You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
திமுக தலைவர் ஸ்டாலினுக்கு எதிராக அவதூறு வழக்கு
தமிழக அரசு மற்றும் தமிழக முதல்வருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக பேசியதாக திமுக தலைவர் ஸ்டாலின் மீது சேலம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் 18ஆம் தேதி திமுக சார்பில் சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று திமுக தலைவர் ஸ்டாலின் பேசினார்.
ஆர்பாட்டத்தில் தமிழக முதல்வரை விமர்சனம் செய்ததாகவும், ஆட்சி நடத்துபவர்கள் மீது களங்கம் ஏற்படுத்தும் விதத்தில் பேசியதாகவும் அதிமுக சார்பில் சேலம் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சில வாரங்களுக்கு முன் நடைபெற்று முடிந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தனிப்பட்ட முறையில் விமர்சித்ததாகவும் , தமிழக அரசு சார்பில் நெடுஞ்சாலைத்துறையில் வழங்கப்பட்ட ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்துள்ளது என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளதாகவும், அனைத்து துறை சார்ந்த அமைச்சர்களும் ஊழல் செய்வதாக துறை வாயிலாக பட்டியலிட்டு ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை பொதுமக்கள் மத்தியில் பரப்பியதாகவும் தமிழக முதல்வரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக பேசியதாகவும் திமுக தலைவர் ஸ்டாலின் மீது சேலம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தமிழக அரசின் அனுமதியைப் பெற்று அரசு வழக்கறிஞர் தனசேகரன் இதற்கான மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.
திமுக தலைவர் ஸ்டாலின் மீது இந்திய சட்ட பிரிவு 499 மற்றும் 500 ஆகிய பிரிவுகளில் நடவடிக்கை எடுக்குமாறு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றும் இந்த மனு ஒரு வாரத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று அரசு வழக்கறிஞர் தனசேகரன் தெரிவித்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்