியும், இந்திய இளவரசியுமான ஹுவின் கல்லறை தென்கொரியாவில் அமைந்துள்ளது. அந்த கல்லறையை உருவாக்க பயன்படுத்தப்பட்ட கற்கள் அயோத்தியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

அயோத்தி மற்றும் கிம்ஹயே நகரிடையே சகோதரத்துவ பரிமாற்ற உறவு 2001ஆம் ஆண்டில் துவங்கியது. காரக் வம்சத்தை சேர்ந்த மக்களில் சிலர் ஆண்டுதோறும் பிப்ரவரி-மார்ச் மாதங்களில் இளவரசியின் தாய்நாட்டுக்கு வந்து அஞ்சலி செலுத்துகின்றனர்.

கொரிய விருந்தாளிகள்

தங்கள் ராணியின் நினைவாக சராயு நதிக் கரையில், துள்சிகாட் என்ற படித்துறைக்கு அருகில் சிறிய பூங்கா ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. அயோத்தியை சேர்ந்த சிலர் அவ்வப்போது நட்புறவை பேணிகாக்கும் விதமாக கிம்ஹயே நகருக்கு செல்கின்றனர்.

கிம்ஹயேவில் இருந்து வரும் காரக் வம்சத்தை சேர்ந்த விருந்தினர்களை, அயோத்தியின் அரச பரம்பரையைச் சேர்ந்த விம்லேந்திர மோஹன் பிரதாப் மிஷ்ரா, வரவேற்று உபசரிக்கிறார். அவர் கடந்த சில ஆண்டுகளில் பலமுறை தென் கொரியாவுக்கு சென்று வந்திருக்கிறார்.

தென்கொரியாவின் மகாராணி ஹுவின் சரித்திரம் இரண்டாயிரம் ஆண்டு பழமையானது என்றாலும், பிம்லேந்திர மோஹன் பிரதாப் மிஷ்ராவின் அரச பரம்பரை சில நூறு ஆண்டுகளே பழமையானது என்பது வேறு விஷயம்.

பிம்லேந்திர மோஹன் பிரதாப் மிஷ்ரா 1999-2000 காலத்தில் தென்கொரியா அரசின் விருந்தினராக சென்றிருக்கிறார்.

அவரது தென்கொரிய பயணத்தின்போது கொரிய அறிஞர்களிடம் அயோத்தி இளவரசியின் கதையைப் பற்றி தெரிந்துகொண்டார். பிறகு சில மாதங்களுக்கு பிறகு இளவரசியின் கொரிய பயணம் தொடர்பான அஞ்சலி நிகழ்ச்சி தொடர்பாக கொரியா வரச் சொல்லி அழைப்பு விடுத்தது.

அந்த நினைவுகளை பிபிசியிடம் நினைவுகூர்கிறார் பிம்லேந்திர மோஹன் பிரதாப் மிஷ்ரா. "தொடக்கத்தில் எனக்கு இந்த தகவல் சந்தேகத்தை கொடுத்தது. அவர்கள் குறிப்பிடுவது தாய்லாந்து நாட்டில் உள்ள அயோத்யா நகராக இருக்கலாம் என்று நான் தெரிவித்தேன். ஆனால் தாங்கள் எல்லா விதங்களிலும் முழுமையான ஆராய்ச்சி செய்த பிறகே இந்த முடிவுக்கு வந்ததாக அறுதியிட்டு உறுதி கூறினார்கள்."

அயோத்தி குறித்து தென்கொரிய அரசு பெரிய அளவிலான சில திட்டங்களை வைத்திருந்தது. ஆனால் இந்திய அரசிடம் இருந்து பெரிய அளவிலான ஆர்வம் காட்டவில்லை என்பதால் அவர்கள் சற்று பின்வாங்கி விட்டனர்.

கடந்த சில ஆண்டுகளில் தென்கொரியா ராணி தொடர்பாக இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட சில நடவடிக்கைகள்:

  • 2015-16இல் இந்தியா தென்கொரியா இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது. அதன் பிறகு, ராணி ஹுவின் நினைவாக பூங்கா ஒன்று கட்டும் முடிவு எடுக்கப்பட்டது.
  • இந்த நினைவிடத்திற்காக தென்கொரிய அரசு 8.60 லட்சம் டாலர் நிதி அளிக்கும் என்று சொல்லப்பட்டது.
  • அயோத்தியில் கட்டப்படும் மகாராணி ஹுவின் நினைவிடம் கொரிய கட்டடக்கலையை அடிப்படையாக கொண்டு கட்டப்படும் என்று அகிலேஷ் யாதவ் முதலமைச்சராக இருந்தபோது அறிவித்தார்.
  • 2018 ஏப்ரல் மாதம் கொரியா ராணியின் நினைவிடம் அமைக்கப்பட்ட பூங்காவை விரிவாக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை விதித்தது.
  • இதற்கு பிறகு வெளியான தகவல்களில் அயோத்தியில் உள்ள ராம்கதா அருங்காட்சியகத்திற்கு பின்புறம் அமைந்துள்ள போக்குவரத்துத் துறைக்கு சொந்தமான இரண்டரை ஏக்கர் நிலம், மகாராணி ஹோவின் நினைவு பூங்கா உருவாக்க ஒதுக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டது.

வரலாற்றில் மெளனம்

இந்தியாவில் இருந்து கொரியாவுக்கு சென்ற இளவரசி அயோத்தியின் வரலாற்றில் எந்தவித குறிப்பும் காணப்படவில்லை என்பது வியப்புக்குரிய விஷயமாக உள்ளது.

இருந்தபோதிலும், உத்தரப்பிரதேச போக்குவரத்துத் துறையின் கையேட்டில் கொரியாவின் ராணி, இந்தியாவை சேர்ந்த இளவரசி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

எந்தவித வரலாற்று ஆதாரங்களும் இல்லை என்றாலும், காரக் வம்சத்தை சேர்ந்த தென்கொரிய அதிபர் மூன் ஜே இன்-னின் மனைவி கிம் சுங் சூக்குடன் நவம்பர் நான்காம் தேதியன்று இந்தியாவுக்கு வருகை தருகிறார். நான்கு நாள் பயணமாக இந்தியா வருகை தரும் அவர், தங்கள் வம்சத்தின் மூதாதையர்களில் ஒருவரான மகாராணியின் நினைவிடத்திற்கு செல்கிறார்.

ஆண்டுதோறும் தீபாவளிக்கு முதல் நாள் அயோத்தியில் நடைபெறும் கொண்டாட்டங்களில் கிம் சுங் சூக் கலந்துகொள்வார் என்று தென்கொரிய செய்தி முகமை ஜோங்-சூக் செய்தி வெளியிட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :