சோதனைக் குழாயில் வளர்க்கப்படும் அழிவின் விளிம்பில் உள்ள மரங்கள்

    • எழுதியவர், ஹெலன் பிரிக்ஸ்
    • பதவி, பிபிசி

மேற்காணும் படத்திலுள்ள சோதனை குழாயில் இருக்கும் இளம் ஓக் மரம் இயற்கைக்கு மாறாக சோதனை குழாயில் வளர்ந்து வருகிறது.

கருத்தரித்தல் சோதனை மையங்களில் மேற்கொள்ளப்படும் உத்திகளை அடிப்படையாக கொண்டு குறைந்து வரும் இதுபோன்ற மரங்களின் விதைகளை பாதுகாக்கும் முயற்சிகள் பிரிட்டனிலுள்ள ஆராய்ச்சியாளர்களால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

முன்னெப்போதுமில்லாத வகையில் உலக அளவில் மரங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அதாவது, உலகிலுள்ள ஒவ்வொரு ஐந்து மரங்களில் ஒன்று அழிவை எதிர்நோக்கியுள்ளது.

"இது காடுகளில் அழிவிற்குள்ளாகி வரும் மரங்களை பாதுகாக்கும் கொள்கை நடவடிக்கைகளில் ஒன்றாகும்" என்று பிரிட்டனிலுள்ள கியூஸ் மில்லினியம் விதை வங்கியை சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஜான் டிக்கி கூறுகிறார்.

"பரிணாம வளர்ச்சி என்பது எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம். அப்போது இதுபோன்ற மரங்களை இழப்பதை காட்டிலும், செலவு குறைந்த இம்முறையின் மூலம் பாதுகாப்பதென்பது அவசியமாகிறது."

போர், இயற்கை பேரிடர் போன்ற பேரழிவை ஏற்படுத்தும் சூழ்நிலைகளிலிருந்து மரங்களை பாதுகாக்க இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. அதாவது, இந்த சோதனை குழாய்களில் வைக்கப்படும் செடி, மரங்களின் விதைகள் வெடிகுண்டு, வெள்ளம், கதிரியக்கம் போன்ற எவற்றாலும் பாதிக்கப்படாத வகையில் பாதுகாக்கப்படுகிறது.

வரும் 2020ஆம் ஆண்டிற்குள் அழிவின் விளிம்பிலுள்ள குறைந்தது 75 சதவீத மரங்களை இம்முறையின் மூலம் பாதுகாப்பதே ஆராய்ச்சியாளர்களின் இலக்காக உள்ளது. ஆனால், சமீபத்திய கணிப்பின்படி, அச்சுறுத்தலிலுள்ள பல்வேறு மரங்களை வழக்கமான விதை பதப்படுத்துதல் முறையை கொண்டு பாதுகாக்க முடியாது என்பது தெரியவந்தது. இது இலக்கை நோக்கிய பயணத்தில் பெரும் பின்னடைவாக கருதப்பட்டது.

இந்நிலையில், இந்த புதிய உத்தியை கொண்டு அனைத்து விதமான தாவரங்களையும் பாதுகாக்க முடியுமென்று பிரிட்டனிலுள்ள மில்லினியம் விதை வங்கியை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.

"பொதுவாக விதை வங்கியில் உலர்ந்த விதைகளை பாதுகாப்பதற்கு மேற்கொள்ளப்படும் முறையை அனைத்து விதமான தாவர இனங்களிலும் மேற்கொள்ள முடியாது" என்று மில்லினியம் விதை வங்கியை சேர்ந்த டேனியல் கூறுகிறார்.

"உதாரணமாக, வேறுபட்ட விதையமைப்பை கொண்ட ஓக், செஸ்நட் போன்றவற்றை பதப்படுத்தி பாதுகாப்பதற்காக உலர வைத்தால் அவை இறந்துவிடும்."

இதுபோன்ற பாதுகாப்பதற்கு மிகவும் சவாலாக உள்ள விதைகளை பாதுகாப்பதற்கு கிரையோபிரிசர்வேஷன் (cryopreservation) போன்ற வேறுபட்ட உத்திகளை பயன்படுத்த ஆராய்ச்சியாளர்கள் முயன்று வருகிறார்கள். இந்த முறையை பயன்படுத்தியே காஃபி, சாக்லேட், அவகோடா, ஓக் போன்றவற்றின் விதைகளை பாதுகாத்து வருகிறார்கள்.

கிரையோபிரசர்வேஷன் என்ற இந்த புதிய முறையின்படி, ஒரு குறிப்பிட்ட செடி அல்லது மரத்தின் விதையிலிருந்து கரு முளை தனியே எடுத்து மிகவும் குறைந்த வெப்பநிலையில் திரவ நைட்ரஜனில் வைக்கப்படுகிறது.

இந்த முறையை பயன்படுத்தி ஓக் போன்ற வேறுபட்ட விதையமைப்பை கொண்ட மரங்களை எதிர்காலத்திற்காக பாதுகாக்க முடியும்.

ஆனால், இந்த உத்தியை ஏற்கனவே செயல்பட்டு வரும் பாரம்பரிய விதை வங்கிகளில் செயல்படுத்தி பெரியளவில் பணியை மேற்கொள்வதற்கும், மேலதிக ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும் புதிய முதலீடுகள் தேவைப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

மில்லினியம் விதை வங்கியில் ஏற்கனவே 40,000க்கும் மேற்பட்ட தாவரங்கள் உலர வைக்கப்பட்டு, -20 டிகிரி செல்சியஸில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

உலகம் முழுவதுமுள்ள மற்ற ஆராய்ச்சியாளர்கள் அரிசி மற்றும் அதன் பல்வேறு வகைகளை பாதுகாப்பதற்கு முயன்று வருகிறார்கள்.

"அதிவிரைவாக மாறிவரும் காலநிலையின் காரணமாக பல்வேறு மரங்களும், செடிகளும் முற்றிலும் அழிந்து போவதற்கு முன்னர் அவற்றை பாதுகாப்பதற்கு முயற்சித்து வருகிறோம்" என்று மில்லினியம் விதை வங்கியின் மேலாளரான ஜனேட் டெர்ரி கூறுகிறார்.

பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகளில் விதை வங்கிகளில் பாதுகாக்கப்பட்ட பல்வேறு தாவரங்கள் தக்க சூழ்நிலை கொண்ட இடங்களில் மீண்டும் உயிர்பிக்கப்பட்டு வருகின்றன.

உங்களது வங்கி கணக்கை போன்று விதை வங்கியில் நீங்கள் வரவும் வைக்கலாம், எடுத்தும் கொள்ளலாம் என்று டெர்ரி கூறுகிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: